Thursday 30 May 2013

காவியாவும் சிட்டுக்குருவியும். . .



காவியா
கம்ப்யூட்டர் கேமில்
விவசாயம் செய்து பழகி விட்டாள்
பொட்டடோவில் புழுவருமா எனக்கேட்டு
மருந்தடிக்கத் துவங்கினாள்
முன்னூறு ரூபாய்க்கு முதலீடு செய்து
எண்ணூற்று இருபத்து ஐந்து ரூபாய்க்கு அறுவடை செய்து
ஐநூற்று இருபத்தைந்து ரூபாய் லாபம் பார்த்து விட்டாளாம்
பிறகு மாற்று விவசாயமாக
தக்காளியை பயிர் செய்கிறாள்
பன்னிரண்டாம் நாளில் செடிகளில் இலைகள் துளிர்ப்பதாக
கணக்கும் சொன்னாள்
கம்ப்யூட்டர் விவசாயம் கற்றுக்கொண்ட காவியாவுக்கு
பின்பொரு நாளில்
விவசாயம் செய்ய நிலமிருக்கிறதா
விதைகளை
எங்கு கண்டடைவது
என்பவற்றை அறியாமலிருந்தாள்
மேலும்
விவசாயம் என்பதை லாப விளையாட்டு என்று
நினைக்கிறாளா என்பதும் தெரியவில்லை
இப்போது அவள்
மோட்டார் வாகன பந்தயத்திற்கு மாறிவிட்டாள்
என்டோசல்பான் பூச்சி மருந்திற்கு
காலிபிளவரிலுள்ள புழுக்கள் செத்துவிடுகின்றன

பாவம் சிட்டுக்குருவிகள் என்ன செய்தன

காவியாக்கள் சிட்டு குருவிகளாக மாறி
அனைவரின் வீட்டு வரவேற்பரையிலும் அமர்ந்திருக்கின்றன
கேள்விக்குறிகளாக .

No comments: