Sunday 22 September 2013

அன்பின் நிலம் :



ஒரு பெண்
தன் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறாள்
ஒன்றை உணர்த்த

பெண் ஒருமை
பன்மையும் ஆகிறாள்
திசையெங்கும் பரவுகிறாள்
சூரியனுக்குக் கீழே உழைக்கிறாள்
நிலவுக்குக் கீழேயும்

வெட்கத்தை அர்ப்பணிக்கிறாள்
வசீகரிக்கும் சொற்களில் வசப்படுகிறாள்
தயை மிகுந்த அணைப்பில் மயங்கி கிடக்கிறாள்
ஆயிரம் கரங்கள் விரித்து
உலகு புரந்தூட்டும் மாகாளி எனவும்
ஆவேச கணத்தின் கீறலில் கசிகிற ரத்தம் கண்டு
விண்ணோர் உணவு எனவும் களிகூர்கிறாள்

சூதுமிகு சூழலில் வெகுளி
விசைமிகு ஊற்றுப் பெருக்கில் நிலம்

சிலசமயம் காதலி
சிலசமயம் மனைவி
இன்னும் ஒரு சமயம் அம்மா
பிறகு கைதொழும் அம்மனும்
எப்பொழுதும் பலியாள்
அன்பைக் கொடுப்பதில் ஏற்பதில்
மிச்சம் ஒன்றும் இல்லை.
நன்றி : செம்மலர் - செப் -2013

காற்றின் அந்தரங்க மீட்டல் :



பருவம் மாறிக்கொண்டேயிருக்கிறது
காற்று தன் போக்கில்
உச்சம் பெற்றும்
தாழ்வுற்றும்
கட்டற்ற நேசம் கொண்ட விரல்களால்
என்னைத் தழுவுகிறது

அந்தரங்கங்களை
முடிவற்று நீளச்செய்யும் மீட்டல்
நிகழ்த்தி விடுகிறது
இசைவான சூழலின்
ஒப்புக்கொடுத்தலை

காற்றிலிருந்து காற்று
பிரிந்தும் இணைந்தும்
பெளதீகமாக
தன்னை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது .

Saturday 14 September 2013

நரம்பிழையில் கசியும் மௌனம் ...



கசிந்திருக்கும் மௌனத்திற்கு மேல் ஒன்றுமில்லை

எந்த ஒரு கணம்
எந்த ஒரு நிலை
எந்த ஒரு சொல் எதுவும் தெரியாது.

மழைகாலத்தில் கனன்று எரிகிற விறகடுப்பைப் பார்த்தபடி
எங்கோ மரப்பொந்தில் மெலிதாய் அசைந்து
தீர்க்கமாய் அசைவுறும் பறவையொலிக் கேட்டிருப்பது
போலொரு மோனநிலை

சொற்களின் நரம்பிழைகள் மடல்பிரிந்து
ஒத்ததிர்ந்த ரகசியச் சொல்லில்
தன்னியக்கமாகச் சுரந்து கசிவது ஆனந்தம்.

மௌனத்தை
பரிசென உணர்கையில்
நிரம்பி விடுகிறேன் .

காற்றின் இசை வழி ...



இசைவழியின்
திசையறிந்த காற்று
புல்லாங்குழல் ஊடுருவ
அறிகையில்
அடர்ந்த மூங்கில் புதரிலிருந்து
நீலப் பறவையொன்று
சிறகு விரித்து
தன்
மிதத்தல் உணரும்

அகக்காரணி :



காற்று வெயில் மழை
ஒற்றைச் செயல் என்கிறாய்

பகலின் திறவுகோலை பறவைகளிடமிருந்தும்
பெற்றுக்கொள் என்கிறாய்
கனவுகளை கண்ணுற
அடர்காட்டின் வற்றாச்சுனையில் நீருந்து என்கிறாய்
நானோ
குளிர்தடாக மொக்கில் அடர்ந்திருக்கும் பனித்துளி சுவைத்து
பரிச்சயமற்ற நதியில் பயணித்தேன்

காற்று மழை வெயில்
புறக்காரணிகள் என்று தெரியும்
என்னிடத்தில்
ஒரு பறவையின் சிறகுகளை அணிவிக்கவும்
ஒரு கடலின் அலைகளை உடுத்திக் கொள்ளவும்
கூடுமெனில்
என் கலக்கமுற்ற இரவுகளில்
என்னுள் நீரூற்றெனச் சுரந்து
இந்தச் சின்னஞ்சிறு இதயத்தைச்
சீரமைத்து விடமாட்டீரா என்ன.

courtesy : Paintings -Diana Riukas

யாரோ பின் வரும் பாதை . . .



ஆற்றங்கரையோரம்
புளியம் பூக்களின் இளஞ்சூடு பாதங்களில் படர
நீ நடந்து வருகிறாய்
திசை பார்க்கிறேன்

வேறு யாரோ
ஆற்றில்
பெருமீன்கள்
தன் கண்களின் வழியே
குட்டி மீன்களை வளர்த்தெடுக்கின்றன
மீன்களின் பாதையை வரையத் துவங்குகிறேன்

அந்தி முடிகிற தருணத்தில்
காகங்கள் கரைகின்றன
காத்திருப்பின் பொருட்டு
என் சேமிப்பில் கை நிறைய இருந்தன
காலடி ஆற்று மீன்களின் வரைபடம்

நீரின் மேல்
புகையென படிந்து நகர்கிற
பனியில்
நீ நடந்து வருகிறாய்
திசை பார்க்கிறேன்

வேறு யாரோ

தப்பிய ஆடுகளைத் தொடர்ந்து
இடையர்களின் பேச்சரவம் கேட்கிறது

விளக்கேற்றப்பட்ட மலைக்கோவிலின்
திசையில் நகர்கிறது ஆட்டு மந்தை

ஆடுகளைத் தொடர்கிறேன்
மீன்களை அழித்து விட்டு

ஆற்றின் மறுகரையில்
தூண்டிலிடுகிறார்கள்
என் மீன்களைப் பிடித்துவிட

வேறு யாரோ .

நன்றி -ஓவியம் Pr Rajan

இசை வழியும் கதவு ...



வீட்டுப் பறவையின் கூச்சல் கேட்டு விழித்தெழுகிறேன்
மனம் பதறி கூடுகளைப் பார்வையிடுகிறேன்

தண்ணீர் வைக்கிறேன்
அவற்றைத் தேறுதல் படுத்தும் விதமாக

ஏதேனும் துயரம்
அணுகி விடாமல் காக்க நினைக்கிறேன்
சந்தூர் இசை வழியும்
அந்த அறையின் கதவு இன்னும் திறக்கப் படாமலிருக்கும்
தண்காற்று சுழன்றெழும்
கனவின் ரகசியத்தை இரையெனத் தூவுகிறேன்
சமச்சீரான வெட்டாந்தரையில் .

அந்த இரவுக்குள் மிதந்து சென்றாள்




உவந்து அவள்
தன்னை
ஒப்புக்கொடுத்த மற்றும் ஒருதினம்

அறியப்படாமல் கடல்மத்தியில்
தனித்திருக்கும் தீவில்
தகித்திருக்கும் சூரியவாசம் உணர்ந்தாள்

நிலத்தையும் வானத்தையும் பாடியபடி
பகலின் ஒளிர்வினை நினைத்து
மரக்கிளைகளுக்குள்
தனித்துறங்கும் பறவையைப் போல
அவள் மிதந்து செல்கிறாள் அந்த இரவுக்குள் .

courtesy : painting -Anna Bocek

நீட்சி . . .



பனியில்
இரவு முழுக்க
நனைந்த மலர்போல்

குவிந்து கிடக்கின்ற
அன்பு
என்மேல் முத்தங்களாய்
பொழிகிறது

அதன் மூச்சுக்காற்று
இதமாய் என்னை வருட
மலராய் இதழ்கள் விரிக்கிறேன்

ஒருபுறம்
என் மகளுக்காகவும்

மறுபுறம்
மகளாகவும் .