Monday 5 May 2014

மார்ச்-இரவு 6





மாலையிளம் வெயில் குரலாக ஒலிக்க 
மன ஆழத்திலிருந்து மகிழ வைக்கும்
இரவினைப் பரிசளித்தான்
சூரியனின் ஒளிர்வை
இந்த இருளிலும் ஏந்துகிறேன்
முதன் முறையாக
திறந்தவெளி உணர்ந்த கணத்தில்
எல்லாம் மறந்து போனேன்
அப்பொழுது
வெறுப்பு அணுகா 
உண்மையைக் கற்றுத் தந்தவன் அவன்
இவ்வாறே நாங்கள்
ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்கிறோம்
தனித்தனியாகத் தொலைவில் இருந்தபோதும் .
%
 Courtesy : Painting- amrita sher gil

மார்ச் - காலை 6




அடிமண்ணில் உள்ளூறிப் பெருகும்
நீரூற்றின் சிறகு நனைத்தலில்
மினுங்கிய பறவைப்பொழுதில்
புராதனப்பனி திரண்டு பொழிகிற
கீழ்வானக் குளிர் கனவையும்
இறகடி இளம் சூட்டினை விரலளைந்து உணர்ந்த
ரகசியக் கனவினையும் 
ஒருசேர உணர்ந்த
அப்படி ஒரு அதிகாலையை
பின்னெந்த நாளிலும் சந்திக்கவில்லை
விரும்பவுமில்லை

வெளிச்சத் துகள் நிலம் வந்தடையும் முன்பாக
இரவின் விளிம்பில் சிறகு விரித்த
முதல் சிறு நீலப் பறவையை உணர்ந்த கணம் அது .
%

Courtesy : Painting- Saswati Chaudhuri

மார்ச்-இரவு 5





வலிகளை விட்டுச் செல்கிறது  காதல்
கணப்பொழுதும்
விலகாத நேசத்தை எதிர்கொள்ளவே
தன்னைத்  தயாரித்திருந்தாள் 

தொலைதூரத்தில் இருக்கிறான் அவன்  

காற்று
மயங்கிச் சாயும் இவ்வேளையில்
இரவின் பாடலைப் பாடுகிறாள்

அவனுடன் கூடல்களின் சாத்தியங்களில்
தன்னை இருத்திக்கொள்ளுமவள்
தங்களின் ஒப்புக்கொடுத்தலில்
பொலிவுற்ற கணங்களை 
எக்கணமும் எதிரொலி செய்கிறாள்

தனிமையில் உணர்வது காதல்
%
 Courtesy : Painting- Ram Omkar

மார்ச் - காலை 5




நாமறியாத கணத்தில்
புவியதிரும்
காதலைக் கண்டடையும் விதமாக
இந்த தினம்  இருக்கக் கூடும்

குளத்தில் நீந்துகிற சிறிய வாத்தொன்று
நீர்ப்பரப்பின்மீது எதிர்பாராது எறியப்படுகிற
சிறிய கல்லின் சிதறல்களை
சிலிர்த்து ஏந்துவதுபோல
அறியாத கணத்தின் அற்புதம்
கூடவே பதற்றமும்

என்றாலும் அறிந்திருக்கிறோம்
காதலின் முன் மண்டியிடும்
மனதையே அது ஆட்கொள்ளும்

காதல் அப்படித் தான்
தேர்வு செய்கிறது நம்மை
நாமறியாமல் பூக்கச் செய்கிறது .
%
 Courtesy : Painting-Subrata Das