Sunday 4 May 2014

காலை - பிப்ரவரி 9




தன்னுடைய களைப்பு நீங்க
உறங்க நினைக்கிறாள்
வழக்கமான நேரத்திற்குப் பழக்கப்பட்ட
அவளின் மனதிற்கு
விழிப்பு வந்துவிடுகிறது
அவசரக் கதியில் இயங்குகிற
பணி நாட்களிலிருந்து
மாறுபட்ட தினம்
என்றபோதும்
முதல் வார நாட்களுக்கும்
வரும் வார நாட்களுக்கும்
இணைப்புத் தினமான இன்று
துவைப்பதும் சுத்தம் செய்வதும்
சமைப்பதும் ஒழுங்கு செய்வதும் என
நாள் முழுவதும் இயங்குகிறவள் அவள்

ஞாயிற்றுக் கிழமைக்கு என்றே 
பிரத்யேகக் கனவுகள் வாய்க்கப்பட்ட தன் மகள்
உறங்குவதைக் காண்கிறாள்
ஞாயிற்றுக் கிழமைக்கு என
பிரத்யேக உறக்கம் வாய்க்கப்பட்ட தன் கணவன்
உறங்குவதைப் பார்க்கிறாள்
ஞாயிற்றுக் கிழமைக்கு என
பிரத்யேக வேலைகள் இருப்பதை நினைக்கையிலேயே
அவளின் அதிகாலை துவங்குகிறது .
%



Paintings : Courtesy -Anna Razumovskaya

No comments: