Saturday 30 June 2012

எனக்கான ஆகாயம் …




மழைக்கால  மாலைகளில்
தவறாமல் 
மழை  வந்துவிடுகிறது 

குடைபிடித்துச்  செல்வோர் 
சாலைகளில் கடக்கின்றனர் 
வாகனங்களின்  விளக்குகள் 
மங்கலாக  ஒளிர்கின்றன 

நிலவற்ற  வானம் 
எனக்கு  மேலே  விரிந்திருக்கிறது 
மழையில்  நனைந்த 
அதன் சிறகுகளை  உலர்த்திக்கொண்டு 

காற்றில்  அலையும் 
என் ௬ந்தல்  
ஆகாயத்தை  வருடியபடி 
மயங்கிக் கிடக்கிறது .

இந்த மழைக்கால 
வானம் 
வசந்தத்தை   தரையில் இறக்கியபடி  இருக்க 

கிளையில்   அமர்ந்திருக்கிறது 
ஒரு  பறவையென 
என்  காதல் 

சூல்கொண்ட  மேகம் 
மெல்ல விலக 
மழைக் காற்றில் நனைந்த 
என் 
சிறகுகள்  அசையத் தொடங்குகின்றன 

நான் மிதந்து கடக்கின்றேன் 
எனக்கான   வானத்தை.

நிலாக்காலம் . . .




                     
                இந்த நிலவு 
                இத்தனை  குளிர்வாய் இருக்கிறது 
                இரவு 
                கொண்டாடுகிறது   நிலவை 
                அமானுஷ்ய  சக்தி பொழிகிறது  
                மனம்  பிறண்டவர்கள்
                தன்னிலை மறந்தவர்கள் 
                காமம் பூண்டவர்கள் என 
                அனைவரும்  நிலவின்  ஒளியில்  நனைந்து 
                பூக்கிறார்கள்
                இந்த நிலவு 
                ஏன் உறங்கப்  போகிறது 
                என்ற  ரகசியம்  புரியாமல் 
                பார்த்துக்  கொண்டேயிருக்கிறேன் 
                நிலவை .

Friday 29 June 2012

இந்த மாத குங்குமம் தோழியில். . .


பூக்கனவு . . .

கோடை விடுமுறை
முற்பகல் விளையாட்டுகளில்
உன்னிப் பூக்களைச் சூட்டி மகிழ்ந்தவனும்
உன்னிப் பழங்களையும் இலைகளையும்
தாம்பூலமென
பழக்கித் தந்தவனுமான அவனை
ஆயிரம் ஆயிரம் இரவுகளைக் கடந்த பின்பு
சந்திக்கிறாள்

இரவுகளை
அவன் நினைவால்
கடந்தபடியிருந்தாள்
எழுதப்படாத இரவுகளின்
வெற்றுக் காகிதங்களையும்
சேகரித்து வைத்திருந்தாள்

அவர்களின் பால்ய நினைவுகளை
எழுதுவதற்கு
இன்னும்
நிறைய காகிதங்கள் தேவைப்படலாம்

காற்றில் படர்ந்திருந்த பக்கங்களில்
நினைவின் வண்ணங்களைக்கொண்டு
பறவைகளின் காடு ஒன்றை வரையத் துவங்கினாள்

அங்கே
இன்னும் சில இரவுகள்
இன்னும் சில பகல்கள்
இன்னும் சில பருவங்கள்

அந்தப் பூக்கள்
மணந்துகொண்டிருக்கும்

தேன் பருக வருகின்ற வண்டைப் பற்றிய
அவள் கனவு தொடர்கிறது.

Thursday 28 June 2012

சில நாட்கள் . . .



சில நாட்கள் வருவது ஏன் என்பது
எனக்கொரு பெரிய கேள்விக்குறி
இந்தச் சில நாட்களை
என் பால்யத்தில் சந்திக்கவேயில்லை
சுற்றித் திரிந்தேன்
மரம் ஏறினேன்
பச்சைக் குதிரை விளையாடினேன்
இன்னும்
எத்தனையோ விளையாட்டுக்கள்
விளையாடிக் களித்தேன்
அப்பொழுதெல்லாம்
இந்தச் சில நாட்களைக் கடந்ததேயில்லை
ஒரு சூரிய உதயத்தில்
பள்ளி வகுப்பறையில்
அமர்ந்திருந்தபோது
நான்
ஏதோ ஒரு வலியை உணர்ந்தத் தருணத்தில்
சக மாணவன்
லைட் சிகப்பா எரியுது என்றான்

அன்றிலிருந்து சிலநாட்கள் வருகின்றன
வருகின்றன
வருகின்றன
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று
நினைக்கத் தோன்றும் 
அந்தச் சில நாட்கள்.

வெளிப்பாடு . . .



உன் நினைவில்
தாமரைக்  கொடியெனச்
சுகித்திருக்க
கதிர்களால்  உயிரூட்டுகின்றாய்

உன்னை விட்டகன்றால்
பிரிவுத்துயர்
என்னை வாட்ட
காய்ந்துச்  சாகின்றேன்

நெருப்பை  விழுங்கிக்  கொண்டு
குளிர்  ஒளியை  வெளியெங்கும்
விரிக்கும்  நிலவென

பிரிவின்  வாதையைச்  சுமந்து கொண்டு
புன்னகையோடு  உற்றோரை
எதிர்கொள்கிறேன் 

உன்னைப் பிரிகையில்
பெருகும்  துயரத்திற்குக்
குறைந்தது  இல்லை

நினைவின் மகிழ்வு

Tuesday 26 June 2012

நீட்சி . . .




பனியில்
இரவு  முழுக்க
நனைந்த  மலர்போல்

குழிந்து  கிடக்கின்ற
அன்பு
என்மேல்   முத்தங்களாய்
பொழிகிறது

அதன்  மூச்சுக்காற்று
இதமாய்  என்னை வருட
மலராய்  இதழ்கள்   விரிக்கிறேன்

ஒருபுறம்
என் மகளுக்காகவும்

மறுபுறம்
மகளாகவும் .