Friday 31 May 2013

வண்ணங்களின் பிறப்பிடம் …


அவளின் விரல்களில் அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
பறந்து செல்வதற்கு மனமற்று
அவளையே வனமென்று கொண்டது

விரல்களை
கிளையென்றும்
உதடுகளை மலரென்றும்
அமர்ந்தமர்ந்து உணர்ந்தது வண்ணத்துப்பூச்சி

தன்னில் பதிந்த வண்ணங்களை
அகற்ற விரும்பாது
அவள் சேகரிக்கிறாள் தன் மேனியெங்கும்
பல வண்ணங்களை

பிறகு
அவளே வண்ணத்துப் பூச்சியென பறக்கிறாள்
அவளது ஆகாயத்தில்
அவளது தோட்டத்தில்

அவளது உதடுகள் மலர்கின்றன
அவளது கைகள் விரிகின்றன

நிலத்திலிருந்து எழுந்த தருணம்
அவளிடமிருந்து பறக்கிறது
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சிகள் .

நினைவு …



ஒப்பனைகளேதுமின்றி
உறக்கத்தில்
ஆழ்ந்திருக்கிற மனத்தில்
நீ
ஒரு மீனென நீந்தி
என்னைக் கலைக்கிறாய்

உன் நினைவு வாதையாக மாறி
நிரம்புகையில்
களைத்த எனதுடல்
நித்திரையில் முழ்கி
கனவுகளைத் தூண்டுகிறது

கனவில்
வடிவங்களற்று
என் மீது படர்கிறாய்

உன்னை
உணர்ந்தபடி
ஏதேதோ சொல்கிறேன்
ரகசியமாய் எவரும் அறியாவண்ணம்

பறவைகள்
நமக்கான
பாடலை இசைக்கத் தொடங்குகின்றன

உனதுடனான எனது இருப்பை
விழுங்கியபடி
மெல்லத் துயில் கலைகிறது

உன்
நினைவை
என்மீது போர்த்தியபடி.

காற்றில் கிளை அசைகிறது…


மலைப் பாதையில் ஒரு வளைவில்
தனியாக நின்றிருக்கிறேன்

என்னிடம் வர சற்றுத் தாமதமாகியது
மாலைக்காற்று
வழக்கமாக கடந்து செல்லும்
மஞ்சள் விளக்கிட்ட வாகனங்கள் வரவில்லை
காட்டெருமைகள் வரக்கூடுமென
வேகமெடுக்கும் பள்ளி மாணவர்கள் வரவில்லை

எப்போதாவது
மான்கள் கடந்து செல்லும் பாதையில்
தனியாக நின்றிருக்கிறேன்

என்னுடன் உறவாடும் மாலைக் காற்றை
பரிசளிப்பவனும்
இன்னும் வரவில்லை

அன்பை
காற்றின் குரலாக
மாற்றி அழைத்து வருபவன்

நேற்றைய காற்றைப் பருகி
இன்று ஜீவித்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்

செல்ல நாய்க் குட்டியென
அவன் வருவது
தொலைவில் தெரிய

காற்றில் கிளை அசைகிறது .

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் :


வண்ணத்துப் பூச்சிகள்தான்
இந்த பூமிக்கு நிறங்களைத் தருவதாக
நம்பிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி

இறந்த
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப் பார்த்தாள்
பின்பு
வண்ணத்துப் பூச்சிகளற்ற
வீட்டுத் தோட்டத்தைக் கற்பனைசெய்யத் துவங்கினாள்

தனது
சிறிய இறகுகளில்
வண்ணங்களாய்
இன்பத்தைச் சுமந்து திரியும் அவைகளை
ஒரு நாளும்
சந்திக்காமல் இருந்ததில்லை அவள்

இதுவரையில்
எத்தனை எத்தனை வண்ணத்துப் பூச்சிகள்
மரணமடைந்திருக்கும்
அந்த மரணம்
எப்படி துயரப்படுத்தியிருக்கும்

அவள்
தன்னுடலில்
மரித்துப் போன வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளைப் பத்திரப்படுத்தினாள்.

வெறும் பெயர் . . .



பெயரில்
ஒன்றுமில்லையென நினைத்திருந்தேன்

கிளி
புறா
மயில்
மான்
இவைகளுக்குப் பெயர் உண்டா

வானம்
மலைத்தொடர்
மேகம்
பஞ்சுப் பனி
மழை

பணத்தட்டுப்பாடு இல்லாத
உல்லாசப் பயணம்

மனத்தட்டுப்பாடில்லாத
மனம்

இவை தராத
மகிழ்வை
வெட்கத்தை

ஒரு
பெயர்

வெறும்
ஒரு பெயர்

கொடுக்கும் என
எனக்குத் தெரியவே தெரியாது .

செய்திகளற்ற பகல்பொழுது . . .



தபால்காரரின் வருகையொட்டி
கதவும் ஜன்னல்களும்
திறந்து கொள்கிறான்
துயிலா இமைகளைப் போல

தெருவில்
நிழல்தராத பகல்
அவனது துயரத்தைக் கண்டபடி கடந்து செல்கிறது

அவளின் துயரம்
மேலும் பெருகும்விதமாக
இவள் பெயர் தாங்கியிராத
கடிதங்களைச் சுமந்தபடி
அவளைக் கடந்து செல்கிறார் தபால்காரர்

அருகாமை வீடுகளில் ஒலிக்கும்
குரல்கள்
அவளது இருப்பை
உறுதி செய்கின்றன

தனக்கு வராத கடிதங்களைப் பற்றிய
கற்பனைகளுடன்
மீண்டும் ஒரு நாளுக்காய்
காத்திருக்கத் துவங்குகிறாள் .

ஒற்றைச் சொல். . .


என்னைப் பேரழகி என்றாய்

இந்தக் கடற்கரையிலிருந்து புறப்பட்டு
நிலவில் மண்ணெடுத்துத் திரும்பினேன்

என்னை தேவதை என்றாய்

கடற்கரையில்
அதிசயமாய் தனித்திருக்கும் ஒற்றை மரத்தின்
இலைகளில் உறங்கும் காற்றை எழுப்பிவிட்டேன்

புயல் ஓய்ந்து
மழை நனைத்துக்
குளிர்ந்துகிடக்கும் நிலத்தில்
ஒற்றைச் சுடருடன் நிற்கிறேன்

இப்போது
நீ எங்கிருக்கிறாய்

என் வீட்டை ஒளிரச் செய்யும்
வல்லமையையை
உன் வார்த்தைகள் அறியும்

இப்போதும்
நான் விரும்பும்
ஒற்றைச் சொல்லை
நீ சொல்வாயெனில்

அச்சொல்லில்
தேவதைகளும் பேரழகிகளும் கரைந்துபோக
ஆவாரம்பூ மாலையென
உன் கழுத்தை அலங்கரிப்பேன்

அந்த நிலவொளியில் சுடரும்
கருஞ்சிலையென.

அர்த்தநாரி...


வீடு
மீண்டும் அவளைப் பெண்ணாக மாற்றியது

தாய்மையின் வாஞ்சையுடன்
பிள்ளைகளுக்காகக் காத்திருக்கிறாள்

வியர்வையும் உப்பும்
அன்றாடத்தின் வெறுப்பும் படிந்து கிடக்கும்
தன்னைக் கழுவிக்கொள்ள குளியலறை செல்கிறாள்
உதடுகளின் சாயத்தைக் கழுவுகிறாள்
அவள் மீது படிந்திருந்த பகல் நீரில் கரைகிறது

பால்குக்கரின் விசில் சப்தத்தில்
மூளை நரம்பொன்று அதிர்கிறது
நாளைய பணிக்கென காத்திருக்கும் குறிப்புகள்
இன்னொரு நரம்பில் ஊடுருவிப் பாய்கிறது

குளியலறையிலிருந்து
நீங்கும் அவள் வேறு ஒன்றாகத் தெரிகிறாள்.

௬டு விட்டு கூடு. . .


நிறைவேறாத கனவுகளோடு
நான்
மரணத்தைத் தழுவ விரும்புவது குறித்து
துக்கமில்லை

ஆசைகள்
லட்சியங்கள்
கனவுகள்
உன் முன் அணிவகுக்கின்றன
மரணத் தருவாயில்

மனதெல்லாம் நிரம்பித் தளும்பும்
கனவில்
மரணத்தின் மொழியை
புரிந்து கொள்ளவே தீரா விருப்பம்
அலெக்ஸாண்டர் முதல்
ஆண்டியப்பன் வரை
கனவுகளால் நிரம்பிய மரணங்கள்

ஒவ்வொரு மரணமும்
விதைத்துப் போகின்றது
இன்னும் இன்னும்
கனவுகளை.
௬டு விட்டு கூடு. . . 

நிறைவேறாத கனவுகளோடு
நான்
மரணத்தைத் தழுவ விரும்புவது குறித்து
துக்கமில்லை

ஆசைகள்
லட்சியங்கள்
கனவுகள்
உன் முன் அணிவகுக்கின்றன
மரணத் தருவாயில்

மனதெல்லாம் நிரம்பித் தளும்பும்
கனவில்
மரணத்தின் மொழியை
புரிந்து கொள்ளவே தீரா விருப்பம்
அலெக்ஸாண்டர் முதல்
ஆண்டியப்பன் வரை
கனவுகளால் நிரம்பிய மரணங்கள்

ஒவ்வொரு மரணமும்
விதைத்துப் போகின்றது
இன்னும் இன்னும்
கனவுகளை.

கானகத்தில் தொலைந்து போதல். . .



தொலைந்து போவது நல்லது
அல்லது தொலைந்து போவதை உணர்வது நல்லது

பலமுறை தொலைந்து போயிருக்கிறேன்
பலமுறை என்னை மீட்டெடுத்திருக்கிறார்கள்

ஒருமுறை தொலைந்து போனபோது
எவருமே என்னை மீட்டெடுக்கவில்லை
நான் அப்போது பறவைகள் தேசத்திலிருந்தேன்
பறவைகளின் தேசம் என்பது
புதிர்களால் ஆனது

நான் எத்தனை விரும்பியும் வீடு திரும்ப
இயலவேயில்லை
சோர்ந்து போய்
அந்தத் தேசத்திலேயே தங்கிவிட்டேன்

இன்று
என் மகள் காணாமல் போய்விட்டாள்
எந்த தேசத்தில் அவளை தேடுவது என்பது குறித்து
குழம்பிப் போயிருக்கிறேன்

எனக்கு சிறகுகள் இருந்த போதிலும்.

கிளி புராணம் . . .



கூடடையாத கிளி
பறந்து செல்கிறது

வீட்டின் அறைகளில்
சமையலறையில்
பூஜையறையில்
குளியறையில்
வாழ்நாளைக் கடத்திவிடும்
கிளி

மீனாட்சியின் தோளிலும்
காமாட்சியின் கையிலும்
பலநூறு வருடங்களாய்

சொல்வதைச் சொல்கிறது
தருவதை உண்ணுகிறது
ஆண்டாளின் தலையிலிருந்து பறந்து வந்து
இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறது
சீட்டுகளை இடம்மாற்றிப் போடுகிறது

அரச பரம்பரையின்
தங்கக்கூண்டுகளில்
தத்தித் தவழ்ந்த அது
கூட்டினைத் திறந்ததும்
வெளியேறுகிறது

பேருந்துகளில் கூண்டோடு பயணிக்கும்
பல கிளிகள்
தம் பயணத்தை அறியாதவை

பல ஆயிரம் ஆண்டுகளாய்
கூட்டினை அடையாத கிளிகள்
பறந்து செல்கின்றன அகன்ற வானில்

நாட்டியமாடும் நாள். . .



வழக்கத்திற்கு மாறாக
அதிகாலையில் எழுந்து கொண்டாள்
அந்தச் சிறுமி

பள்ளி நாட்களின் சோம்பலிலிருந்து
நாட்டியமாடப் போகிற நாள்

குளிர்ந்த நீரில் குளித்து
நீள் கூந்தலை உலர்த்தினாள்
ஒப்பனைகள் ஒவ்வொன்றாய்
நடந்து முடிந்தன
நீள் விழிகளை விரித்து மையிட்டுக்கொண்டாள்
உதடுகளில் சாயம் பூசிக்கொண்டாள்
இறுதியாக
நாட்டிய உடையினை அணிந்து கொண்டாள்

தன் முன்னிருக்கும் உலகிலிருந்து
வெளியேறி
தன்னுள் இயங்கும் உலகிற்குள் நடந்து செல்கிறாள்

ஆடை மாற்றுவதென்பது
மனதினை மாற்றுவது என்று
அறியாத சிறுமியவள்

நடந்து செல்கிறாள்
மனதிற்குள்ளும்
தாளகதியின் சப்தத்திற்குள்ளும்.

பெருந்துயில் . . .


அவளது பெருந்துயில்
கலைக்க முடியாததாக இருக்கிறது
திறக்கவியலா வாசலைப் போல

கனவுகளினாலும்
காதலின் தீராத நோவினாலும்
இரவு விழித்திருந்த
அவளை
அதிகாலைத் துயில் போர்த்தியிருக்கிறது

உறக்கமும்
ஏக்கமும் விழிகளில் படர்ந்திருந்தன

காமனை வேண்டிய நாச்சியாராய்
அவளும்
கனவில் அவனிடம் நேர்ந்துகொண்டாள்

தோழி
மூடிய அறைக்கதவைத் திறக்கச் சொல்லிய
அதிகாலைக்கு முன்பு
மணல் வட்டமிட்டு
காதலை அடைந்திருந்தாள்
அவளுடைய அன்றைய கனவில் .

இல்லாமல் போதல் . . .


மருதாணியின்
ஆரஞ்சுவர்ண விரல்களோடு
அவனுள் கிளைவிடுகிறாள்

முதிர்ந்த மரத்தின்
மரப்பட்டைகள் உதிர்வது போல
அவனது காலம் மடிகிறது
அவள் முன்

கருங்குவளை நீலவிழிகளில் தீண்டுகிறாள்

தீண்டல் இன்பம் போதாதென
நினைவிழக்கிறான்

ஆம்பலின் சுகந்தம் கொண்ட இதழ்களால்
அவனை உயிர்ப்பிக்கிறாள்

மரணம் உறுதியான பிறகும்
உயிர்ப்பிக்கும் கலையை அறிந்தவளிடம் வேண்டுகிறான்

காற்றாய்
அவள் அசைய
அவன்
வெளியெங்கும் பரவி
மறைகிறான் .

ஒரு யானை. . .



எனக்குத் தெரிந்த யானையை
வேறு எவருக்கும் தெரியாது
நீளமான தும்பிக்கையும்
பருத்த கால்களும்
சிறிய கண்களும் இருக்கும்தான்

என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம்
ஆற்று நீரை
தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில்
சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில்
மனது சிலிர்க்கும்

காடெல்லாம் சுற்றி வந்து
உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு
வீட்டு வாசலில் நிற்கும்

ஆற்றினைக் கடக்க
அதன் மேலேறி பயணித்தும்
யானைச் சாணத்தை மிதித்து
கதகதப்பூட்டிக் கொண்டதுமான
ஒரு சிறுமி
இன்னும் உயிர்ப்புடனிருக்கிறாள்
மனதிற்குள்

காட்டு மரங்களின் ஊடே
கருத்த மேகம்போல ஊர்ந்து செல்லும் யானை
ஒரு போதும்
பட்டுடையும் நகைகளையும் உடுத்திக் கொண்டு
வருவோர் போவோருக்கு
ஆசி வழங்கும் சமத்து யானைகளுடன்
ஒப்பிடவே முடியாது

காட்டு யானையே
என்னை சுதந்திரப் பெண்ணாய்
உணரச் செய்துகொண்டிருக்கிறது .

உயிர்க்கும் வார்த்தைகள் . . .



மகளைப் பற்றிய
கவலை
மரத்தின் நிழலென
பொழுது தோறும் வளர்ந்து வருகிறது

தங்களது
சந்தேகங்களை
துக்கங்களை
வலி நிறைந்த மனச் சுமைகளை
பறவைகளுக்குத் தானியங்களை
தூவுவதுபோல
ஒவ்வொரு தந்தையும்
தங்களை தொடர்பவர்களிடம்
சொல்லிச் செல்கின்றனர்

அவை
தரையிறங்கும் பறவைக் கூட்டமென
ஒன்றன்பின் ஒன்றாக
உயிர்க்கிறது

ஒருபொழுது தேய்ந்து மறைய
ஒரு பொழுது விரிகிறது

மேலும்
நிலவெளிகளில் படர்ந்து வளர்கிறது.

சிறை மீட்டல் . . .



மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி
தங்கள் உலகை
மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன சில பறவைகள்

மஞ்சள்
பச்சை
நீலம்
இன்னும் பல வண்ணங்களில்
கூண்டினுள் பறவைகள்
காப்பிச்செடியின்
காய்ந்த கிளைகளில்
காதலை பரிமாறிக்கொண்டிருந்தன

வெயிலும்
பனியும்
கம்பிகளைக் கடந்து உள்நுழைகிறது

கூண்டுக் கம்பிகள்
மண்கலயங்கள்
காப்பிக் கிளைகள்
பறவைகளை
பருந்துகளிடமிருந்து பாதுகாக்கின்றன

பறவைகளின் இருப்பினை
வாசனையால் உணர்ந்துகொள்ளும் பூனைகள்
எங்கிருந்த போதிலும்
அவைகளை அச்சப்படுத்திக்கொண்டேயிருந்தன

உயிரின் வாதையை படபடக்கும் சிறகுகள்
அறிவதில்லை
ஒருபோதும் கூண்டுப் பறவையை
பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை .

அறிதல். . .



நாட்களாயிற்று கவிதை எழுதி
எதைத்தான் எழுதுவது
இந்தக் காதலை விட்டுவிட்டு

நான் இத்தனை காதலாக கனிந்திருக்கையில்
காதலின் வார்த்தைகள்தான்
எத்தனை சுடுகின்றன
என்னைத் தனிமைப் படுத்துகின்றன

காதல் இவ்விதமாக
துயரத்தைத் தந்தவண்ணம் இருக்கிறது

எத்தனை முயன்றும்
காதலிலிருந்து விடுபட இயலாமல் இருக்கிறேன்

வாழ்நாள் முழுமைக்குமான ஒளி
அவனிடமிருந்தே பெற்றுக் கொண்டிருக்கிறபோதிலும்
அவனை நெருங்கிவியலா பின்பொரு நாளில்
அவன் சொல்லக் கூடும்
காதலின் கதையை

அப்பொழுது நான் வெறுமனே
நகர்ந்து கொண்டிருப்பேன் அங்கிருந்து.

அப்பொழுது பனிக்காலம். . .



அப்பொழுது பனிக்காலம்
அந்தப் பொழுதில்
அந்தக் கணத்தில்
அவனது தேவை எதுவாக
இருக்குமென அறிய முயற்சிக்கிறேன்

ஒரு மிடறு தண்ணீர்
ஒரு கோப்பை கருப்புக்காப்பி
அல்லது
ஒரு முத்தம்
இவ்வாறு ஏதோ ஒன்று

அவனை
அறிந்து கொள்ளும் ஆவலை
வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறேன்
பின்னும்
வெறுமையால் நகரும் சில கணங்கள்
பனிக்காற்றினால் போர்த்தப்பட்டிருக்க
சாத்தியிருக்கும் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே
விளக்குகள் மின்னி மறைகின்றன

ஏதேனும் ஒன்றை கொடுத்திருக்கலாம்
எனத் தோன்றச் செய்கின்ற
அக்கணத்தை

வேறொரு கணமாக சந்திப்பது
எவ்வாறு என்பதையறியாமல் இருக்கிறேன்
இந்த வசந்த காலத்திலும்.

அதிகாலைச் சூரியன் வருகையில். . .



தூக்கத்தை இழப்பதற்கு
உன் வார்த்தைகள் தேவையில்லை எனக்கு
நீ
என்னை
நினைப்பதைத் தவிர்த்துவிட்டாலே போதும்

மனத்தின் சஞ்சலத்தை
மேலும் அதிகப்படுத்தும்
உன் மௌனம்

என்னுடல்
வெளிறி
ஒளியிழந்து போக
உன் வருகை நிகழாத என் வாசல் போதும்

நம் மகிழ்வான நாட்களில்
சிரிப்பும் குதூகலக் கண்ணீரும்
இன்று
காதலை உருமாற்றியிருக்கிறது

நெடுநாள் உறக்கம் இழந்தபின்பு
துயிலும் மயக்கத்தை
உன் அழைப்பே தரும்

மேலும்
உன் வருகையின் ஒளி
வாடிய குன்றுகளில் கொண்டாட்டத்தை உருவாக்கும்.

அறிந்த நிலவும் அறியாத குளிர்மையும். . .



என் வீட்டின் திருப்பத்தில் நான்

ஒருபக்கம் சூரியனும்
மறுபக்கம் நிலவுமாக
நீள்கிறது
அந்தப்பாதை

ஒருகதவை நிலவுக்கும்
மறுகதவை சூரியனுக்குமென
திறந்தும் மூடியும்
வைத்திருக்கின்றன ஒவ்வொரு வீடும்

என் பின் வருகின்ற சூரியனை முந்திக்கொண்டு
நிலவைநோக்கி நடக்கின்றேன்
அடுத்த திருப்பத்தின் நிகழ்வை
அறிந்தேயிருக்கிறேன்

என்னை முந்திச் செல்கிற நிலவு
முழுமையாக திறந்திருக்கும்
ஒவ்வொரு வீட்டினுள்ளும் பரவுகிறது

என் வீட்டினுள்
சூரியன் மாற்றிய உடைகளைப் போர்த்திக்கொண்டிருக்கும்
நிலவை
ஜன்னல் திறந்து வானம் பார்க்கச் செய்கிறேன்

கேள்வியும் பதிலும்…



மண் கடவுளென்றேன்
கடல் ஒரு தேவதையென்றேன்
சிப்பியும் அதனுள் வளரும் முத்துவும் எதுவென்று கேட்ட மகள்
சொல்கிறாள்
அது மகிழ்ச்சியைத் தருகின்றதென

காற்று இப்போது தோழமையோடு இருக்கிறது என்றேன்
தோழமை என்றால் என்னவென்று கேட்டவள்
சொல்கிறாள்
என் தோழியை விடவா இந்தக் காற்று
தோழமை தந்துவிடப் போகிறதென

தாகம் மிகுந்த வேளையில்
நீர் அருந்தினோம்
எவ்வளவு ருசி எவ்வளவு ஆனந்தமென சொல்லிக்கொண்டேன்
ஆனந்தம் என்றால் என்னவென்று கேட்டவள்
கேட்கிறாள்
அதுதான் இவ்வளவு சுதந்திரத்தைத் தருகிறதாவென. . .

நீட்சி. . .


பனியில்
இரவு முழுக்க
நனைந்த மலர்போல்

குவிந்து கிடக்கின்ற
அன்பு
என்மேல் முத்தங்களாய்
பொழிகிறது

அதன் மூச்சுக்காற்று
இதமாய் என்னை வருட
மலராய் இதழ்கள் விரிக்கிறேன்

ஒருபுறம்
என் மகளுக்காகவும்

மறுபுறம்
மகளாகவும் .


விதை. . .


கையிலிருக்கும்
சில விதைகளைத் தருகிறேன்
உங்களுடைய நிலத்தின் இடுவதற்காக

இன்று மேலும் இரண்டு மரங்களுக்கு

நீர் ஊற்றியிருக்கிறேன்

யாரோ விதைத்து
வளர்ந்த மரத்தில்
வயதானவர்கள் ஓய்வெடுத்துச் செல்கின்றனர்

காய்த்துக் குலுங்கும் மரத்தினடியில்
சிறுவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றன

என்னிடம் மேலும் சில விதைகள் இருக்கின்றன
என்னிடம் மேலும் சில பறவைகள் இருக்கின்றன
என்னிடம் மேலும் சில ௬டுகள் இருக்கின்றன


முதலில் யார்
இந்த விதையை விதைத்தார்கள் என்று அறிகின்ற
பின்னொரு நாளில்
என்னுடைய கைகளிலிருந்த விதைகளை
வாங்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்

அப்பொழுது
உங்களுடைய நிலத்தில் விதைத்துக்கொண்டிருப்பீர்கள

நட்பு . . .


அந்தப் பயணத்தில்
என்னருகில் இருந்தாய்

பேசிக் கொண்டிருந்தோம்
சொற்களாலும்
மௌனத்தாலும்

உன்மேல் சாய்ந்து கொண்டேன்
நீ உணரா வண்ணம்

அப்பொழுது
உன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
என் அண்மைக்காக

சொல்லிவிடத்தான் விரும்புகிறேன்
உன்மீது சாய்ந்து நாட்களாயிற்றென

என் விரைந்த உடல்
ஆடைகளில் மறைந்து கொண்டிருப்பதை
அறிய மாட்டாய்

உன்னிடம் சொல்லிவிடும் வரை
இந்தப் பயணம் நீண்டால்

சொல்லி விடுவேன் .

மலர்தல். . .


நிலாவென
நான்
ஒளிர்வதாகக் கூறுகிறாய்
சூரியனாய் இருந்து கொண்டு

என்
நினைவின் அடுக்குகளில்
எத்தனையோ கதைகள்
பொதிந்துள்ளன

நிலா இரவுகள்
அன்று இருந்தது போல்
இல்லை

பால்யம்
கடந்த இந்த இரவுகளில்

பாட்டிகளின்
மரபில்
வந்து போன இளவரசனாய்

ஏழு குதிரைகளில்
நீ
வருகையில்

சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்

நிலா ஒளிரும் பொழுதிலும்

பூக்கனவு . . .



கோடை விடுமுறை
முற்பகல் விளையாட்டுகளில்
உன்னிப் பூக்களைச் சூட்டி மகிழ்ந்தவனும்
உன்னிப் பழங்களையும் இலைகளையும்
தாம்பூலமென
பழக்கித் தந்தவனுமான அவனை
ஆயிரம் ஆயிரம் இரவுகளைக் கடந்த பின்பு
சந்திக்கிறாள்

இரவுகளை
அவன் நினைவால்
கடந்தபடியிருந்தாள்
எழுதப்படாத இரவுகளின்
வெற்றுக் காகிதங்களையும்
சேகரித்து வைத்திருந்தாள்

அவர்களின் பால்ய நினைவுகளை
எழுதுவதற்கு
இன்னும்
நிறைய காகிதங்கள் தேவைப்படலாம்

காற்றில் படர்ந்திருந்த பக்கங்களில்
நினைவின் வண்ணங்களைக்கொண்டு
பறவைகளின் காடு ஒன்றை வரையத் துவங்கினாள்

அங்கே
இன்னும் சில இரவுகள்
இன்னும் சில பகல்கள்
இன்னும் சில பருவங்கள்

அந்தப் பூக்கள்
மணந்துகொண்டிருக்கும்

தேன் பருக வருகின்ற வண்டைப் பற்றிய
அவள் கனவு தொடர்கிறது.

வெளிப்பாடு . . .


உன் நினைவில்
தாமரைக் கொடியெனச்
சுகித்திருக்க
கதிர்களால் உயிரூட்டுகின்றாய்

உன்னை விட்டகன்றால்
பிரிவுத்துயர்
என்னை வாட்ட
காய்ந்துச் சாகின்றேன்

நெருப்பை விழுங்கிக் கொண்டு
குளிர் ஒளியை வெளியெங்கும்
விரிக்கும் நிலவென

பிரிவின் வாதையைச் சுமந்து கொண்டு
புன்னகையோடு உற்றோரை
எதிர்கொள்கிறேன்

உன்னைப் பிரிகையில்
பெருகும் துயரத்திற்குக்
குறைந்தது இல்லை

நினைவின் மகிழ்வு.

அதிகாலைச் சூரியன் வருகை…



தூக்கத்தை இழப்பதற்கு
உன் வார்த்தைகள் தேவையில்லை எனக்கு
நீ
என்னை
நினைப்பதைத் தவிர்த்துவிட்டாலே போதும்

மனத்தின் சஞ்சலத்தை
மேலும் அதிகப்படுத்தும்
உன் மௌனம்

என்னுடல்
வெளிறி
ஒளியிழந்து போக
உன் வருகை நிகழாத என் வாசல் போதும்

நம் மகிழ்வான நாட்களில்
சிரிப்பும் குதூகலக் கண்ணீரும்
இன்று
காதலை உருமாற்றியிருக்கிறது

நெடுநாள் உறக்கம் இழந்தபின்பு
துயிலும் மயக்கத்தை
உன் அழைப்பே தரும்

மேலும்
உன் வருகையின் ஒளி
வாடிய குன்றுகளில் கொண்டாட்டத்தை உருவாக்கும் .

தருணம்…



கிளர்ந்தெழும் நினைவுகளின்
சுழலில் சுழல்கிறது மனம்

நதியில் நீந்தும் மீன்களைப் போல
நினைவுகளில் பயணிக்கிறது
ஒரு சொல்

அருகாமை நறுமணம்
உணவுப் பொருட்கள்
உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப் போல நினைவுகள் உருக்கொள்கிறது

குளத்துத் தாமரைக் கொடிகளில்
சிக்கி மிதப்பது போலவும்
சுழித்து ஓடும் நீரில்
வந்தடையும் சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்

தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி
வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது
முழுதாய் விடுபடத் துடிக்கிறது

உன் நினைவு
தாமரை இலை மேல்
படர்கிறது

நீரின்
ஒரு பூவைப் பறித்துக்கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும் .

மிதக்கும் மேகம்...



உன்னிடம்

பகிர்ந்து கொள்வதெற்கென

மேகத்தை ஏந்திக் கொண்டிருக்கின்றேன்



உன் நினைவின் போக்கில்

நகரும் அதைக் கட்டுப் படுத்த இயலாது

இம்முறையும் தவிக்கின்றேன்



நீர்த்துளிகளைச் சுமந்திருக்கும்

இந்த மேகத்திற்கு

கருணையென்பதே இல்லை



என்னை எரித்துக் கொண்டிருக்கும்

உன் மீதான

நினைவை

அணைக்காது நகைக்கின்றது



மின்னலை உதிர்க்கும்

உனது உரசல்களை

எனதுடல் தாங்காதெனினும்



பாலைவனத்தில்

உயிர்த்திருக்க மழை வேண்டித்

தவமிருக்கும் மலர்ச்செடியென



காத்திருக்கின்றது

அத்தருணத்திற்காக.

முடிச்சு …



மனம்
சொல்வதையெல்லாம்
கைகள் செய்யுமா என்பது தெரியவில்லை

ஆடை அவிழும் போது
நீளும் கரங்களும்

அன்பு மிகும் போது
அணைக்கும் கரங்களும்

ஒன்றாவெனவும் புரியவில்லை

கைகளும்
மனமும்
வெவ்வேறா என்பதையும்
அறிய முடியவில்லை .

காற்றில் மிதக்கும் நீலம்...


ஆதி நாள் துவங்கி
அந்த நிலம் வெப்பத்தினால்
கனன்று கொண்டிருந்தது

வெண்மையால் தும்பைப் பூக்கள்
மஞ்சளாய் ஆவாரம் பூக்கள்

காட்டுச் சுண்டைகாயின்
மகரந்தம் மினுங்கும் பூக்கள்
என செழித்திருந்த
அந்த தரிசு நிலம் எங்கும்
துளசியின் வாசம் பரவியிருக்க

ஏர் பிடித்து உழப்படாமலும்
பண்படுத்தி விவசாயம் செய்யப்படாமலும்
தனித்திருந்தது

நிழல் தரும் மரங்களற்று விரிந்திருந்த
அந்த நிலம்
அந்த வெப்பம்
அவனை நினைவூட்டியபடியிருக்க

பெயர் தெரியாத அந்தக் காட்டுப் பூ
சூரியனிடம் தனக்கான நீலநிறத்தைப் பெற்று
தன் இதழ்களை
அகல விரிக்கத் துவங்கியது .

சுதந்திரம்...



மகிழ்ச்சி எதுவென்று அறியச்செய்தவன் அவன்
அன்பு எதுவென்றும்
காதல் எதுவென்றும்
துயரம் எதுவென்றும்
காமம் எதுவென்றும் உணரச்செய்த
அவனே
சிட்டுக்குருவியின் பறத்தலையும்
கற்றுத் தந்தான்
என் தொடுதலில் சில நட்சத்திரங்கள் பூத்தன
அவன் தொடுதலில் சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்தன
பெண் உடல்
ஆணுக்கானது அல்ல
பெண் உடல்
பெண்ணுக்கானது அல்ல
என்றறிகையில்
அறிந்தேன்

சுதந்திரம் எதுவென.

பருவ மாற்றம் ...


மதி மயங்கும்
வனத்தில்
நெருப்பென அலையும்
உனது பார்வையில்

பொசுங்கிவிடும் சாத்தியப்பாடுகள்
அதிகரிக்க
அத்தருணத்திற்காக
ஒப்பனைகளோடு காத்திருக்க

உன்
அண்மை
என்னை எரித்தாலும்

மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றேன்
காதலின் பசுந்தளிர்களாய் .

அலைச்சல்...



காற்றின் ஈரத்தை
உணவாக்கி
உயிர்த்திருக்கும்
மரமென
அடி பெருத்து அசைகின்ற
முத்தம் ஒன்றை
நீண்ட அலகுடைய
கனவுப்பறவை
கொத்திக் கொண்டு செல்கிறது
பாலைவன மெங்கும்
இன்னும்
ஒருமுத்தம் தேடி.

திசை மானி …



எத்தனை வகையில் தான்
வெளிப்படுத்துவாய்
உனதன்பை

என் கவிதைகளில்
ஒளிரும்
உன் வார்த்தைகள்
என்னை ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றன

அது
உனது
அன்பைப் போலவே
இருக்கின்றது

எனக்குள்
இருக்கும் உன்னை
இந்தக் கவிதைகளைத் தவிர
யார் அறிவார்

எத்தனை திசைகள்
இருப்பினும்
இந்த காந்தம்
உன்னை நோக்கியே
இருப்பது
இழுக்கென நினைத்தாலும்

உனது
புன்னகை போதும்
நான்
மலரவும்

உன்னை
மகிழ்விக்கவும் .

அன்பிலான சொல்…



உனக்கான
சொல்லைத் தேர்ந்தெடுத்து விட்டேன்


தீர்ந்து போகவே முடியாதது அச்சொல்

பகலும்
இரவும்
இரவின் இடைவெளிகளிலும்
நிரம்பித் ததும்பும்
உன் நினைவுகளினால்
உயிர் பெறுகிறது
அந்தச் சொல்

பேசிப்பேசி
பேச மொழியற்ற தருணங்களில்
என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது போல
அந்த சொல்லை
எடுத்து வைத்துள்ளேன்
உன்முன்

பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது நம்மிடையே

அச் சொல்லை
நீ கேட்பாயெனில்
ஆதியிலே
அச்சொல்லிருந்தது

அந்தசொல்
நானாக
உயிர்பெற்றிருக்கிறேன் என
உணர்வாய்

அன்று
அது
நம்மை அழைத்துச் செல்லும்
அன்பினால்
பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .

கடல்…



குளமென இருந்த
மனம்
நான்
வளர வளர
கடலெனவாகியது
என் குற்றமல்ல

சமுத்திரத்தைக் கூட
அறிந்திட முடியுமென
கூறும்
நீ
என்னைக் கண்டு
கலைங்குவதேனோ

அருவியாய்
நதியாய்
வெளியெங்கும் திரிகிறாய்
சிறு பள்ளம் கண்டு௬ட
பாய்கிறாய்

நிறைவடையாமல்
பொங்குகிறாய்
என்னை நோக்கி நகர்கிறாய்

என்னோடு
கலந்தால்
என்னை அறிந்து கொள்வது
எளிதென

உனக்குச் சொல்வதற்கு
ஒருவரும்
இல்லையா.

ஈரோடு CKK அறக்கட்டளையின் 34 வது ஆண்டு இலக்கிய விழா நிகழ்வில் மரபின்மைந்தன் முத்தையா தலைமையில் வெளிப்படும் வேளை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் .

கருவிலிருந்து குழந்தை ..

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா
மண்ணை முட்டி முட்டி விதை ஒன்று
வெளிப்படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
முட்டையின் ஓட்டினைத் தட்டித் தட்டி
பறவை ஒன்று வெளிப் படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
வலைபின்னல் கூட்டினை அசைத்து அசைத்து
வெளிப்பறக்கும் பட்டாம்பூச்சி தருணத்தைப் பார்த்திருக்கிறீர்களா
கால்கள் மடித்து ரத்தமும் நீருமாக
பட்டென்று கீழ் விழும் கண்ணுக் குட்டி
வெளிப்படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
காற்று முட்டி முட்டி கருக்கொண்ட மேகம்
மழையென வெளிப்படும் வேளையைப் பார்த்திருக்கிறீர்களா
அரும்பில் பூட்டியிருக்கும் வாசம் தட்டித் தட்டி
மலர்கள் மலர்வதைப் பார்த்திருக்கிறீர்களா
பார்த்திருப்பீர்கள்

இவற்றையெல்லாம் பார்த்திருப்பீர்கள்
மேலும்
விதையிலிருந்து முளைவிட்டிருக்கும் இளந்தளிரை
உங்கள் கைகளில் ஏந்தியிருப்பீர்கள்
உங்கள் வீட்டுக் கோழியிலிருந்து அப்போது தான் வெளிப்பட்ட முட்டையின்
இளஞ்சூட்டினை உங்கள் கைகளில் உணர்ந்திருப்பீர்கள்
மெல்ல இதழ் பிரிந்து மலரத் துவங்கியிருக்கும் பூக்களை
உங்கள் கைகளில் வைத்து முகர்ந்திருப்பீர்கள்
கனிந்த மேகம் பொழியும் நீரை
உங்கள் இருகரம் குவித்து உங்களிடத்தில் வாங்கியிருப்பீர்கள்
இவற்றிற்கெல்லாம் மேலான ஒன்றைப் பார்த்திருப்பீர்கள்
உணர்ந்திருப்பீர்கள்

தாயின் வயிற்றிலிருந்து குழந்தை ஒன்று
வெளிப்படும் வேளையைப் பார்த்திருப்பீர்கள்
தாயின் வயிற்றிலிருந்து குழந்தை ஒன்று வெளிப்படும் வேளையில்
உங்கள் கைகளில் ஏந்தியிருப்பீர்கள்
கருவிலிருந்து குழந்தை ஒன்று வெளிப்படும் வேளைக்காக
தவித்திருந்திருப்பீர்கள்
கருவிலிருந்து குழந்தை ஒன்று வெளிப்படும் வேளைக்காக
காத்திருந்திருப்பீர்கள்

நானும் காத்திருந்தேன்
என் தாயின் வயிற்றில் குழந்தையாக
அதுவும் பெண் குழந்தையாக
நானும் காத்திருந்தேன்
என் கருவிலிருந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க
அதுவும் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க
நான் உள்ளே காத்திருந்தேன்
நான் உள்ளே வைத்தும் காத்திருந்தேன்
இரண்டு காத்திருப்பும் ஒன்று தானா
இரண்டு காத்திருப்பின் காலமும் ஒன்று தானா
உங்கள் மனதின் காத்திருப்புக்களை அறிந்தவர்கள் நீங்கள்
ஆண் குழந்தை வெளிப்படும் வேளையில் காத்திருந்தவர்கள்
அல்லது பெண் குழந்தை வெளிப்படும் வேளையில் காத்திருந்தவர்கள்
இரண்டு காத்திருப்பும் ஒன்று தானா
நான் அறிந்தவளாகவும் இருக்கிறேன்
அறியாதவளாகவும் இருக்கிறேன்

என் தாய் என்னைப் பெற்றெடுத்தாள்
காத்திருந்தான் என் தகப்பன்
இங்கே ஒரு பெண் குழந்தை வெளிப்படும் வேளை என்பது
வானத்து முகில் கிழித்து நிலவு வெளிப்படுவது போல இல்லை
கூரிய முள் விலக்கி ரோஜா ஒன்று வெளிப்படுவது போல இல்லை
அதனினும் கடினமானது

கரும்பாறையில் விழுந்த விதை ஒன்று
முட்புதர் நடுவே முளைத்தெழுவது போன்றது
நான் வெளிப்பட்டஎன் காலம் கொடியது
அங்கே நீலநிறத்தில் எனக்கான ஆலகாலம் நிரம்பியிருந்தது
நீலக் கடலென
என் காலம் கொடியது
அங்கே நீலநிறத்தில் எனக்கான ஆலகாலம் விரிந்திருந்தது
நீல வானமென

நான் வெளிப்படும் வேளையில்
என் தாயின் கருவிலிருந்து நான் வெளிப்படும் வேளையில்
என் தகப்பன் காத்திருந்தான்
என் சுற்றம் காத்திருந்தது
கூடவே காத்திருந்தன ஐந்து சொட்டு கள்ளிப் பாலும் சில நெல் மணிகளும்
நான் ஏசுவைப் போல உயிர்த்தெழுந்தவள்
கள்ளிப்பாலிலிருந்து ஏசுவைப் போல உயிர்த்தெழுந்தவள்
கருவறையை கல்லறை ஆக்காத
என் தாயின் செயலால் பிறந்தவள் நான்
நான் தப்பிப் பிழைத்தேன் என் தாயின் கருணையினால்
நான் தப்பிப் பிழைத்தேன் என் தகப்பனின் பேரன்பினால்
நான் தப்பிப் பிழைத்தேன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுத் தர
நான் தப்பிப் பிழைத்தேன் இந்த உலகைக் காக்க
நான் தப்பிப் பிழைத்தேன் இந்த உலகை மகிழ்விக்க
பெண் தானே இந்த உலகின் மகிழ்ச்சி
பெண் தானே இந்த உலகின் நிறைவு
பெண் இல்லாமல் ஒன்றுமே இல்லை
பெண்ணில் இந்த ஆண்கள் மகிழ்வதை
என் எல்லாப் பருவங்களிலும் உணர்கிறேன்


தத்தித் தவழ்ந்தேன்
என் தகப்பன் மகிழ்ந்தான்
திக்கித் திக்கிப் பேசினேன்
என் சகோதரன் மகிழ்ந்தான்
தப்புத் தப்பாக எழுதினேன் சின்னஞ்சிறிய கரும்பலகையில்
என் தாய் மாமன் மகிழ்ந்தான்

என் உலகம் பெரியது
என் உலகம் ஆகாயத்தைவிடவும் பெரியது
தெருவில் விரிந்து கிடக்கும் நிலவொளியில்
அகன்ற வானத்தைத் தொட்டு இழுக்கும் பருவம் அது
விரிந்த நிலவொளியில் தெருவெங்கும் ஓடித் திரிந்தேன்
குட்டைப்பாவாடை உடுத்தியபடி
ஓடிவிழுந்து முழங்காலில் நிலமுரசி
உதிரம் பெருகியது கண்டு பதறினான் ஒருவன்
அவன் இட்ட மருந்தில் என் காயம் ஆறியது கண்டு மகிழ்ந்தான் அவன்

காட்டுபூக்களைச் சூடி காட்டுவெளியில் சுற்றி
மான் விரட்டித் திரிந்த குறிஞ்சிநில நாட்களில்
உன்னிப் பூக்களை பழங்களோடும் இலைகளோடும்
தாம்பூலமென மடித்துத் தந்தான் இன்னொருவன்
நிறம் மாறிச் சிவந்த என் உதடுகள் பார்த்து
ரசித்து மகிழ்ந்தான் அவன்

கிராமத்து நாட்களின் நீண்ட மதியப் பொழுதுகளில்
வெயிலோடு கள்ளிப் பழம் பறித்துத் தந்தான் வேறொருவன்
சிவந்த முள் ஒதுக்கித்தின்னப் பழக்கித் தந்து மகிழ்ந்தான் அவன்

வீட்டின் பின்பக்கக் கிணற்றடியில்
உதிரம் பெருக்கி நான் பெரியவளானதும்
காணாமல் போனார்கள் அவர்கள்
தாவணி நாட்கள் வந்தன
என் உலகம் தெரு அல்ல
என் உலகம் என் நண்பர்கள் அல்ல
என் உலகம் பச்சைப் புல்லில் ஊர்ந்து திரியும்
சிற்றெறும்பின் கால் அளவே என்று உணந்தேன்
பச்சைத் தாவரங்களில் என் பெயர் எழுதப் பழகிய காலம் அது

என் மெல்லிய கொலுசுச் சத்தம் உணர்ந்து மகிழ்ந்தான் ஒருவன்
அவன் காத்திருந்தான்
அவன் காத்திருந்தான் நான் காண்பதற்கு
அருவி கொட்டி என் உடலில் பெருகி ஓடுவது போல
அவன் கண்களில் மகிழ்ந்தேன்
அவன் கண்களில் குளிர்ந்தேன்
அவன் கண்களில் உடன் இழந்தேன்
அவன் கண்களில் உடல் இழந்தேன்

அடர்த்தியான மஞ்சள் பொழுதில் திருமணம் நடந்தது
மஞ்சள் நிறத்திலான வாழ்த்துக்களோடு
கனவிலிருந்த வார்த்தைகளை
கனவு தந்த வேதனைகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன்
இந்த உலகின் நடைபாதையில் நின்றிருந்தேன்
வெட்கத்தின் நிழல் மெல்ல இடம் பார்த்து
வெளியேறிய நாட்கள் அவை
வெட்கம் தணிகின்ற காரணம் அறியும் முன் கருவுற்றேன்

நான் இப்போது காத்திருந்தேன்
என் கருவிலிருந்து
குழந்தை
வெளிப்படும் வேளைக்காக காத்திருந்தேன்
என் கருவிலிருந்து
பெண் குழந்தை ஒன்று வெளிப்படும் வேளைக்காக காத்திருந்தேன்
என் காலம் வேறு
இவள் காலம் வேறு


குப்பைத் தொட்டியின் குழந்தைகள்
இந்த கால கட்டத்தின் அவமானம்
முட்புதரில் கிடக்கும் குழந்தைகள்
இந்த கால கட்டத்தின் அருவருப்பு
கழிவு நீர் சாக்கடையில் கிடக்கும் குழந்தைகள்
இந்த கால கட்டத்தின் மாபெரும் அசிங்கம்

என் கருவிலிருந்து வெளிப்பட்ட குழந்தையை
என் பெண்ணே
என் செல்லமே என நான் கொஞ்சுகிறேன்
பெண் குழந்தை என்று முகஞ்சுளிக்கும் சுற்றம் அறிவேன்
பெண் குழந்தை என்று அறிவு மறுக்கும் சமூகம் அறிவேன்
பெண் என்று உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களை அறிவேன்
பெண் என்பவள் மேலான பாலியல் வன்முறை அறிவேன்
இங்கே நெல் மணிகள் என
இவளுக்குக் காத்திருக்கும் போராட்டம் அறிவேன்
இங்கே கள்ளிப் பால் என
இவள் சந்திக்கும் அவலங்கள் அறிவேன்

ஒரு சொல்லைச் சொல்லத் தோன்றுகிறது
இந்த மாபெரும் சபையில்
சொல்லலாம் என நினைக்கிறேன்
வேண்டாம் எனத் தடுக்கிறது மனது
பெண்ணாகப் பிறப்பது பாவம்
பிறந்து விட்டேன்
இந்தப் பெண்ணைச் சுமக்க விரும்பாத ஆணை
நான் ஏன் சுமக்க வேண்டும்
பெண்ணை உடலாக பார்ப்பவன் அவன்
அறிவுநிலையில் பெண்ணை விரும்பாதவன் அவன்
அவளது இருப்பு அவனுக்குத் துயரம்

மகாசக்தி
பராசக்தி
பத்ரகாளி
ஏன் நீங்கள் எல்லோரும் மௌனமாக இருக்கிறீர்கள்
இந்தப் பெண்ணைச் சுமக்க விரும்பாத ஆணை
நான் ஏன் சுமக்க வேண்டும்

பிறகேது நம் சந்ததி
பிறகேது நம் புராணங்கள்
பிறகேது வரலாறு
ஆண் இன்றி பெண் இல்லை
பெண் இன்றி எதுவுமே இல்லை என்பதை அறிந்தவள் நான்

எத்தனையோ கடந்து பெண் வெளிப்படும் வேளை இது

அவளின் வலிகளை உணர்பவர்களை நான் நேசிக்கிறேன்
அவளின் துயரங்ககளைப் பகிர்ந்து கொள்பவர்களை நான் நேசிக்கிறேன்
அவளின் திறமைகளை மதிப்பவர்களை நான் நேசிக்கிறேன்
இந்த மாபெரும் சபையில்
கருவிலிருந்து குழந்தை வெளிப்படுவது போல
நான் வெளிப்படும் இந்த வேளைக்கு
காரணமானவர்களை நான் நேசிக்கிறேன்
என் போல ஆயிரம் ஆயிரம் பெண்கள் வெளிப்படும் வேளையில்
கை கொடுப்பவர்களை நான் நேசிக்கிறேன்

மழைத் துளிகளை வாங்குவது போல
பூக்களை நுகர்வது போல உங்கள் கரங்களை விரியுங்கள்
என் பெண் குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்
இந்தப் பெண் குழந்தையை நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன்
என் பெண் குழந்தை மட்டுமல்ல
பெண் குழ்ந்தை ஒன்றை கள்ளிப் பால் வாசனையின்றி
கரம் விரித்து ஏந்துகிற ஆண்களை நான் நேசிக்கிறேன்

உங்கள் கைகளை அல்ல
உங்கள் கைகளின் ஒவ்வொரு விரல் பிடித்தும் முத்தமிடுகிறேன்

மழை போல அல்ல
விதை போல அல்ல
கிழக்கிலிருந்து சூரியன் வெளிப்படுவது போல
கருவிலிருந்து பெண் குழந்தை வெளிபடும் வேளையாக இருக்க
இந்த சபை வணங்கிக் கேட்டு விடை பெறுகிறேன் .

நன்றி .

காதல் வழி . . .



ஆற்றின் கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்

வெள்ளம் என் மீது
புரண்டோடுகின்றது

தொண்டை வறண்டு
தாகத்தில் தவிக்கின்றேன்

கால்கள்
நீரில் மிதக்கின்றன

ஆற்றின் போக்கை
எதிர்க்க
இயலாமல்
மீனாய் மாறுகின்றேன்

தப்பிக்க இயலாது
இனி
நானும்

என்னிடம் இருந்து
நீரும் .

கடலைசையும் வீடு . . .



ஒவ்வொரு முறை வீடு திரும்பும் போதும்
ஏதாவது ஒரு பொருளை
கொண்டுவந்து
சேர்ப்பது வழக்கமாகி விட்டது

ஒருமுறை
மீன்தொட்டியில் இடுவதற்கென
சிப்பிகளையும்
பவளப் பாறைப் படிகங்களையும் கொண்டுவந்தேன்
வீடு நிரம்பியது
உப்பின் ஈரவாசனை

பின்பொரு நாள்
கடல் நீராடித் திரும்புகையில்
ஆடைகளில் ஒட்டிவந்த மணல்துகள்கள்
கடற்கரை வேண்டி நிற்கிறது என்னிடம்

கடல் மீனின் மாதிரி
கடலின் வண்ணப் படம்
சிறிய சங்குகள்
கடல்பாசி எனக்
கடல் பொருட்களைத் தேடித் தேடி
அலைகிறேன் கடற்கரையின்
கடைவீதிஎங்கும்

கடற்கரை மணல்துகள்
அப்படியே கிடக்கிறது
அலையோசையை என் வீடெங்கும் நிரப்பியபடி.

நினைவின் பயணம். . .


என் நினைவுகளோடு
இருக்கும்
நீ
என்னுள் கரைகின்றாய்

காத்திருக்கின்றாய்

அருவியின் ஓசையாய்
மனம்
அதிர்வது
புரிகிறது எனக்கு

அது
என் மீதும்
படரத்தான் செய்கிறது

உன் நினைவில்
வெம்மையில்
உருகுவது அறியாமல்

நான்
நதியில்
கரைவதைப் பார்க்கின்றாய்

தூரதேசத்துப் பறவையாய் ஆனாலும்
கடலை
விழுங்கி
உனையடைவேன்

ஒரே
ஒரு சனத்தில்.

மீட்சி. . .


மலை முகட்டிலிருந்து
வழியும்
நீர் வீழ்ச்சியாய்

ப்ரியங்களைப் பொழிகிறாய்

இலக்கின்றிப் பயணிக்கும்
காற்றைப் போல

உன் அன்பு
பள்ளத்தாக்கை அடைகையில்

கால்களும் கைகளும்
செய்வதறியாது திகைக்க

முத்தங்கள்
ஊற்றெடுக்கும் நிலத்தில்

கடலெனப் பெருகிய
காதல்
உன்னை மீட்கிறது .

இருள் விழிகள். . .



கண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன
கண்களுக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன
மலர்களும் கண்கள் போலத்தான்
அர்த்தங்கள் நிரம்பியவை
கண்கள் மலர்ந்ததா
மலர்கள் விழித்தா என
நள்ளிரவில் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்
மலர் மலரும்
கண்கள் திறக்கும் என்றபோதும்
தகுதியுள்ளவர் யார்
தகுதியற்றவர் யார் என
கண்களுக்கும் தெரியாது
மலர்களுக்கும் தெரியாது

அவை மூடிக் கிடக்கையில்.

பரிமாணம். . .


இசையென்றாய்
பாடலென்றாய் நல் அமுது என்றாய்
நிலவு என்றாய்
நீங்காத கனவு என்றாய்
கனவின் தேவதையென்றாய்
மலை என்றாய்
மலை முகடு என்றாய்
மலை முகட்டை உரசிச் செல்லும் மேகம் என்றாய்
மேகம் குளிர்ந்து பெய்யும் மழை என்றாய்
மழை பெருகி ஓடும் நதி என்றாய்
கடல் என்றாய்
கடலின் அலை என்றாய்
காதலின் நெருப்பு என்றாய்
என்றாய் என்றாய் என்றாய்
நான் மயங்கி சரிந்தேன்
பெண் என்பதை மறந்தேன்
நான் ஆதிசக்தி என்பதையும் மறந்தேன்.

பெண். . .



இந்த காற்றைக் கண்டெனக்குப் பொறாமை
எத்தனை சுதந்திரமாய் வீசுகிறது
அல்லது
வீசாமல் இருக்கிறது

இந்த நிலவைக் கண்டு பொறாமை
கடலைக் கண்டு பொறாமை
நிலத்தைக் கண்டு பொறாமை
பரம்பொருளான அனைத்தின் மீதும் பொறாமை

இயற்கை
இயற்கையாய் இருக்கின்றது
வீசுகிறது
சுடுகிறது
பொழிகிறது
கொல்கிறது

நான் ௬ட இயற்கை தான்
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை

இந்த
பஞ்சபூதங்களாய் இருக்கிறேன்
எனக்கென
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை .

காற்றில் மிதக்கும் துயரம். . .



என்ன செய்வது
கரங்களில் மயங்கிச் சரிந்த மனதினை

என்ன செய்வது
மனதில் மயங்கிச் சரிந்த உடலினை

என்ன செய்வது
துயரத்தில் தோய்ந்த காதலை

ஒரு புன்னகை
அதற்கு ஈடான ஒரு சொல்
அல்லது
நெருக்கத்தை உணரவைக்கும்
ஏதேனும் ஒன்று

அன்பைப் பெற காத்திருக்கையில்
மௌனத்தின் ஊடே
கடந்து செல்கின்ற காற்றில்
மிதந்து கொண்டிருக்கிற காதல்
துயரமாக
கண்களில் வழிகிறது.

பறவையின் குரல்...


அலைபேசியில் குரல்களாய்
அடைகின்ற
பறவைகள்
முகம் திருப்பிப் பறக்கின்றன
தொலைவிடம் நோக்கி

ஏதுமறியாத
சிட்டுக்குருவியின் இதயத்தில்
படர்ந்திருக்கிறது
மின்பதற்றம்

பேசிக்கொண்டிருந்தோம்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பறவைகள் பற்றியும்

காதலும்
வெறுப்பும்
பிரிவும்
காமமும்
கட்டளைகளுமென
முகம்கொண்ட வார்த்தைகள்
மின் வார்த்தைகளாகின்றன

ஒருவரிடமிருந்து
ஒருவருக்கு
பின்னும்
பலருக்கும்

வெளியில்
மிதந்து கலைகிறது

சிட்டுக்குருவிகள்
அமர்ந்து பேசவியலாத
ஆகாயத்தில்
சிவப்பு வண்ணம்
படர்ந்திருக்கிறது.