Thursday 20 September 2012

உயிர்க்கும் வார்த்தைகள் . . .




மகளைப் பற்றிய
கவலை
மரத்தின் நிழலென

பொழுது தோறும் வளர்ந்து வருகிறது

தங்களது
சந்தேகங்களை
துக்கங்களை
வலி நிறைந்த மனச் சுமைகளை
பறவைகளுக்குத் தானியங்களை
தூவுவதுபோல
ஒவ்வொரு தந்தையும்
தங்களை தொடர்பவர்களிடம்
சொல்லிச் செல்கின்றனர்

அவை
தரையிறங்கும் பறவைக் கூட்டமென
ஒன்றன்பின் ஒன்றாக
உயிர்க்கிறது

ஒருபொழுது தேய்ந்து மறைய
ஒரு பொழுது விரிகிறது

மேலும்
நிலவெளிகளில் படர்ந்து வளர்கிறது.

சிறை மீட்டல். . .



மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி
தங்கள் உலகை
மெல்ல மெல்ல எட்டிப்  பார்த்தன  சில பறவைகள்

மஞ்சள் 
பச்சை
நீலம்
இன்னும் பல வண்ணங்களில்
கூண்டினுள் பறவைகள்
காப்பிச்செடியின்
காய்ந்த  கிளைகளில்
காதலை  பரிமாறிக்கொண்டிருந்தன

வெயிலும்
பனியும்
கம்பிகளைக்  கடந்து  உள்நுழைகிறது

கூண்டுக்  கம்பிகள்
மண்கலயங்கள்
காப்பிக் கிளைகள்
பறவைகளை
பருந்துகளிடமிருந்து  பாதுகாக்கின்றன

பறவைகளின் இருப்பினை
வாசனையால்  உணர்ந்துகொள்ளும் பூனைகள்
எங்கிருந்த  போதிலும்
அவைகளை   அச்சப்படுத்திக்கொண்டேயிருந்தன

உயிரின்  வாதையை  படபடக்கும் சிறகுகள்
அறிவதில்லை
ஒருபோதும்  கூண்டுப் பறவையை
பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை .

Tuesday 18 September 2012

காலம் உணர்த்திய ஆடை. . .



விருப்பம் எதுவென்று அறியாமலேயே
ஆடைகளை அணியப் பழகியிருந்தேன்
என் தேர்வு
எப்போதும் நிராசைகளோடு இருக்கிறது

காலம்
உடலில் போர்த்தியிருக்கும் ஆடைகளென
காற்றில் நடனமாடுகின்றது
அல்லது
உயிராய் உடலில் மிதக்கிறது

நிரந்தரமான ஆடையொன்று
காத்திருக்கிறது என்பதை அறிந்தபடி
அதை நெருங்கத் துவங்குகையில்

எனக்காய்
யார் யாரோ தேர்ந்தெடுத்த ஆடைகள்
ஒவ்வொன்றாக கழன்று நதியில் வீழ்வதை
பார்த்தபடி
மலர்கின்றன

தலையில் சூடியிருக்கும்
மல்லிகை மொட்டுகள்.

ஒரு யானை. . .



எனக்குத் தெரிந்த யானையை
வேறு எவருக்கும் தெரியாது
நீளமான தும்பிக்கையும்
பருத்த கால்களும்
...
சிறிய கண்களும் இருக்கும்தான்

என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம்
ஆற்று நீரை
தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில்
சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில்
மனது சிலிர்க்கும்

காடெல்லாம் சுற்றி வந்து
உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு
வீட்டு வாசலில் நிற்கும்

ஆற்றினைக் கடக்க
அதன் மேலேறி பயணித்தும்
யானைச் சாணத்தை மிதித்து
கதகதப்பூட்டிக் கொண்டதுமான
ஒரு சிறுமி
இன்னும் உயிர்ப்புடனிருக்கிறாள்
மனதிற்குள்

காட்டு மரங்களின் ஊடே
கருத்த மேகம்போல ஊர்ந்து செல்லும் யானை
ஒரு போதும்
பட்டுடையும் நகைகளையும் உடுத்திக் கொண்டு
வருவோர் போவோருக்கு
ஆசி வழங்கும் சமத்து யானைகளுடன்
ஒப்பிடவே முடியாது

காட்டு யானையே
என்னை சுதந்திரப் பெண்ணாய்
உணரச் செய்துகொண்டிருக்கிறது .

Saturday 15 September 2012

ஊஞ்சலாடும் ஈரம். . .



இந்த நிலம்
இப்போது
இப்படியென்று
எவருக்கும் புரிவதில்லை


பருத்திப் பூக்கள் வெடிக்கும் நிலத்தில்
வாழை காய்த்துக் குலுங்கும் நிலத்தில்
எத்தனை வெடிப்புகள் இருந்தபோதிலும்
சிறுமழை
கனமழை எதுவாகிலும்
ஈரத்தால் அத்தனை நெகிழ்ந்து போகும்
நிலத்தின் உட்பரப்பினை நெகிழச் செய்வது எது
உண்மையில் நனைதலில் நெகிழ்வது அகமா புறமா

நீரில் மிதந்துகொண்டிருக்கும்
பரந்து விரிந்த இந்நிலம்
செழித்திருக்கும் தாவரங்களின் இலைகளில் பனித்திருக்கவும்
வேர்களில் செறிந்திருக்கவும்
அறிந்திருக்கும்

நீர்க் கால்களின் அடர்வில்
நெகிழ்கிறது நிலம்

இங்கே நிலம் ஒன்று
இடங்கள் வெவ்வேறு
மேலும் கீழும் அசையும் ஊஞ்சலென
தள்ளாடுகிறது இந்த ஈரம்.

காலம் உணர்த்திய ஆடை. . .




விருப்பம் எதுவென்று அறியாமலேயே
ஆடைகளை அணியப் பழகியிருந்தேன்
என் தேர்வு
எப்போதும் நிராசைகளோடு இருக்கிறது

காலம்
உடலில் போர்த்தியிருக்கும் ஆடைகளென
காற்றில் நடனமாடுகின்றது
அல்லது
உயிராய் உடலில் மிதக்கிறது

நிரந்தரமான ஆடையொன்று
காத்திருக்கிறது என்பதை  அறிந்தபடி
அதை நெருங்கத் துவங்குகையில்

எனக்காய்
யார் யாரோ தேர்ந்தெடுத்த ஆடைகள்
ஒவ்வொன்றாக கழன்று நதியில் வீழ்வதை
பார்த்தபடி
மலர்கின்றன

தலையில் சூடியிருக்கும்
மல்லிகை மொட்டுகள்.

Saturday 8 September 2012

மண்வாசனை

 
 
நூறாயிரம் வீரர்கள் தொடரச்
சென்றிருக்கிறாய்
குதிரைகளோடும்
யானைகளோடும்
வீரர்கள்
வாட்களையும் வேல்களையும்
ஏந்தி பின் தொடர்கிறார்கள்
உன் உடல் கவசங்களால்
பாதுகாக்கப்பட்டிருக்கிறது
உன் கண்களில்
நிலத்தின் மீதான வெறி சுடர்கிறது
புழுதியால் காற்று நிரம்புகிறது
எதிரிகளின் நிலம் அதிர்கின்றன
நான் அறிவேன்
நீ விரும்பிய நிலத்தை வென்று திரும்புவாய் என
உனது நிலத்தில்
உன்னுடையவள்
மண்வாசனை பூக்க விரிந்திருக்கிறாள்
மழையற்று
வறண்ட நிலம் பிளந்திருக்கிறது
இந்த மண்வாசனை
நீ நுகர்கையில்
இந்த நிலத்தின் சுனை பெருகத்தொடங்கும்

அதில் பேச மறந்த நாம்
மிதந்து கொண்டிருப்போம்.

Thursday 6 September 2012

அர்த்தநாரி



வீடு
மீண்டும் அவளைப் பெண்ணாக மாற்றியது

தாய்மையின் வாஞ்சையுடன்
பிள்ளைகளுக்காகக் காத்திருக்கிறாள்

வியர்வையும் உப்பும்
அன்றாடத்தின் வெறுப்பும் படிந்து கிடக்கும்
தன்னைக் கழுவிக்கொள்ள குளியலறை செல்கிறாள்
உதடுகளின் சாயத்தைக் கழுவுகிறாள்
அவள் மீது படிந்திருந்த பகல் நீரில் கரைகிறது

பால்குக்கரின் விசில் சப்தத்தில்
மூளை நரம்பொன்று அதிர்கிறது
நாளைய பணிக்கென காத்திருக்கும் குறிப்புகள்
இன்னொரு நரம்பில் ஊடுருவிப் பாய்கிறது

குளியலறையிலிருந்து
நீங்கும் அவள் வேறு ஒன்றாகத் தெரிகிறாள்.

Tuesday 4 September 2012

பறவையின் விருட்சம். . .



சிறகுகளின் அசைவில் உருவாகும் ஒளியால்
என்னை அழைக்கிறாய்

உனக்கான சிறகசைப்பு அது
...
என்பது நீ அறிந்ததே

உயிர் கசிந்து
பேரார்வத்துடன் விண்ணில் பறக்கும் தருணம்
விருட்சங்களில் பூக்கள் மலர்கிறதை
நீ அறிந்து தானிருப்பாயா
இல்லையேல்
நான் ஒரு பறவை என்பதையாவது

என் சிறகுகளின் அசைப்பில் உருவாகும் ஒளியால்
நீ
திரும்பத் திரும்ப அழைக்கிறாய்

பூக்கள்
மரங்கள்
இலைகள்
வான் வெளி எங்கும்
அவ்வொளியை ஒளிரச் செய்கிறேன்

ஒரு பக்க இறகு காதலையும்
மறுபக்க இறகு தூய்மையான நேசத்தையும்
சிறகடித்து விரிக்கிறது

ஒரு பெண்ணை
வானிலிருந்து தரையிறக்குவதுதானே
உனது விருப்பம்
என்றபோதிலும்
உனக்கான
சிறகசைப்பு அதுவென நீயறிவாய்.

Sunday 2 September 2012

பறவையின் குரல்...



அலைபேசியில் குரல்களாய்
அடைகின்ற
பறவைகள்
முகம் திருப்பிப் பறக்கின்றன
...
தொலைவிடம் நோக்கி

ஏதுமறியாத
சிட்டுக்குருவியின் இதயத்தில்
படர்ந்திருக்கிறது
மின்பதற்றம்

பேசிக்கொண்டிருந்தோம்
பேசிக்கொண்டிருக்கிறோம்
பறவைகள் பற்றியும்

காதலும்
வெறுப்பும்
பிரிவும்
காமமும்
கட்டளைகளுமென
முகம்கொண்ட வார்த்தைகள்
மின் வார்த்தைகளாகின்றன

ஒருவரிடமிருந்து
ஒருவருக்கு
பின்னும்
பலருக்கும்

வெளியில்
மிதந்து கலைகிறது

சிட்டுக்குருவிகள்
அமர்ந்து பேசவியலாத
ஆகாயத்தில்
சிவப்பு வண்ணம்
படர்ந்திருக்கிறது.