Thursday 30 May 2013

மாதிரிப் பட்டாம் பூச்சி . . .


இளம் பச்சை நிறத்துப் பட்டாம்பூச்சியைத்
தொடர்ந்து சென்றேன்
என் மகளுடன்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும்
எங்கும் தென்படவில்லை
வேறு பட்டாம் பூச்சிகள்

வயல் வெளியில்
தட்டான்களும்
வெட்டுக்கிளிகளும் பறந்து திரிந்தன
மாலை
மழைவரும் என்று நினைத்துக் கொண்டேன்

வேட்டைக்குச் செல்வது போல
நாங்கள்
அந்த ஒரே ஒரு பட்டாம் பூச்சியைத் தேடினோம்
நேற்று சிவப்பு நிறத்து பட்டாம் பூச்சியைத்
தேடித் திரிந்தோம்

அதற்கு முதல் நாள் நீல நிறம்

அதற்கும் அதற்கு முந்தைய நாள் மஞ்சள்நிறம்
என் மகளின்
மாதிரிப் பட்டாம்பூச்சிகளின் தொகுப்பு நூலிற்கு
அவளுடன் அலைந்து கொண்டிருந்தேன்
தேடிக் கொண்டேயிருப்பதும்
கைகளில் அகப்படாமலிருப்பதும்
எத்தனையோ நினைவிலாடின

தேடியது போதும் என்றும் தோன்றியது

வயல் முடிந்த
தரிசு நிலத்தின் மையத்தில் நின்றிருந்த
ஒற்றை ஆலமரத்தடியில்
நிழல்தேடி நகர்ந்தோம்
எங்கிருந்தோ பறந்துவந்து
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
எண்ணற்ற பட்டாம்பூச்சிகளைக்
கண்டோம்

அந்த நிலையைக் கலைத்திடாமல்
மெல்லத் திரும்பினோம்
வண்ணங்களை
மனதில் ஏந்திக்கொண்டு .

No comments: