Sunday 4 May 2014

அம்மன் :





மஞ்சள் வழியும் விரல்களில்
வனையத் துவங்கினான் 

அவளை
உரு ஏற்றும் சொல்
அவனுள் துளிர்விடத் துவங்கியது
முன்பாக
தன்னை ஒறுத்தி  தவம் இருந்திருந்தான்
ஏழு குளங்களில் மண் எடுத்து 
ஏழு நீர் நிலைகளில் நீர் சேகரித்து
விஷம் முற்றித் தெறிக்கும் பாம்பு
வாசம் செய்கிற புற்றின் மண்ணும் சேர்த்து
சுண்ணாம்பு ஆலையிலிட்டு அரைத்தான் 
வெப்பமண்டலம் சுழன்றெழ

அள்ளியெடுத்து
மண் பிசைகிறான்
விரல் வழி உயிர் வழிகிறது
அவன் தீயின் விஷத்தில் பிறந்தாள்
அந்த ஊரம்மன்

*
பீடம் அமைத்து
கிழக்கு நோக்கியமர்ந்த கோலத்தில் அவளை இருத்தினான்
காது வடித்து
கழுத்தில் காரை  நிறுவி
காலில் தண்டை அணிவித்தான்
பின்பு மகுடம் சூட்டி 
ஆயுதம் ஏந்திய அவள் கைகளில்
மினுங்கும் பச்சைக் கிளிகளைக் கொடுத்தான்
தன்னுரு கலையாமல்
காத்திட பெரியநாச்சியை வேண்டினான்
அந்த மரகத நிறம் தான் பூசிக்கொண்டான்
*
யாருமற்ற வெளியில்
இருள் வனத்தில்
மலைச்சியின் வனப்பை நீவுகிற விரல்கள்
கண்ணில் தோன்றுகிறது
நீலகண்டன் கைப் பிழம்பில் உருவான பெண்ணிவள்
விரல் வழி வழிகிற மஞ்சள் நிறச் சாறு பூசி
பாராயணம் செய்த
மந்திரத் தாயத்து ஒன்றை இடுப்பில் அணிவித்தான்

விரல் நீவுதலில்
வனப்பு மிகுந்த மலைச்சி துயில்கிறாள்
வனம் ஒளிர்கிறது.

*
மூப்புடை பேய்ச்சி அவளைக் கண்ணாரக் காண
பூப்படை சுமந்து
தீக்கங்கென நின்றான்
கிளி முத்தமிடும் கைகளை கண்ணில் ஒற்றி
திறந்த வெளியின்  பூசை செய்திட
சல்லடம் கட்டி
வல்லயம்  ஏந்தி வந்தான்

நீலகண்டி அவள் பொங்கிய நீரமுது பருகி
அவனே
அம்மன் என்றானான்.
*

No comments: