Sunday 4 May 2014

யுகாந்திர உறக்கம் :





நான் அறிவேன்
உறங்காத இரவுகளையும்
உறங்காத பெண்களையும்
எனக்கு முன்பாக உறங்காதிருந்த பெண்கள் பலரின்
தசையிழைகளினாலும்
நரம்புகளினாலும்
என் உடல் கட்டப்பட்டுள்ளது
என் தாயும்
அவளுடைய தாயும்
அவளுடைய தாய்க்குத் தாயும்
தூங்காமல் தவித்திருந்த இரவுகளை நானறிவேன் 

எப்போதும் கொல்லப்படுவதற்கான
சாத்தியக்கூறு  இருப்பதை
அறியாத பெண்
ஒருபோதும் இல்லையென்றே சொல்லலாம்
என்பதை அறிக்கையில் பெண் உறங்குவதில்லை

பெண்ணொருத்தி கருக்கொண்டால்
அவளும் உறங்குவதில்லை
பெண்ணென்று கருவானால்
அதுவும் உறங்குவதில்லை

ஆணென்றும் பெண்ணென்றும்
உயர்வென்றும் தாழ்வென்றும்
சொல்லி வளர்க்கப்படும் பெண் குழந்தை
தன் உடல் மலர்ந்து
செந்நிறமாய் உடைந்து கசிகையில்
கொண்டாட்டம் மறுத்து
பெண் உடல் தீட்டு என்று உணர்த்தபடுகையில்
உறங்குவதில்லை

திருமணம் பற்றிய கனவுகள் புகுத்தப்பட்டு
உறக்கம் கலைகிறாள்
மேலும்
அதன்பின்பான இரவுகளும் கனவுகளும்
அவளுக்கானது அல்ல .

அதிகாலை விழிப்பு என்பது பெண்களுக்கானது
சூரியன் மறைந்தும்
அந்தி சாய்ந்தும்
பறவைகள் கூடடைந்தும்
பெண் அடுக்களையில் நிற்கிறாள்
ஓயாத உழைப்பில் பலியிடப்படும் அவள் உறக்கம்
இங்கே பரிமாறப்படுகிறது
சாலப் பரியும் மகாசக்தி என்று உயர்த்தியும்
அவள் உறக்கம் பலியிடப்படுகிறது
கணவனுக்கு சமைத்து
குழந்தைகளுக்கு சமைத்து
வீட்டைச் சுத்தப்படுத்தி
புறத்தை அழகுபடுத்தி
தண்ணீர் தேடி சேகரித்து
விறகு பொறுக்க காட்டில் அலைந்து
தூக்கம் தொலைக்கிறாள்

மாட்டுத் தொழுவத்தைச் சுத்தப்படுத்துகிறாள்
காடு கழனியில் அலைகிறாள்
ஆடு மாடு மேய்க்கிறாள்
வயல் வெளியில்
அவள் தன் உடல் வளைந்தே முழு நாளும் நிற்கிறாள்
விதைக்கிறாள் நாற்றுநடுகிறாள்
களைப் பறிக்கிறாள்
அறுக்கிறாள் கட்டுகிறாள்
உலரவைக்கிறாள்
தானியத்தை சேகரிக்கிறாள்
பின் வருகிற சந்ததிகளுக்கும்
அவளே தானியங்களை சேமித்து வைக்கிறாள்

பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
தானியங்களையே நாம் உண்ணுகிறோம்
பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம்
பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
மண் கொண்டே நாம் கட்டுகிறோம்
கட்டப்பட்ட வீடு முழுக்க
ஆணின் குறட்டை ஒலி  நிறைந்திருக்கிறது

ஆணுக்கு என்றே தன் உடலைக் கட்டுகிறாள்
ஆணுக்கு என்றே தன் மனத்தைக்  கட்டுகிறாள்
ஆணுக்கு என்றே தன் மொழியைக் கட்டுகிறாள்

பிறப்பளிக்கும் காலம் முதல்
ஆண்களுக்கும் அவளே கருவறை தாங்கி நிற்கிறாள்
முடிவற்ற உறங்கா இரவுகள் அவளுக்கானவை
பெண் இரவுகள் தங்களுக்கென உறக்கம் வேண்டி நிற்பவை 

இன்னும் உறங்குகிறாயா என்று கேட்பது
என் கணவனின் குரல்
இன்னும் உறங்குகிறாயா என்று கேட்பது
என் தகப்பனின் குரல்
இன்னும் உறங்குகிறாயா என்று கேட்பது
என் மகனின் குரல்
இன்னும் உறங்குகிறாயா என்று கேட்பது
ஒரு சமூகத்தின் குரல்
இன்னும் உறங்குகிறாயா என்று கேட்பது
அரசியல் அமைப்பின் குரல்
இன்னும் உறங்குகிறாயா என்று கேட்பது
மத நிறுவனங்களின் குரல்

உண்மையில்
நான் எனக்கென்று உறங்கவே விரும்புகிறேன்

இத்தனை காலம்
இத்தனை பெண்கள்
உறங்காதிருந்த அத்தனை உறக்கமும்
நான் உறங்கவே விரும்புகிறேன்
சவம் போலொரு யுகாந்திர உறக்கம்
என்னைத் தழுவட்டும் .
* Paintings : Courtesy -Suchi Krishnan

No comments: