Tuesday 6 August 2013

வற்றாத நீரோட்டமென பெண்களின் கண்ணீர் ... {கவியரங்கில் வாசித்தது :}



என்றாலும் என் மகளே
கண்ணீர் தான் கதையாச்சு - பெண்
காலமெல்லாம் அழுத கண்ணீர்
கடல் நிரம்பி உப்பாச்சு

விழியெல்லாம் கண்ணீரா வீடு வரும் என் மகளே
நான் அழுத கதைய கொஞ்சம் நீயுந்தான் கேட்டுக்கடி
பெண் அழுத கதையெல்லாம் எங்காத்தா சொல்லி வச்சா
அவளுக்கும் அவங்காத்தா
சொல்லிச் சொல்லி தான் வளத்தா

தலைமுறை தலைமுறையா தாயழுத கண்ணீர்
பொண்ணுக்குச் சீதனமா பின்தொடர்ந்து வருகுதடி

கண் நெறஞ்சி நிக்குறதும்
காத்திருந்து வேகுறதும்
ஊருலகம் அறியாம உள்ளுக்குள் அழுகுறதும்
பொண்ணுக்குத் தான் வாச்சிருக்கு
போகப் போக புரிஞ்சுக்கடி
பக்குவமா நடந்துக்கடி

புருஷனோட சொல்மீறி
பெத்தவனப் பாக்கப் போன
சிவனோட பொண்டாட்டி
பார்வதியத் தெரியுமாடி
போகக் கூடாதுன்னு புருஷன் கை தடுத்துச்சு
அப்ப அவ அழுத கண்ணீர்
அலையலையாப் பெருகுச்சு
சிவன் தன்னோட தலை மேல தாங்கி நிக்கும் கங்கை கூட
அவ அழுத கண்ணீர் தானோ
அப்படியே நின்னுடுச்சோ

சீதை அழுத கண்ணீர்
ராம வீரக் கதையாச்சு
பாஞ்சாலி அழுத கண்ணீர்
பாண்டவர்கள் வாழ்வாச்சு
நல்லதங்காள் அழுத கண்ணீர்
கேணியெல்லாம் நிரம்புச்சு
அகலிகை அழுத கண்ணீர்
கல்லாகிக் கிடந்துச்சு

புராணமா இருந்தாலும்
காப்பியமா இருந்தாலும்
எல்லாமே ஒண்ணு தான்
பெண்ணழுத கண்ணீர்

இயற்கையின் பருவங்கள நாலாகப் பிரிச்சாங்க
மாறிவரும் பருவத்த மனங்குளிர ரசிச்சாங்க
பெண்களையும் இயற்கையின்னு
பெரியவுங்க சொன்னாங்க
எல்லாப் பருவத்திலும் அழத்தானே வச்சாங்க

மரமெல்லாம் இலையுதிர்த்துப் புதுசாச்சு
குளமெல்லாம் பூப் பூத்து புதுசாச்சு
நதியெல்லாம் மழை வாங்கிப் புதுசாச்சு
நிலமெல்லாம் விதை தாங்கிப் புதுசாச்சு
பெண்ணோட கதை மட்டும் பழசாச்சு
பருவங்கள் எல்லாமே கனவாச்சு
பத்திரிகை ஊடகங்கள் பலபேருக்கு
பெண்ணோட சதை தானே கதையாச்சு

பிறக்கும் போது புதுசா அழுகிறா
பெற்றெடுக்கும் போது புரிஞ்சு அழுகிறா
பிறப்புக்குப் பின்னால பசிச்சு அழுகிறா
வளரும் பருவத்தில வகையில்லாம அழுகிறா

ஈரமாய் நனையும் போது செந்நிறமாகச் சிவந்தழுகிறா
பருவத்தில் பொங்கி வரும் காதலிலும் அழுகிறா
பாதையறியாமல் போனாலும் பக்குவமா அழுகிறா
மங்கையாய் மலரும் போதும் அழுகிறா
மணமகளாய் அமரும் போதும் அழுகிறா
மலர்ந்த பூ வாசல் திறக்க தான்மறந்து அழுகிறா
தான்மறந்த நிலை மறைக்கவும் தவித்து அழுகிறா
அணைப்பிலும் அழுகிறா
புறக்கணிப்பிலும் அழுகிறா
குடும்பப் பொறுப்பு மிகுந்தும் அழுகிறா
பொருள் தேடிச் செல்லும் வேளையிலும் அழுகிறா

கண்டோரின் கண் பார்வை உரசலில் தன்னுள்ளே குமுறி அழுகிறா
பெண் தானே இவள் என்கிற இடத்திலெல்லாம் பொங்கித் தான் அழுகிறா
அங்கே இங்கே தொட்டுச் செல்லும் காத்துக்கும் பயந்து அழுகிறா
தொடாமல் போகிற மனசையெல்லாம் நினைத்துக் கசிந்தழுகிறா

அழுகிறாள் பெண் அழுகிறாள்
முக்காலம் முன்னுணர்ந்து நிற்பவள் தான் இவள்
என்றாலும் முடிவில்லாமல் அழுகிறா

அலுவலகத்து அம்மாவும்
வயக்காட்டு ஆத்தாவும் தாயாகத் தவிச்சு நிப்பா
அங்கே தொட்டிலில் பிள்ளை பாலுக்கு அழுக
இங்கே பால் நிரம்பி மார்கட்டி
முலை ஊட்ட வழியின்றி
கண்களில் நீர் கட்டித் தவிச்சு தாயழுகிறா

தன் உதிரம் ஊட்டி வளர்த்த பிள்ளை
தனியே விட்டு நீங்கும் தன் முதுமையிலும்
தன்னுள்ளே தவிச்சு போய் அழுகிறா

காடுகரை வேலைக்குத் தான் களையெடுக்கப் போகையில
கங்காணிமாருந்தான் கையைப் பிடிச்சு தானிழுக்க
பொம்பளையாப் பிறந்த நிலை எண்ணி
ஒருத்தி அழுகிறா

இன்னைக்கும் கூட என் மகளே
நாகரீகம் தான் பெருகிப் போச்சு
பொம்பளப் பிள்ளையெல்லாம் படிக்க வந்தாச்சு
கப்பலேறி சுத்துறதும்
விமானந்தான் ஒட்டுறதும்
அரசியல் தான் நிகழ்த்துறதும் என்று தானே வளந்தாச்சு
என்றாலும் என் மகளே
கண்ணீர் தான் கதையாச்சு
நவீன வசதிக்குள்ளும்
இன்டர்நெட் வலைக்குள்ளும்
சிக்கித் தடுமாறி புதுசு புதுசா பெண் அழுகிறா
வகை வகையா தடுமாறி அழுகிறா

இங்கே
கழுத்தில தாலி இருக்க
கண்டவனப் பாக்குறான்னு
கட்டினவன் கட்டி வச்சுச் சூடு வைக்க
காத்துக்கும் கேக்காம தன்னுள்ளே அழுகிறா ஒருத்தி
அங்கே
கட்டினவன் கூட இருக்க
பெத்தவனும் அதிர்ந்து நிக்க
யார் யாரோ வன்புணர
சேனல் 4 இல் கதறி அழுகிறா ஒருத்தி

பெண் உடல் உறுப்பழிந்து
உயிர் போகும் வேளையில
கைகட்டி நிக்கிற உலகம் பாத்து
கண்களில் நீர் வத்தி அழுகிறா ஒருத்தி

பூவென்றும் நிலவென்றும்
பெண்ணழகப் பேசுறாங்க
காதலிக்க முடியாதுன்னா
திராவகத்த வீசுறாங்க
வறுமைக்கு உழைக்க வந்தா
வளைச்சுப் போடா நினைக்கிறாங்க
சின்னச் சின்ன பிள்ளைகள
சீரழிச்சு குலைக்கிறாங்க

கண்ணீரைப் பட்டியலிட்டா
காகிதமும் ஈரமாகும்
என்றாலும்
கண்ணீர் கூட தேவலையோ
பெண் வத்திப் போனா யார் தருவாக் கதையெல்லாம்

என் மகளே
பொங்கி வரும் உன் விழிநீரில்
என்ன என்ன கதை சொல்லப் போகிறாயோ
இல்லை
புரட்டிப் போட்ட வாழ்க்கையில
விக்கித்து நிப்பாயோ

தாயே தான் என்றாலும்
நான் அறியாமல் நிக்கிறேன்டி
நான் பெத்தச் செல்லமகளே .

நன்றி : ஓவியம் -இளைய ராஜா
— with Bhairava Shivabaraty and Aishu Cool.

No comments: