Tuesday 13 August 2013

நிறம் கலைகிற மழைவானம்





மழை  துவங்கிய நாளின்   
இரவில்
அவனுக்கென  காத்திருக்கிறாள்
நீர்க்கரையில்
வாழும் புறாக்களின் கண்களை உடையவள்  அவள் 

இடி மின்னல் காற்று
புயல் குளிர்
என்கிற விசித்தர ஆயுதங்களை
தன் உடலில் தரித்திருப்பவன்  அவன்

வருகிறான்
ஆண்டாண்டுகளாக
மரக்கலனில் ஊறிப் புளித்துச் சுவையேறிய
அந்த பானத்தைத் 
தன் கண்களில் ஏந்தியபடி

கருப்புத்திராட்சையின்
திரவ வாசமும்
மரக்கலனின் பச்சை வாசமும்
அவனில் பரவியிருக்க
மழைக்காற்று
பார்வையின்  வழியே
குளிரை உணர்த்தத்  துவங்கியிருந்தது

நிலம் நோக்கி
அம்பென தெறித்து விழும் மின்னலில்
ஒளிர்கிறது
நேர்ந்துகொண்டவளின் உள்ளம்

ஒளிர்தலில் உணர்கிறாள்
அவனது ஆயுதங்கள் ஒவ்வொன்றாக
உதிர்ந்து கொண்டிருப்பதை

பொங்கிப் பெருகி
மிதக்கத் துவங்குகிறாள்
அவளது நிலத்திற்கும்
அவனது வானத்திற்கும் இடைப்பட்ட
அவன் உலகில்.

No comments: