Friday 16 August 2013

திசை விலகிய காலம் . . .



சூரியனின் சுழற்சிப்பாதை
அந்தக் கணத்திலிருந்து
திசை விலகத் துவங்கியிருந்தது

அதற்கு முந்தைய என் கணங்களில்
முன் வாசலில்
ஒளிக்கற்றைகள் விழும் பொழுதில்
ஊர் மந்தையிலிருந்து
அடிவாரம் நோக்கிப் புறப்படும்
பசுக்களின் குளம்படிகள்
தெருவில் கேட்கத் துவங்கியிருக்கும்

ஏறு வெயிலென
வாசல் தாண்டி
சூரியன் முற்றம் நிரப்புகையில்
சில்லுக்கருப்பட்டி பணியார வாசத்தில்
வீடு நிறைந்திருக்கும்

முற்றத்தில் நிழல் பரப்பி
பின்கட்டுதாண்டி சோம்பலாக நகரும் சூரியனை
விரட்டிப் பிடிக்க
பள்ளி முடிந்து திரும்பும் சிறுமிகள் துரத்திச் செல்வார்கள்

மஞ்சள் வெயில் மயக்கும்
ஒரு மாலையில்
பள்ளி முடிந்து வீடு திரும்பி
கிணற்றடியில் பருவமெய்தினேன்

என் காலம்
ரகசியமென மிதக்கத் துவங்கியது
அந்த கணத்திலிருந்து

பின்
ஒருபோதும் மீட்டெடுக்க இயலாத
அந்த நாட்களின் நினைவுகள்
அதிகாலையில்
மலைமுகட்டுச் சூரியனாக
சிவந்து ஒளிர்கிறது

காலத்தின் நகர்தலில் என்னை ஒப்புக் கொடுத்து
என் தினங்களைக் கடந்து கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
உச்சி வெயில்
எப்போதும் துரத்துகிறது
சூரியக் கனவுகளிலிருந்து .

No comments: