Thursday 5 July 2012

ஆடைகளற்ற தினம்…




ஒரு நாளில்
நிறைய ஆடைகளை அணிய வேண்டியதிருக்கிறது
ஒவ்வொரு ஆடைகளை அணிந்துகொள்ளும்போதும்
அத்தனை சலிப்புத் தட்டுகிறது

ஓர் ஆதிவாசியாக இருந்திருந்தால்
இத்தனை ஆடைகள் தேவைப்பட்டிருக்காது

நவீன யுகத்தில் ஆடைகள் பெருகிவிட்டன
ஆடைகள் மனிதர்களை தின்றுவிட்டன

நான்
ஆடைகள் மீது வெறுப்புற்று இருக்கிறேன்
ஒரு பெண்ணாய்
இத்தனை ஆடைகளை அணியத்தான் வேண்டுமா

ஒரு நாளின் முடிவில்
வீடு திரும்பி
ஆடைகளைக் களைத்து எறிகிறேன்

என்னைச் சுற்றியிருந்த இரும்பு வளையங்கள்
ஒவ்வொன்றாய் கழன்று விழுகின்றன
குளியலறையில் பிரவேசிக்கின்றேன்
தலைக்கு மேல் பொழியும் நீர்
என் துயரங்களைக் கழுவிச் செல்கிறது
நீரால் குளிர்ந்தபடி இருக்கின்றேன்

என்றபோதும்
இன்னும் ஓர் ஆடை
வெளியே காத்துக் கொண்டிருக்கிறது.



2 comments:

Ponnambalam kalidoss ashok said...

‎'ஆடைகள் மனிதர்களை தின்றுவிட்டன--' இது , மானிட இனத்திற்கான பொதுவான சங்கதி.. என் அடையாளங்களே, என்னை என் சமுகத்தில் ஆடைகளாக...
அடையாளம் , எந்த அளவு இயல்பான உணர்வுகளை தின்கின்றது என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்..பெண்களின் பாடு,இன்னும் சொல்ல முடியாத துயரம்..
இன்றைய நுகர்வு கலாசாரத்தின் மேல் கொண்ட கடும் வெறுப்பு , கவி வரிகளுக்கு அடிபடையாக ...இயல்பான வாழ்க்கை வாழ விரும்பும் ஒவ்வரு மனிதனின்
மனமும் கொடுக்க விரும்பும் சம்மட்டி அடிகளாக ..இடி முழக்கமாக ..'ஆடைகளற்ற தினம்…'--நாம் காண விரும்பும் கனா காலம்... களம்..

Bhupathi said...

நண்பியே
ஆடைகளைக் களைந்து எறிகிறேன் என்பதா அல்லது கலைத்து எறிகிறேன் என்பதா? இல்லை 'களைத்து எறிகிறேன்' என்பது சரியா?