Tuesday 3 July 2012

தீ உறங்கும் காடு. . .




அந்த மந்திரக்காரன்
வனம் முழுக்கப் மரங்களைப் பூக்கச் செய்கிறான்
பூக்களுக்கு வகைவகையான நிறங்களையும்
நிறங்களுக்கு தனியொரு வாசனையையும் தந்து
மாயங்கள் நிகழ்த்துகிறான்

மேடும் பள்ளங்களும் கரும்புதர்களும்
மாயங்களை அறிந்தவனை மயக்குவதில்லை
வனத்தை உணர்ந்த அவனே
நிலத்தை நெகிழச்செய்கிறான்

காதலின் வாசனையை உணர்கையில்
அவனைத் தேடி அலைகிறேன்
மாய கானகத்தில்

வனமே அலைகையில்
அவன்
கூடுவிட்டு கூடு பாய

காடு பற்றியெரிகிறது
கானகப் பச்சை அழியத் துவங்குகிறது
பறவைகள் தடுமாறிப் பறக்கின்றன
காலச்சர்ப்பம் ஊர்ந்து வெளியேறுகிறது

ஆடைகளை களைகிறேன் சர்ப்பம்போல
மனமிருகங்கள் வெளிக்கிளம்பின ஒவ்வொன்றாக
வனம் பற்றிய பெரும்நெருப்பு
சுட்டெரிக்கும் முன்பு
நம்புகிறேன்

வனநிலம் அறிந்த ஊற்று
வற்றாமல் பெருகி
நெருப்பை அணைக்குமென

பொங்குகிறது குழிநெருப்பு
அசைகிறது காடு.

நன்றி : உயிர் எழுத்து 

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

காடு காதல் தீயில் எரிகின்றது....ஆனால், அவனே முதலில் , காடை செழிக்கச் செய்கின்றான்..
பின், நெகில்வாக்கி ..உண்மையாகவே , அவன் மந்திரக்காரன் ...
இங்கு, பெண்மை , வனம் என உருவெடுத்து ...
காதல் வெம்மை பற்றி எரிந்து ...மெல்ல மெல்ல அவளை மொத்தமாக பற்ற ...
நிச்சயம் , அவன் அவளை குளிர்விக்கும் பணியாக , அவன் பனியாக மாறி படர....
பொங்குகிறது குழிநெருப்பு அசைகிறது காடு...
கவிதை --காதல் பிசாசுகள் வாழும் அன்பு வனம்..நம்மை வசீகரிக்கும் பிசாசுகள்.. the snap makes fire on me with velvet touch of love & affection..