Thursday 24 March 2016

 பெண் – 
உடல் , மனம் , மொழி :
-அஞ்சில் அஞ்சியார் ..





விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள் ஒரு பெண் :

“நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்...”

“ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல்  எல்லாப் பெண்களுமே விளையாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல்தான் இப்போதும் இருக்கிறது. காலமாற்றத்தின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல விளையாட்டுகள் வழக்கொழிந்து போயின. விளையாட்டுக்களை பொழுதுபோக்குத்தானே என விளையாட்டாய் எடுத்துக் கொள்ள முடியாது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் விளையாட்டிலும் ஆண் பெண் பேதம் இருக்கவே செய்கிறது. தவிர ஒரு பெண் விளையாட்டின் மூலமாக தன்னை முன்னிறுத்தி இந்தச் சமூகத்தில் அடையாளம் அடைவது என்பது இன்றைக்கும் மிகச்சவாலான செயல்.”
_________________________________________________________________________________

ஒருமுறை அவசரமாக ரயிலைப் பிடிப்பதற்கு விரைவாகச் செல்ல வேண்டியிருந்தது. வழியில் குறுக்கிட்ட சிறு கிராமம் ஒன்றில் வேகத்தடையில் சற்றே நிதானித்து பிறகு வேகமெடுத்துச் சென்றது நான் பயணித்த வாகனம். சில நொடிகளேயான அச்சிறுபொழுதிற்குள் பார்வையில் பட்டு மனதிற்குள் பதிந்துவிட்ட காட்சியொன்றை மறக்கவே முடியவில்லை.

வத்தலக்குண்டுலிருந்து நிலக்கோட்டை செல்லும் வழியில் மல்லனம்பட்டியில் சாலையோர சிறுகடை ஒன்றில் உட்கார்ந்திருந்த பெண்  தூளியில் இடப்பட்டிருந்த ஒரு குழந்தையை ஆட்டிக்கொண்டிருந்தார். இழுத்து இழுத்து விடுகிற அவருடைய கைகள் தூளியை ஆட்டியபடியிருக்க, கண்கள் மட்டும் தொலைவாக, இன்னும் தொலைவாக,  எங்கோ சென்று ஆழ்ந்திருந்தது.  கண்கள் அல்ல அவருடைய மனம்தான் ஆழமாக எதிலோ அமிழ்ந்திருந்தது.  அந்தப்பெண்ணின்  கைகள் மட்டும் தூளியை ஆட்டியபடியிருக்க மனம் வேறெங்கோ நிலைத்திருந்தது. அவருடைய மனம் குவிந்திருக்கக் கூடிய புள்ளி எதுவாக இருக்குமெனப் பார்க்கும் ஒருவரை யோசிக்கச் செய்யுமளவிற்கு அழுத்தமான காட்சி அது.

அந்த சாத்தியங்கள், அந்தப்பெண் குழந்தையாக தூளியில் ஆடிய பொழுதாக இருக்கலாம், கொஞ்சம் வளர்ந்த பிறகு தம்பிக்கோ தங்கைக்கோ கட்டப்பட்டிருந்த தூளியில் தான் உட்கார்ந்து ஆடிய நினைவாக இருக்கலாம். எங்காவது மரத்தடி நிழலில் கயிறு கட்டி, பலகை இட்டு ஆடிய சிறுவயது ஆட்டத்தில் மனம் லயித்திருக்கலாம். அல்லது “தொட்டிலை ஆட்டும் கை, தொல்லுலகை ஆளும் கை“ என்று சிறு வயதில் பள்ளியில் கை உயர்த்தி, குரல் உயர்த்தி பேசிய நினைவாக இருக்கலாம். இப்படி எதுவோ ஒன்று, எதுவென்று முழுமையும் அறியமுடியவில்லை. ஆனால் ‘காலம்’ அவர் கண்களில் உறைந்திருந்ததை அவரை நான் கடந்துசென்ற அந்தச் சிறுபொழுதில் உணர முடிந்தது. 

எப்பொழுதும்  எல்லோருடைய  மனதிலும் இப்படி ஒரு தூளி ஆடிக்கொண்டு தான் இருக்கும். அது, அம்மாவின் பழையப் புடவையின்  வாசத்தினால் ஆனதாக இருக்கலாம். ஆலமரத்தின் விழுதாக இருக்கலாம். மரங்களில் ஊசல் கட்டி விளையாடாமல் பலரும் தங்களுடைய பால்யத்தை கடந்திருக்கவே முடியாது. தாழைநார்க் கயிற்றாலும்,  பனைநார்க் கயிற்றாலும்  ஊசல் கட்டி ஆடுவது ஒரு கலையாகவே இருந்தது. சில இடங்களில் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டியும்  ஊஞ்சலாடினர்.

சங்ககாலத்திலும், தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊசல் கட்டி விளையாடியிருக்கின்றனர்.  ஊசலாடுதலை ‘ஊசல் தூங்குதல்’ என வழங்கினர். விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும், தானே தனியே உந்தி ஆடியது பற்றியும், காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும்  பல சங்கப்பாடல்கள் பேசுகின்றன. காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும்  காதலி பொய்யாகக் காதலன்மீது விழுவது பற்றியும்  சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன.

ஊஞ்சலாட்டம் என்பது ஒரு கொண்டாட்டம், அதே சமயம் அது ஒரு தவநிலையும் என ஒரு நிறைவான  ஊஞ்சலாட்டம் உணர வைத்துவிடும். ஊஞ்சல் மீது அமர்ந்து ஆட ஆட முதலில் சிரிப்பும் குதூகலமுமாகத்தான் ஆட்டம்  துவங்கும். மெல்ல மெல்ல வேகமெடுத்து ஒரே சீராக ஆடுகையில் மனம் ஒருநிலைப்பட்டு  தியானநிலைக்கு அழைத்துச் செல்லும்.
ஒரு காலகட்டம் வரை தோட்டத்தில், மரத்தடியில் என ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல் வீட்டின் திண்ணை,  வரவேற்பறை, மாடியின் பெரிய கூடம், தாழ்வாரம், முற்றம், படுக்கையறை என எல்லா இடங்களிலும் ஆடுவதற்கான அலங்காரமாகப் பொருளாக மாறியிருக்கிறது. மேலும் சிறுமிகளின் விருப்பத்திற்குரிய பொருளாக இருந்த ஊஞ்சல் அந்தவீட்டின் தலைவனான மூத்தஆண் அமரும் அடையாளமாக மாறிவிட்டது.

கைகளின் திறனை வளர்க்கவும், கால்களின் திறனை வளர்க்கவும், நினைவு சக்தியை அதிகப்படுத்தவும், வீட்டிற்குள் விளையாடவும், வெளியில் விளையாடவும் என பல விளையாட்டுகள் இருந்தன. அப்படியான பால்யகால விளையாட்டுக்கள் பலவற்றை இன்றைக்கு மறந்திருந்தாலும் ஊஞ்சல் விளையாட்டின் நினைவுகள் தனித்தன்மையானவை. ஊஞ்சலாடிய இடத்திற்குத் தக்கதாகவும், ஆடிய வயதுக்குத் தக்கதாகவும் ஊஞ்சலைக் காணும் பொழுதெல்லாம் நினைவுகள் முன் பின்னாக அலைந்து கொண்டேதான் இருக்கும். ஆலம்விழுதைப் பிடித்து ஆடிப்பார்க்க எந்தப்பருவத்திலும் மனம் விரும்பிக்கொண்டேதான் இருக்கும். இவ்வாறு ஒருவரின் மனமானது ஊஞ்சலாட்டத்தை விரும்பும்வரையில் குழந்தைமையை இழக்காமலிருக்கும்.
நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தினுள்,  கிராமப்புறங்களில், பொது விளையாட்டுத்திடலில், அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஊஞ்சலாடும் குழந்தைகளின் குதூகலக் குரலால் அந்த இடமே நிரம்பியிருக்கும். அந்த இடங்களிலெல்லாம்  ஊஞ்சலாடுபவர்களின் வயதினைக் கணக்கிட்டால் அவர்கள் அனைவருமே பனிரெண்டு வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். சில இடங்களில் இது பனிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கானது என்கிற அறிவிப்புப் பலகையும் காணப்படும். இன்னும் சில  இடங்களில் ஊஞ்சல் மட்டும் தனித்து தானாக  காற்றில் மெல்லியதாக ஆடிக்கொண்டிருக்கும். அப்படியான தனித்த ஊஞ்சல் ஒருவிதத்தில் கைவிடப்பட்ட ஊஞ்சலாகவும், ஊஞ்சல் விளையாட்டை விட்டு இறங்கி வெளியேறிய சிறுமிகளைத் தேடியே அது காற்றில் அசைந்து கொண்டிருப்பதாகவுமே எனக்குத் தோன்றும்.  இந்தச்சூழலைப் பேசுகிற கவிஞர் கலாப்ரியாவின் கவிதை, 

“சந்திரோதயம் நன்கு
தெரியும் விதமாய் ஒரு தோட்டம்
தோட்டத்து
நெல்லி மரத்தில்
கயிற்றால் ஒரு ஊஞ்சல்,

“கருக்கலாகியும்
சமஞ்ச குமரிக்கு என்ன
விளையாட்டுடி?” யெனச்
சத்தமாய் அம்மாவின் கூப்பாடு;

அப்படியே குதித்து இறங்கி
ஓடுவாள்
ஊஞ்சல் மட்டும்
தனியே ஆடிக்கொண்டிருக்கும்
கைரேகை மங்கும் கருக்கலில்.“   

ஊஞ்சல் மட்டுமல்ல பல்வேறு விளையாட்டுகள் பெண்களின் வாழ்விலிருந்து பனிரெண்டு வயதிற்கு மேல் வெளியேறி விடுவதைக்  காணமுடியும். ஆடலும், பாடலும், இசையும் கூட இந்த வயதுடன் நிறைவடைந்து விடுவதாகவே பொதுவான சூழல் உள்ளது.  ஆண் குழந்தைக்கோ பெண் குழந்தைக்கோ ஒவ்வொரு பருவத்திலும் உடலில் ஏற்படுகிற மாற்றங்களைப் பற்றியும், புறத்தோற்றத்தில் ஏற்படுகிற மாற்றத்தினால் உண்டாகும் உளவியல் சிக்கல்களையும் சொல்லித்தருகிற வழக்கம் நம்மிடம் இல்லை. மாறாக பெண்களுக்கு மட்டும் குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு அவளது செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழல்தான் இன்றுவரையிலும் உள்ளது.

பெண்குழந்தை என்றால் இன்னன்ன விளையாட்டுகள்தான் விளையாடவேண்டும் எனவும் இப்படித்தான் உடுத்தவேண்டும் எனவும் வழிவழியாகப் கற்பிக்கப்பட்டுவருகிறது.  இன்றுவரையில் இவ்விதமாக கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம் நிகழவில்லை. அங்கங்கே சில பெண்கள்  விதிவிலக்குகளாக இருப்பார்கள். தமிழிலக்கிய மரபு பெண்மையை ஏழு பருவங்களாகப் பிரித்துள்ளது. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனவும் முறையே உத்தேசமான வயது 7,11,13,19,25,31,40  என்பார்கள். அந்த மரபுப்படி பொதுவான விதியாக பெண்களை இந்தப்பருவத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே பெண்களில் வாழ்க்கை முறையும் அமைந்துள்ளது.

“ஏன் ஒரு பெண் விளையாட்டை விட்டு வெளியேறுகிறாள்?” என்ற கேள்வியை ஒரே பருவத்தைச் சேர்ந்த பல பெண்களிடமும் பருவங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணிடத்திலும் முன்வைத்தால் அவர்கள் சொல்லக் கூடிய பதில்கள் என்னவாக இருக்கும். எந்தப்பருவத்திலும் அம்மாவின் மடி தேடித் தவிப்பதுபோல அவர்கள் தொலைத்துவிட்ட விளையாட்டுகளுக்காகவும் ஏங்கவே செய்வார்கள். குறிப்பாக பேரிளம்பெண் என தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், தன்னுடைய தொலைந்துபோன விளையாட்டுப் பருவங்களையும், பால்யத்தின் தோழிகளையும் நண்பர்களையும் அவ்வப்போது நினைத்துக்கொள்வாள். பால் வேறுபாடுகளை அறியாமல்  விளையாடிய பருவத்திலிருந்து கன்னிமை தளும்புகிற பெண்மைக்குள் நுழைந்த தினத்தைப் பற்றிய தன்னுடைய அறியாமையை எண்ணி மனம் கசிவாள். அந்த நாட்களுக்குப் பிறகு விளையாட்டு என்பது அவளது வாழ்விலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டதை பின்னாளில் உணர்ந்திருப்பாள். தனக்கான விளையாட்டைத் தொலைத்த ஒருநாளில்தான் அவள் வாழ்வெனும் இந்த மாபெரும் சுழல் விளையாட்டிற்குள் நுழைந்துவிட்டிருப்பாள். ஓட்டப்பந்தய வீராங்கனையாக நினைத்த ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளோடும் வாழ்வின் அன்றாடத்தோடும் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்வாள்.

பருவத்தின் மாற்றத்தை என்னவென்று அறியாமலும், உணர்ந்ததைச் சொல்லத் தெரியாமலும் ஒரு சிறிய பெண் விசும்பிய கணத்தைப்  பற்றி அஞ்சில் அஞ்சியாரின் பாடல்,

“ஆடுஇயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங் களிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா
நயன் இல் மாக்களொடு  கெழீஇப்
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே.“

“கூத்தாட்டு நிகழ்கின்ற விழாக்களின் ஓசைமிக்க மூதூர் இது.  தொடர்ந்த கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கிறது. அதனால் குவியும்  ஆடைகளைத்  துவைக்கும் செய்கையிலிருந்து கை ஓய்வு கொள்ளாத வறுமையற்ற தொழில் செய்திருப்பாள் அவ்வூரின் புலத்தி. இரவிலே தோய்த்து சோற்றின் கஞ்சியிட்டுப் உலர்த்திய சிறிய பூத்தொழிலை உடைய மெல்லிய ஆடை உடுத்தியிருக்கும் இளமகள் வருகிறாள். அவள், அழகிய மெலிந்த கூந்தலையுடைய வறுமை நிலையிருக்கும்  ஒருத்தியின் சிறிதளவு வளையலை அணிந்துகொண்டிருக்கும் இளமகள். வந்தவள், பொன்னரி மாலையும் அசைந்தாட  ஓடிச் சென்று கரிய பனைநாரினால் திரித்த கயிற்றை பிணைத்துத் தொங்கவிட்ட ஊசலில் ஏறினாள். ஊசலில் ஏறியிருந்தவளை பூப்போன்ற கண்களையுடைய அவளது தோழியர் ஆட்டினர். பின்பு தோழியர் ஊசலை ஆட்டவும், தொடர்ந்து அதில் ஆடாதவளாய் விசும்பியபடி அவ்விடம் விட்டு அகன்றாள்.  அவ்விளம்பெண்ணை மீண்டும் ஊசலாடுகின்ற தொழிலின் ஆரவாரத்தில் ஈடுபடுத்த விருப்பமில்லாத மக்கள் நிறைந்த இவ்வேந்தனின் அவைக்களம் பயனற்றதாய் இருந்தது.” என்பது இந்தப்பாடலின் பொருள்.

இந்தப்பாடல் மருதத்திணை என்பதாகக் குறிப்பு உள்ளது. மருதம் என்றாலே கொண்டாட்டம் நிறைத்த செழிப்பான ஊர். இந்த ஊரில் வசிக்கிற சலவைத்தொழிலாளி ஒருத்தி இரவெல்லாம் துணி துவைக்கிறாள். அவ்வாறு தொடர்ந்து துணிகளைத் துவைக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதால் வறுமை அறியாமல் இருக்கிறாள். அப்படியான அவள், துவைத்துக் கொடுத்த பூ வேலைப்பாடுடைய உடையினை அந்த ஊரிலேயே வறுமையிலுள்ள தாயின் இளமகள் ஒருத்தி உடுத்தியபடி ஊஞ்சலாட வருகிறாள். ஊஞ்சலை தோழியர் ஆட்டி விடுகின்றனர். இவள் ஆடாமல் விசும்பி நகர்கிறாள். இப்படி விசும்பிச் செல்கிற பெண்ணை சமாதானம் செய்து மீண்டும் விளையாட்டில் ஈடுபடுத்த மனமில்லாத மக்கள் நிறைந்த வேந்தனின் அவைக்களம் பயனற்றதாக உள்ளது.  இவ்வளவுதான் இந்தப் பாடலில் சொல்லப்படுகிற அல்லது உணர்த்தப்படுகிற செய்திகள். இவை தவிர வேறு தகவல் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் சங்கப்பாடல்களுக்கு உரையெழுதிய பல்வேறு உரையாசிரியர்கள் இந்தப்பாடல் மருதத்திணை எனவும்,  தலைவி கூற்று எனவும் எடுத்துக்கொண்டு பரத்தையின் இளமகள் ஒருத்தி தலைவனோடு ஊடல் கொண்டு ஊசலாடாது அழுதுகொண்டு செல்வதாக எழுதியுள்ளனர். பாடல் வரிகளின்படி அப்படிச் சொல்லப்படுவதற்கான சூழல் எதுவும் இங்கே பொருந்தி வரவில்லை. மேலும் பரத்தை என்கிற பதிவும் இந்தப்பாடலில் இல்லை. தலைவனைப் பற்றிய குறிப்பும் இல்லை. பரத்தையின் இளமகள் எனவும் அவர் பெண்மை குறைந்தவள் எனவும் சில உரைகளில் காணப்படுகின்றன. ஆனால் இந்தப்பாடல் வறுமை நிலையிலுள்ள ஒரு தாயின் இளமகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது.   

இன்றைக்கும் கிராமங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஒரு பெண், பூப்படைந்தவுடன் அவ்வூரின் உடைவெளுப்பவர் அளிக்கும் மாற்றுடையை அணிந்துகொண்டு வீட்டின் புறத்தே சிலகாலம் ஒதுங்கியிருக்க வேண்டும். இதைப் பற்றி சசிகலா பாபு தனது கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

“வண்ணாத்தி கொடுத்த சேலையுடுத்தி
நல்லெண்ணையும் பச்சைமுட்டையும்
கலந்த சுவாசத்துடன்
அவள் முதல் மூக்குத்திப் பெற்றாள்.”

இவரது இந்தக் கவிதை மூலம் வண்ணார் மாற்றுடை என்கிற இப்பழக்கம் தற்போதும் சில இடங்களில் தொடர்வதாக உணரமுடிகிறது.
அஞ்சில் அஞ்சியாரின் நற்றிணைப் பாடலில் அதுவரை சிறுமியாக குழந்தைமை நிறைந்தவளாக விளையாடிய இளமகள் முதல் பூப்பின் தினத்தில் அல்லது அதற்கடுத்த சிலதினங்களில் தன்னுடைய விளையாட்டை விட்டு வெளியேறியதற்காக வருந்திய ஒரு பெண் எழுதியவரிகளாக இந்தப்பாடல் அமைந்திருக்கலாம். முதல்நாள் வரை விளையாடிய நினைவில் விளையாட ஓடி வருகிற சின்னவளை அங்கிருக்கும் பெரியவர்கள் கடிந்து சொல்லியிருக்கலாம் அல்லது அவளே கூட இனிமேல் இவ்வாறெல்லாம் விளையாடக்கூடாது என அந்த வீட்டின் பெரியவர்கள் சொன்னது நினைவுக்கு வந்து  விசும்பியபடி நகர்ந்திருக்கலாம். இந்தக் காட்சியைப் பார்த்த ஒருவர் இந்தப் பாடலை எழுதியிருக்கலாம்.

ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் அகவாழ்விலும் புறவாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. பெதும்பைப்பருவத்தில் விளையாட்டுகளிலிருந்து ஒரு பெண் வெளியேறுகிறாள். “பெண்மை பற்றி சில கவிதைகள்” என்கிற தலைப்பிலுள்ள என்னுடைய கவிதையொன்று  இதனைக் குறிப்பிடுகிறது.  

“வானத்தின்   நிறமும்  தன்  ஆடையின்  நிறமும்  ஒன்றென ஓடித்திரிகிற  அச்சிறுமியின்
பள்ளி  நாட்கள்
பூவைப் போல மலர்ந்து
பூவைப் போல வாசனை
பூத்தபடியிருக்கிறது

அவளுடன் நீலப்பூக்களை பூக்கச் செய்திடும்
சிநேகிதிகள்  நூற்றுக்கணக்கில்  சுற்றித் திரிகின்றனர்
நீலக்குடை   விரித்து
நீலப்  பூச்சூடி
நீலஉடை    அணிந்து

அவர்களது  உலகம்
ஆகாயத்தை  விடப்பெரிதென
மைதானத்தில்  விரிந்து  கிடக்கிறது
நீலவெளியாக

செம்மண்  மைதானத்தை நீலநிறமாக்கி
வானத்தை இழுக்கும்  நூறுசிறுமிகள்
தொட்டுவிடும்  நீல  ஆகாயத்தைக்  கண்டு  ஓடியாடுகையில்
பெதும்பைப்பருவம்  தொடும் வயதினர்
கூச்சமுடன்  விளையாட்டை  விட்டு  வெளியேறுகின்றனர்

செவ்வான மாலைவேளையில்
அவர்களது  நீலவானமும்
நீலப்பூக்களும்  பொருந்தாத  நீலநிற  உடையும்
இரவுவேளையில்  கனவு  காணத்தொடங்குகிறது.



ஒரு குறிப்பிட்ட பருவத்தில் எல்லாப் பெண்களுமே விளையாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல்தான் எப்போதும் இருக்கிறது. காலமாற்றத்தின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல விளையாட்டுகள் வழக்கொழிந்து போயின. விளையாட்டுக்களை பொழுதுபோக்குத்தானே என விளையாட்டாய் எடுத்துக் கொள்ள முடியாது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் விளையாட்டிலும் ஆண் பெண் பேதம் இருக்கவே செய்கிறது. தவிர ஒரு பெண் விளையாட்டின் மூலமாக தன்னை முன்னிறுத்தி இந்தச் சமூகத்தில் அடையாளம் அடைவது என்பது இன்றைக்கும் மிகச்சவாலான செயல். இவ்வாறு இருக்க ஊஞ்சலாடுதல் என்கிற சிறிய செயல்பாடு கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிற பண்பாட்டுச் சூழல் அமையக் காரணமாக இருக்கும் அறிஞர்கள் நிறைந்த அரசவையையும் சேர்த்து அஞ்சில் அஞ்சியார் கேள்விக்கு உட்படுத்துகிறார்.


இவர் எழுதிய ஒரு பாடல் மட்டும் தான் கிடைத்துள்ளது .
நற்றிணை : 90
--------------------------------------------------------------------------------------------------------------




No comments: