Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-நன்னாகையார் ..







இரவின் ஓசையென பெண் இருக்கிறாள் :

 நள்ளென வந்த நார் இல் மாலை…”

காதல் வந்தவுடன் ஒரு பெண் தனக்குள்ளாகவே  தவிக்கிறாள். அந்தத்தவிப்புத் தீவிரமடையும் அடுத்தகட்டத்தில் தன்னுடைய இந்நிலைக்குக் காரணமானவனைக் குறித்துத் தொட்டிப்பூக்களிடமோ, தோட்டத்துப் பறவைகளிடமோ, தோழியிடமோ பகிர்ந்து கொள்கிறாள். இந்தப்பகிர்தலின் பிறகும் அவள் மனம் அமைதியுறுவதில்லை என்பதுதான் இதில் உள்ள பெரிய துயரம்.
____________________________________________________________________________________

புள்ளு மாவும் புலம்பொடு வதிய 
நள்ளென வந்த நாரின் மாலைப் 
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர்  உள்ளீரோ? எனவும் 
வாரார் தோழிநங் காத லோரே

சங்கப் பெண்பாற்புலவர் நன்னாகையாரின் குறுந்தொகைப் பாடல் இது. இப்பாடலில் தலைவியின் கூற்றென குறிப்பிருப்பதால் முதல் வாசிப்பில் தலைவியின் தனிமைத் துயர் பற்றிச் சொல்கிறதென புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பாடல்வரிகளை நுட்பமாக அணுக, இந்த வாழ்வின் அடுக்குகளைப்போல பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது.

பாடலின் பொருள், “தோழி! நள் என்னும்  ஓசையுடன் அன்பில்லாத மாலைக்காலம் வந்தது. பறவைகளும் விலங்குகளும் தனிமைத்துயருடன் கலங்கித் தங்கியுள்ளன. அம்மாலைக் காலத்தில் பலரும் புகுதற்குரிய வாயிலை அடைப்பதற்கு எண்ணிக் குரல் கொடுப்பவர்,  “உள்ளே வருவதற்கு எவரேனும் உள்ளீரா?” என்றனர். அவ்வாறு வாயில் காப்பவர்கள் குரல் கொடுத்தும் தன்மேல் காதலையுடைய தலைவர் வரவில்லையே.” என தலைவி வருந்துவதாகப் பொருள் உள்ளது.

மாலை நேரத்தில் கூட்டில் அடையும் பறவைகள்,  வளர்ப்பு விலங்குகள்   அதிஅவசரமான குரலில் பரபரக்கும். கூட்டில் அடையும் முன்பாக தன்னுடைய இணைக்காகத் தவித்தபடியும் பொருத்தமான இடந்தேடியும்  ஓசையிடுவது போலவே இருக்கும். எல்லாம் அதனதன் இடத்தில் சேர்ந்தவுடன் அவை அமைதியாகிவிடும். இதனைப் பார்த்தபடி இருக்கிற தலைவி, அவற்றின் குரலில் கலங்குகிறாள். ஆனால் பறவைகளும் விலங்குகளும் கலங்குவதாகச் சொல்கிறாள்.  பறவைகளும், விலங்குகளும்  தங்களுடைய இருப்பிடங்களில் தங்களுடைய இணையுடன் அடைவதைப் பார்க்கிற அவளின் மனம் தலைவன் வராது தனித்திருக்கும் தன்னுடைய நிலையின் கலக்கத்தை பறவைகளின் மீதும் விலங்குகளின் மீதும் ஏற்றிக் கூறுகிறாள்.

“நள்” என்கிற ஒரு சொல் சங்கப்பாடல்களில் பல இடங்களில் வருகிறது. ”நள்” என்பது ஓசை. அந்த ஓசையைப் பின் தொடர்ந்தால், “நள்ளென்றன்றே   யாமம் சொல் அவிந்து, இனிது அடங்கினரே மாக்கள்” (குறுந்:6) பதுமனார் என்கிற ஆண்பாற்புலவர் எழுதிய வேறு ஒரு காட்சி குறுந்தொகையில் உள்ளது. யாமம்,  நள்ளென சொல் எழுப்புகிறது என்றால் நள்ளிரவுக்கு ஏது ஓசை? ஓசையற்ற ஓசைக்கு “நள்” எனச் சொல்லலாமா? ஊரெல்லாம் மெல்ல மெல்ல சொல் அவிந்து, ஓசையற்று, அடங்கி உறங்கத் தொடங்குகிறது. தலைவி மட்டும் தலைவனின் நினைவில் விழித்திருக்கிறாள். ஊரெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பகல் பொழுதில் மக்களின் பேச்சரவம் கேட்டுக்கொண்டிருக்கும். அப்போது  தலைவியின் கவனம் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்கலாம். ஆனால் ஊர் மக்கள் அனைவரும் சொற்கள் அவிந்து போய்விடுகிற நிலையில் தலைவியின் தனிமையும் விழிப்பும் மிகப்பெரிய துயரமாக மாறுகிறது. அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக “நள்“ என எழும்புகிறது. “ஓசையற்ற ஓசை” என்று சொல்வதை விடவும் ஒருவகையில் ஊர் அடங்கின பின்பு தலைவனுக்காகக் தவித்திருக்கும் ஒரு பெண்ணே அந்த இரவின் ஓசையாக மாறுகிறாள்.  
அப்படியான ஓசையற்று அடங்கும் இரவின் குரலை, பறவைகள் அடைந்துகொண்டிருக்கும் மாலைப் பொழுதிலேயே ஒரு பெண் உணரத் தொடங்குகிறாள். அப்படியெனில் அவளின் தனிமைத் துயரை புறச்சூழலின் ஓசைகள்கூட குறைக்க இயலவில்லை. மாலைப்பொழுது தொடங்குகையில் அவள் தனக்குள் தனித்து தலைவனை எதிர்நோக்கி இருக்கிறாள். அப்படி அவள் தலைவனை எதிர்நோக்கியிருக்கும் அந்தமாலை எப்படியிருக்கிறது என்றால் “அன்பில்லாத மாலை“ என்கிறாள். தலைவனின் அன்பினை உணர்த்துகிற அண்மை அவளுக்கு எப்பொழுதும் வேண்டியதாக இருக்கிறது. அவ்விதமான அண்மை நிகழாத நிலையில் ஒரு மாலைப்பொழுதையே “அன்பு“ என்கிற மனித உணர்வுடன் இணைத்து “அன்பில்லாத மாலை“ எனச் சொல்கிறாள்.

ஊர்க்கதவினை  அடைக்கும் வாயில் காப்போன், தினந்தோறும் வாயில் கதவினை அடைக்கும் முன்பாக உள்ளே வருவதற்கு உரியவர் எவரேனும் உள்ளீரோ? என உரக்கக் கேட்டுவிட்டு கதவை அடைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியே சென்றவர்கள் அனைவரும் வீடு திரும்பும் பொழுதாக இருப்பதால், எல்லோரும் வந்து விட்டாரா? என ஊரைப் பார்த்தும் இந்தக்கேள்வி கேட்கப்படுகிறது. அது போலவே, வழிப்போக்கர்களாக எவரேனும் அந்தஊரில் இரவு தங்கி, உணவருந்தி அடுத்தநாள் கிளம்பலாம். எனவே ஊருக்கு வெளிப்பக்கம் எவரேனும் இருக்கிறார்களா என்பதாகவும் இந்த வினாவினைப் புரிந்து கொள்ளலாம். 
    
களவுக்காலத்தில் தலைவியைச் சந்திக்க வருகிற தலைவன், புதிய விருந்தினன் போல பலருடன் கலந்து ஊருக்குள் வருகிறான். அப்படி வருகிறவன் தலைவியின் இல்லத்திற்கு வந்து, பலருடன் சேர்ந்து மாலை உணவை உண்ணுகிறான்.  பின்பு இரகசியமாக  தலைவியோடு உடனிருந்தும் செல்வான். அவ்வாறு விருந்தினர் போலவும் தலைவன் வரவில்லை.  இரவில் புணர்ச்சியின்றிக் கிடக்கும் தன்னுடைய தனிமையை எண்ணி மாலைப்பொழுதினை ‘அன்பில்லாத மாலைப்பொழுது’ என இழித்துச் சொல்கிறாள். ஆனால் மாலைப் பொழுது என்பது தலைவனையே குறிக்கும். தலைவி தவித்திருப்பாள் என்பதை உணர்ந்து தேடிவராத தலைவன்தான் இங்கே அன்பில்லாதவன் ஆகிறான். அன்பில்லாத தலைவன் என நேரடியாக அவனைச் சொல்வதற்குப் பதிலாக “பொழுதை” தலைவனோடு இணைக்கிற சூட்சுமம் நிறைந்ததாக இந்தப்பெண்ணின் குரல் இருக்கிறது.
இந்தப்பாடலில் மனிதர்களின் உணர்வும் இயற்கையின் நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன. மனிதரின் உணர்வுகள் பொழுதோடும், பறவைகள் மற்றும் விலங்குகளின் இயல்புகளோடும் இணைகின்றன. இரவின் நிசப்தம் தனிமையான பெண்மனதின் சஞ்சலமான தவிப்பின் ஓசையாகிறது. இயற்கையையும் மனிதஉணர்வையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்தப்பாடல் பெண்ணின் காதல் உணர்வு சார்ந்த உளவியலை வெளிப்படுகிறது.

காதல் வசப்படும் முன்பாக ஒரு பெண்ணிடமிருந்து  வெளிப்படுகிற குதூகலம் முக்கியமானது. ஆனால் அந்தப்பெண் காதலில் வசப்பட்டவுடன் அவளின் குதூகலம் மறைந்து உள்ளடங்கிய ஏக்கம் நிறைந்தவளாக ஆகிறாள். அவளே விரும்பி ஏற்படுத்திக் கொள்கிற  தனிமையில் எப்பொழுதும்  காதலனை நினைத்திருப்பாள். பார்க்கிற பொருள்களில் அல்லது உயிரினங்களில் அல்லது தாவரங்களில் எல்லாம் தன்னுடைய உணர்வையே ஏற்றிப்பார்க்கிறாள். உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்கிறாள். தன்னுடைய உணர்வு முழுவதையும் எவரிடமாவது வெளிப்படுத்த விரும்புகிறாள். அவ்வாறு செய்யவியலாத நிலையில் புறச்சூழலிலிருந்து விலகிவிடுகிறாள். இப்படியான இவளின் உணர்வுகளை அந்தப்பெண்ணை நேசிக்கிற ஆண் முற்றிலுமாக உணர்வதில்லை. ஏனெனில் அவளை அவனும்தான் பிரிந்திருக்கிறான். என்றபோதிலும் இவள் அளவுக்குத் தவித்திருப்பதில்லை என்பதால் பெண்ணின் உணர்வை அவனால் முழுவதாக உணர முடிவதில்லை. அதனால்தான் “அன்பில்லாத மாலை“ என நன்னாகையார் குறிப்பிடுகிறார். ஒரு உணர்வை ஆண் புரிந்து கொள்வதற்கும் பெண் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. “உலகம் முழுக்கத் தூங்கிவிட்டது; நான் மட்டும் தூங்கவில்லை” என்று துயருருகிற பெண்ணை பதுமனார் தன்னுடைய பாடலில் செய்தியாகச் சொல்கிறார். ஆனால் நன்னாகையரின் பாடலில் அது உணர்வாக வெளிப்படுகிறது.

இந்தப்பாடல் பெண்ணின் அக உணர்வைச் சொல்வது போல இருந்தாலும் இந்தப்பாடல் காட்டுகிற “ஊரின் வாயில் கதவு அடைக்கின்ற காட்சி” வெளிப்படுத்துகிற சங்ககால வாழ்வியல் முக்கியமானது. ஒவ்வொரு ஊருக்கும் பொதுவான வாயில்கதவு அமைக்கப்பட்டுள்ள ஒரு காட்சியைச் சொல்கிறது இந்தப்பாடல். ஒவ்வொரு ஊரும் அதற்கான பாதுகாப்புச் சுற்றுச்சுவர்களையும் வாயில்களையும் காவல் அமைப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு ஊரின் நிர்வாகத்தை இதன்மூலம் உணரமுடிகிறது. பெரும்பாலான அகப்பாடல்களின் காட்சிகளில் இதுபோன்ற சமூக இயக்கம் வெளிப்படுகிறது.

நம்முடைய காலத்தில் நாம் இழந்துகொண்டிருக்கும் “விரும்தோம்பல்” என்கிற ஒரு வாழ்வியல் முறையைப்பற்றி பேசுகிறது. கொஞ்சக்காலம் முன்பு வரையில் நம்முடைய வீடுகளில் திண்ணை வைத்துக் கட்டுகிற வழக்கம் இருந்தது. இன்றைக்குக் கட்டப்படுகிற நவீனவகை வீடுகள், சுற்றுச்சுவர்களால் மறைக்கப்பட்டுவிடுகின்றன.  வீட்டின் உள்ளே வசிப்பவர் யார் என்றும் தெரியாது. வீட்டிற்கு வெளியே என்ன நடக்கிறது என்றும் பலருக்குத் தெரியாது. ஆனால் ஒருகாலம் வரையில் கட்டப்பட்ட வீடுகளில், அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப வீடுகளின் அமைப்பு மாறுபட்டிருந்தாலும் திண்ணை வைத்து வீடுகட்ட முன்னோர்கள் தவறியதில்லை.

காரைவீடுகள் என்றாலும் குடிசைவீடுகள் என்றாலும் திண்ணை என்பது அவசியமான ஒன்றாக இருந்தது. வீட்டின் முன்புறம் தெருவின் விளிம்பில் திண்ணை தொடங்கிவிடும். திண்ணையின் தூண்கள் ஒற்றைக் கல்லாகவும் இருக்கும். மரத்தூண் ஆகவும் இருக்கும். அலங்காரமாகக் கட்டப்பட்ட தனிவகையான தூண்களாகவும் இருக்கும். திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்த நிலையில் நம்வீட்டுப் பெரியவர்கள் எவரேனும் நினைவுக்கு வரலாம். அந்த அளவுக்கு வீட்டுப்பெரியவர்களின் ஓய்வு இடமாக இருந்திருக்கிறது. திண்ணைவகை வீடுகளின் முக்கியநோக்கமே வழிப்போக்கர்கள் பலரும் தங்கி ஓய்வெடுத்துச் செல்வதுதான். தவிர விருந்தினர்கள் தங்குகிற இடமும் அதுதான். குழந்தைகளின் உள்விளையாட்டு அரங்கமும் அதுதான். வளையல் விற்பவர், புடவை விற்பவர், காய்கறி விற்பவர் என தெருவில் தலைச்சுமையாக எந்தப்பொருள் விற்றுச்செல்பவரும் திண்ணை இருக்கும் வீட்டில் தங்களின் சுமையை இறக்கிவைத்து தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு இளைப்பாறி நகர்வார்கள். அவர்களிடம் வியாபாரம் செய்கிற வாய்ப்பு இல்லாவிட்டாலும் இப்படி தலைச்சுமை வியாபாரிகளுக்கென மோர் கலந்து கொடுக்கிற வழக்கமும் நம்மிடம் இருந்தது. யாரென்று தெரியாத வழிப்போக்கர் என்றாலும் பசித்து வந்தால் திண்ணையில் உட்காரவைத்து சாப்பாடு கொடுத்து அனுப்புவதுதான் நம்முடைய வழக்கம். 

“வந்தவர்களுக்குச் சோறும் வரபோகிறவர்களுக்கு உலையும்” என்று வாழ்ந்ததாக சொல்கிற அம்மா மற்றும் பாட்டிமார்கள், ஆச்சிமார்கள் இன்றும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியாக விருந்தோம்பி வாழ்ந்திருந்த தமிழரின் பண்பைச் சொல்கிறது.

நன்னாகையார் இரண்டு குறுந்தொகைப் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது மற்றொரு பாடலில், இவ்விதமாக தனிமையில் இருக்கும் பெண்ணுடைய காதல்துயர் பெருக்குகிற கண்ணீர் என்பது அவளின் முலைகளுக்கு இடையே தேங்குகிறது. அவள் அழுத கண்ணீர்,  கரிய கால்களையுடைய வெண்குருகு மேய்ந்திடும்படியாக “பெரிய குளம்” போல ஆகிறது என்று குறிப்பிடுகிறார்.

“சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
 மாயச் செலவாச் செத்து மருங்கற்று  
மன்னிக் கழினென் றேனே; அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ  
கருங்கால் வெண்குருகு மேயும்  
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே”

என்னிடமிருந்து போகவேண்டும், போகவேண்டும் என்று சொன்ன தலைவனை “என்னிடமிருந்து முற்றிலுமாகப் போய்விடுங்கள்” என்று சொன்னேன். அவன் இப்போது எங்கே இருக்கிறானோ, தெரியவில்லையே  எனத் தோழியிடம் புலம்புகிறாள் தலைவி.

தீராத காதலை எவரிடமேனும் சொல்லிவிட இயலாதா எனத் தவிக்கிற நிலையில்தான் பெண் இருக்கிறாள். ஆனால் “வெண்கால் குருகு மேய்கிற அளவு பெருங்குளம் ஆயிற்று முலைகளுக்கு இடையே வழிகிற கண்ணீர் “ எனச் சொல்கிற பெண்ணின் பேச்சு கவனிக்கப்பட வேண்டியது. காதல் மனதின் துயரமானது தனித்து தனக்குள் புலம்புவதிலிருந்து நகர்ந்து தோழியிடம் பகிர்கிற அளவு அதிகரித்திருக்கிறது. அவள் தனக்குள்ளாக புலம்பி அழுகிற இரவின் தனிமையில் நிசப்தம் என்பது அவளுக்குப் பேரோசையாக இருக்கிறது. அதுபோலவே பலரும் ஆரவாரித்துத் திரிகிற பகல்பொழுதில் உடனிருக்கும் யாரும் அவளை நிரப்ப இயலாது தனிமையின் நிசப்தத்தை அடைகிறாள்.

இவ்வாறாக காதல் வந்தவுடன் ஒரு பெண் தனக்குள்ளாகவே தவிக்கிறாள். அந்தத்தவிப்புத் தீவிரமடையும் அடுத்தகட்டத்தில் தன்னுடைய இந்நிலைக்குக் காரணமானவனைக் குறித்துத் தொட்டிப்பூக்களிடமோ, தோட்டத்துப் பறவைகளிடமோ, தோழியிடமோ பகிர்ந்து கொள்கிறாள். இந்தப்பகிர்தலின் பிறகும் அவள் மனம் அமைதியுறுவதில்லை என்பதுதான் இதில் உள்ள பெரிய துயரம்.

இரவின் தனிமையை, உள்ளிருந்து தனக்கெனப் பெருகாத ஆணின் அன்பினை, தன்னிடமிருந்து விலகிச்செல்கிற ஆணின் செயலினை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் சொல்கிற அளவிற்கு பெண் கவிதைகள் மாற்றம் அடைந்திருக்கின்றன. எந்தக்காலத்திலும் மாற்றம் அடையாமல் இருப்பது  என்பது பெண் இரவின் தனிமை. இது அவள் மட்டுமே உணரக்கூடியதாக இருக்கிறது. தோழிகளைத் துணைக்கு அழைக்காமல் நேரடியான சொற்கள் மூலமாக பெண்மனதை வெளிப்படுத்தும் ச.விசயலட்சுமி கவிதை ஒன்று,  

“அந்தியின் பொன்துகள்கள் சூடிய
உன்னுடனான மாலையை
சூரியநிஜம் பொசுக்கியது
நெருப்பில் வாட்டிய இறைச்சியின்
பதம்விரும்பிய மனம்

சமரசத்திற்கு நெகிழாதிருக்கிறது
மழைச்சாரலில் குளிர்ந்த நினைவு
பனிமூட்டத்திற்கென காத்திருக்க
பேரவா தாங்கிய கண்கள்
பொய்மையோடு கைக்குலுக்கும்
தீப்பிடித்த குடிசையொன்று
உன் கண்முன் எரிந்துகொண்டிருக்கிறது
நெருப்புக்குளியலொன்றிற்கு
நம்மைத் தயார்ப் படுத்திக்கொள்ளலாம்
சேர்ந்திருக்கவியலாத பட்சத்தில்
உபயோகமற்று எரியுமதை
மறக்காமல் அணைத்துவிட்டுப் போ”  

காதல் வசப்பட்ட பெண்களின் நினைவில் நீறுபூத்துக் கிடக்கிற நேசத்தின் கங்கு கடைசிவரையிலும் அணைவதேயில்லை. அதன் வெம்மையை பற்றவைத்துவிட்டுப் போகிற ஆண் பலசமயங்களில் அறிவதேயில்லை என்பதுதான் இதில் துயரம். 

குறுந்தொகை : 118, 325
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: