Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-வருமுலையாரித்தி ..




ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்:

ஒரு நாள் வாரலன் இருநாள் வாரலன்…”

ஆண், பெண் இருவரிடையே நிகழ்கிற உடல் சார்ந்த உறவுக்குப் பின்பு, ஒரு ஆண் எப்பொழுதும் தன்னை வெற்றியாளனாக எண்ணி பெருமிதம் கொள்கிறான். ஆனால் அதற்குப்பிறகு பெண்ணிடத்தே ஏற்படுகிற உளவியல் சிக்கல்கள் அவளைத் தொந்தரவு செய்கின்றன. மனரீதியான பாதுகாப்பிற்காகவும், அந்த உறவை வாழ்நாள் முழுமைக்கும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் விழைகிற பெண்ணுக்கு, தலைவனின்  சிறிய அளவிலான விலகலும்கூட  அவளைப் பெரிதாகப் பதற்றப்படுத்தும்.
____________________________________________________________________________

இனவிருத்திக்கென இயற்கையே எல்லா உயிர்களிடத்தும் எதிர்பால் ஈர்ப்பை கட்டாயமாக்கி வைத்திருக்கிறது. பிறஉயிர்களிடத்து உடல்ரீதியாக இருக்கும் இத்தொடர்பு மனிதர்களிடத்தே உள்ளம் சார்ந்தும் செயல்படுவதால் அதனைக் “காதல்” என சிறப்பித்துக் கூறுகிறோம். காதல் என்பதற்கான நிமித்தம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகைப்பட்டதாக இருந்திருக்கிறது.

இக்காலத்தில் காதல் எவ்விதமாகத் தொடங்கினாலும் அலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், முகநூல் யென வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பு கொள்ளலை எளிதாக்கியிருக்கிறது. காத்திருப்பின் காலத்தையும் தூரத்தையும் வெகுவாகக் குறைத்திருக்கிறது. காதல் என்கிற உணர்வு இந்தத் தலைமுறையினரிடம்  இயல்பான எளியதொரு விஷயமாகப்  பரிமாறப்பட்டிருக்கிறது. Love and Hugs என்ற பிரயோகம் எவ்விதமான மனத்தடையுமின்றி  பயன்படுத்தப்படுகிறது. ஒருபக்கம் “Dating” கலாச்சாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது மறுபக்கம் திருமணத்திற்கு முன்பாக உடலுறவு வைத்துக்கொள்ளலாமா கூடாதா என்கிற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. “Living together” என்பதும் காணப்படுகிறது.

கடிதங்கள் வாயிலாக காதல் பரிமாற்றம் நடந்த காலகட்டத்தின் கதைகள் முக்கியமானவை. மிகக் கடுமையான சாதியக் கட்டமைப்பில் இருந்த கிராமப்புறங்களில் கூட சாதிவிட்டு சாதி காதல் கடிதங்கள் பரிமாறப்பட்டன. சில காதல்கள் இணைந்தன, பல காதல்கள் தொடங்கிய இடத்திலேயே முன்னகராமல் முடங்கிப்போயின. இன்னும் சில ஊரையும் உறவினரையும் விட்டு ஒடிப்போயின. இன்னும் சில காதல்கள் தற்கொலை செய்துகொண்டன. இன்னும் சில பெற்றோர்களால் கௌரவக்கொலை செய்யப்பட்டன. இன்னும் சில ஊரையே பற்றியெரிய வைத்தன.

இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் காதல் காட்சிகளின் தொடக்கமும் முடிவும் கவனிக்கத்தக்கவை. திரைக் கதாநாயகன்கள், தான் காதலிக்க விரும்பும் பெண்ணை தன்வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் பலவிதமானவை. சிவப்பு நிற ரோஜாக்கள் என்றாலே காதல்தான் என்று இன்றுவரை இருப்பதற்கு தொடக்கமாக திரைக்காட்சிகள் அமைந்திருந்தன. மேலும் கடிதம் கொடுத்து, பரிசுப்பொருள்கள் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் கொடுத்து, கதாநாயகியின் பார்வையில் படும்படி அந்தப்பெண்ணின் தெருவில் அல்லது கல்லூரி வாசலில் நடையாய் நடந்து, டீக்கடையில் நாள்முழுதும் காத்திருப்பது ஒருவகை. அப்பா பணத்தில் பைக் வாங்கி, கூலிங் க்ளாஸ் போட்டு சுற்றிவருவது, அவள் செல்கிற பேரூந்தில் தொங்கிக்கொண்டே பயணித்து அவளது கவனத்தை ஈர்க்க முயலுவது எனப்  பல்வேறு வகைகளில் குட்டிகரணம் அடித்து, போதாதற்கு பைத்தியமாக நடித்து, குடித்து ஆடைவிலகி  தெருவில் கிடந்து, யாரேனும் அடியாட்களிடம் அடிபட்டு என ஒரு பெண்ணை அடைய ஆண் செய்யும் வழிமுறைகள் மற்றும் தந்திரங்கள் பலவற்றையும் சொல்லிக்கொண்டே போகலாம். 

எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்து அனைத்து ஊர்களிலும்  அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிபெற்றத் தமிழ்த்திரைப்படம் “விதி”. இந்தப்படத்தின் கதாநாயகியை தன்வசப்படுத்த கதாநாயகன் செய்யும் உத்திகள் ஏராளம். அந்தப்பெண் காதலை அவனிடம் சொல்லும்பொழுதே “நீங்க ஜெயிச்சுட்டீங்க“ என்றுதான் பேச்சைத் தொடங்குவாள். காதலை அடைந்த அவன், காதலியை உடலாகவும் அவன் அடைந்தபின்பு தன்னை முழு வெற்றியாளனாக உணர்வான். “ஒரு ஆண் பத்து ஆண்டுகள் கடந்தாலும் ஆணாகவே இருக்கிறான், ஆனால் ஒரு பெண் பத்து மாதங்களில் தாயாக ஆகிவிடுகிறாள், இது இயற்கையின் நியதி” என்று சொல்வதுடன் இந்த உறவுக்கு என்ன சாட்சி இருக்கிறதெனக் கேட்டு  கதாநாயகன் கதாநாயகியை விட்டு விலகிச் செல்கிறான். அதன்பிறகு அவனைத் திருமணத்திற்கு வலியுறுத்துவது அந்தப் பெண்ணிற்குக் கட்டாயமாக ஆகி, அதன் வழியிலேயே அந்தத்திரைப்படத்தின் காட்சிகள் தொடரும்.

காதலர்களுக்குள் நிகழ்கிற நெருக்கமும், உறவும் அவர்கள் இருவர் மட்டுமே முடிவு செய்வது. இதற்கு வேறு எதுவும் சாட்சியாக இருக்கமுடியாது. கபிலரின்,

“யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகுமுண்டுதான் மணந்த ஞான்றே.“

என்கிற குறுந்தொகைப்பாடலில் களவில் உறவு கொண்ட தலைவியை தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் திரும்ப வருவானோ, மாட்டானோ எனத் தலைவி தவித்திருக்கிறாள். அப்போது அவள் சொல்வது, எங்கள் உறவுக்கு சாட்சி என்று சொன்னால் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களையுடைய  குருகு மட்டும் தான் உண்டு, ஆனால் அது கூட எங்களைப் பார்க்கவில்லை, ஓடுகிற நீரில் ஆரல்மீன் வருகிறதா என தனக்கான உணவுக்கெனக் காத்திருந்தது. எனவே தலைவன் வருவது பொய்த்துவிட்டால் நான் என்ன செய்வேன் எனத் தலைவி சொல்வாள். எனவே அவர்களின் உறவுக்கு அவர்களே சாட்சியாக இருக்க முடியும்.

ஒரு பெண்  தன்னை உடலாகவும் ஒரு ஆணிடம் கொடுத்த பின்பு, அந்த உறவின் முடிவில் பெண்தான் மிகுந்த கலக்கமடைகிறாள். திருமணத்திற்கு முன்பாக உறவு கொண்டதால் தான் களங்கமானவள் என்று நினைக்கிறாள். அவளுடன் உறவு வைத்துக் கொண்ட ஆணைப்பற்றி  இந்தச் சமூகம் இழிவாக நினைப்பதில்லை. அவனும் எந்தவிதமான குற்றஉணர்ச்சிக்கும் ஆளாவதில்லை. ஆனால் அதே ஆண்  தன்னை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று பெண் விரும்புகிறாள். அவளை மறுத்து விலகிச் செல்கிறவனிடம் தன்னிலையிலிருந்து இரங்கிக் கெஞ்சுகிறாள். அப்போதிருந்து தன்னுடைய நிலை குறித்து  பதற்றமுறுகிறவளாகவும் மாறுகிறாள்.

இயற்கையின் புற அடையாளங்களினால் ஒரு பெண் தன்னை சிறுமைப்பட்டவளாக உணர்வது ஒருபக்கமும், இதுபோன்ற நிலையிலிருக்கும் பெண்ணை சிறுமைப்பட்டவளாக சமூகம் கற்பிப்பது மறுபக்கமும் என இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிற நிகழ்வு.
“விதி” திரைப்படத்தை என்னுடைய பதின்பருவத்தில் பார்த்தேன். அப்பொழுது நாங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் காடம்பாறையில் இருந்தோம். எங்கள் வீட்டிற்கு அடுத்தவீட்டில் வசித்த சாந்தியக்கா என்பவர் எங்களோடுதான் இந்தத்திரைப்படத்திற்கு வந்திருந்தார். எப்பொழுதும் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பவர் அவர். பக்கத்தில் ஆட்கள் எவரும் இல்லாதபட்சத்தில்  பூக்களோடும் செடிகளோடும் கூட பேசிக்கொண்டிருப்பார் அல்லது ஏதேனும் பாடல் வரிகளைத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருப்பார்.  திரைப்படம் முடிந்து திரும்பி வரும்போது சாந்தியக்கா மிகவும் அமைதியாக வந்தார். அன்று மாலை ‘விதி’ திரைக்காட்சிகள்  பற்றி  எல்லோரும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சாந்தியக்கா வீட்டிருக்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வீட்டுக்குள்ளிருந்து புகை வருவதைப்பார்த்து எல்லோரும் ஓடிப்போய் பார்க்கையில் அப்போதே முக்கால்வாசி எரிந்து போயிருந்தார். காப்பாற்ற முடியாமலும் ஏன் அவ்விதம் செய்துகொண்டார் என யாருக்கும் தெரியாமலும் சாந்தியக்கா செத்துப்போனார். திருமணம் ஆகாத ஒரு பெண்  திரைப்படம் ஒன்றினைப் பார்த்துவிட்டு வந்தபிறகு தற்கொலை செய்து கொண்டது எனக்குப் புதிராக இருந்தது.

பெண்களுக்கு தந்தையாகவும் சகோதரனாகவும்தான் ஆண் அறிமுகம் ஆகிறான். ஒரு பெண் தன்னுடைய இளமையில் அறிந்து வளர்ந்த தந்தை, சகோதரன் என்கிற அந்த ஆண்களின் அன்பைப் போலவே  காதலனிடமும் எதிர்பார்க்கிறாள். அப்படியான காதலனையே  கணவனாகவும்  அடைய விரும்புவதுதான் பெண்ணின் மனமாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதுக்குமான பாதுகாப்பையும் அன்பையும் அந்த ஆணிடமிருந்து ஒருபெண் எதிர்பார்க்கிறவளாக இருக்கிறாள்.

பெண் என்பவள் அடைவதற்கு அரியவளாக ஒரு ஆண் முதலில் கருதுவதும், பின்பு அவளின் மனது வசப்பட்டவுடன் உடலுக்கு ஏங்குவதும், உடலும் வசப்பட்டவுடன் அந்தப்பெண்ணை அவன் மிக எளிதாகக் கடந்து செல்வதும், உதாசீனப்படுத்துவதும் இயல்பாக நடந்துவிடுகிறது. திரைப்படங்கள் போலவே நிஜவாழ்விலும், நிஜம் போலவே திரைப்படங்களும் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் பெண் கவிஞர்கள் பலரும் அன்பு, காதல், காமம், பிரிவு, தவிப்பு, தனிமை எனப் பல்வேறு உணர்வுகளை தங்கள் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். காதல் சார்ந்து இன்றைய பெண் மனம் இயங்குகிற திசையை அடையாளம் காட்டுபவையாக அவை இருக்கின்றன. காதல் தொடங்கும் நிலையில் பெண்ணின் மனதில் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை என்பதைப்பற்றி ரேவதி முகிலின் “அனிச்சை” தலைப்பிலான கவிதை ஒன்று,

“நத்தை என்றும்
பட்டாம்பூச்சி என்றும்
உறுதி செய்யப்படவில்லை இன்னும்
எனினும் கூடுடைக்க ஆரம்பித்திருக்கிறது
சிநேகம்”

மனதளவில் காதல் தொடங்கும் பொழுது பெண்ணுக்கு அனிச்சை செயலாக இருக்கிறது. மேலும் பரவசத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கிறது. பெண்ணின் புறத்தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டே ஆண் காதலைத் தொடங்குகிறான். எனவே உடலளவில் கிடைக்கிற இன்பம் அவனைத் திருப்திப்படுத்தி விடுகிறது. பெண்ணுக்கோ தனது எதிர்காலம் குறித்த கவலை வந்துவிடுகிறது. அதன்பின்பு அவள், அவனைப் பற்றிய திட்டமிடலோடும் பதற்றத்தோடும் இருக்கிறாள். அவனுடைய சிறிய விலகலும் அவளுக்கு உதாசீனமாகப்படுகிறது. அவளைவிட்டு அவன் பிரிந்து சென்றுவிடாமல் இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை அமைக்க முயலுவாள். அவளைத் தவிர்த்து வேறு எந்தப் பெண்களிடமும் அவன் விருப்பம் கொண்டுவிடக்கூடாது எனவும் நினைக்கிறாள். அவன் பாதையில் எதிர்படுகிற எந்தப்பெண்ணையும் அவள் விரும்புவதில்லை. மற்ற பெண்களினால் அவனிடம் ஏற்படுகிற சிறிய சலனமும் அவளைத் தொந்தரவு செய்கிறது. தன்னுடைய வாழ்வின் நிச்சயமின்மையால் கவலை கொண்டவளாக ஆகிவிடுகிறாள்.
இம்மனநிலையைத் துல்லியமாக விவரிக்கிறது உமா மகேஸ்வரியின் “மழை வரம்” என்கிற கவிதை,

“நீ
வரமளித்துப் போன
வெளி முழுவதும்
விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது
மழை

உதிரும் கற்பனைகளினூடே
நீர்க்குமிழிகள் கொண்டு
லகுவாய் மிதந்து நெருங்கும்
மனங்களைத் தாக்குகிறாய்
நா நுனிக் கங்கு தீண்டி
வெந்து வீழ்கிறார் ஒருத்தி
விரைந்து கொண்டிருக்கிறது
சாரல் வேறெங்கோ.”

இப்படியாக காதலில் தவித்திருக்கும் ஒரு பெண்ணின் நிலை பற்றிய சங்கப் பெண்பாற்புலவர் வருமுலையாரித்தியின் பாடல்,

“ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து, பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை  யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே.”

“ஒருநாள் வந்தவனல்ல, இரு நாள் வந்தவனல்ல, பல நாட்கள் வந்தவன். பலமுறை வந்து பணிவுடன் பேசி, என்னுடைய நல்ல நெஞ்சத்தை நெகிழவைத்தவன். பின்னர், மலையில் முதிர்ந்து எவருக்கும் பயனளிக்காததும், வீழ்ந்தழிவதுமாகிய தேனடையைப் போல போனவன் ஆயினன். உற்ற துணையாகிய எந்தை போன்ற அந்த தலைவன் இப்போது எங்கே இருக்கின்றானோ? வேறு புலன்களையுடைய நல்ல நாட்டிலே பெய்த இடியோசையுடன் கூடிய மழை, கலங்கிய ஆறாக  நம்மிடம் வருவதுபோல், என் மனமும் அமைதியற்று அவன் நினைவில் கலங்குகின்றது” என்பது பாடலின் பொருள்.
ஆண் என்பவன் தனக்குப் பற்றுக்கோடாக இருக்கிறான் என பெண் நம்புகிறாள். மேலும் “எந்தை” என்று இங்கே சொல்வது, என் தலைவன் தந்தையைப் போன்றவன் என்கிற தந்தைமைச் சமூகத்திற்கான கருத்தாக்கத்தின் விளைவு.

வேறு ஊரில் பெய்த மழை, ஆறாகப்பெருகி நெடுந்தொலைவு பயணித்து, பிறிதொரு ஊருக்குள் நுழையும் பொழுது கலங்கி இருக்கும். அதுபோல தலைவன் தன்னை விட்டு வேறு எங்கேனும் சென்று இன்புற்று இருக்கக்கூடுமோ எனவும் தலைவி கலங்கியிருக்கலாம் எனவும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

மலையின் உச்சியில் தேனீக்களால் முயன்று கட்டப்பட்ட முதிர்ந்த தேனடை என்பது அத்தனை எளிதில் வளைத்துவிட இயலாத தலைவியின் மனதைச் சொல்கிறது. அதனாலேயே தலைவன் ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பலமுறை வந்து பணிந்து பேசி அந்தப்பெண்ணை தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க வைக்கிறான். 
இன்பத்தை நுகர்கிறவனாக ஆண் இருக்கிறான் என்பதைக் குறிப்பிடவே தேன் என்றும் தேனடை என்றும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது. திருமணத்திற்கு முன்பாக களவு காலத்தில் ஆண், பெண்ணுடன் உறவு கொள்கிறான். பின்பு பிரிந்து செல்கிறான். தலைவி காத்திருக்கிறாள். களவுகாலத்தில் காதலினிடம் தன்னுடைய உடலைக் கொடுக்கும் பெண் பெரும்பாலும் அவனைத் திருமணத்திற்கு வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். திருமணத்திற்கு முன்பாக உடலுறவு வைத்துக்கொண்ட பிறகு இந்த ஆணும் பெண்ணை திருமணத்திற்கு வலியுறுத்துவதாக அமைந்திருக்கும் காட்சிகள் என்றைக்குமே இல்லை.
இந்தச்சூழலில் இருக்கும் ஒரு பெண்ணின் நிலையானது தவிப்புடனிருக்கிறது.  எத்தனை முழுமையாக நம்பினாலும் வாழ்நாள் உறவுக்கான சாத்தியப்பாடுகளைக் கணக்கிடத் தொடங்குவாள். அது நிகழாதபோது துன்புறுகிறாள். தன்னுடைய நிலையை எண்ணி கலங்குவாள். அதன் பின்பான அவளது எந்தப்படுக்கையும் மரணப்படுக்கைக்கு சமமானதாக இருக்கிறது. ப்ரேமா ரேவதியின் “என்னைத் தின்று போட்ட பின்னே” என்கிற கவிதை அந்த உணர்வைத்தான் பேசுகிறது,

மரணத்தின் மலர்கள்
என் படுக்கையெங்கும்
அகன்று விரியும் நேசத்தின் நதிகள்
சிக்கிக் கொள்கின்றன
அறைகளின் சுவர்களுக்குள்.
கானகங்கள் சுருங்கி
வெறும் திடலாகும் உலகில்
கடல்கள் அலையற்று
உயிர் மாய்க்கும் பொழுதில்
காலங்களுக்கு வெளியே
பிறந்த காட்டாறு
தனித்த ஊழியாய் என்னைத்
தின்று போட்ட பின்னே - 
நீ சுவைத்த தேகம் சிதறி
மரணத்தின் மலர்கள்
என் படுக்கையெங்கும்.


ஆண், பெண் இருவரிடையே நிகழ்கிற உடல் சார்ந்த உறவுக்குப் பின்பு, ஒரு ஆண் எப்பொழுதும் தன்னை வெற்றியாளனாக பெருமிதம் அடைகிறான். ஒரு பெண்ணைக் கைக்கொண்டுவிட்டதாகவும், இனி அவள் தன்னுடைய உரிமைக்கும், விருப்பத்திற்கும்  உட்பட்ட பொருள் எனவும் நினைத்துக் கொள்கிறான். அதற்குப்பிறகு பெண்ணின் மனதில்  ஏற்படுகிற உளவியல் சிக்கல்கள் அவளைத் தொந்தரவு செய்கின்றன. பாதுகாப்பிற்காகவும், வாழ்நாள்  உறவுக்காகவென  பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள விழைகிற பெண்ணுக்கு, உடல்சார் உறவுக்குப் பிறகு காதலனுடைய  சிறிய அளவிலான விலகலும் அவளைப் பதற்றப்படுத்தும்.

                
இவரது பாடல் ஒன்றே ஒன்று தான் கிடைத்திருக்கிறது . குறுந்தொகை 176 .

No comments: