Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-முள்ளியூர்ப் பூதியார் ..



ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள் :

வருவர் வாழி, தோழி…”

சமூகத்தின் இயக்கத்திற்குத் தேவையான நீர்மை என்பது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதால் பாலுணர்வை  கட்டுப்படுத்திக்கொண்டு தலைவனுக்கென காத்திருக்க பெண் கற்பிக்கப்பட்டிருக்கிறாள். தன்னுடைய குடும்பம், சுற்றம் ஆகியோரின் நலன்கருதி பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் இச்சையை கட்டுப்படுத்திக் கொள்கிறான் எனப் பெண் நம்புகிறாள். அதனாலேயே தன்னுடைய உடலையும் மனதையும் அவனுக்கென ஒப்புக்கொடுத்து ஆற்றியிருக்கிறாள்.


பெண் என்று சொன்னாலே தாய் அல்லது மனைவி என்கிற நிலையில்தான் பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படுகிறாள். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார வாழ்வில் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்கவேண்டிய அவசியம். மற்றது, இந்தப் பொருளாதாரச்சார்பு நிலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள பண்பாட்டுச்சூழல்.
வீட்டுவேலைகளுக்குப் பெண் எனவும் அந்தவீட்டையும் சுற்றத்தையும் பராமரிப்பதற்காகப் பொருள்தேடி வெளியில் அலைபவன் ஆண் எனவும்  சமூகக்கட்டமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. அவளுக்காகவும் சேர்த்து பொருள் தேடுபவன் ஆண் என்பதால் அவனுக்கு அடங்கி நடக்கிறாள். தனது சார்புநிலையைப்பற்றி அவளே அறிந்திருந்தாலும் அந்நிலையிலிருந்து மாற விரும்புவதில்லை. குழந்தைகளை வளர்ப்பது, வீட்டைப் பராமரிப்பது,  குடும்பத்தினருக்குத் தேவையான சமையல் செய்வது, அதற்காக விறகு மற்றும் எரிபொருள்கள் தேடுவது, தண்ணீர் தேடி சேகரிப்பது. போன்ற அன்றாட வீட்டுவேலைகளுக்குப் பொருளாதார மதிப்பீடு செய்தால் பெண்களின் வேலைப் பங்கேற்பு விகிதமென்பது ஆண்களைவிடவும் கூடுதலானது. மேலும் குறைவான ஊதியத்தில் அதிகமான வேலை, சேவைப்பணிகள், சம்பளமில்லா வேலைகளைச் செய்வதெல்லாம் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை”

என்பார் எழுத்தாளர் கந்தர்வன்.

ஆண்பெண் சமத்துவத்தை சட்டங்கள் வலியுறுத்திக் கொண்டிருந்தாலும் மரபுவழியாக அமைந்திருக்கும் பண்பாட்டுமனமே  ஆண்களிடமும் பெண்களிடமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. பிறப்பிலும் வளர்ப்பிலும் ஆண்பெண் வேறுபாடுகளை இந்தச்சமூகம் குழந்தைப்பருவம் முதலே பயிற்றுவித்திருப்பதால் அத்தனை எளிதில் மாறுவதற்கு இருவருமே தயாராக இல்லை.

பண்பாட்டு மனதின் செயல்பாடு என்பது பொருள்வயின் பிரிதலாக இருக்கிறது. வெளி என்பது ஆணுக்கும் இல் என்பது பெண்ணுக்கும் உரியதென பல்வேறு சங்கப்பாடல்கள் வழியாக அறியலாம். இதனை பாலை பாடிய பெருங்கடுங்கோ,

“வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென,
நமக்குரைத் தோருந் தாமே,
அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே.”

“தொழில்தான் ஆண்மக்களுக்கு உயிராகும். வீட்டில் உறைந்திருக்கும் மகளிர்க்கு அந்த ஆணே உயிராவார் என எடுத்துக் கூறியவர் நம்முடைய தலைவன். அதனால் பொருள்தேடிச் செல்லவிருக்கும் தலைவன்முன்பு அழுவதை ஒழிப்பாயாக.” தலைவி அழுவதைக் கண்டால் தலைவன் பொருள்தேடிச் செல்லுவதைத் தவிர்ப்பார் என்பதாலேயே தோழி தலைவியை சமாதானம் செய்கிறாள்.

ஒரு ஆண், தனக்கான பெண்ணைத் தேர்வு செய்தபின்பு அவளுக்கான அரியவகைப் பரிசப்பொருள்களைத் தந்து அவளைத் திருமணம் செய்துகொள்வது மரபு. எனவே திருமணத்திற்கு முன்பாக தலைவன் பொருள்தேடி செல்கிறான். இன்றைக்கும் திருமணச் சடங்குகளில் மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் “வளைவிலை” என்கிற பரிசப்பணமும், சீருமே இதற்குச் சாட்சி. திருமணத்திற்குப் பிறகு குடும்பம் நடத்தவும், தலைவிக்கு அணிகள் சேர்க்கவும் தலைவன் பொருள் தேடிச் செல்கிறான். சமூகத்தில் மதிப்பு, மரியாதை என்கிற நிலையை அடைவதற்கும் பொருள் தேடிச் சேகரிக்க வேண்டியது அவனுக்கு அவசியமாகிறது. மேலும் தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமன்றி சுற்றத்தினருக்கும் சேர்த்தே பொருள் தேட வேண்டியிருக்கிறது. இதுவே ஆணுக்கு அறம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது .
ஒருவர் அறநிலை நீங்காது இருக்கவேண்டுமெனில் பொருளில் வளமுடையவராக இருக்கவேண்டும். மேலும் உறவினர்களின் துன்பங்களைக் களைந்து அவர்களையும் காக்கவேண்டும். இன்றைக்கும் தலைவனின் கடமையென இருக்கிறது.

பொருள்தேடித் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து மனம்வருந்தி நின்ற தலைவியிடம் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த  முள்ளியூர்ப் பூதியாரின் பாடலில்,

அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்

மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி,
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ

பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உரைஇ, கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்

கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.”


“அறநெறியிலிருந்து நீங்காது இல்வாழ்க்கை நடத்த வேண்டும், சிறந்தவர்களாக இருக்கக்கூடிய நம்முடைய சுற்றத்தினருடைய  பலவகையான துன்பங்களைத்  தாங்க வேண்டும், இவ்விரண்டையும் செய்யாமல் வீட்டிலேயே சோம்பி இருப்பவருக்கு ஒருநாளும் இன்பம் இல்லை என்பதால் நம்முடைய தலைவர் பொருளீட்டும் முயற்சியை விரும்பி மேற்கொண்டுள்ளார்.

பல புரிகளால் முறுக்கிய  நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட  வண்டியினை, எருதுகளின் வலிமையான  பிடரியில் பூட்டி, மேடான இடங்களில்  ஓட்டும் பொழுது  உப்பு வணிகர் அவற்றை அதட்டும் ஓசையைக் கேட்டு ஆண்மானும் பெண்மானும் பயந்து நிலைகெட்டு ஓடத்தொடங்கும்.”

உப்பு விற்கும் உமணர்கள் உப்பு வண்டியை மேட்டு நிலத்துக்கு ஏற்றும்போது எருதுகளைப் பல நுகங்களில் கட்டி ஒன்றாகப் பிணைத்து இழுக்கச் செய்வர். பலநுக எருதுகளை ஓட்டுவதற்குப் பலர் செய்யும் அதட்டல் ஒலி “உமண்விளி” எனப்படும். சுற்றத்தார் நலனுக்காக தலைவனும் தலைவியும் பிரிந்து வாழ்வதை மறைபொருளாகக் “உமண்விளி” குறிப்பிடுகிறது.

“அத்தகைய மேட்டுநிலமுடைய காடுகளின் அழகு கெடுமாறு  கோடையானது  பரவி,  நிலைபெற்று நிலத்தின் நீரினை உறிஞ்சும்.  அதனால் நீர் வற்றிய அழகிய பெரிய  நீண்ட மூங்கிலின், கணுக்கள் பிளந்து முத்துக்கள் தெறிக்கும். அவை கழுங்குக்காயைப் போல தோற்றமுடையவை. முன்பு அவ்விடத்தில் கழுங்கு ஆட்டம் விளையாடிய குழிகளிலே முத்துக்கள் தெறித்து விழும்.”

கழுங்கு என்பது கழற்சிக்காய். இதனை இக்காலத்தில் சூட்டுக்கொட்டை எனவும் வழங்குவர். இது வெண்மை நிறம் கொண்டது. கழுங்குகளைக் குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் கழுங்கு. நீளமான மூங்கிலில் முத்து விளையும். இது  “மண்ணா முத்தம்” எனப்படுகிறது. அவை மூங்கிலின் கணு உடைந்து தெறித்து மண்ணிலுள்ள பழங்குழிகளில் விழுவது கழுங்கு விளையாட்டு போல இருக்குமாம். இக்காலத்தில் சிறுவர்கள் சிறிய குண்டுகளை குழியில் போட்டு விளையாடும் ஆட்டம் அக்காலக் கழுங்காட்டம் போன்றது.

“இனிய களிப்பைத் தருகிற கள்ளினையும் அழகிய தேரினையும் உடைய அரசன்  நன்னனது வானளாவிய நீண்ட மூங்கில்கள் நிறைந்த உயர்ந்த மலைச்சாரலையும்  பொன் கிடைக்கும் பக்கமலையினையும் கடந்து நம் தலைவர் சென்றிருக்கிறார்.  நறுமணமுடைய நெற்றியையும், கரிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளே! கடுமையான துன்பத்தால் வருந்துவதை  சிலகாலம் பொறுத்துக் கொள்ளவேண்டும். உன்னுடைய மாண்புற்ற ஒளி பொருந்திய கைவளையினைத் திருத்தி, தலை கோதி, தலைவன் சென்றிருப்பதால் விரைவில் வந்துவிடுவார்” என்று தோழி, தலைவியை ஆற்றியிருக்க வலியுறுத்துகிறாள் .

சங்ககாலத்தில் வினை என்னும் சொல், போரிடும் செயலைக் குறிக்கும். 'வினை முற்றிய தலைவன்' என்று சொல்லும் பொழுது இச்சொல் போருக்குச் சென்ற தலைவன் என்றும்  பொருள்படும். இந்தப்பாடலில் “செய்வினை“ என்று வருகிறது. எனவே இது பொருள் தேடும் வகையில்தான் சொல்லப்படுகிறது.  “அறம் தலைப்பிரியாது ஒழுகலும்” என்கிற நன்னோக்குடன் பொருளீட்ட தலைவர் சென்றிருக்கிறார். எனவே அவர் பிரிவைச் சிலகாலம் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது பெண்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

கோடை பரவி, நீர் வற்றிய பாலைநிலப் பாதையில் பொருள்தேடச் செல்லும் தலைவன், தன்னுடைய பாலுணர்வுகளை கட்டுப்படுத்தி மிக கடினமான நிலவழியில் பயணம் மேற்கொள்கிறான். இந்நிலையில் தலைவியும் அவளுடைய  உணர்வுகளைக் கட்டுப்படுத்தி தலைவனுக்காக ஆற்றியிருக்கிறாள். தனித்திருக்கும் தலைவி தன் நிலையிலிருந்து சோர்ந்து தளர்வுராமல் காக்க, முன்பான கூடல் காலங்களில் தலைவனும் தலைவியும் இன்புற்றிருந்த நிலைகளை எடுத்துச்சொல்லி தோழியர் மூலமாக ஆற்றுவிக்கப்படுவது தமிழ் நிலத்தின் மரபாக இருந்திருக்கிறது.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி ஒருத்தியின் உணர்வுகளுக்குத் துணையாக ஆற்றுபடுத்தியபடி அம்மாவோ, தோழியோ, செவிலித்தாயோ அல்லது யாரோ ஒருவர் உடனிருப்பதை உணர்த்தும்படியான மேய்ப்பர் என்கிற தலைப்பில் உள்ள கவிஞர் இவள் பாரதியின் கவிதையொன்று உள்ளது.

 “உனக்கென
விதைக்கிற என் சொற்களை
காற்றுப்புகாத ஒரு பெட்டியிலிட்டு
சேகரித்து வைக்கிறேன்
எங்கிருந்தோ ஒரு மேய்ப்பர்
காவலுக்கிருக்கிறார்
நீ பெற்றுச் செல்லும்வரை
விதைநெல்லுக்கும்
விதைக்கும் எனக்கும்.”

சமூகத்தின் இயக்கத்திற்குத் தேவையான நீர்மை என்பது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதால் பாலுணர்வுகளை தலைவன் வரும்வரையில் தலைவியும் கட்டுப்படுத்திக்கொண்டு அவனுக்காகக் காத்திருக்க வலியுறுத்தப்பட்டுள்ளாள்.

இன்றைக்கும் கூட வெளிநாட்டு வேலைகளை விரும்பி ஏற்கிற  ஆண்களும், வெளிநாடுகளில் வேலை செய்யும் மாப்பிள்ளையை மணம்முடிக்க பெண்கள் விரும்புவதையும் காண்கிறோம். திருமணமான முதல் மாதத்திலோ இரண்டாம் மாதத்திலோ கணவன் மனைவி பிரிந்துதான் வாழ நேரிடும் என்பதையும் ஆண்டுக்கொருமுறையோ அல்லது இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்தோதான் மீண்டும் சந்திக்க முடியும் எனபதையும் இருவருமே அறிந்திருக்கின்றனர். என்றாலும் சமூகம் மதிக்கும் பொருளாதார ரீதியான வாழ்வைக் கட்டமைக்க இவ்வகையான பிரிவினை இருவருமே விரும்பி ஏற்கின்றனர். அவன் பிரிந்து சென்ற பின்பான பெண்ணின் தனிமையானது அவனது பயண வரைபடத்தைச் சுற்றியே அமைந்திருக்கிறது என்பதைப்பற்றி கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்சினியின் “புள்ளிகளற்ற வரைபடங்கள்” என்கிற தலைப்பிலான கவிதை,

“தினப்பொழுதுகளின் சட்டையுரித்தல் நிகழ்கிறது
அறியப்படாத நிகழ்வுகளின் சாட்சியென.
யாருடனும் பேச இயலாத சொற்களை
அசைவுகளுடன் குறிப்பறிந்து உணர்ந்தபடி
நகர்கிறது ஜன்னல்குருவிகள் இரண்டும்
ஒருபோதும் திரும்ப இயலாக் கனவுடன்
சிறகுகளை அசைக்கிறது நெடுந்தொலைவு
நான் திரும்புமுன் வளர்ந்து விடுகிற
தவளைக் குஞ்சுகளை இன்று காணவில்லை
பேய் மழைக்குள் ஒளிந்திருக்கிறது நாய்க்குடை
வந்து கொண்டும் சென்றுகொண்டும் படி உள்ள
உனது பயண வரைபடத்திற்குள் நைந்த கோடுகளென உள்ளது
தீராத எனது காதலின் துகள் ஒன்று”

தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றி அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது நகரத்தார் சமூகத்திற்குத்தான். இதைப்போன்ற ஆய்வு வேறு எந்த தமிழ்ச்சாதிக்கும் நடக்கவில்லை. பாரிஸ், பெர்லின், லண்டன், கல்கத்தா போன்ற இடங்களிலுள்ள ஆவணக்காப்பகங்களில் நகரத்தார் சமூகம் தொடர்பான பல ஆவணங்கள், பண்பாட்டுச்சின்னங்கள் உள்ளன. இதற்கு என்ன காரணமென்றால் வணிகத்தை முன்னிட்டு உலகின் பலபகுதிகளுக்கும் இவர்கள் சென்றுள்ளனர். “செட்டு கப்பலுக்கு செந்தூரான் துணை” என்பது வழக்காறு. கப்பல் என்பது வணிகத்தைக் குறிக்கும் சொல். செட்டுவின் வணிகத்திற்கு திருச்செந்தூரான் துணை இருப்பான் என்பது நகரத்தார் நம்பிக்கை. இரணியல் செட்டியின் வாழ்க்கையை எழுத்தாளர் நீலபத்மநாபனின் “தலைமுறைகள்” நாவல் அப்பட்டமாகச் சித்தரித்துள்ளது.

தமிழகத்திலிருந்து 7 சதவீதம் ஆண்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 20 சதவீதமும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 15 சதவீதமும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 10 சதவீதமும் தஞ்சை, நாகபட்டினம் பகுதிகளிலிருந்து 7 சதவீத ஆண்களும் குடும்பத்தைப் பிரிந்து பொருளீட்டச் செல்கிறார்கள். தினந்தோறும் இராமேஸ்வரத்திலிருந்து சென்னை வருகிற இரயிலில் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்கிற ஆண்கள் பலரையும், அவர்களின் துயரம் தோய்ந்த முகங்களையும் காணமுடியும்.

பா.சிங்காரத்தினுடைய “புயலிலே ஒரு தோணி” நாவலின் பெரும்பகுதி பர்மாவைக் களனாகக் கொண்டது. இந்தக்கதையில் ஒரு பாத்திரமாக வரும்  விடாக்கண்டன் செட்டியார் வீட்டிற்கு வந்துவிட்டு விடுமுறை முடிந்து பர்மாவுக்குத் திரும்புவார். சம்பாத்தியம் மட்டும் குடும்பத்திற்குப் போகும் நிலையில் அவர் வாழ்நாளின் பெரும்பகுதி பர்மாவிலேயே கழிந்திருக்கும். இம்முறை கிளம்புகையில் அவருடைய   சின்னமகள் அமிர்தம் தங்கத்தில் வளையல் செய்துத்தரச் சொல்லி அடம்பிடித்து அழுவாள். இப்போது முடியாது என்று இவர் சொல்லியும் கேட்காமல் மகள் அழுவாள். கோபம் பொறுக்காமல் கடுமையாக அதட்டி அடித்துவிடுவார். தரையில் விழுந்து, காலை உதறி, அலறி, புரண்டு, துடிக்கத்துடிக்க அழுதுகொண்டிருக்கும் மகளை விட்டுவிட்டு கிளம்புவார். நடுக்கடலில் கப்பல் அலைகளில் ஆடிச் செல்லும்போது திடமான அவர் நெஞ்சம் கலங்கத்தொடங்குகிறது. தன்னுடன் பயணிப்பவர்களிடம் “என்ன சம்பாதித்து என்ன, மகள் கேட்கும் பொழுது வளையல் வாங்கித் தர இயலவில்லையே” என்று எல்லோர் முன்பாகவும் உடைந்து அழுவார். குழந்தைகள், மனைவி மீதான பற்றினை அவர்களுக்கு அண்மையிலிருந்து வெளிப்படுத்த இயலாமல், பொருள் சார்ந்து அவர்களை நிறைவு செய்கிற நிலையில் ஆண் மாறியிருப்பதைப் பற்றிய நிலையினை இதுபோன்ற பல கதைகளில் மூலமாக அறிய முடிகிறது.  

தனக்காகவும் தன்னுடைய சுற்றத்தினருக்காகவும் பிறந்தமண், வீடு, குடும்பம் சார்ந்த உணர்வுகளையும், பாலுணர்வுகளையும் கணவன்  கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதாக மனைவி நம்புகிறாள். அதனாலேயே தன்னுடைய உடலையும் மனதையும் அவனுக்கென  ஒப்புக்கொடுத்து ஆற்றியிருக்கிறாள்.


இவரது பாடல் ஒன்றுமட்டும் அகநானூறு பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அகநானூறு: 173.


No comments: