Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-வெள்ளிவீதியார் .. 



ஒரு பெண் காத்திருக்கிறாள்:

நிலந்தொட்டுப் புகாஅர்…”
எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத்தேடித் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள். இவ்வாறாக காலங்காலமாக எங்காவது ஒரு பெண் என்றேனும் ஒருநாள் தான் விரும்பியவனை சந்தித்துவிடுவோம் என அவனுக்காகக் காத்திருக்கிறாள்.
______________________________________________________________________________________
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கியபோது பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும் உணவுத்தேடலுக்கான உழைப்பிலும் ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியும் பெண்ணின் செயல்பாடு இருந்தது. பன்மொழி அறிஞரும், தத்துவஞானியும், வரலாற்று ஆய்வாளருமான “ராகுல சாங்கிருத்தியாயன்” எழுதிய “மனித சமுதாயம்”, “வால்காவிலிருந்து கங்கை வரை” போன்ற நூல்களிலிருந்து மனித சமூகத்தின் தொடக்க காலம் பற்றி வரலாற்றுக்கு ஆதாரமான பல தகவல்களை யூகமாவும் புனைவாகவும் தெரிந்து கொள்ளமுடிகிறது.. வேட்டைச்சமூகப் பெண்களின் உடல் பற்றிய புரிதலும், மனம் பற்றிய உணர்தலும் நம்முடைய இன்றைய அறிதலினின்று வேறானது. நாடோடியாக வாழ்ந்த மக்கள், தங்களுக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து இனக்குழுச்சமூகமாக வேளாண் மக்களாக மாறியபொழுது பெண்ணின் உடலமைப்பு, இனவிருத்தி, வாரிசுகளைக் காப்பது போன்ற நிலைகளில் பெண் என்பவள் இல்லத்திற்கு இன்றியமையாதவளாக மாறிவிட்டாள். நிலவுடைமைச் சமூகமாக நிலைபெற்ற இந்தக் காலத்தில்தான் பெண்உடல் மீது ஆதிக்கம் செய்யும் எண்ணம் ஆணுக்கு வந்தது. பொருளாதாரத் தேவைக்காக வேறு பல தொழில்களைச் செய்யவும், அதற்காகக் குடும்பத்தை விட்டு ஒரு ஆண் பிரிந்து செல்லவும் அவசியம் அமைந்தது போலவே அவனுடைய வாரிசுகளைக் காத்து, குடும்பத்தை நிலைப்படுத்தும் செயலை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு பெண் பல்வேறு தருணங்களில் தன்னுடைய கணவனுக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று.

காத்திருப்பு என்று சொல்லும்போதே “பிரிவு” என்கிற ஒரு செயலை மறைமுகமாக நினைவுபடுத்துகிறது. ஒரு ஆணுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதே ஆணின் இருப்பை அழுத்தமாக்கிக் காட்டுகிறது. தகப்பனுக்காகவோ, கணவனுக்காகவோ, மகனுக்காகவோ ஒரு பெண் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவளாகக் காத்திருக்கிறாள் என்பதே இன்றைக்கும் நாம் காண்கிற நிகழ்வு. பொதுவாக மணமுறிவு ஏற்படுகிற எத்தனையோ குடும்பங்களில் சட்டரீதியாக அல்லாவிடினும் உளவியல் காரணமாக குழந்தை வளர்ப்பிற்கான பொறுப்பை தாயே ஏற்றுக்கொள்கிறாள்.

நிலக்கோட்டை வட்ட அளவிலான நீதிமன்றத்தில் மக்கள் சமரசத்தீர்வு மையத்தில் கௌரவ உறுப்பினராக சில வருடங்கள் இருந்தேன். அப்பொழுது   விவாகரத்துப் பெற வந்த ஒரு பெண்ணுடன் தனித்து உரையாட நேர்ந்தது. அவளுடைய கணவன், அவளை சந்தேகித்து அடித்துக் கொடுமைப்படுத்தியதாகச் என்னிடம் சொல்லியழுதாள். அக்கொடுமைக்காரனுடன் இனியும் சேர்ந்து வாழ விரும்பவில்லை, எனவே பிரிந்துவிட  விரும்புவதாகவும் சொன்னாள். ஆனால் “குழந்தையை என்னிடமே விட்டு விடுங்கள், இனி என்னுடைய எல்லா சுகதுக்கமும் இவனைச் சார்ந்துதான் இருக்கு, தவிர இவனாவது நல்லமுறையில் வளர்ந்து, ஒரு பெண்ணை துன்பப்படுத்தாதவனாக வாழட்டும்” எனச் சொன்னார். அது என்னை நெகிழச் செய்தது. எந்த தருணத்திலும் பெண் என்பவள் தாய்மை உணர்வுடன்தான்  இருக்கிறாள்.
விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் வெளியான “குயின் “என்கிற ஹிந்தி திரைப்படத்தில், திருமணம் நின்றுபோன ஒரு பெண் தன்னுடைய சுயத்தைத் தேடி பயணிப்பதாக அமைந்திருக்கும். பெண்ணியச் சிந்தனையை வெளிப்படுத்தும் இந்தக்கதையில், பிரான்ஸ் நாட்டில் பாலியல் தொழிலாளியாக இருக்கும் ஒரு பெண் தன்னுடைய மகனைக் குறிப்பிட்டு  ‘இவன்தான் என் உலகம் என்பார்’. இவ்விதமாக எந்த சூழ்நிலையில் வாழ்கிற பெண்ணும்,  தன்னுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டிருக்கிறாள்.

பொதுவாக குடும்ப அமைப்பில் கணவன் மனைவிக்குள்  பிரிவு ஏற்படுகிற பொழுது, அந்த ஆண் அவர்களுக்கிடையே நிகழும் பிரிவை எளிதில் கடந்துவிடுகிறான். திருமணத்திற்கு முன்பான அவனுடைய பழைய வாழ்விற்கு அனேகமாக மீண்டுவிடுகிறான். ஆனால் அந்தப்பிரிவிற்குப் பிறகு திருமணத்திற்கு முந்தைய அதே தன்னுடைய பழைய வாழ்விற்குத் திரும்ப முடியாத நிலையில்தான் பெண் இருக்கிறாள். அவர்களுடைய குழந்தை வளர்ந்து அதனுடைய சுய இயல்பில் தனித்தியங்கும் வரையில், தாய்தான்  அதற்குத் துணையாக உடனிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது பெண்களைப் பொறுத்தமட்டில் மிக கடினமான செயல். இச்சூழலில் பெண்களுக்கென தனித்த வாழ்வென்பதே சாத்தியக்குறைவுதான். ஆக, பெண்களின் உலகமானது தங்களை ஆண்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருக்கிற ஒன்றாகவே எப்பொழுதும் இருக்கிறது.

இன்றைக்கு ஊடகங்களும், சட்டமும் பெண்களுக்குத் துணை செய்வதுபோலத் தோன்றுகிறது. ஒரு ஆண் தன்னுடைய மனைவியை அல்லது காதலியைப் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் பல்வேறு வகையினதாக ஆகியுள்ளன. இவர்களின் பிரிவிற்கான காரண எல்லைகள் விரிவடைந்திருந்தாலும் நிகழ்வுகளின் முடிவில் அந்தப்பெண் மனதளவில் காத்திருப்பவளாக மாறுகிறாள் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கவிஞரும், பெண்ணிய செயல்பாட்டாளரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலையின் கவிதை ஒன்று இந்த மனநிலைக்கு நெருக்கமாக இருக்கிறது,
எப்படியோ
இழந்துவிட்டிருந்தேன்
உன்னை

சமீப காலங்களில்
அகல்வதும் நெருங்குவதுமாய்
தொடர்ந்து கொண்டிருந்த
பாவனை நேசம்
இறுதியாக
உமிழ்ந்ததில் கிடைத்தன
அமில மனங்கள்

என் ஆறாவது புலனாய்
அறியப்பட்டிருந்த உன்னிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்டு விட்டிருந்தது
என் பூமிப் பந்து

திசை மாறும் ரேகைகள்
வளர்ந்துவிட்ட திசைகள்
ஏதோ ஒரு காரணம்
நம்மைச் சுரந்து கொண்டிருந்த
மெல்லிய உணர்வு பிளந்து
முத்தமிட்ட இடங்கள்
கட்ட புண்களாய்
குழிந்துவிட்டிருந்தது

பிடுங்கி எறியப்பட்ட
புதிய நிலத்தின்
நீரும் வெளிச்சமும்
பழகிவிடும் என்றாலும்
முதல் சந்திப்பின்
கபடமற்ற
அறிமுகச் சிரிப்பை
அன்று கண்ட
கனவுகளின் பிரதேசத்தில்
பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்

என்றாவது
உன்னைப் பார்க்க நேர்கையில்
சலனமற்றுச் சிரிக்க”.

இந்தக்கவிதையில், கணவன் அல்லது காதலனைப் பிரிந்து தனக்கென ஒரு வாழ்வை தொடர்கிறாள் ஒரு பெண். அவர்களுக்கிடையே நிகழ்ந்த எத்தனையோ துயரமான சம்பவங்களுக்குப் பிறகு பிரிந்திருக்கிறார்கள். பொதுவாகவே ஆண், பெண் உறவில் அவர்களின் பிரிவிற்கு ஒரே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியாது. சின்னச்சின்ன மனவேறுபாடுகளுக்குப் பிறகு ஒரு புள்ளியில் சட்டென விலகிவிட முடிவுசெய்து பிரிந்திருப்பார்கள். ஆனால் எங்காவது ஒரு புதிய நிலத்தில் அதன் நீர்மையையும் ஒளிர்வையும் அந்தப்பெண் பழகிக் கொண்டாலும் இவர்களின் முதல் சந்திப்புக் கணத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறவளாக இருக்கிறாள். மீண்டும் இவனை சந்திக்க நேரும்பொழுது அவர்களுக்கிடையேயான கசப்பினை மறந்து சலனமற்ற மனதுடன் புன்னகைக்கும் விருப்பத்துடன் காத்திருக்கிறாள்.

பிரபல மலையாள எழுத்தாளரும், திரைக்கதையாசிரியரும், இயக்குனருமான  எம்.டி.வாசுதேவன் நாயரின் சிறிய நாவல்மஞ்சு . இந்த  நாவலில் விமலா என்கிற பெண்  சுதிர்குமார் மிஸ்ரா என்கிற தனது ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.  என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்தித்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் காத்திருப்பாள்.  மலைப்பிரதேசமான நைனிடாலில்  நிகழ்கிற இந்தக் கதையில் ஏரி, கட்டங்கள், மலைச்சரிவு என அனைத்துமே கோடையில் வருகிற சுற்றுலாப் பயணிகளுக்காக ஆண்டுதோறும் காத்திருப்பது போல இந்தப் பெண்ணும் காத்திருக்கிறாள்.  முன்பு ஒரு கோடையில், அது எந்தவகையான உறவு என்று சொல்ல முடியாத நிலையில் அவர்களுக்குள் ஒரு உறவு நிகழ்ந்திருக்கும். அந்த உறவின் அடிப்படையில் இந்தக்கதை முழுக்க இந்தப்பெண் காத்திருக்கிறாள். 1964 இல் எழுதப்பட்ட நாவல், தற்சமயம் ரீனா ஷாலினி மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தக்கதை உயிர்ப்புடன் இருப்பதற்கு அந்தப்பெண்ணின் காத்திருப்பே காரணமாக இருக்கிறது.

சங்கப் பெண்பாற்புலவர்களில் வெள்ளிவீதியார் பெண்களின் அகம் சார்ந்த பல்வேறு உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். தலைவன் பிரிந்து சென்ற பின்பு வருந்தியிருக்கும் தலைவிக்கு தோழி சொல்வதாக அமைந்திருக்கும் வெள்ளிவீதியாரின் ஒரு குறுந்தொகைப் பாடல்,
“நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காத லோரே.”
பாடலின் பொருள், “தலைவன் நிலத்தைத் தோண்டி அதனுள்  புகுந்துகொள்ளவில்லை. வானத்தில் ஏறிப்பறந்து எட்டாத தொலைவுக்குச் சென்றுவிடவில்லை. கடலின் ஆழத்திற்குச் சென்று விடவும்  இல்லை. இந்த நாட்டிற்குள், இந்த ஊருக்குள்தான் ஏதோ ஒரு வீட்டில் இருக்கிறார். வீடுவீடாகத் தேடினால் அவனைக் கண்டுபிடித்துவிடலாம்”.
“அவ்விதமாகத் தேடிக்கண்டுபிடித்த தலைவனுடைய இருப்பிடத்துக்கே தூதனுப்பித் தலைவனை அழைத்து வந்துவிடலாம், கவலைப்படாதே” என்று பொருள்படும்படியாகத் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். இந்தப்பாடலில் காட்டப்படுகிற பிரிவு என்பது இந்தத்தலைவன் பொருள் தேடியோ, போருக்காகவோ தலைவியைப் பிரிந்து செல்லவில்லை. மாறாக பரத்தையரை நாடிச் சென்றிருக்கிறான் என்பதை உணரமுடிகிறது.

இந்தப்பாடலில் பொதிந்திருக்கும் உட்பொருளை வேறுவிதமாகவும் பார்க்கலாம். “பண்டையகால நம்பிக்கைகளான நிலத்தின் ஆழத்தில் நாககன்னியர் இருப்பார்கள். அவர்களைத் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது. வானலோகத்தில் தேவகன்னியர் இருப்பார்கள், அவர்களையும் தேடி தலைவன் சென்றிருக்க முடியாது.  தவிர ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ஆகிய முந்நீரும் சேரக்கூடிய கடலின்மேல் காலால் நடந்து வேற்றுநிலம் சென்றிருக்க இயலாது. நிலத்தில் புகுதலும், வானத்தின் மேலே பறந்து செல்லுதலும், நீரின் மேல் நடப்பதுமான சித்திகள்  கைவரப்பெற்ற சாரணர் போல அல்ல நம் காதலர், சாதாரண மானுடர்தான். அப்படியான சாதாரணனுக்கே உரிய குறைவுபட்ட இயல்புடையவர். எனவே இந்த நாட்டிற்குள் இங்கேயுள்ள ஊர்களுக்குள் வேறு ஏதோ ஒரு வீட்டில் வேறு ஏதோ ஒரு பெண்ணிடம் தன்னுடைய காமத்தைத் தீர்த்துக்கொள்ள சென்றிருப்பான். தீர்ந்தவுடன் திரும்பிவிடுவான்.”

காதலைப் பெரும்பாலும் உடலாக உணர்கிற ஆண்களைத்தான் காலம் காலமாக அறிந்துகொண்டிருக்கிறோம். ஆண், பரத்தையர் பிரிவில் தலைவியைப் பிரிந்து சென்றிருந்தாலும் பெண் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதாக சங்ககால ஆண்பாற் புலவர்களின் பாடல்களில்  வலியுறுத்தப்படுகிறாள். பரத்தையர் வீடுகளுக்குச் செல்கிற தலைவனுக்காக தலைவி பெருமிதப்படுவதும் ஆண்பாற்புலவர்களின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. மாறாக வெள்ளிவீதியின் பாடல்களில், “எங்கே போய்விடுவான் தலைவன், வந்துவிடுவான்” என்கிற தன்னிலை சார்ந்த சுயநிச்சயம் மேலோங்கி இருக்கிறது. மேலும் ஆண் என்பவன் காமம் சார்ந்து பலவீனமானவன் என்பதையும் அதனாலேயே அவன் பரத்தயரைத் தேடிச் செல்கிறான் என்பதையும் உணர்ந்தவளாகப் பெண் இருக்கிறாள்.

பெண்ணின் இருப்பும், புழங்குவெளியும் குடும்பம், வீடு சார்ந்து அமைந்திருக்கின்றன. அவளுடைய வாழ்வும், காத்திருப்பும் ஆண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்து அமைந்திருக்கின்றன. ஆணுடைய  புழுங்குவெளி மிகப்பரந்தது. அதனால் அவனுடைய காட்சிகளின் வெளியும், அவன் சந்திக்கும் மனிதர்களும், அடையும் அனுபவங்களும் புத்தம் புதியதாகவே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் புதிய அறிதல்களுக்காக புதிய நிலங்களில் அலைந்து திரிகிறவனாக ஆண் இருக்கிறான். புதிய மனிதர்களைச் சந்திப்பதில் விருப்பமும், புதிய பெண்கள் மீது ஆர்வமும் கொண்டவனாக இருக்கிறான். அதனால் தான்  தனக்கே உரியவள் என்றாகி, தன்னைவிட்டு வேறெங்கும் போகமாட்டாள் என்கிற நிலையில் உள்ள தன்னுடைய பெண்ணைவிட்டு சில சமயங்களில் வேறு இடங்களிலும் அலைகிறவனாக இருக்கிறான்.


பெரும்பாலும் ஆண், புதியவற்றிற்கான விருப்பத்தில் எங்காவது நகர்ந்து கொண்டேயிருக்கிறான். உறவுகளின் பாற்பட்டும் இந்நிலை எக்காலத்திலும் மாற்றம் அடையவேயில்லை. அப்படி நகர்ந்து சென்ற ஆணுக்காக, அவன் சார்ந்து உருவான உறவுகளுக்காக பெண் ஓரிடத்தில் நிலைத்துவிடுகிறாள். எனவே இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எங்காவது ஒரு பெண் என்றேனும் ஒருநாள் தான் விரும்பியவனை சந்தித்துவிடுவோம் எனக் காத்திருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாள். எங்காவது ஒரு பெண் தன்னுடைய ஆணைத்தேடித் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள். இவ்விதமாக எப்பொழுதும் பெண் தன்னுடைய ஆணுக்காகக் காத்திருக்கிறாள். 


_________________________________________________________________________
வெள்ளிவீதியார் எழுதிய பாடல்கள் மொத்தம் :13 அகநானூறு : 45,362குறுந்தொகை : 27,44,58,130,146,149,169,386 நற்றிணை : 70,335,348







No comments: