Thursday 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-அள்ளூர் நன்முல்லையார் ..






ஒரு பெண் திடப்படுகிறாள் :

“அன்னையும் அத்தனும் அல்லரோ...”

“திருமணம் என்றவுடன் தனக்கு வரப்போகிற கணவனைப் பற்றிய வண்ணவண்ண கனவுகளோடுதான் ஒரு பெண்மனம் நெகிழக் இருக்கிறாள். தான் கேட்டறிந்த கதைகளின் வழியாக காலங்காலமாக ஆணின் அலைபாய்கிற மனதினைப்பற்றி அவள் அறிந்திருந்தாலும் தனக்கு “இப்படியெல்லாம் நிகழாது” என நம்புகிறாள். பிறகு அந்த வழு தன் வாழ்விலும் நிகழும்போது முதலில் மிகவும் கலங்கிப்போகிறாள். பின்பு தளர்கிறாள். ஆனால் இதுபோன்ற உளவியல் சிக்கல்களின் காரணங்களைப்பற்றி நிதானமாக சிந்தித்து அறிந்துகொள்கிற பெண் தன்னைத்தானே உணர்ந்துகொள்வாள். அதன்பிறகு எதற்கும் கலங்காத வகையில் அவள் திடப்படுகிறாள்.”
_____________________________________________________________________________________

சமூகம் அங்கீகரித்த குணநலன்களே பெண்களுக்குப் பாதுகாப்பு. அதை மீறத்  துணிபவர்களுக்கு  ஆபத்தும் துயரும் எப்போதுவேண்டுமானும் வரும் என்பதாக சிறுவயது முதலே போதிக்கப்பட்டு பெண் குழந்தைகள் வளர்கிறார்கள்.  

திருமணம் செய்து கொடுத்து,  பெண்ணை வழியனுப்பும்போது புகுந்த வீட்டில் வாழ்வது குறித்த அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆண்களுக்கு அவ்விதமான அறிவுரைகள் எதுவும் இல்லை. திருமண வாழ்வில் ஒருபெண் எதையெல்லாம் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும், எப்போதெல்லாம் கணவனை அனுசரித்துக் கொள்ளவேண்டுமென திருமணத்திற்கு முன்பாகவே அவளுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். யானைகளுக்கு வழித்தடம் அதன் மரபணுக்களில் இருக்கும் என்பார்கள். அதுபோல பெண்களின் வாழ்வியல் முறையானது மகள், அம்மா, அவளுக்கு அம்மா என மூதாதை பெண்களின் மூலமாக வழிவழியாகக் கடத்தப்பட்டுள்ளது.

என்னதான் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லியனுப்பினாலும். எவ்வளவு தான் ஒரு பெண் அனுசரித்துக் கொண்டாலும். பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிளவு ஏற்பட்டுவிடுகிறது. கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதில்தான் அவர்களுக்குள்  மனவேறுபாடு ஏற்படத் தொடங்குகிறது. தமிழக நீதிமன்றங்களிலுள்ள அனைத்து வழக்குகளிலும் ஆண்டுக்கு 8.82 சதவீதம் விவாகரத்து வழக்குகள் பதியப்படுகின்றன. இதில் சுமார் 70 சதவீதம் வழக்குகள் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பவை.

இங்கே கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், பொதுவாக  குழந்தைகளுக்காகவும் அடிப்படையான வாழ்வாதாரத் தேவைகளுக்காகவும் ஆண்களைச் சார்ந்து பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும்  பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் குடும்பம் நடத்த பயிற்றுவிக்கப் படுகிறார்கள். பெண்களின் வாழ்வியல் முறை இப்படியிருக்கும்போதே  இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகளின் நலன், பொருளாதார நிலை, பிறந்தவீட்டின் சூழல் அல்லது வேறு காரணங்களினால் வெளியில் சொல்லமுடியாமல் தங்களுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட இயலாது. கணவன் வேறொரு  பெண்ணுடன் தொடர்பிலிருப்பதைத் தெரிந்த பிறகும் தனக்கு வாய்த்த வாழ்க்கை இவ்வளவு தான்“ என்று நினைத்துக்கொண்டு அவனுடன் இணைந்து வாழ்கிறவர்களாக பலபெண்கள் இருக்கிறார்கள். இவ்வாறான சகிப்புத்தன்மையுடன் வாழ்கிற பெண்களின் நிலை இக்காலத்திலும் பெரியமாற்றம் அடையவில்லை.

கவிஞர் சே.பிருந்தாவின் கவிதை ஒன்று, 

“ஒருவரும் அறிந்திருக்கவில்லை
என் கண்ணீரை

இந்த இரவு ஏன்
இவ்வளவு துக்கம் மிகுந்து

ஒற்றை நஷத்ர ஒளிர்வில்
காற்று நடுக்க
சத்தமற்ற இந்த விசும்பல்

மிக அருகே உனது கரம்
செத்த உடலிலிருந்தது போல

நீ உறங்கிக்கொண்டிருந்தாய்

நீ அறியாத என் துக்கம்
வலி மிகுந்தது.“

ஒரு ஆண் இருந்ததையும் இல்லாமல் இருப்பதையும் இந்தக்கவிதை உணர்த்துகிறது. அவனது உயிரும் உடலும் ஒன்றாக அவளிடத்தில் இயங்கும் நிலையிலிருந்து அவர்களுக்குள் இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளி மிகப்பெரிய பிளவாக, மீளவியலாத துக்கமாக அவளிடத்தில் இருப்பதைக்கூட அறியாதவனாக ஆண் இருக்கிறான் என்பதை இந்தக்கவிதை பேசுகிறது.

80 களில் மகேஷ் பட் இயக்கி வெளியான “அர்த்“ என்கிற ஹிந்தி திரைப்படத்தில் தன்னைவிட்டு வேறொரு பெண்ணிடம் ஈர்ப்புகொண்டு பிரிந்து சென்ற கணவனை, தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ ஏற்றுக்கொள்ளாமல், தனக்கான தனித்த அடையாளத்தைத் தேடிவாழத் தொடங்குகிற பெண்ணை அடையாளம் காட்டியிருப்பார். பின்னாளில் இந்தத் திரைப்படம் “மறுபடியும்” என பாலு மகேந்திரா இயக்கத்தில் தமிழிலும் வெளியானது.

சங்க இலக்கியத்தில் பரத்தையரிடம் சென்றிருந்த தலைவன், தலைவியிடம் திரும்பி வர நினைக்கிறான். நேரிடையாக வரத் தயங்கி, தனக்குச் சார்பாக தோழியை தூது அனுப்புகிறான். தூது வந்த தோழியிடம் தலைவனுக்கு அனுமதி மறுத்து தலைவி கூறுவதாக அமைந்த அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்,

“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.”
   
தலைவன் மீது ஊடல் கொள்ளவேண்டாம் என்றும் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தை மறந்து அவனை ஏற்கவேண்டும் என்றும் தோழி தலைவியை வேண்டுகிறாள். தலைவியோ, “தோழி! என்னுடைய நல்ல பெண்மை நலம் குலைந்தாலும்,  உடல் மிகவும் மெலிந்தாலும்,  இனிய உயிர் நீங்கினாலும் அவர்பால் பரிவுரை எதுவும் சொல்லவேண்டாம். தலைவன் எனக்கு தந்தையும் தாயும் போல வழிபடத்தக்கவன். ஆனால் அவனிடத்தில் நான் ஊடல் கொள்ளும் அளவுக்கு அன்புடையவர் அல்ல. அவ்விதம் அன்பில்லாத இடத்தில் ஊடலால்  எந்த பயனும் இல்லை” என்கிறாள்.
 
‘நல் நலம்’ என்பது பெண்தன்மைக்கு இயல்பாகிய நாணத்தைக் குறிப்பதாகும். அந்த நாணம் அழிந்தது. ஏனெனில் அவன் தன்னை விட்டுச் சென்றது மட்டுமல்லாமல், அவனுடனான அந்தரங்க உறவினைப் பற்றி வெளியில் சொல்ல நேர்ந்தது.  ’நலம் மிகச் சா அய்’ என்ற தொடரில் உள்ள நலம் என்ற சொல் தலைவியின் மேனி அழகை உணர்த்துவதாகும். தலைவனின் பிரிவு என்பது பொருள் தேடுதல் போன்ற வாழ்வியலின் அடிப்படைக் காரணமாக இல்லாமல் பரத்தையரை விரும்பிச் சென்றதால் ஏற்பட்ட அதிகப்படியான துயரில் தலைவியின் உடல் அழகு கெட்டது. நாணமும் அழகும் அழிந்ததால் அவள் உயிரும் உருகி நிற்கிறாள். மேலும் தாயாகவும் தந்தையாகவும் தலைவனேயே  நினைத்திருக்கிறாள். இதை அவனும் அறிவான். இருப்பினும் அவளைவிட்டு வேறு பெண்ணுடன் கூடியிருக்க பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியை மறந்து பரத்தையர் மார்பில் தோய்ந்திருக்க அவன் மனம் எவ்விதம் சென்றது. தலைவியிடத்து முழுமையான அன்பு இருந்தால் இவ்விதம் சென்றிருக்க முடியாது. தன்னோடு மனம் ஒன்றியிருக்கும் காதலரிடம்தானே அன்பின் பொருட்டான ஊடல் நிகழும். அப்போதுதான் இருவரும் ஊடல் விலகி கூடுகையில் பேரின்பம் விளையும். அன்பே இல்லாதவரிடம் ஊடல் கொள்வதால் ஒருபயனும் இல்லை. தலைவனிடத்தில் தனக்கு எந்த ஊடலும் கிடையாது. எனவே ஊடல் கொண்டிருப்பதாகச் சொல்லவேண்டாம் என்பதாக இந்தப்பாடலைப் புரிந்துகொள்ளலாம்.

தலைவனின் கவனம் வேறொரு பெண்ணிடம் சிறிதளவும் சென்றுவிடக் கூடாதென அவன்மீதான அன்பின் பொருட்டு தலைவி நினைப்பாள். அவனுக்காக தன்னுடைய சுயத்தை விட்டுக்கொடுத்து எல்லாவகையிலும் பணிந்து நடந்துகொள்வாள். சில சமயங்களில் அவன் தவறு செய்திருந்தபோதும், “இனி நான் சச்சரவு எதுவும் செய்யமாட்டேன், உன் மனம் கோணாமல் நடந்து கொள்கிறேன், என்னை விட்டு விலகிச்செல்லாதே,  காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்” எனப் பதற்றப்பட்டு தன்னிலையிலிருந்து தாழ்ந்து நடந்து கொள்வாள். ஆனால் அவன் தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டான் என்று ஆழ்மனதில் உணர்ந்துவிட்டால் வாழ்நாளுக்கும் அவனைத் திரும்பிப் பார்க்கமாட்டாள். அள்ளூர் நன்முல்லை காட்டுகிற தலைவி, அவனிடம் தனக்கு “ஊடலே இல்லை“ சொல்வது இவ்விதமான பொருள்தான்.

எங்கள் கிராமத்தில் ஒரு ஆச்சி வசிக்கிறார். அவர் தன்னுடைய இரண்டாவது பிள்ளையின் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றிருக்க, அந்த நாட்களில் அவருடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. குழந்தையோடு வீடு திரும்பிய ஆச்சி கணவனின் செயலைத் தெரிந்துகொண்டார். அதன்பின்பு ஒருபோதும் அவர் தன்னைத் தீண்ட அனுமதிக்கவில்லை. ஆனால் தினந்தோறும் காலை, மதியம் மட்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அந்த சாப்பாட்டிற்கு உரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வார். இரவு நேரங்களில் இன்னொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று விடவேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் வாழ்கிறார்கள். இவர்களுடைய இந்த ஒப்பந்தத்தின் வயது கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்த ஆச்சி எனக்கு அறிமுகம் ஆன புதிதில் அவர்களின் வாழ்வு எனக்குப் புதிராக இருந்தது. இந்த தாத்தா காலை, மதியம் வருகிறார். சாப்பிடுகிறார். பேத்திகளிடம் பேசுகிறார். மகள்களிடம் பேசுகிறார். ஆச்சியிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் சாப்பிட்ட இடத்தில் காலையில் ரூபாய் பதினைந்தும், மதியம் ரூபாய் இருபதும்   வைத்துவிட்டு எழுந்து போகிறார். அவர் சாப்பிட சாப்பாட்டுக்கு மட்டும் பணம் கொடுக்கிறார். இவர்களுக்குள்ளிருப்பது என்ன வகையான உறவு என எனக்கு குழப்பமாக இருந்தது. “இது ஏன் இப்படி ஒரு ஒப்பந்தம்? பேசாம விலகி வாழவேண்டியதுதானே?” என ஒருமுறை ஆச்சியிடம் கேட்டேன். அப்பொழுது இந்தக்கதையை ஆச்சி சொன்னார். அவரே, “பொம்பளதான் மனசாலயும்  ஒடம்பாலயும் வலுவானவ, ஆனா அது அவளுக்குத் தெரியவே தெரியாது. அத அவ தெரிஞ்சுக்க இந்த ஊரும் மனுஷங்களும் விடமாட்டாங்க. ஒருவேள அவ தெரிஞ்சுக்கிட்டானா இந்த ஊருல ஒரு ஆம்பளயும்  ஒரு தப்பும்  பண்ணமாட்டான்.” என்று சொன்னார். மேலும், “ நா அவர்மேல உசிரா இருக்கிறதுபோல ஏங்கிட்ட  அவருக்கு முழுசா அன்பிருந்தா என்ன விட்டு வேறோருத்திகிட்ட போயிருப்பாரா? இப்படி ஒரு காரியத்த ஆம்பள செய்தா பொம்பள நொந்து போவான்னு தெரியாமத் தவிக்க விட்டுட்டு போனாரில்லையா, இனி அவர் காலமெல்லாம் என்னை பார்த்து பார்த்து நொந்துபோகணும், என்னைத் தொடவே கூடாது, பேசவே கூடாதுன்னு நெனச்சேன், ஆனா இந்த ஊரு ஒலகத்தோட கண்ணுல இவர்தான் எம்புருஷன்னு தெரியணும்ல்ல.“ என்று சொன்னார். சின்னத்தாயி ஆச்சி இன்றைக்கும் ஆச்சர்யமான பெண்ணாக இருக்கிறார். இந்த ஆச்சிக்கு சங்க இலக்கியம் தெரியாது, குறுந்தொகை தெரியாது, அள்ளூர் நன்முல்லையார் என ஒரு பெண்பாற்புலவரைத் தெரியாது. ஆனால் மரபணுப்பாதையில் “தலைவனோடு ஊடலே இல்லை” என்று சொல்லி தன்னிலையில் தாழாது  நிமிர்ந்து நிற்கிற பெண்குரலை அள்ளூர் நன்முல்லையாரிடமிருந்து இவர் பெற்றிருப்பார் என்று நினைத்துக்கொள்கிறேன்.

கவிஞர் ப.கல்பனாவின் “ கிளிக்கதை” என்கிற தலைப்பிலான கவிதையில் பிறந்தவீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரு பெண், அவளுடைய அருமையைப் புரிந்துகொள்ளாதவருடன் மணவாழ்வில் இருப்பதைக் குறியீடாகக் கொண்டு எழுதியுள்ளார்.

“கிளிக்கதைக் கேட்டாள் குழந்தை
சொன்னேன்

எங்கள் வீட்டில்
முன்பொரு கிளி இருந்தது
தளிர்போல் மென்மையாய்

சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சிலநேரங்களில் பேசும்

வீடு திரும்பும்போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியில் அமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக்
கொத்திக் கிழிக்கும்

இடது ஆள்காட்டிவிரலில் சுமந்து
வலக்கையில் வாழைப்பழத்துடன் திரிவான்
கடைக்குட்டி

எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு

தங்களுடனே இருக்கட்டுமென்று
சிறகு கத்தரித்து அழகு பார்ப்பர்
மாதம் ஒருமுறை

தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித் தடுக்கி விழுவதை

“அச்சச்சோ... கடைசியில் என்னவாயிற்று”
பதறினாள் குழந்தை
“எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிருஷ்ட நாளில்
பூனை பிடித்துக் கொண்டு போனது

பிறகென்ன நடந்ததென்று
யாருக்கும் தெரியாது”.

திருமணம் என்றவுடன் தனக்கு வரப்போகிற கணவனைப் பற்றிய வண்ணவண்ண கனவுகளோடுதான் ஒரு பெண்மனம் நெகிழக் இருக்கிறாள். தான் கேட்டறிந்த கதைகளின் வழியாக காலங்காலமாக ஆணின் அலைபாய்கிற மனதினைப்பற்றி அவள் அறிந்திருந்தாலும் தனக்கு “இப்படியெல்லாம் நிகழாது” என நம்புகிறாள். பிறகு அந்த வழு தன் வாழ்விலும் நிகழும்போது முதலில் மிகவும் கலங்கிப்போகிறாள். பின்பு தளர்கிறாள். ஆனால் இதுபோன்ற உளவியல் சிக்கல்களின் காரணங்களைப்பற்றி நிதானமாக சிந்தித்து அறிந்துகொள்கிற பெண் தன்னைத்தானே உணர்ந்துகொள்வாள். அதன்பிறகு எதற்கும் கலங்காத வகையில் அவள் திடப்படுகிறாள்.

இவர் பாடியதாக 11 பாடல்கள் சங்க இலக்கியத்தில் கிடைத்துள்ளது . அகநானூறு : 46  குறுந்தொகை :32, 67, 68, 93,96, 140 157,202, 237  புறநானூறு 306

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


No comments: