Monday, 5 May 2014

இரவு - பிப்ரவரி 23





பிரியமான கதைகள் நிறைந்த இரவுகள்
எனக்கும் மருதாவுக்கும் வாய்த்தன
மருதா ஓயாமல் சலசலப்பாள்
அவளிடமிருந்தே பேசக் கற்றுக்கொண்டேன்
சிலபோது சத்தமாக
சிலபோது சன்னமாக 
எப்போதும் உற்சாகமாக
அவள் கரையில் சிறுவீடு கட்டி விளையாடியிருக்கிறேன்
எங்களின் சொற்களில் கல்விளக்குகள் அசைந்தெரியும்
நிலவொளி ஓவியமாகும்
நான்கு மாடுகளின் ஒற்றுமை
நரியின் தந்திரத்தில் சிதறிப்போன கதையில் துவங்கி
புராண இதிகாசம் வரையில்
இராமலிங்க நாடாவி மாமாவும்
செல்லையா செட்டியார் தாத்தாவும்
சுந்தரம்பிள்ளை பெரியப்பாவும் சொல்லி வைக்க
அந்தந்த வீட்டிலேயே உறங்கிப்போன நாட்களுமுண்டு
இன்று மருதாவும் வற்றிவிட்டாள்
என் மகள் என் வீட்டிலேயே தனித்துறங்குகிறாள்
தொலைக்காட்சியின் பொம்மைக்கதைகளோடு.
%

Courtesy : Painting -Ilayaraja

No comments: