பெண் –
உடல் , மனம் , மொழி :
-நல்வெள்ளியார் ..
ஒரு பெண் கடந்து செல்கிறாள் :
மகள்களின் எதிர்காலம் குறித்த கவலையில்லாத அம்மாக்கள்
இருக்கவே முடியாது. தலைமுறை இடைவெளியின் காரணமாக சிலசமயம் மகள்களோடு
முரண்படுவார்கள். மகள்களின் சுதந்திரம் அல்லது அவர்களுக்கு கிடைக்கக்கூடிய
சலுகைகள் குறித்து சிலசமயம் அம்மாக்கள் பொறாமைப் படுவார்கள். மகளுக்கான கனவுகளை
வழங்குபவர்களாகவும் அவளின் மகிழ்வுக்காக பிரார்த்தனை செய்பவர்களாகவும் அம்மாக்களே
இருப்பார்கள். என்றபோதிலும் மகளின் புதிய நடவடிக்கைகள் குறித்து கேள்வி
கேட்பார்கள். ஆனால் மகளை ஒருபோதும் சந்தேகிப்பதில்லை. ஏனெனில் ஒரு மகள் கடந்து
செல்கிற வழி என்பது அந்தக்காலத்தில், அந்தப்பருவத்தில் தானும் கடந்து வந்ததுதான்
என்பது தாய்க்குத் தெரியும்.
“பொன்நேர் பசலைக்கு உதவா…”
“சிலசமயம் மகள்களோடு முரண்பட்டாலும் அவர்களுக்குக்
கிடைக்கக்கூடிய சுதந்திரம், சலுகைகள் குறித்து முணுமுணுத்தாலும் தம் மகள்களுக்கான
கனவுகளை வழங்குபவர்களாகவும் அவளின்
மகிழ்வுக்காக பிரார்த்தனை செய்பவர்களாகவும் அம்மாக்களே இருகிறார்கள். மகளின்
நடவடிக்கைகளைக் குறித்து நாளுக்கு நூறு கேள்விகள் கேட்பார்கள் என்றாலும் அவளை
அவ்வளவு எளிதில் ஐயப்படப்மாட்டர்கள். ஏனெனில் ஒரு மகள் கடந்து செல்கிற வழி என்பது அந்தக்காலத்தில்,
அந்தப்பருவத்தில் தானும் கடந்து வந்ததுதான் என்பது தாய்க்குத் தெரியும்.”
________________________________________________________________________________________
காலைச்சூரியன் எழும்போது இருந்த தனது சிவப்பு நிறத்தை இழந்து மஞ்சளாக
மாறி அதன்பிறகு கண்களைக் கூசும்படியாக வெளிர்ந்து ஒளிரத் தொடங்கிவிட்டது. தன் வீட்டு வாசலில் கல்லடுப்புக்
கூட்டி குழிப்பணியாரம் செய்து விற்பனை செய்பவள் கணபதியம்மா. அடுப்பிலிருந்து
பரவுகிற அனல் இதமாக இருந்த குளிர்பொதிந்த அதிகாலை அரையிருட்டு
வெளுத்துவிட்டது. அவள் சுள்ளென சுடுகிற
வெயிலை தன்னுடைய உடலில் வழியும் வியர்வையாக உணரத் தொடங்கியிருந்தாள்.
வழக்கமாக அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் போடுகிற மகள் சரண்யா, இன்னும்
படுத்திருப்பது கணபதியம்மாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. “விடிந்து
இவ்வளோ நேரமாச்சு, வயசுப்பொண்ணுக்கு இன்னும் என்ன தூக்கம்”
என்று எரிச்சலும் வந்தது. நாலுமணிக்கு எழுந்து மாட்டுச் சாணம் கரைத்து வாசலில்
நீர் தெளிப்பதும், அதன் பின்பு வியாபாரத்திற்குத் தேவையான சட்னி, சாம்பார் செய்வது
கணபதியம்மாவின் வழக்கம். அம்மா எழுந்து நடமாடும் அரவம் கேட்டவுடன் சரண்யாவும்
எழுந்துவிடுவாள். வாசலில் அடுப்புப்பற்றவைக்கும் முன்பாக வாசலைப்பெருக்கி, கோலமிடுவது
சரண்யாவின் வேலை. ஏழு அல்லது எட்டு வயதிலிருந்து இதற்குப் பழகியிருந்த மகள் தூங்கிக்கொண்டிருப்பது
அம்மாவின் மனதை தொந்தரவு செய்யத்
தொடங்கிவிட்டது. “ஒருநாள் தானே, தூங்கட்டுமே” என ஒருபக்கம்
தோன்றினாலும் “இப்படி காலைப்பொழுதில் தூக்கத்திற்குப் பழகுவது பொண்ணுக்கு அத்தனை நல்லதில்லை” எனவும்
கணபதியம்மா நினைத்தாள். “நாளைக்கு கட்டிக்கொடுத்து போற வீட்டுல என்ன நினைப்பாங்க,
பொம்பளப் புள்ளைய வளத்திருக்கிற லட்சணத்தப்பாருன்னு அம்மாவைத் தானே பேசுவாங்க, தாயப்போல புள்ளைன்னு சொல்வாங்க , இவ அம்மாவும்
இப்படித்தான் காலையில தூங்குவாளான்னு சொல்ல மாட்டாங்களா,” இப்படியான கேள்விகள்
மனதுக்குள் எழும்ப அடுப்பில் வெந்து கொண்டிருந்த பணியாரத்தை திருப்பிப் போட்டபடியே வீட்டுக்குள் உறங்கும்
மகளை சப்தமிட்டு குரல் கொடுத்தாள். உள்ளிருந்து பதில் வராமல் போகவே அடுப்பை சற்று
தணித்துவிட்டு வீட்டுக்குள் எழுந்துபோனாள். உறங்குகிற மகளை தட்டிஎழுப்பி, “வீட்டிலிருக்கிற பொம்பள, காலையில
தூங்கினா பொழப்பு என்னத்துக்காகும்” என்று சப்தமிட்டு மகளை எழுப்பினாள்.
தூக்கக்கலக்கத்தோடு எழுந்த மகள் வெளிச்சதைக் கண்டு வெகுநேரம்
உறங்கிவிட்ட குற்ற உணர்வோடு அம்மாவை ஏறிட்டுப் பார்க்காமல் முகம் கழுவப் போகிறாள்.
இப்படியாகவே பல பெண்களின் காலைப்பொழுது விடிகிறது.
எவ்விதமான பொருளாதார சூழலில் அம்மா இருந்தாலும் மகளின் செயல்பாட்டின் மீது
எப்பொழுதுமே கவனம் கொண்டவளாக இருப்பாள். எனவேதான் மகளின் தூக்கம் அம்மாவை தொந்தரவு
செய்கிறது.
சொற்களினால் அதிகம் கொண்டாடப்படுவதும் பெண்தான். சொற்களினால் மிக
அதிகம் துன்புறுத்தப்படுவதும் பெண்தான். மொழியின் மூலமாகத்தான் பெண் குழந்தைகள் மீதான சமூகப்பண்பாடு ஒழுங்குபடுத்தப்படுகிறது.
பொதுவான எந்த வசைச்சொல்லும் அம்மாவை இணைத்தே உருவாகியுள்ளது. மேலும் பெண்
குழந்தைகள் மீதான பாராட்டிலும் வசையிலும் அம்மாவும்
பங்குபெறுகிறாள். எனவே தன்னுடைய வாழ்வின் துயரச்சாயல்களை மகள் மீது படிந்துவிடக் கூடாது என ஒவ்வொரு
அம்மாவும் நினைக்கிறாள். தான் சந்தித்த எந்தவொரு வசைச்சொல்லையும் தன்மகள்
சந்திப்பதை, எந்தவொரு அம்மாவும் விரும்புவதேயில்லை. அதனாலேயே சமூகம் தரவிருக்கும்
கடுஞ்சொல் ஒன்றை எப்போதும் மகளிடம் முதலில் நீட்டுகிறவளாகவும் அம்மாவே இருக்கிறாள். கவிஞர் அ. வெண்ணிலாவின் கவிதை ஒன்று,
“என்
கடுஞ்சொற்களை
மூட்டைக்கட்டி
வைத்திருக்கிறாள் மகள்
சமாதானம் வேண்டி
புன்னகைக்க
முயலும் நேரம்
கோரமுகம் கொண்ட
என்னின்
கடுஞ்சொல்லொன்றை
முன்
நீட்டுகிறாள்
புன்னகை ஒன்று
கடுஞ்சொல்
ஒன்றாய்ப்
பரஸ்பரம்
பரிமாறிக்கொண்டோம்
மூட்டையைக்
காலிசெய்துவிடும்
அவசரம் எனக்கு
புன்னைகையை
நீட்டித்துவிடும்
பதற்றம்
மகளுக்கு
பிணக்குகள் அற்ற
அன்பெனும்
பெருவெளியில் நீந்த
கடுஞ்சொல்லின்
தோலுரித்து
புன்னகையை
மீட்டெடுக்கும்
வித்தையைக்
கற்றுக்கொடுக்கிறேன்
புன்னகைக்குள்
சிறு கீற்றென
கடுமை மறைக்கும்
யுக்தியை
சொல்லிச்
செல்கிறாள் மகள்
தாயாகும் என்
கண்மணியிடம்
மகளாகி
நிற்கிறேன் நான்.”
இளம்பருவத்தின்
படிவாசலில் இருக்கிற மகளுக்கும், சமூகத்தில்
பெண்ணின் இருப்பை உணர்ந்த அம்மாவிற்கும் இடையே போராட்டமும் அன்பும்
பதற்றமுமான ஒரு கதவொன்று திறந்திருக்கும். தன்னுடைய இளமைக் காலத்தை மகளின்
பருவத்தோடு இணைத்து புதிய கதையொன்றை எழுதிக்கொண்டியிருக்கும் மனம் அம்மாவிடம்
அமைந்திருக்கும். அம்மாவின் கதைக்குள் அடங்காத கனவொன்றை காணத் தொடங்குவாள் மகள்.
சமூகம் அறிமுகம் செய்திருக்கிற
துயரங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் வாழ்வின் வெம்மையைப்
பத்திரப்படுத்தியிருக்கும் பெண்ணொருத்தி தன்னுடைய இளம்பருவத்து மகளை தாயாகவும்
தோழியாகவும் மகளாகவும் ஒருசேர உணரவும் செய்கிறாள் என்பதை இக்கவிதையின் வழியாக
உணரமுடிகிறது.
பெண்குழந்தையை
பெற்றிருக்கும் முந்தின தலைமுறை அம்மாக்கள், ”மடியில் நெருப்பைக்
கட்டிக்கொண்டிருப்பதாகச்“ சொல்வார்கள். இளம்பருவத்திலுள்ள மகளின் மனதில் ஏற்படுகிற
மாற்றங்களை அறியவியலாத அம்மாக்கள் எந்தக்காலத்திலும் இருக்கிறார்கள். காரணமின்றி
மௌனத்திற்குள் அமிழ்ந்துவிடுகிற மகள் பற்றிய அறியாமையில் மகளுக்காக கோவிலுக்கு
நேர்த்திகடன் வைப்பது, சாமி பார்ப்பது, குறி கேட்பது என்றிருக்கும் அம்மாக்களை
இன்றைக்கும் காணமுடிகிறது. மகளுக்காக சாமியிடம் குறி கேட்கும் நிகழ்வு நேற்று, இன்று
நடக்கின்ற செயல் அல்ல, சங்ககாலத்திலிருந்து நடைபெறுகிறது. தோழி தலைவியிடம்
சொல்வதாக அமைந்த நல்வெள்ளியாரின் நற்றிணைப் பாடல் பாடல் ஒன்று,
“பெருங்களிறு
உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல்செல் லாது
நெய்தல் பாசடை புரையும் அஞ்செவிப்
பைதலங் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் ணுறுநரின் வருந்தி வைகுங்
கானக நாடற், “கிதுவென” யானது
கூறின் எவனோ தோழி! வேறுணர்ந்து
அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி,
வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
அன்னை அயரும் முருகுநின்
பொன்னேர் பசலைக் குதவா மாறே.”
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல்செல் லாது
நெய்தல் பாசடை புரையும் அஞ்செவிப்
பைதலங் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் ணுறுநரின் வருந்தி வைகுங்
கானக நாடற், “கிதுவென” யானது
கூறின் எவனோ தோழி! வேறுணர்ந்து
அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி,
வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
அன்னை அயரும் முருகுநின்
பொன்னேர் பசலைக் குதவா மாறே.”
“தோழி! தலைவனைப் பிரிந்த உன்னுடைய மேனியிடத்துக் பிரிவுத்துயரினால் வந்துள்ள வேறுபாட்டினை அன்னையும் கண்டனள். ஆனால் அது
வேறோன்றாலே வந்ததெனவும் அவள் கருதினாள். எனவே தெய்வத்தினால் அறியப்படும் “கழங்கு”
அம்மாறுபாட்டைக் குறித்துக் காட்டும் என்பதால், குறி பார்க்கவும் நினைத்தாள். அந்த
நினைவோடு ஆட்டுக்குட்டியை அறுத்துப் பலியிட்டு, முருகனை வணங்கினாள். எனினும்
இச்செயல் உன்னுடைய பொன்னையொத்த பசலை நோய்
தீர்வதற்கு உதவாமற் போதலைக் கண்டாள். அதன்
பின்னர் பெரிதும் கவலையுற்றவள் ஆயினாள்.
கரிய பெண்யானை ஒன்று, தனக்குரிய
பெருங்களிற்றை புலியானது கொன்றதைக் கண்டது. அதனால் வாடச்செய்யும் பிரிவு நோயில் வருத்தமடைந்த பெண்யானை, தான் நின்ற
இடத்தினின்றும் அகன்று இயங்குவதற்கும் இயலாததாய் ஆயிற்று. நெய்தலின் பசுமையான இலையைபபோல
அழகிய காதுகளையுடையதும், தகப்பனை இழந்து துன்புற்றிருந்ததுமான தன் கன்றினைத் தழுவிக்
கொண்டது. திடுமென வந்தடைந்து விரைவாக ஆற்றுதற்கரிய புண்ணுற்றார் ஒருவரைப்போலப்
பெரிதும் வருத்தமுற்று அவ்விடத்திலேயே நிற்பதுமாயிற்று. அத்தன்மையினையுடைய கானகநாடன்
நம் தலைவன் ஆவான். அவனுக்கு ‘நம் நிலைமைதான் இத்தன்மையது ‘என்று அதனைக் குறித்துக்
கூறினால் எதுவும் குற்றமாகுமோ?” என்கிறாள் தோழி.
நல்வெள்ளியாரின்
இந்தப்பாடலில் தலைவனை திருமணத்திற்கு விரைவு படுத்துகிற விதமாக தோழியின் கூற்று
அமைந்திருப்பதாக உரையாசிரியர்கள் குறிப்பு இருக்கிறது. பெண்யானை தன்னுடைய கன்றை
தழுவிநிற்கும் காட்சியை, தலைவி தன்னுடைய
கன்று போன்ற நாணத்தைத் தழுவிக்கொண்டு நிற்கிறாள் எனக் கூறுகிறார்கள். பாடலில்
வருகிற இவ்உவமையில் காட்டப்படுகிற காட்சியின் வழியாக இப்பாடலை அணுகினால் வேறு
ஒன்றையும் உணரமுடியும். திருமணத்தின் பொழுது கொடுத்த நகை, பணம், சீர்வரிசைகளின் பற்றாக்குறை
காரணமாகவோ அல்லது மனவேறுபாட்டினாலோ தலைப்பிள்ளைப் பேற்றிற்காக அம்மா வீட்டுக்கு
வந்த பெண், கணவன் வந்து அழைத்துச்
செல்லாததால் அம்மாவீட்டிலேயே தங்க நேர்ந்த கதைகள் நம்மிடையே இருக்கின்றன. இப்படியான
மகளின் நிலையில் அம்மாவின் மனம் படுகிற துயரம் அளவில்லாதது என்பதையும் இப்பாடலின்
காட்சிவழி அறியலாம்.
திருமணத்திற்குப்
பிறகு கணவன் வீட்டில் சமூகம் விதித்திருக்கும் வரையறைகளுக்கு உட்பட்டு மகள் வாழவேண்டுமே
என்கிற கவலை அம்மாவுக்கு எப்போதும் இருந்துகொண்டே
இருக்கிறது. எனவே மகளையும், மகள் சார்ந்த
சூழலையும் அம்மா நினைத்துக்கொண்டே இருப்பாள். பொதுவாக பெண்ணின் வாழ்வென்பது திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் தலைவனுக்காகக் காத்திருப்பது
என்பதாக ஆகியுள்ளது. இதனை அம்மாவும் அறிவாள். இதுவே அம்மாவுக்கும் மகளுக்குமான உறவை
பல சமயங்களில் இயல்பாக்குகிறது. தன்னுடைய பால்யத்திலும் இளமையிலும் நிறைவேறாத
விருப்பங்களை நினைவு கொள்கிற ஒவ்வொரு அம்மாவும் மகள்களின் எண்ணங்களை நிறைவேற்ற
முயலுகிறார்கள். எனவே எந்தச்சூழலிலும் மகளின் மகிழ்வையே அம்மாவின் மனம்
சிந்திக்கிறது.
ஒரு பருவத்தில் அம்மாவையும் பெண் குழந்தையையும் தனித்துப் பார்க்க
இயலாது. கண்விழித்தது முதல் அம்மாவின் புடவை முந்தானைக்குள் முகம் புதைத்துக்கொண்டு
அலைகிற காலம் அது. இளமை அரும்பத் தொடங்கி தன்னை உணர தொடங்கியிருக்கும் இன்னொரு
பருவத்தில் அதற்குமுன்பு வரையில் அம்மாவின் வாசத்தை நுகர்ந்தபடி படுத்துறங்கும்
மகள், தனித்த அறையைத் தேர்ந்தெடுப்பாள் அல்லது அம்மாவுக்கு எதிர்புறம்
திரும்பிப்படுத்து உறங்குவாள். தனிமையில் கண்ணாடி முன்பாக அதிகநேரம் செலவிடுவாள். உணவின்
அளவைக் குறைப்பாள். சாப்பிடுவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொள்வாள். அப்போது
சாப்பாட்டின் ருசியிலிருந்து நகர்ந்து அவள் மனம் மட்டும் கனவில் லயித்திருக்கும்.
நீண்டநேரம் குளிப்பாள். அம்மாவைக் கூட குளியல் அறைக்குள் அனுமதிக்கமாட்டாள்.
எப்பொழுதும் பாட்டுக் கேட்பாள் அல்லது வாய்க்குள் முணுமுணுத்தபடி பாடுவாள். பருவமாறுதலினால்
ஒழுங்கமைவுக்கு உட்படாத இதுபோன்ற சின்னச்சின்ன செயல்பாடுகளை கடந்துதான்
எந்தப்பெண்ணும் வளர்கிறாள்.
அம்மாவுக்கும் மகளுக்கும் இடையிலான
உறவு அவர்களிடையே ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வாசலைத் திறந்து வைக்கிறது.
பதின்பருவத்தில் மகள் இருக்கும் அம்மாக்கள் ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நாற்பதுகளில் இருக்கும் அம்மக்களுக்கு அவர்களுடைய இளமையின் நினைவுகளை மீட்டெடுத்துக்
கொள்ள மகள்களே உதவுகிறார்கள். சொல்லிவிட இயலாத பரவசத்துடன் தன் மகளைக் காணுகிற
அம்மாக்களும் தங்களுடைய தளர்ந்திருக்கும் மனதைக் களைந்து வளரிளம் பருவநாட்களின் மகிழ்வை
ஒருகணமேனும் நினைத்துக் கொள்வார்கள். மகளின் இளமைக்காலத்தை தன்னோடு ஒப்பீடு செய்து
பார்ப்பதன் வழியாக மகளது இளமையின் மகிழ்வை அவளின் வாழ்நாள் முழுக்க நீட்டித்துக்
கொடுக்கவும் விழைகிறாள்.
“இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்” என்கிற எழுத்தாளர்
அசோகமித்ரனின் சிறுகதை ஒன்று உள்ளது. இந்தக்கதையில், “பிரபலமான திரைப்பட இயக்குனர்
ராமச்சந்திரன் என்பவரின் இசைக் கச்சேரியை கோதண்டராமசுவாமி கோயிலில் வைத்து
இந்திராவும் அவரது குடும்பத்தினரும் கேட்பார்கள். அப்போதே அவள் அம்மாவிடம் ' நான் கட்டாயம் வீணைக் கற்றுக்கொள்ள வேண்டும்' எனக்
கேட்பாள். அதிலிருந்து இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தீராத ஆசை
ஏற்படும். அதன் தொடர்ச்சியாக தோழிகளிடம் வீணை வகுப்பில் சேர்வது பற்றி
விசாரிப்பாள். மாதந்தோறும் குடும்பச் செலவிற்கே சிரமப்படுகிற நிலையிலிருக்கும்
அவள் அம்மா முதலில் பாட்டு வாத்தியாருக்கான சம்பளத் தொகையைக் கேட்டு
அதிர்ச்சியடைவாள். அதைப்பார்த்த இந்திரா, “வீணையெல்லாம் வாங்க வேண்டியிருக்கும்
ரொம்பச் செலவாகும்” என்று எண்ணி வீணை வகுப்பு வேண்டாம் என்று மறுத்துவிடுவாள். ஆனால்
அம்மா என்ன நினைத்தாளோ மகளை வீணை
வகுப்பிற்கு போகச்சொல்லி அனுமதிப்பாள். அந்த இரவில் இந்திராவுக்கு வெகுநேரமாக
தூக்கம் வராமல் புரண்டுபடி ஒருமுறை
அம்மாவை அணைத்தவாறு படுப்பாள். அப்போது அம்மாவின் உடம்பு குலுங்கிக் கொண்டிருப்பதை
இந்திரா உணர்வாள். அம்மா சத்தமே இல்லாமல் அழுவதற்கு எப்படிக் கற்றுக் கொண்டாள்
என்று இந்திரா நினைத்தாள்” என்பதாகக் கதை முடிந்திருக்கும். தான் கற்றுக்கொள்ள
இயலாத கலையொன்றை மகளுக்குக் கிடைக்க வழிசெய்கிற அம்மாவாகவே இந்திராவின் அம்மாவை
உணரமுடிகிறது.
-
இவர் எழுதியதாகக் கிடைத்துள்ள மொத்தப் பாடல்கள் : 4
அகநானூறு : 32 குறுந்தொகை : 365 நற்றிணை : 7,47
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment