பெண் –
உடல் , மனம் , மொழி :
-காவற்பெண்டு ..
ஒரு
பெண் தன்னைக் கொண்டாடுகிறாள்:
பல சமயங்களில் தன்னுடைய உடல் பற்றிய புரிதல்
பெண்ணுக்கு இருக்கிறது. இந்தஉலகம் முழுவதையும் தானே பெற்றுக் கொடுத்திருப்பதாகக்
கருதுகிறாள். உயிர்களைப் பல்கிப்பெருகச் செய்கிற பெண்ணின் மனமானது தன்னுடைய கருவறையைக்
கொண்டாடுகிறது. முலைகளைத் தாங்கியிருப்பதே இந்த உலகுக்கு ஊட்டுவதற்குத்தான் என பெண் நம்புகிறாள். எனவே பெண்
தன்னுடைய உடலை கொண்டாடுகிறவளாக இருக்கிறாள்.
“புலி சேர்ந்து போகிய கல்அளை போல…”
“பல சமயங்களில் வலியும் வேதனையும் தருவதாக இருந்தாலும் பெண்
தன் உடலையோ அது தாங்கியிருக்கும் கருவறையையோ பாரமாகக் கருதுவதில்லை. இந்த மண் மீது
உள்ள உயிர்கள் அனைத்தையும் தானே பெற்றெடுத்திருப்பதாகக் கருதுகிறாள். அவற்றிற்கு
ஊட்டுவதற்காகவே முலைகள் கொண்டிருப்பதாக எண்ணுகிறாள். எனவேதான் ஒரு பெண் தன் உடலை
நம்புகிறவளாகவும் அதை நேசிக்கிறவளாகவும் இருக்கிறாள்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணுடல்
இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. பூப்பதும் கனிவதும் பல்கிப் பெருகுவதும்
இயற்கையின் செயல் என்றால் பெண்ணும் அப்படியே. மனிதகுலம் தோன்றி தாய்வழிச் சமூக அமைப்பாக
இருந்தபோது பெண்ணின் கருத்தரித்தலும்
பாலூட்டுதலும் ஆணுக்கு மர்மமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்திருக்கிறது. ஆனால்
தன்னுடைய மாதாந்திரப் பெருக்கும் பேறுகாலக் குருதியும் பெண்ணை
அச்சப்படுத்துவதில்லை. புதிய உயிர் ஒன்றை பிரசவிக்கையில் உடலின் வலியைத் தாங்கி
பரவசப்படுகிறவள் பெண். ஓர் உயிர் உருவாகி வளர்கிற காலத்தின் மதிப்பினை அவள் அறிவாள்.
எனவே போரினை விரும்பாதவளாகத்தான் பெண் இருப்பாள். சங்ககாலத்தில் தாய்வழிச் சமூக
எச்சங்கள் மிச்சமிருப்பதை சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடல்களின் வழியே
உணரமுடியும்.
சங்ககாலத்தை
காதலும் போரும் இணைந்திருந்த வாழ்வாக அறிகிறோம். அருகிலிருக்கும் இன்னொரு இனக்குழுவின் நிலங்களை
அபகரிக்கவோ தங்களுடைய நிலங்களைப் பாதுக்காக்கவோ போரிட வேண்டிய அவசியம் ஒவ்வொரு
இனக்குழுவின் தலைவனாக இருக்கும் ஆணுக்கு இருந்தது. நிலத்தின் மீது ஆதிக்கம்
கொண்டிருந்த ஆணின் மனம், கலப்பற்றதாக தனது சந்ததி தொடரவேண்டும் என்ற விருப்பத்தின்
காரணமாக பெண்ணிடமிருந்து பிறக்கும் குழந்தை மீதும் கவனம் கொள்ளத் தொடங்கியது. அதன்விளைவே
பெண்ணின் உடல்மீது செலுத்தப்படுகிற அதிகாரமாக “கற்பு” என்கிற சொல் உருமாறியது. தன்னுடைய
வாரிசாக பிறக்கும் குழந்தைதான் அவன் சேர்த்து வைத்த நிலத்திற்கு உரிமையாளனாக
இருக்க வேண்டுமென ஆண் விரும்புகிறான். தேடிச் சேர்க்கும் நிலத்தைக் காப்பதற்காக
ஒவ்வொரு ஆணும் போரிட வேண்டிய அவசியமும்
இருந்தது. எனவே அந்த தாயும் மகனின் மன வலிமையையும், உடல் வலுவையும் வளர்ப்பவளாக
இருக்க வேண்டியதாயிற்று. அதனால்தான் பல சங்கப்பாடல்களில் பெண் போரினை விரும்புவளாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போரினால்
ஏற்படுகிற இடர்பாடுகளை நேரடியாக அனுபவிப்பவள் பெண்ணாகத்தான் இருக்கிறாள். எனவே
நிலத்தை விரிவுபடுத்த வேண்டிய போர்களை ஒரு பெண் விரும்பியிருக்க மாட்டாள். அகமும்
புறமும் எனப் பகுக்கப்பட்டிருக்கும் சங்கப்பாடல்களில் பெரும்பாலும் பெண்ணின் மனதை அகம்
சார்ந்த பாடல்களில்தான் அறிய இயலும். என்றபோதிலும் புறப்பாடல்களிலும் பெண்ணுடல்
பற்றிய தன்னுணர்வோடு அகம் இழையோடி இருப்பதைக் காணலாம்.
காவற்பெண்டு என்கிற
பெண்பாற்புலவரின் பாடல் ஒன்று.
“ சிற்றி
னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி, யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. “
இந்தப்பாடலுக்கு இரண்டுவிதமான உரைகள்
கிடைத்துள்ளன. ஒன்று, இந்தப்பாடல்
ஆண்பிள்ளையின் வீரத்தைப் பாடுவதாகக் கருத்தில் கொண்டு “ஏறான்முல்லை” என்கிற
துறையின் கீழ் புறப்பாடலாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கக்கூடிய
நாட்டில் இன்னும் போருக்கு ஆட்கள் தேவைப்படுகிற நிலையில் அரசனிடமிருந்து இந்த
வீட்டிலிருக்கும் இளைஞனுக்கும் அழைப்பு வந்ததாகக் கொண்ட ஒரு காட்சி, தாய் ஒருத்தி
குடிசையில் வசித்து வந்தாள். ஒருவன் அவள் வீட்டுக்கு வந்து அந்த வீட்டின் தூணைப்பற்றி
நின்று ” உன் மகன் எங்கே?” என்று கேட்கிறான். அப்போது அவள் சொல்கிறாள். ”என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனை பெற்றவயிறு,
புலி தங்கிச்சென்ற குகைபோல இங்கே இருக்கிறது. அவன் கட்டாயமாக போர்க்களத்துக்கு,
தானே வந்து நிற்பான் நீ செல், என்று சொல்வதாக உரை அமைந்துள்ளது.
இன்னொன்று, காதலரைப் பிரிந்த
காதலி, காதலனின் வீடேறித் துணிவாக அவன் தாயிடம், ‘என்னைப்பிரிந்த
உன்மகன் எங்கே’ என்று கேட்கிறாள்.
எனது
சிறியவீட்டின் தூணைப் பிடித்தவாறு உன்மகன் எங்குளான்? என்று கேட்கின்றாய்; அவன் எங்குள்ளானோ எனக்குத் தெரியாது. ஆயினும்,
புலி தங்கியிருந்து பின்னர் போகிய மலைக்குகை போல, அவனைச்சுமந்து பெற்ற வயிறும் இதோ! அவன் போர்க்களத்தில் தான் இருப்பான்
என்று அவன் தாய் பதில் சொல்கிறாள் என்று புறப்பாடலில் அகவுணர்வுடன் உரை
அமைக்கப்பட்டுள்ளது.
“ஒரு
பெண்ணின் தந்தை போர்க்களத்தில் முன்னொருநாள் யானையை வென்று இறந்து விடுகிறான். அவளுடைய
கணவன் பின்னொருநாள் பசுக்கூட்டத்தை வென்றபின்பு இறந்து போகிறான். இப்போது போர்முரசு
கேட்கிறது. உடனே தன்னுடைய சின்னஞ்சிறு
மகனை, வெள்ளாடை உடுத்தி, வேலினைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்புகிறாள்” என ஒக்கூர்
மாசாத்தியார் எனும் புலவர் பாடியுள்ளார். மேலும் “முதியவள் ஒருத்தி தன்னுடைய மகன்
போர்க்களத்தில் புறமுதுகிட்டான் எனக் கேட்டு, அவன் அவ்வாறு செய்திருந்தால்
அவனுக்குப் பாலூட்டிய என்னுடைய முலையை அறுத்தேறிவேன்“ என்று வாளுடன் ஒருதாய் போர்க்களம்
செல்கிறாள். அங்கே மார்பில் பட்டக்காயத்துடன் இறந்து கிடக்கும் மகனைப் பார்த்து
அவனைப் பெற்ற நாளிலும் அந்தத்தாய் மகிழ்ந்ததாக” காக்கைப்பாடினியார் பாடுகிறார். இந்த
இரண்டு புறப்பாடல்களுக்கு வலுச் சேர்ப்பதுபோல காவற்பெண்டின் பாடல் அமைந்துள்ளது. முதலாவது
உரையின் வழியாக பெண் போரினை விரும்புகிறவளாக இருக்கிறாள்.
போர்களை
விரும்புகிறவளாக பெண் இல்லையென்றபோதிலும் ஒருவகையில் அவள் மனதாலும் உடலாலும் வலிமையானவள்.
எனவே எப்பொழுதும் ஆண்களை வழி நடத்துகிறவளாக இருக்கிறாள். “கலங்காதே, அச்சமடையாதே,
வெற்றிபெறு” என வீர உணர்வுகளை ஆண் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கிறாள். ஒரு ஆண் நிலத்தையும் குடும்பத்தையும் காக்கத்
தேவையான உடல்வலிவையும் மனவலிவையும் ஊக்கப்படுத்துகிறவளாக பெண் அவனுடனிருக்கிறாள்.
இரண்டாவது
உரையின் வழியாக இந்தப் பாடலைத் தொடர்ந்தால், புறப்பாடலுக்குள் இழைந்திருக்கும் அக
உணர்வை உணரமுடியும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் தன்னுடைய முறைமாமன் உறவில்
இருக்கும் ஆணைப் பற்றி அவனுடைய முதிய தாயிடம் வம்பு செய்கிற பெண்களைக் காணலாம். “உம்மகன்
எங்கே காணோம், வெட்டியா ஊர் சுத்த போயிட்டாரா, எப்படி இப்படி பொறுப்பில்லாம ஆம்பளப்
புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க” என அவன் மீதுள்ள அன்பை மெல்லிய புன்னகையில்
மறைத்துக் கொண்டு கேட்கும் இளம் பெண்களுண்டு. அவர்களுக்கு “அட போடி, நான் ஆம்பள சிங்கத்தைப்
பெத்துவச்சிருக்கேன், அவன் எங்க போனாலும் ராஜா மாதிரி தன்னோட பேரை நிலைநிறுத்தித் திரும்பி வருவான்,
அவனுக்கென்ன, வீரன் எம்புள்ள“ என பதிலுக்கு எதுவுமே புரியாதது போல பேசுகிற
தாய்மார்களும் உண்டு. முற்காலத்தின் தொடர்ச்சியாகவே தமிழ் திரைப்படங்களில் கதாநாயகி,
கதாநாயகனின் அம்மாவிடமே அவர் மகனைப் பற்றி விசாரிப்பது போல காட்சிகள்
அமைக்கப்படுகின்றன.
தந்தைமைச்
சமூகத்தில் ஆண்குழந்தை பெற்றுக் கொள்வதென்பது அந்தப்பெண்ணுக்கு மிகப்பெரிய சமூக
அங்கீகாரமாக இருக்கிறது. இன்றும்கூட பலரும் ஆண்குழந்தை பெற்றுக்கொள்கிற விருப்பத்தை
இரகசியமாக வைத்திருக்கிறார்கள். இறந்தவுடன் கொள்ளிபோடவும், அதன்பிறகு தன் பெயர்
சொல்லவும் ஒரு ஆண்பிள்ளை வேண்டாமா என
வெளிப்படையாக சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
எனக்குத்தெரிந்த
பெண் ஒருவருக்கு இரண்டாவதும் பெண்குழந்தை பிறந்திருந்தது. குழந்தையைப் பார்க்க
அரசுமருத்துவமனைக்கு நான் சென்றிருந்த பொழுது செவிலியர் அந்தப்பெண்ணிடம் இரண்டு
பெண்குழந்தைகளுக்கான அரசின் சலுகைத் திட்டங்களைப்பற்றிச் சொல்லி குடும்பக்கட்டுபாட்டுச் சிகிச்சைக்கு வற்புறுத்திக்கொண்டிருந்தனர்.
இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்தததால் மாமனார் வீட்டைச்சேர்ந்த யாரும் குழந்தையைப்
பார்க்க வரவில்லை. “அடுத்த குழந்தையாவது ஆணாகப் பிறந்து, தாத்தா பேர் விளங்க
வேண்டாமா” என்று சொல்லி, கருத்தடை செய்து
கொண்டால் வீட்டுக்கு வரவே கூடாதென மாமியார் கூறியதாக அந்தப்பெண் செவிலியரிடம்
சொல்லிக்கொண்டிருந்தார். கணவருடைய வருமானத்தில் குடும்பத்தை நடத்த இயலாத
நிலையிலுள்ள எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். என்னைப் பார்த்தவுடன் “பெரிய
ராஜராஜசோழன் பரம்பரை, தாத்தா பேர் சொல்ல ஆம்பள புள்ள வேணாமான்னு கேக்குறாங்க” ன்னு
சொல்லி அழ ஆரம்பித்தார்.
இந்தப்
பெண்ணைப்போல அரசு வழங்குகிற சலுகைகளுக்காகக்கூட கருத்தடை செய்து கொள்ளாத பல
பெண்கள், மூன்றாவதும் நான்காவதும் பெண்ணாகப் பெற்றுக்கொள்கிற கதைகளையும்
பார்க்கமுடிகிறது.
ஒரு
பெண் கருவுற்றவுடன், ஆண் பிள்ளையை அந்தப்பெண் பெற்றுத் தரவேண்டும் என்றுதான்
அவளுடைய உறவினர்கள் அனைவருமே விரும்புகிறார்கள். ஆனால் ஒரு தாயின் விருப்பமாக
கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் கவிதை,
“இன்னும்
பிறக்காத
உனக்கு
என்
முத்தங்கள்.
உன்னுடன்
வீட்டுப்
புல்வெளியில்
விளையாடி,
கவிதைகள்
வாசித்துக் காட்டி,
கதைகள்
சொல்லி,
நட்சத்திரம்
காட்டி
பூரித்துவிட்டேன்
மனசில்,
நீயும்
கையசைத்து,
கால்
நீட்டி,
உடல்
முறித்து,
என்
வயிற்றுள்
உன்
பரபரப்பைக் காட்டுகிறாய்.
வெளி
உலகம்
பூவும்,
புல்வெளியும்,
ரத்தமும்
முட்களுமாய்.
அதுவும்
நீ பெண்ணாயிருந்தால்?
என்றாலுமென்ன;
எப்போதுமிருக்கும்
என் முத்தங்கள்.”
பெண்
குழந்தைகளைக் கொண்டாடுகிற மனதை கவிஞர் சுகந்தி சுப்ரமணியம் இவ்விதமாகத் தொடங்கி
வைத்திருக்கிறார். பெண்குழந்தையை விரும்புகிற இந்தக்கவிதையை எழுதுவதற்கு மிக நீண்டதூரத்தையும் வலிகளையும் பெண் கடந்து
வந்திருக்கிறாள்.
ஒருபெண்
தன் வாழ்நாளில் எத்தனையோ வலிகளைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. குடும்பத்தலைவர்களாக
இருக்கும் ஆண்களின் பொறுப்பற்ற தன்மையை எதிர்கொள்ளவேண்டிய துயரம், அவ்வலிகளில்
முதன்மையான ஒன்று. அப்படிப்பட்ட ஒரு விட்டேத்தியான ஆணை எதிர்கொள்ளும் பெண்
ஒருத்தியைப்பற்றி எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் எழுதிய ஒன்று உள்ளது. “ஒரு
காரும் ஐந்து நபர்களும்” என்கிற சிறுகதையில், “பெண் குழந்தை ஒருத்தி குடும்பத்தைத்
தாங்குகிற விதமாக வளர்ந்து நிற்பதைப்பற்றி எழுதியிருக்கிறார். நீலராஜ் என்பவர்
குடும்பத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாதவராகவும் இன்னொரு பெண்ணோடு உறவு
வைத்துக்கொண்டிருப்பவராகவும் இருப்பார். கடனாக பணம் கேட்பதற்காக தங்கை வீட்டிற்குச் சென்று, கேட்க மனமின்றி
காரில் திரும்பி வருவார். குடும்பத்தினர் அனைவரும் அவரோடு அந்தக்காரில்
வருவார்கள். ஒருவர் மற்றவரைப்பற்றி மனதிற்குள் குறைபட்டுக் கொண்டிருக்க நீலராஜ்
தற்கொலை செய்துகொள்வதுபற்றி நினைத்துக்கொண்டே வருவார். காரினை சரியாக
ஒட்டவில்லையென எல்லோரும் திட்ட ஆரம்பிக்க அவருடைய மகள் நீலச்செல்வி, “அப்பா காரை
நிறுத்து, புதுசா பழகுறவன் மாதிரி ஓட்டுற, இறங்கு, நிறுத்திவிட்டு இறங்கிவா, நான்
ஓட்டுறேன்,” என்று சொல்லி அப்பாவிடமிருந்து காரை வாங்கி ஓட்ட ஆரம்பிப்பாள். கார்
நிதானமாக ஓட நீலராஜ் தற்கொலை மனநிலையிலிருந்து மீண்டு கொண்டிருப்பார்” என்பதாக கதை
முடிந்திருக்கும். இந்தக்கதையில் கார் என்பது குடும்பத்தின் குறியீடாக இருக்கிறது.
பொறுப்பற்ற செயல்களினால் ஆண் தடுமாறும் நிலைகளில் பெண்ணே குடும்பத்தின் பொறுப்பினை
ஏற்கிறாள் என்பதாக இக்கதையைப் புரிந்துகொள்ளலாம்.
காவற்பெண்டு
எழுதியுள்ள சங்கப்பாடலை வேறுவிதமாக பார்க்கலாம். ஆண்பிள்ளையைப் பெற்றுக்
கொண்டிருப்பதற்காக அந்தத்தாய் பெருமிதம் அடைகிறவளாகப் பார்க்க வேண்டியதில்லை. வேறு இனக்குழுவோடு போருக்கு செல்லும் வீரமகனைப்
பெற்ற தாயாகவும் நினைக்க வேண்டியதில்லை. அவள் தன்னுடைய உடலைக் கொண்டாடுகிறவளாகப்
பார்க்கலாம். சங்கச் சமூகத்தில் நிலம் சார்ந்த தொழில் செய்வதும், நிலத்தைக்
காப்பதும் இயல்பு என்பதால் ஒரு ஆண் உடல்வலுவுடன் இருப்பதும், போர் செய்வதும்
ஆச்சர்யம் ஒன்றுமில்லை. சங்கப்பாடல்களில் சுட்டப்படுகிற பெண்கள் தங்களுடைய உடல்
பற்றிய தன்னுணர்வு மிகுந்தவளாக இருந்திருக்கிறாள் என்றுதான் தோன்றுகிறது. மகன்கள்
பற்றிய பாடல்களே காணப்படுகிற சங்கப் புறப்பாடல்களில், தன்னுடைய கருவறை புலி
தங்கிச் சென்ற குகை போல இருப்பதாக ஒரு பெண் சொல்வதும், அவனுக்கு ஊட்டிய முலையை
அறுத்தெறிவேன் என இன்னொரு பெண் சொல்வதும் தன்னுடல் பற்றிய கவனம் அகப்பாடல்களில்
மட்டுமல்ல புறத்திணையைப் பாடும் பொழுதும்
சங்கப் பெண்பாற் புலவர்களுக்கு இருந்திருக்கிறது. அகத்தில் பசலை படர்ந்த அல்குலைப்
பாடுவது போலவே புறத்தில் பெற்றுத் தருவதையும், பாலூட்டி வளர்ப்பதையும் பாடுகிறாள்.
கவிஞர்
மாலதி மைத்ரியின் “பூமாதேவி” என்றொரு கவிதை,
“மணல்வெளியில்
காற்றில் தீற்றலென
அம்மாவின்
அடிவயிற்றுக் கோடுகள்
குஞ்சு
நண்டின் தடங்களைத் தரித்த
மேல்
வயிறு
பூஞ்சை
ரோமங்களை
வருடியபடியே
கேட்கிறாள்
‘அம்மா
எப்படி
நீ
பெத்து
உயிர் பிழைச்ச’
‘இது
என்ன அதிசயம்
இந்த
உலகத்தையே
உன் பாட்டிக்கு
பாட்டிதான் பெத்தாள்’
கோழி
முட்டை இடுவதைப் போல
பாட்டி
உலகை இடுவதை
நினைத்தபடி
உறங்கிவிடுகிறாள் சிறுமி
கனவில்
பனிப்புயலும்
அலைச் சீற்றமும்
அருவியின்
குதூகலமும் கானகக் கொண்டாட்டமும்
எரிமலையின்
பெருவெடிப்புமாகிறாள்.“
ஒரே ஒரு பாடல் புறநானூறு பாடல் கிடைத்துள்ளது . பாடல் எண் 86
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment