பெண் –
உடல் , மனம் , மொழி :
-பொன்முடியார் ..
ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
“ஈன்று புறந்தருதல்
என்தலைக் கடனே…”
“தாய் ஊட்டுகிற முதல்
சுவையே பின்னாளில் ஒரு குழந்தை உயிர்த்திருப்பதற்கான வாழ்வின்
மீதான சுவையாக மாறுகிறது. ஆணின் வாழ்வில் நிகழ்கிற அத்தனை செயல்பாடுகளுக்கும்
ஆதாரமாகப் பெண்தான் இருக்கிறாள். ஒரு ஆண்
மன்னனாக நல்ல ஆட்சி நல்கவும், ஒரு ஆண் வீரனாக தன்னுடைய இனத்தையும் நாட்டையும்
காக்கவும், ஒரு ஆண் சான்றோனாக சமுதாயத்தில் உயர்வு பெறவும் ஒரு பெண்ணே
வழிப்படுத்துகிறாள்.”
_______________________________________________________________________________________
பெண் என்பவள் குடும்பத்தின் ஆதாரசக்தியாக எவ்விதம் இயங்குகிறாள் எனக்கேட்டால்
ஆண்கள் ஒருவகையிலான பதில்களையும், அதே
கேள்வியை பெண்ணிடம் கேட்டால் வேறுவிதமான பதில்களைக்
கண்டடையலாம். அநேகமாக ஆண்களின் பதில்கள் கிண்டலாக இருக்கக்கூடும், அதே சமயம் பல பெண்கள்
தாங்கள் எவ்விதம் சமூகத்தின் ஆதாரமாக இருக்கிறோம் என்பதைச் சொல்லத் தெரியாமல்
இருப்பார்கள்.
வரலாறு நெடிகிலும் சமூகப்பண்பாட்டுத்
தளத்தில் பெண்களின் புழங்குவெளி என்பது குறுகலான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.
பெண்ணின் இயக்கம் எப்பொழுதும் ஆணைச் சார்ந்தும் அவனது நிழலிலேயே தனது பாதுகாப்பை உணரும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. இது உருவாக்கப்பட்ட யதார்த்தமேயன்றி உண்மை ஒன்றல்ல. பெண் எந்தச் சமூகத்திலும் அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருந்திருக்கிறாள் என்பதைப் பல்வேறு தொன்மங்கள் வெளிப்படுத்துகின்றன. பெண்ணைச் சுற்றிலும் பின்னப்படும் வேலிகள்கூட அவள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை அடியொற்றியதே. நிலம் எவ்வாறு ஒரு குடியானவனுக்கு ஆதாரமாகத் திகழ்கிறதோ அதைப்போல நாகரிகமடைந்த எந்த ஒரு சமூகத்தின் வளமைக்கும், மேம்பாட்டிற்கும் பெண்ணின் உற்பத்திசக்தியே முதன்மைக் காரணமாக விளங்குகிறது.
அதனால்தான் பெண்ணை மனிதசமூகத்தின் ஆதாரசக்தி
என்கிறார்கள்.
தமிழின் முன்னோடி கவிஞர்களில் ஒருவர் இரா.மீனாட்சி.
இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசிக்கிறார். இவரது “பெண்ணாறு” என்கிற தலைப்பிலுள்ள
கவிதையொன்று பெண்ணே இச்சமூகத்தின் ஆதாரம் என்பதைப் பேசுகிறது.
“பெண்ணென்றால் அவள்
ஓர் ஆறு
இக்கரையிலிருந்து
அக்கரைக்கு மாற
அவளுக்கே
தன்னுரிமை உண்டு
அது அவளது உள்ளாறு
எந்த ஆறும் அவளும்
இரட்டைப் பிறப்பு
நடப்பதுபோல் நடப்பாள்
இங்கும் இருப்பாள்
அங்கும் இருப்பாள்
இல்லாதும் இருப்பாள்
இல்லாதும் போவாள்
ஆறுதான் அவள் என்றானது
ஆயிரம் கிளையாறுகள்
வம்ச ஆறுகள்
கூடும் குதிக்கும்
தாண்டும் தணியும்
அகலிக்கும் ஒடுங்கும்
அணைக்கும்
புறந்தள்ளும்
இருகரம் நீட்டும்
மேலும்கீழும் புரட்டும்
ஆற்றுக்கும் ஒரு
இதயம் உண்டல்லவா?
பெண்ணே ஒர் ஆறு
கரையில் நாணல்
நடுவில் தீவு
உள்ளே ஊற்று
ஊசிமுனைக் கசிவு
ஓங்குகடல் பெருக்கம்”.
பெண்ணின் மனதிலுள்ள ஊசிமுனையளவு கசிவே இந்த
உலகம் உய்த்திருக்கச் செய்கிற ஓங்குகடல் பெருக்கமாக இருக்கிறது.
ஒரு பெண் தனக்கும், சுற்றுப்புறத்தில் தன்னைச் சார்ந்திருக்கும்
ஆண்கள், குழந்தைகள், தாவரங்கள், கால்நடைகள் என அனைத்து உயிர்களுக்கும் தேவையான
யாவற்றையும் தன்னியல்பில் அளிக்கிறவளாக இருக்கிறாள். ஒரு குழந்தை பசியில் அழுகிறதா, தூக்கத்திற்காக
அழுகிறதா அல்லது உடல் நோவினால் அழுகிறதா என்பதை அந்தத் தாயே அறிவாள். எறும்பு
முதலாக பறவைகள், கால்நடைகள், தாவரங்கள் என
எந்தச் சிறிய உயிருக்கும் நீர் தேடிச்சேகரித்துப்
பங்கிடுவது, உணவிடுவது, அவற்றைப் பாதுகாப்பது என்கிற செயல்பாடுகள் பெண்ணின்
இயல்பாக இருக்கின்றன. ஆனால் ஆண்களின் பொறுப்பு என்பது அவர்களுக்கு அவர்களது
ஒவ்வொரு நிலையிலும் பிறரால் வலியுறுத்தப்படுகிறது. தாய், மனைவி, மகள் சார்ந்து
அவர்களுக்காக பொருள்தேடுவது, அவர்களைப் பாதுகாப்பது போன்றவை ஒரு ஆணுக்குக்
கற்பிக்கப்பட்டு உருவானவையே.
சமூகம் என்பது ஆண் மையக்கருத்துரு கொண்டது. ஆனால் பெண்தான் சமுதாயத்தின் வளத்திற்குக் காரணமாக இருக்கிறாள்
என்பதே அடிப்படையான உண்மை. ஒரு சமூகத்தின் வளம் என்பதும் அந்தச் சமூகத்தின்
வளர்ச்சி என்பதும் அதனுடைய உற்பத்தி திறனையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.
அப்படியான வளமிக்க சமூகமே பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. பெண் என்பவள்
உற்பத்தித்திறன் கொண்டவள் என்பதால்தான் அவளை நதியாகவும் நிலமாகவும் நீராகவும்
தெய்வமாகவும் போற்றிப்புகழ்ந்து கொண்டே இருக்கிற சிந்தனைகள்
வளர்ந்திருக்கக்கூடும். முதலாளித்துவ மனோபாவத்திற்கு உழைக்கும் மக்கள் தேவை.
உழைக்கும் மக்களைப் பெற்று, உருவாக்கித்தருகிற சக்தியாக பெண் இருக்க வேண்டும்
என்பதால் அவளின் மனதைப் பண்படுத்துகிற விதமாக அவளது உடல் மீதான கட்டுபாடுகளை அது
உறுதி செய்துகொண்டே இருக்கிறது.
காதலும் வீரமும் சார்ந்துதான்
சங்கவாழ்வு முறைமைப்படுத்தப்பட்டுள்ளது. சங்ககாலச் சமுதாயத்தில், ஒரு இனக்குழுவின்
வாழ்வு நிலைத்திருக்க வேறு இனக்குழுவுடன் சண்டையிட்டுக்கொள்ளும் நிர்ப்பந்தம்
இருந்தது. தங்கள் இனமக்களுக்காக அவர்களின் உடைமைகளைக் காக்கவேண்டிய பொறுப்பும்
அதற்கான சண்டையை, நெறிப்படுத்தப்பட்ட போர்நிகழ்வுகளாக மாற்றம் செய்யவேண்டிய
அவசியமும் அந்தக்காலத்தில் இருந்தது. அதனால் சங்கஇலக்கியத்தில் புறப்பாடல்கள்
என்கிற வகைமை தோன்றியது. போர் நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகளும்,
கருத்துருவாக்கங்களும், அதற்கான பேச்சுக்களும், நிகழ்வுகளும் இதன்வழியே பெருகின. தமிழ்மரபின் வரலாற்று ஆதாரங்கள் பலவும் புறப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவையே.
ஒரு சமூகத்தின் உருவாக்கத்தில் அதன் கட்டமைப்பில்
அமைந்திருக்கிற பெண்ணின் பங்கு பற்றி சங்கப் பெண்பாற்புலவர் பொன்முடியாரின்
ஒருபாடல்,
“ஈன்றுபுறந் தருத லென்றலைக்
கடனே;
சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக்,
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”
சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக்,
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”
“ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்துத் தருவது என்னுடைய முதலான கடமை,
அந்தக் குழந்தையை நற்பண்புகள் நிறைந்த சான்றோனாக்குவது தந்தைக்குக் கடமை,
கூர்மையான வேல் செய்து கொடுப்பது கொல்லர்க்குக் கடமை, நல்லாட்சி புரிவது மன்னனுக்குக் கடமை, போர்க்களத்தில் பகைவரின்
யானையைக் கொன்று வெற்றிபெறுவது இளைஞனுக்குக் கடமை” என்று இந்தப் பாடலுக்கு முதல்
பார்வையில் அர்த்தம் சொல்லிவிடலாம். இன்னும் கொஞ்சம் இந்தப்பாடலை நுணுகிப்பார்த்தால், முதன்மை மற்றும் தலையாய என்பதைக் குறிக்கும் “தலைக்கடன்“ என்கிற
சொல் இங்கே பெண்ணுக்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடவனுக்கும், கொல்லனுக்கும், அரசனுக்கும்,
இளைஞனுக்கும், மற்றவருக்கும் கடமை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆணின்
வாழ்வில் நிகழ்கிற அத்தனை செயல்பாடுகளுக்கும் ஆதாரமாகப் பெண்தான் இருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்கான
சொல்லாக இந்த “தலைக்கடன்” என்கிற சொல் குறிப்பிடப்படுகிறது. ஆண் மையச் சமூகமாகக்
கட்டமைக்கப்பட்டு, நிலைப்படுத்தப்பட்ட சங்ககாலத்தில் பெண்ணின் “முதன்மைப்பண்பு” இவ்வாறாக
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஆண், தந்தையாக இருந்தாலும் மன்னராக இருந்தாலும் கொல்லராக
இருந்தாலும் இளைஞனாக இருந்தாலும் பெண்ணின் வழிநின்றே அடிப்படையான வாழ்வியல்
கல்வியும் பொறுப்புகளும் கற்பிக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்படுகிறான்.
ஒரு பெண் எவ்விதம் இன்றைக்கும் மையமாக இருக்கிறாள் என்றால், “பெண்ணே
குழந்தைகளை வளர்க்கிறாள். குடும்பத்தை நிர்வாகம் செய்கிறாள், தொழில், ஊடகம்,
அரசியல் என பல துறைகளில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்” என்கிற பல பதில்களை
நாம் பெறமுடியும்.
சமீபத்தில் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன், “தன் பெயர் மேகவர்ணம் என்கிற
பூங்கோவை” என்று என்னிடம் அறிமுகம் செய்து
கொண்டு பேசினார். தன்னுடைய பெயர் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுவதாகச் சொன்னார்.
அவருடைய மிகத் தெளிவான உச்சரிப்பும், சொல்லவந்ததை சுற்றிவளைக்காமல் நேரடியாக
பேசுகிற குழப்பமற்ற பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தன. இப்படிப்பேசுவது நிறைய
பேருக்குக் கைவருவதில்லை என்பது என்னுடைய எண்ணம் .
“அப்புறம், என்ன இந்தப்பக்கம், இன்னைக்கு உங்க முகம் கொஞ்சம்
வாடியிருக்கிறாற்போல இருக்கே, உடம்புக்கு எதுவும் சரியில்லையா, உங்கள் குரல்
என்னவோ போல இருக்கேங்க, எதுனா பிரச்சனையா” எனத் துவங்கும் பெரும்பாலான பேச்சுக்கள்
எல்லாம் எதிரே இருப்பவரிடமிருந்து ஏதோ ஒரு தகவலைப் பெறுவதற்கான தொடக்கமே.
ஒருவரிடமிருந்து ஒரு தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரும்பாலும் “என்னங்க,
உங்களைப்பற்றி இன்னார், இப்படிச்சொன்னார், என்ன விஷயம்” என்று நேர்படத்
துவங்குவதில்லை. வேறு எங்கோ பேச்சைத் துவங்கி, ஊர்வம்பு பேசி, எதிரே இருப்பவர் தன்
வாயாலேயே நாம் விரும்பும் அந்தச்செய்தியை சொல்லுகிறாரா என ஆராயும் மனோபாவம் பெரும்பாலானவர்களுக்கு
இருக்கிறது. இதுபோல இல்லாமல் பூங்கோவை தன்னைப்பற்றி சொல்லி, என்னைப்பற்றிக் கேட்டு
அறிந்து கொண்ட அந்த உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. அந்த உரையாடலை எனக்குப்
பிடித்ததற்கு முக்கியமான வேறு ஒன்றும் உண்டு.
அவரிடம் நான், “நீங்கள் என்ன படிச்சிருக்கீங்க” எனக் கேட்டேன், சற்றும்
யோசிக்காமல் அவர் சொன்ன பதில், “நான் நல்லா விவசாயம் செய்வேன். தென்னை, நெல்,
கத்தரிக்காய், வாழை, மிளகாய், தக்காளி இப்படி எல்லாப்பயிர்களையும் பயிரிடவும்
பாதுகாக்கவும் தெரியும். எந்தப் பருவத்தில் விதைக்கணும், களை எடுக்கணும், மருந்து
தெளிக்கணும், அறுவடை செய்யணும் என ரொம்ப
தெளிவாத் தெரியும்” என்றார். மேலும் அவரே, “என்னுடைய படிப்பு எதுன்னா, நிலத்துல
இறங்கி விவசாயம் செய்யுறதுதான். நான் சிறுமியா இருந்தப்ப இருந்து, அப்பா
ஏர்பிடித்து உழ, அம்மா நிலத்தில் இறங்கி விதை தூவவும், களைபறிக்கவும் என்றிருப்பார்கள்.
அதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அறுத்த நெற் கதிரை அம்மா களத்தில்
சேர்க்க, அவற்றை அப்பா அடித்து
தானியங்களாகக் பிரித்தெடுக்க, பின்பு இருவரும் சேர்ந்து சேகரிக்க என இருந்த
அவர்களைப் பார்த்து விவசாயம் கற்றுக்கொண்டேன்” என்று சொன்னார். ஆண்கள் பலரும்
விவசாயத்தை விட்டு பல்வேறு பணிகளுக்குச் சென்றுவிட்ட இந்தக்காலத்தில் அடுத்த
தலைமுறைக்கான தானியங்களைச் சேமித்து வைக்கிற ஆதித்தாயாக அந்தப்பெண்ணை அப்பொழுது உணர்ந்தேன்.
ஒருகணம் கண்கள் மூடி அவரை நான் வணங்கினேன். இவரைப் போன்ற பெண்களே இந்தச் சமூகத்தின்
மையமாகத் திகழ்கிறார்கள்.
இரா.மீனாட்சியின் கவிதையில்
குறிப்பிட்டிருப்பதுபோல, “ஊசிமுனையளவு கசிந்து ஊட்டுகிற பால்தான் குழந்தை அறிகிற
முதல்சுவை.” அந்தச்சுவையே பின்னாளில் அந்தக் குழந்தை உயிர்த்திருப்பதற்கான
வாழ்வின் மீதான சுவையாக மாறுகிறது.
இது நிலா, இது வானம், இது கடல், இது பூ, மலை, மரம். செடி, கொடி, ஆடு,
மாடு என நாம் வாழும் சூழலையும் நம் சூழலின் சுற்றுப்புறத்தையும் அனேகமாக நம்முடைய
மூன்று வயதிற்குள் தெரிந்து கொள்கிறோம். இதனைத் தெரிவிப்பவர் பெரும்பாலும்
அம்மாவாகத் தான் இருப்பார். மூன்று வயதிற்குள் நாம் தெரிந்து கொண்ட பலவற்றிற்குதான்
பின்னாட்களில் அறிவுநிலை சார்ந்த விளக்கம்
அறிந்து கொள்ளும் படியாக கல்வி நிலையங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன. அதன்பின்பே
சமூகம் தன்னுடைய அனுபவம் சார்ந்த கற்பித்தலைச் செய்கிறது. இவ்விதமாகவே ஒருவர்
தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறார்.
ஒரு ஆண்
மன்னனாக நல்ல ஆட்சி நல்கவும்,
ஒரு ஆண்
வீரனாக தன்னுடைய இனத்தையும் நாட்டையும் காக்கவும்,
ஒரு ஆண்
சான்றோனாக சமுதாயத்தில் உயர்வு பெறவும்
ஒரு
பெண்ணே வழிப்படுத்துகிறாள்.
இவர் எழுதிய பாடல்கள் : புறநானூறு : 299, 310, 312
No comments:
Post a Comment