பெண் –
உடல் , மனம் , மொழி :
-குறமகள் குறியெயினி ..
ஒரு பெண் நம்புகிறாள்:
“உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி...”
“சேர்ந்திருந்த காலத்தின் இன்பம் போலவே பிரிவின் பொருட்டான
துன்பமும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. எனவே “பிரிந்து சென்றிருக்கும் ஆண்
தன்னை நினைத்தபடியே இருப்பான்” என்கிற பெண்ணின் நம்பிக்கையில்தான் ஆணின் உலகம்
இயங்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பிறரை நம்புவது என்பதே தன்னை நம்புவதுதான்.
அவள் தன்னை நம்புகிறாள்.”
_________________________________________________________________________________________
தாவரங்கள்
நிலத்தில் செழித்து வளர்வதற்குத் தேவைப்படுகிற நீர், தட்பவெப்பம் போலவே மனிதர்கள்
மகிழ்ச்சியுடன் வாழவும் உணவு, உடை, இருப்பிடம் தவிர ஆதாரமான வேறுசில விஷயங்கள்
வேண்டியிருக்கிறது. அவற்றுள் முதன்மையானது சகமனிதர்களோடு கொண்டிருக்கிற நேசம்.
அதிலும் குறிப்பாக ஆண் பெண் உறவு. எனவேதான் இதனை மையமாக வைத்து உலகம் முழுவதிலும்
உள்ள மொழிகள் அனைத்திலும் இலக்கியங்கள்
படைக்கப்பட்டு வருகின்றன.
காதலுடன்
ஒன்றுபட்டு வாழ்கிறவர்களின் இன்பமென்பது அவர்கள் இருவருக்கும் பொதுவானது. இருவரின்
உணர்ச்சிகளும் ஒன்றென இணைந்திருப்பதுதான் காதலின் இயல்பாகவும் இருக்க முடியும்.
காதல் மிகுந்து தழுவிக்கொள்கிற பொழுதும், மனமொன்றிக் கூடம்போதும் ஒருவரையொருவர் நிறைவு செய்வதற்கு முயலுவார்கள்.
இதனை, ”காதலர்களுக்கு
மிக இனிமை தருவதென்பது, காற்றுகூட இடையில் நுழைய
முடியாத அளவுக்கு இருவரும் இறுகத்தழுவி மகிழ்வதாகும்” என்கிற பொருள்பட,
“வீழும் இருவர்க்கு இனிதே
வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
போழப் படாஅ முயக்கு.”
திருக்குறள் கூறுகிறது.
மனதின்
ஆழத்தில் எப்போதும் பதிந்திருக்கும் நினைவான நான் ஆண் அல்லது நான் பெண் என்கிற
எண்ணமும் அக்கணம் நீங்கியிருக்கும். மேல், கீழ் அல்லது உயர்வு, தாழ்வற்று
பால்வேறுபாடு எதுவுமற்ற பெருநிலைக்கு நகர்கிற மனதை, காற்றும் இடையில் புகவியலாத ஒரு தழுவல்
செய்துவிடும். உடலியலும் உளவியலும் இதை உண்மையென்றே ஒப்புக்கொள்கின்றன. இவ்வுணர்வை பிரதிபலிக்கும் “விடுதலை“ என்கிற
தலைப்பிலுள்ள என்னுடைய கவிதையொன்று பின்வருமாறு,
“நாம்
அருகருகே
இருக்கையில்
நம்மிடைச் சிக்கிக் கொள்ளும்
காற்று
விடுபட இயலாமல் தவிக்கிறது
உள்ளும்
புறமும்
நாம்
கலந்த வேளை
பால்
சுரக்கும் உணர்வுகள்
கனவின் வழி
கடந்து செல்கிறது
அதன் பெருவெளியில்”
இவ்விதமாக
இணைந்திருக்கும் உறவுகளுக்குள்
பிரிவென்பது தவிர்க்க இயலாதது. எவ்வளவு அன்யோன்யமாக வாழ்பவரும் பல்வேறு காரணங்களினால் சில காலம் பிரியவேண்டிய சூழலும் உருவாகிறது.
இந்தப்பிரிவினால் ஆணைவிடவும் பெண்தான் மிகவும் தவித்துப் போய்விடுகிறாள். அவ்வாறான
பெண்ணின் துயரைப் பசலையென சங்க இலக்கியம் கூறுகிறது. பரணரின் குறுந்தொகைப்
பாடலொன்று பசலைப்பற்றி மிக அழகாகச் சித்தரிக்கிறது,
“ஊருண் கேணி யுண்டுறைத்
தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.”
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.”
ஊர்மக்கள் குடிப்பதற்காக நீர் இறைக்கும் கேணியில் பாசி படர்ந்து இருக்கிறது. கிணற்றினுள் கலனால் நீர் கொள்வதற்காக நீர்பரப்பைத் தொட்டவுடன் விலகி, கலனை எடுத்தவுடன் மீண்டும் இணைந்து மூடிக் கொள்கிற பச்சை போல தலைவன் தொட்டவுடன் விலகி, அவன் கை எடுத்தவுடனே பசலை படர்ந்து கொள்வதாக தலைவி சொல்கிறாள்.
“பசப்புறு பருவரல்”
என்கிற தலைப்பில் திருக்குறளில் பசலைப் பற்றி ஒரு அதிகாரமே உள்ளது. அதில் ஒரு குறளில்,
“தலைவி ஒருத்தி தலைவனைத் தழுவிக்கிடக்கிறாள். சற்று நகர்ந்து படுக்கிறாள். சட்டென பசலை
வந்து தழுவிக்கொண்டது” எனச் சொல்கிறது. இவ்விதமாக தலைவனின் சிறிய நகர்வுகூட ஒருத்திக்கு
பசலை தரும்படியாக இருக்கிறது.
இத்தகைய
உறவும் அன்பும் இருக்கிற காரணத்தினால்தான் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளவும்,
பொறுப்புக்களை ஏற்கவும் செய்கிறோம். ஒருவரையொருவர் பாதுகாக்கவும், ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுக்கிறோம். எனவேதான் பிரிவும் சந்திப்பும் எவ்வகையான உறவுகளுக்குள்ளும் தொடர்ந்து நிகழ்கிறது.
பிரிவுக்காலங்களில்
பெண்ணானவள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கிறாள். ஆணோ வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்குப்
பயணிக்கிறவனாக இருக்கிறான். இருவரும் ஒன்றாக இருந்த பொழுது புழங்கிய பொருள்களும்,
இணைந்திருந்த இடங்களும் பெண்ணுடன் அப்படியே இருக்கும். புதிய இடங்களும், புதிய
மனிதர்களும் என சந்திக்கிற நிலையிலிருக்கும் ஆணின் கவனம் புதிய செயலிலும்
ஈடுபட்டிருக்க நேர்கிறது. இச்சூழலில் பெண் பெரும்பாலும் அந்த ஆணைக் குற்றம் சொல்லத்
தொடங்கிவிடுகிறாள். தான் மட்டுமே அவனை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அவளை மறந்து
அவன் வேறு காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் வருத்தப்படுவாள். இவ்விதமாக
இருவரின் நிலையும் வெவ்வேறாக இருந்தாலும் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும்
காதலின் இழையினால் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
தலைவனோடு இருந்த காலத்தின் நினைவில் தனித்திருக்கும் பெண்களைப் பற்றி கவிஞர்
மனுஷி பாரதி சிறு கவிதையொன்று உள்ளது.
“உன் கண்களுக்குள் இருக்கிறது
எனக்கான ஒளி
எனக்கான ஒளி
உன் குரலில் இருக்கிறது
எனக்கான மொழி
எனக்கான மொழி
உன் அண்மையில் இருக்கிறது
எனக்கான வாழ்க்கை”
எனக்கான வாழ்க்கை”
அவன் அருகில் இருக்கும்போது மட்டுமே அவள் உயிர்ப்புடன் வாழ்கிறதாக நினைக்கிறாள்.
அவன் சற்று விலகிச்சென்றாலும் அவள் ஒளியிழந்துவிட்டதாக நினைக்கிறாள். இன்றைக்கும்கூட
பெண்கள் பலரும் கணவர் வெளியூர் சென்றுவிட்டால் தனக்கென புதியதாக சமைக்கிற பழக்கம்
இல்லை. குளிக்க, நல்ல ஆடை உடுத்திக்கொள்ள விருப்பமற்று இருக்கிறார்கள். ஒரு வீட்டின்
சமையலை ஆண்களுக்கானது என நினைப்பதுபோலவே தன்னை அழகு படுத்திக்கொள்வதும் அவனுக்காகத்தான்
என வாழ்ந்து கொண்டிருக்கிற பல பெண்களைப் பார்க்கமுடிகிறது.
காலங்காலமாக பெண்ணின் உடலானது ஆணுக்கென இருப்பதை வாய்மொழிக் கதைகள், இலக்கியங்கள்
வழியே மட்டுமன்றி தற்காலத்தில் தொலைக்காட்சித் தொடர்களும் திரைப்படங்களும்
முன்வைக்கின்றன. மேலும் காதலின் மாயம் தன்னுடலில் நிகழ்த்துகிற பரவசத்தை அறிந்துகொண்ட
பெண், தன்னை நேசிக்கிற ஆணிடம் தன்னை முழுவதுமாகக் கொடுத்துவிட நினைக்கிறாள்.
தன்னுடைய உடலின் மூலமாக தான் அறிந்துகொள்கிற இன்பத்திற்கு அவனே காரணமென்பதால்
அவளுடைய உடலும் அவனுக்கானது என நம்புகிறாள். இதனைப்பற்றி கவிஞர் பத்மஜா நாராயணன் எழுதிய கவிதை ஒன்றில்,
“எதையும்
எடுத்துக்கொள் என
கை
தூக்கி சரணடைந்துவிட்டாய்
ஆனால்
உன் புன்னகையைத் தவிர
வேறு
ஏதும் வேண்டுமாயிருக்கவில்லை
உனக்குத்
தெரியாமல் ஒரு சிறுசுளை புன்னகையை
என்
கைக்குட்டையில் திருடிக்கொண்டு வந்து விட்டேன்
சிறிதுநேரம்
ஓய்வெடுக்கட்டும் என மேனியில்
இளைப்பாறவிட்டது
ஏனோ தவறாகிவிட்டது
என்
உதடடைந்து ஒரு முத்தம் பறித்து
என்னை
கிச்சுக்கிச்சு மூட்டத் தொடங்கி
உடலெங்கும்
புன்னகை மலரத் தொடங்கிவிட்டது.
போதும்.
உன்னுடையதை
நீயே வைத்துக்கொள்
இல்லை
உடல் மலர்ந்தவைகளையாவது
உடனே
கொய்து விடு
சாந்தியடையட்டும்
நான்.”
காதலனின்
தொடுதலுக்குப்பிறகு பெண் தன்னுடைய உடலைப்பற்றி நினைக்கிறவளாக ஆகிறாள். அவளுடைய
உடலின் தவிப்பு அவனுடைய தொடுதலில்தான் அமைதியாகும் எனவும் நம்புகிறாள்.
தான்
மிகவும் நேசிக்கிற பெண்ணிடம் அந்தரங்கமான தருணத்தில் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கிறவனாக
ஆணும் இருக்கிறான். பெண்ணைப் பணிந்திருப்பதும், அவளைக் கொண்டாடித் திளைப்பதும்
ஆணின் செயல்கள். அவனுடைய திளைப்பில் அவளும் மகிழ்கிறாள். பெண்ணின் உடலும், அவளுடைய
மொழியும் ஒரு ஆணுக்காகவே என்கிற கருத்தில் வளர்க்கப்படுகிற காரணத்தினால் ஆணை
தன்னைவிட உயர்ந்தவனாக நினைக்கிறாள். அவள் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்
கீழிறங்கி அவளிடம் பணிந்தவுடன் அதற்காக பெருமிதம் அடைகிறாள். இறைவியென பூசிக்கிற அவனிடம் தன்னை மறக்கிறாள். அதன்பின்பு
அவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராகிறாள். இத்தகைய ஆண் அவளைப்பிரிந்து
செல்ல நேரும்பொழுது அவளைத் தீண்டிய இடங்களும், கொடுத்துச் சென்ற முத்தங்களும்
பலமடங்கு பெருகி பெண்ணின் தவிப்பை பலமடங்கு பெருகச்செய்கிறது.
தலைவன்
பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவு காலங்களில் இடம் மற்றும் சூழல் மாற்றம் காரணமாக
தலைவனுக்கு சென்றிருக்கும் காரியத்தில் கவனம்
திரும்பியிருக்கும். தலைவியால் அவளின்
முந்தைய நிலையிலிருந்து தன்னைக் கலைத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது தலைவியின்
நிலை பற்றிய குறமகள் குறியெயினியின் நற்றிணைப் பாடலில் ஒரு காட்சி,
“நின் குறிப்பு எவனோ தோழி, என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும் என்றும்
நெஞ்சுவடுப் படுத்துக் கெடஅறி யாதே
சேண்உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்
பெயல்உழந்து உலறிய மணிப்பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலுஞ் சோலை
அம்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.”
என்னொடு நிலையாதுஆயினும் என்றும்
நெஞ்சுவடுப் படுத்துக் கெடஅறி யாதே
சேண்உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்
பெயல்உழந்து உலறிய மணிப்பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலுஞ் சோலை
அம்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.”
இந்தப் பாடலில், தலைவன் இன்னும் வரவில்லை. அவன் அவளோடு
அருவியில் ஆடியிருக்கிறான். ஆனால் இது குறித்துத் தலைவி வருத்தமே இல்லாமல்
இருக்கிறாள். தலைவன் வராமல் காலம் தாழ்த்தினால் தலைவி வருத்தப்பட வேண்டும். மாறாக
அவள் அமைதியாக இருப்பதைப் பார்க்கிற தோழி வருந்துகிறாள்.
தலைவி தோழியைப் பார்த்து “தோழி, நான் தலைவனைப்
பிரிந்திருக்கும் என்னுடைய இந்த நிலையில் நான் சொல்கிற குறிப்பு எனக்குப் பொருந்தாது. எனினும் இந்தப்
பிரிவினால் என்னுடைய நெஞ்சம் புண்பட்டுக் கெட்டுப்போகவில்லை. மலைகள் வானுயரம் வளர்ந்து நின்றன. அங்கே அழகிய புள்ளிகளோடு பீலியையுடைய மயில் மழையில் நனைந்து நிற்கும். அந்த மயில் உலாவி வரும் சோலையில் அழகிய கற்பாறை இருந்தது. அங்கு அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையும் இருந்தது. அந்தச் சுனையில் மலர்ந்திருக்கும் குவளை மலர்களைப் பறித்து நீராடினேன். அப்பொழுது அந்த நீர் அலையசைக்க அணிந்திருக்கும் மாலை கலைய சாரல் நாடனும் என்னோடு சேர்ந்து நீராடினான். அவ்வாறு அவனோடு சேர்ந்து அருவியிலாடிய நாளினை நினைத்து நான் துன்பப்படுவதாயில்லை. இதைப் பற்றி நீ
என்ன சொல்கிறாய்?” என்று கேட்கிறாள்.
இன்னும் தலைவன் வரவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கும்.
அதில் மிக முக்கியமானது பொருள் தேடித் பிரிவது. அந்தக்காலத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆண் பொருள் கொடுக்க
வேண்டும். அதனால் திருமணம் செய்வதற்கான பொருள் தேட தலைவன் பிரிந்து செல்வான். களவு எனப்படுகிற காதலில் ஏற்படுகிற பிரிவில் குறிப்பிட்ட
காலத்தில் தலைவன் திரும்ப வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இச்சூழலில் பெரும்பாலும் அவனை நினைத்து பசலை படர்ந்திருக்கும் பெண்களையே
சங்கப்பாடல் முழுக்கக் காண்கிறோம். இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகிற தலைவி தலைவனின்
தாமதத்திற்கு வருத்தம் இல்லையென தலைவி சொல்கிறாள்.
தலைவன் திரும்பி வர இயலாத சூழலில்
தன்னுடைய நிலை குறித்து நெஞ்சம் காயம் பட்டுக்கொள்ளும் அளவுக்கு வருந்துவது
அறிவுக்குப் பொருத்தம் இல்லை என்கிற தெளிவு இந்தப்பெண்ணிற்கு இருக்கிறது. தான் கவலைப்படாமல்
இருப்பதுபற்றி தோழி என்ன நினைக்கிறாள் எனவும் தெரிந்துகொள்ள தலைவி விரும்புகிறாள்.
அதனால் அவனோடு சுனை நீராடியது குறித்து வருத்தம் இல்லை என அந்தரங்கத்தை தோழியிடம்
பகிர்ந்துகொள்கிறாள்.
இப்பாடலை இரண்டு விதமாகப்
பார்க்கலாம். பிரியமானவர் மீது நமக்கு வருத்தம் ஏதேனும் இருந்தால், “எனக்கு
ஒன்றும் யார் மீதும் வருத்தம் இல்லையே“ என்றுதான் முதலில் சொல்வோம். மனதிற்குள்
எந்தவிதமான உணர்ச்சி மேலோங்கி இருக்கிறதோ அதுதான் முதலில் சொல்லாக வெளிப்படும். இவ்விதமாக
இப்பாடலைப் அணுகினால் தன்னுடைய தாங்க இயலாத துயரத்தைத்தான் தலைவி வருத்தம் எதுவும்
இல்லையெனச் சொல்கிறாள் எனப் புரிந்து
கொள்ளலாம்.
இப்பாடலை இன்னொருவிதமாகப்
பார்க்கவும் இடம் இருக்கிறது. “மழையில் நனைந்த மயில்” என ஒரு காட்சி வருகிறது.
நனைந்த மயில் என்பது தலைவனும் தலைவியும் கூடியிருந்த இன்பத்தின் படிமமாகக்
கொள்ளலாம். மழை பெய்தலால் நனைந்த மயில் சோலை முழுக்க உலாவி வருகிறது. முன்பு அவன் கூடியிருந்த இன்பம் இப்போதுவரையில்
மனதில் பதிந்து இருப்பதால் சோர்வும் வருத்தமும் அடையாமல் இருப்பதாக தலைவி
நினைக்கிறாள். தலைவன் அணிந்திருந்த மாலை நீராடலில் கலைந்து கிடந்ததாகவும் பாடல்
சொல்கிறது. இது, அவர்களின் காதல் அனுபவிப்பைக் குறிப்பில் உணர்த்துகிறது. ‘நீலமலர்
விரிந்து வாசம் பரப்புகிற குளிர்ந்த சுனையில் நீராடிக் களித்த இன்பம்’ என்பது
அந்தத் தலைவி மட்டும் அனுபவிக்கவில்லை. தலைவன் அணிந்திருந்த மாலை கலையும்படியாக அவனும் இணைந்து அனுபவித்திருக்கிறான். இங்கே
அவர்களின் அனுபவம் என்பது இருவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கிறது. இன்பம்
பொதுவானது எனில் பிரிவும் இருவருக்கும் பொதுவானதுதானே. அவனைப் பிரிந்திருக்கும்
அவள், அவனுடைய நினைவில் வாடியிருப்பது போல அவனும்தானே அவளைப் பிரிந்திருக்கிறான்.
அவனுக்கும்தானே நீராடலின் நினைவு வரும். மழை நனைந்த மயிலின் நினைவை அவனும் மனதில்
வைத்திருப்பான்தானே. அப்படியெனில் காலம் தாழ்த்தாது வந்துவிடவே அவனும் விரும்புவான்.
எனவே இந்தப்பிரிவு குறித்து பெண்ணாகிய நான் மட்டும் வருந்தத் தேவையில்லை எனத்
தலைவி நினைக்கிறாள்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது. நற்றிணை :357
============================================================================
No comments:
Post a Comment