பெண் –
உடல் , மனம் , மொழி :
-குறமகள் இளஎயினி ..
ஒரு பெண் நீர்வார்க்கிறாள் :
கட்டட்று
எழுமானால் ஒரு காட்டையே அழிக்கவல்ல அதே நெருப்புதான் ஒரு சிற்றகலில் சுடராக நின்று
இல்லத்திற்கு ஒளிதருகிறது.
“ஆடு
மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை…”
“ஒரு இல்லத்திற்குத் தலைவனாக இருக்கும் ஆண், சுற்றத்தினர்
பலருக்கும் இளைப்பாறுதல் தருகிறான்.
குடும்ப அமைப்பில் ஆண் மையமாகவும், பெண் அவனது இயக்கத்திற்கு ஆதாரமாகவும்
இருக்கிறாள். பறவைகள் பலவும் தங்கிச் செல்லவும், கூடுகட்டி, பல்கிப்பெருகவும் ஒரு
ஆண் பெருமரமாகி நிற்கிறான் எனில் அந்த பெருமரத்திற்கு தன்னுடைய காதல், கண்ணீர்,
காமம், காத்திருப்பு ஆகிய உணர்வுகளினால் நீர் வார்த்துக் கொண்டேயிருக்கிறாள்
அவனுடைய பெண்.”
_________________________________________________________________
“பறவை வீடு” என
பெயர் மாற்றிவிடலாமா என்று நினைக்குமளவுக்கு, சமீபகாலமாக எனது வீட்டைச்சுற்றி
பறவைகள் பெருகியுள்ளன. சிட்டுக்குருவி, தையல்சிட்டு போன்றவை தாரளமாக புழங்கிக்
கொண்டிருக்கிறது. ஒரு தூக்காணங்குருவியும் பின்பக்க சப்போட்டா மரத்தில் தன்னுடைய
இணைக்கான கூட்டினைக் கட்டி முடித்திருக்கிறது. ஒரு வாரமாக மஞ்சள் வாலாட்டிக்
குருவிகள் சில பறந்து திரிகின்றன.வீட்டின் முன்பக்க புங்கை மரத்திலிருந்து
செங்கொன்றை மரத்திற்கும், அதிலிருந்து பக்கவாட்டில் உள்ள
இயல்வாகை மரத்திற்கும் மாறிமாறிப் பறந்துகொண்டிருக்கின்றன. பறவைகளின் அதிகாலைக்
கீச்சிடல்கள் என்னுடைய அன்றாடத்தை உயிர்ப்புடையதாக்குகிறது.
பறவைகளின் பயணம்
“கூட்டை நோக்கியதா அல்லது வானத்தை நோக்கியதா” என்ற கேள்வி பறவைகளைப்
பார்க்கும்பொழுது தோன்றுகிறது. கூடு அடைகையில் கிடைக்கும் கதகதப்பு இல்லாதுபோனால் வானத்தில்
அவ்வளவு சுதந்திரமாக பறவைகளால் பறக்க முடியாது என்று தோன்றுகிறது. கூடு என்பது
அடிமைத் தனத்தின் குறியீடு என்று நம்புகிற மனத்திற்கு கூட கூடு என்பது சிலசமயம்
அன்பையும் காதலையும் கதகதப்பையும் கொடுக்கிறது. கூடு வேறு. கூண்டு வேறு என்கிற
சிறிய வித்தியாசத்தை பறவைகளிடமிருந்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படியே வானம்,
பறவைகள், கூடு என்று அலைபாய்ந்த மனம் மனிதகுலம் தோன்றிய நாளுக்கு தன் கற்பனையை
விரிக்கத் தொடங்கியது. இப்படியாகத்தான்
இந்தமனம் எந்தக் கொம்பிலிருந்து எக்கிளைக்குத் தாவுகிறது என்று தீர்மானிக்கவே
இயலுவதில்லை. காடுகளில் அலையும் வனப் பெண்ணொருத்தியாக பறவைகளின் ஓசை என்னை
மாற்றியிருந்தது. காடுகள் அடர்ந்த மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிற பறவைகளின்
குரல் நிகழ் காலத்திலிருந்து நழுவி தொல்குடி வாழ்வுக்கும் எனக்குமாக பின்னலிட்டது.
ஒருபோதும் மனிதன் தனித்திருக்கவில்லை, சமூக அமைப்பாக முழுமை பெறுவதற்கு முன்பாகவே
கூட்டமாக வாழ்வதையே மனிதன் விரும்பியிருக்கிறான். பகிர்தலையும் அரவணைத்துப்
போவதையும் தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தொடர்ந்து செய்திருக்கிறான். தாய்வழிச்
சமூகத்தின் சிதைவுக்குப்பின்பு இனக்குழுவாக
வாழத் தொடங்கினான். தன்னுடைய இனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பிற்காக அக்குழுவை தலைமையேற்று
நடத்துகிற பொறுப்பை வலிமையும் அரவணைப்பும் கொண்ட ஒரு ஆண் ஏற்றுக்கொண்டிருக்கிறான். இம்மாதிரியான மனித சமுதாய வளர்நிலையில்
ஆண்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்து வருகிறது என்பதைப் பற்றிய கவிஞர் இன்பா
சுப்ரமணியனின் கவிதை,
“அந்த
மரம்
உடைந்து
விழுந்தபொழுது
தாத்தா
இப்படித்தான்
சொன்னார்
எத்தனைப்
பறவைகளுக்கு
வீடாயிருந்ததோ
தான்
வாழ்ந்த காலம் முழுக்க
எத்தனைப்
ஜீவனுக்கு
தன்
மடியில்
இளைப்பார
இடம் தந்ததோ
ஒருநாள்
இறந்து
போனார் தாத்தா
அப்பா
இப்படித்தான்
சொன்னார்
எத்தனை
மனிதர்களுக்கு
அடைக்கலம்
தந்தாரோ
எத்தனை
ஜீவன்களுக்கு
வழி
காட்டினாரோ
பின்னொரு
நாள்
எல்லாருமே
பிரிந்து
போய்விட்டோம்
வெவ்வேறு
மரங்களுக்கு
கூட்டை
மாற்றிக்கொண்டு.”
இப்படித்தான்
ஒரு குடும்பத்தின் தலைவனான ஆண், பலருக்கும் இளைப்பாறல் தருகிறவனாக இருக்கிறான். “ஈன்று
புறந்தருதல்” ஒரு தாயின் கடமையாக இருக்க, அந்தக் குழந்தையை “சான்றோனாக்குதல்”
தந்தையின் கடமையாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சான்றோன் ஆக்குதல் அத்தனை எளிதா
என்ன? அதற்கான அடிப்படைத் தேவை பொருள். எனவே பொருள் தேடலுக்காக ஆண் தன்னுடைய
வாழ்வின் பெரும்பகுதியைச் செலவு செய்கிறான்.
கூட்டுக்குடும்பம்
அல்லது தனிக்குடித்தனம் எதுவாகிலும் ஆணின் கடமையானது பொருள் ஈட்டுதல், குடும்பத்தையும்
சுற்றத்தையும் பாதுகாப்பது என்பதுதான். இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தை
நடத்துவதற்கான அத்தியாவசிய வசதி, அது சார்ந்த அடிப்படையான தேவைகள் மாற்றமடைந்துள்ளன.
மாறியுள்ளது. தேடிச் சேர்த்து வைக்கிற பொருளின் அளவைப் பொறுத்தே ஆணுடைய மதிப்பு
சமூகத்தில் மதிப்பிடப்படுகிறது. சம்பாத்தியமும் செல்வாக்கும் உள்ள ஒருவன் தன்னுடைய
சுற்றத்தினரையும் காப்பவனாக, அனைவருக்கும் உதவுகிறவனாக இருந்துவிட்டால் அவனுடைய மதிப்பே
தனிதான். அப்படிப்பட்ட ஆண்தான் தாய், மனைவி, சகோதரி மற்றும் தகப்பனாலும்
உறவினர்களாலும் கொண்டாடப்படுகிற உயர்ந்தவனாக இருக்கிறான்.
இவ்விதமாக
குடும்பத்தைத் தலைமை ஏற்று நடத்துகிற ஆணை, அந்த வீட்டின் பெண்கள் யாரிடமும்
விட்டுக்கொடுப்பதில்லை. உறவினர்களும் அவனால் பயன் அடைபவர்களும் அவனைப் புகழ்ந்து
கொண்டே இருப்பார்கள். புகழுதலும் மற்றவர்கள் முன்பாக விட்டுக்கொடுக்காமல்
பேசுவதும் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஆணுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.
குடும்பத்தின்
தலைவனைப் போற்றுகிற இப்பண்பின் அடிப்படையான மனம் சங்ககாலம் தொட்டு இருந்து
வருகிறது. தலைவனைப் போற்றி பரிசு பெறுகிற புலவர்கள் வாழ்ந்த காலம் அது. குறிஞ்சி
நிலத்தின் தலைவன் “ஏறை” என்பவனை குறமகள் இளஎயினி
என்கிற பெண்பாற்புலவர் பாடியிருக்கிறார்.
“தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தானா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தின னாகலும்,
வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன வல்ல; வெம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பினற், கொலைவேலற்,
கோடற் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதி, னினந்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமா னல்லேறு
மடமா னாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத் தோர்க்கும்
பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே.”
பிறர்கை யறவு தானா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தின னாகலும்,
வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன வல்ல; வெம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பினற், கொலைவேலற்,
கோடற் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதி, னினந்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமா னல்லேறு
மடமா னாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத் தோர்க்கும்
பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே.”
“தம்மைச் சார்ந்தவர் பிழை செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்வதும், பிறர்
வறுமைகண்டு தான் நாணுவதும், படை நடத்தும் காலத்தில் பிறரால் பழிக்கப்படாத வலியனாக இருப்பதும், வேந்தர்களின் அவைக்களத்தில்
பெருமையுடன் நடந்து கொள்வதுமாகிய பண்புகள்
உங்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுவன அல்ல; அது எங்கள் தலைவனுக்கே
தகுந்தது. எம் தலைவன் வில் வளைத்ததால்
அகன்று விளங்குகிற மார்பும், கொலைத்தொழில் புரியும் வேலும், காந்தள் பூ மாலையும்
உடைய குறவர் குலத்தின் தலைவன். இயங்கிக் கொண்டேயிருக்கும் முகிலைத் தனது உயரத்தால்
தடுக்கும் பயன்பொருந்திய மலையை உடையவன்; சூரியன் மறைகின்ற மாலைப்பொழுதில் ஆண்மான்
தன்னுடைய இனத்தையும் பெண்மானையும் காணாது குரல் கொடுக்க,
அவ்வோசையை மலைக்குகையில் வாழும் ஆண்புலியும் செவிமடுக்கும் தன்மையும் உடைய
மலைநாடன் ஆகிய எம் ஏறைக்கோனுக்கே அப்பண்புகள் பொருந்தும்.”
இந்தப்பாடலில் அந்த தலைவனின் ஈகைச் சிறப்பையோ
புகழையோ தலைவனிடம் நேரடியாகச் சொல்லவில்லை. மாறாக மற்றவர்கள் முன்னிலையில்
தன்னுடைய நிலத்தின் தலைவனைப் போற்றுகிறார் குறமகள் இளஎயினி. ஒரு தலைவனின் பண்பு
என்பது என்ன எனக்கூறி இந்தப்பண்புகள் என்னுடைய நாட்டின் தலைவன் “ஏறைகோனுக்கே”
இருக்கிறது என்கிறார். தலைமைத் தகுதி இல்லாத ஒருவனை தலைவன் எனக் கூறக்கூடாது என்பது இந்தப்பாடலின்
பொருளாகும்.
இயங்கி நகர்கிற மேகத்தை தன்னுடைய உயரத்தால் தடுத்து, தன்னுடைய
நிலத்தில் மழையைப் பொழிவித்து வளப்படுத்துகிற உயர்ந்த மலைச்சிகரம் உள்ள நிலப்பகுதியைச்
சேர்ந்த தலைவன் என்பது தன்னுடைய இனத்தை வளமையுடன் வைத்திருக்கும் தலைவனின் மனதைக்
குறிப்பால் சொல்கிறது. மாலைப் பொழுதில் தன்னுடைய இணையைத் தேடி ஆண்மான் குரல்
கொடுக்கிறது, அதை குகையில் படுத்திருக்கும் ஆண்புலியும் கேட்கிறது, அந்த ஆண்புலி இதுதான் வேளை என அந்த மானைத்
துரத்திப்பிடிக்காமல் அந்தக் குரலைச் செவிமடுப்பதாகக் குறிப்பிட்டிருப்பது இங்கே
கவனிக்கப்பட வேண்டியது. தன்னுடைய இணையைச் சேர்ந்திருக்கத் தேடுகிற ஆண்மானை அந்த
ஆண்புலி தாக்கி இரையாக்கி கொள்ளவில்லை என்பதும் உட்குறிப்பு. எனவே காதல், காமம், கருணை,
வீரம், படை நடத்துதல் ஆகியவற்றின் அதனதன் பொழுதை கலைத்துவிடாதவனாக ஒரு நல்ல தலைவன்
இருக்கிறான் எனவும் பொருள் கொள்ளலாம். ஆண்பாற்புலவர்கள் நிறைந்திருந்த காலத்தில்
ஒரு பெண் பாடல் எழுதுகிறவளாகவும் தன்னுடைய நிலத்தின் தலைவனை பிறர் முன்பு
போற்றிப்பாடுகிற அளவிற்கு தெளிவும் உள்ளவளாகவும் இருந்திருக்கிறாள். இவ்வாறு மன்னனைப்
போற்றிப்பாடி பரிசு பெறுகிற புலவர்களின் பண்பு சுற்றத்தினைக் காக்கிற தலைவனை பாராட்டுகிற
செயலாக மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.
வாய்மொழியாக சொல்லப்பட்ட குழந்தைகளுக்கானக் கதைகள் அச்சிடப்பட்ட
புத்தகங்களாகவும், சித்திரக்கதைகளாகவும் வெளியாகின. அதன்பிறகு நவீனத் தொழில்நுட்ப
உதவியோடு தற்போது அனிமேஷன் திரைபடங்களாகக் காணக்கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களைச்
சுற்றிலுமுள்ள பண்பாட்டு விழுமியங்களை விதவிதமான கதைகளைக் கேட்பதும், பார்ப்பதும்
வாயிலாக பெரிதும் உள்வாங்கிக்கொள்கிறார்கள். எனவே மேற்கத்திய நாடுகளில்
குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு அனிமேஷன் திரைப்படங்களை ஒரு முக்கியக்கருவியாகக்
கையாளுகிறார்கள். “How to train your dragon“ என்பது அவ்வகையிலான ஒரு அமெரிக்க அனிமேஷன் திரைப்படம். அந்தக் குழுவின் தலைவனாக இருப்பவன் தன்னுடைய
உயிரைக் கொடுத்து குழுவினரையும் மகனையும் காக்கிறான். சிறுவனாக இருக்கும் மகனே
அந்தக்குழுவின் அடுத்த தலைவனாகவும் ஆவான். ஆணாக இருப்பதன் தகுதியும், கடமையும்
தன்னுடைய சுற்றம் காப்பதுதான் என காட்சி ஊடகங்கள் மூலமாக குழந்தைகளுக்கு இதுபோன்ற
அனிமேஷன் திரைப்படங்கள் பயிற்றுவிக்கின்றன. மேலும் இக்கதைகளில் அந்த ஆண் சோர்ந்து
போகும்பொழுது அவனை ஊக்கப்படுத்த ஒரு பெண் உடனிருப்பதாகவே காட்சிகள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.
சங்ககாலம் தொடங்கி இன்றையகாலம் வரையில் பொருள்தேடப் பிரிந்து செல்கிற
ஆணை திடப்படுத்துகிறவளாகவும் அவனுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய
விருப்பங்களை விட்டுக் கொடுக்கிறவளாகவும் பெண்ணே இருக்கிறாள். அந்த ஆண் சோர்வடைகிற
சூழலில் அவனை அவளே ஊக்கப்படுத்துகிறாள். திருமணமாகி புகுந்தவீட்டுக்கு வந்த ஒரே மாதத்தில்
தன்னுடைய அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் நகைகளை அடமானம் வைத்து கணவன்
வீட்டுக்கடனைத் தீர்க்கிற பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர். புகுந்தவீட்டின்
குறைகளைப் பெற்றோரிடம் சொல்லக் கூசுவார்கள். கணவனின் பிழைகளைக் கூட தன்னுடையதாகக்
கருதுவார்கள். எனவே பிறந்தநாள் முதலாக அம்மாவை விட்டுப்பிரியாத பெண்பிள்ளைகள் கூட
திருமணம் ஆனவுடன் கணவனை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவனுடைய சுற்றத்தை
அவளுடைய சுற்றமாக ஏற்றுக்கொள்கிறாள். பெண்களின் இவ்வகையான பற்றுதலே ஒரு ஆணை குடும்பத்தின்
தலைவனாக தொடர்ந்து இருக்க வைக்கிறது. அதனாலேயே அந்த ஆண் பெருமரமாகவும் அவனுடைய
கூட்டில் பலருக்கும் அடைக்கலம் தருகிறவனாகவும் வாழ முடிகிறது.
ஒரு குடும்பத்தின் தலைவனாக இருக்கும் ஆண், சுற்றத்தினர்
பலருக்கும் இளைப்பாறுதல் தருகிறான்.
இக்குடும்ப அமைப்பில் ஆண் மையமாகவும், பெண் அவனை இயக்குகிறவளாகவும் இருக்கிறாள்.
பறவைகள் பலவும் தங்கிச் செல்லவும், கூடுகட்டி, பல்கிப்பெருகவும் ஒரு ஆண்
பெருமரமாகி நிற்கிறான் எனில் அந்த பெருமரத்திற்கு தன்னுடைய காதல், கண்ணீர், காமம்,
காத்திருப்பு ஆகிய உணர்வுகளினால் நீர் வார்த்துக் கொண்டேயிருக்கிறாள் அவனுடைய
பெண். கவிஞர்
உமா ஷக்தியின் கவிதை,
“வாழ்வின் வலிகள் சுமந்து
புறப்பட்டாய்
அண்ணனாகவும்
மகனாகவும்
இந்த குடும்பத்தின் ஆணாக
நிறைவேற்றவேண்டியது
ஆயிரம் இருக்கிறது உனக்கு
முன்பாக
செல்வத்தின் நறுமணம்
நமதில்லத்தினில் நிலைத்திட
பொருள்தேடும்
பணிகளில் வசப்பட்ட
வாழ்வின்
யதார்த்தத்தை
பிரிந்து செல்கையில்
நொடி நேர மெளனத்தில்
உணர்த்துகிறாய்
தூர நிலத்திலிருந்து
அலைபேசிக் குரலில்
கனிந்துருகுகிறாய்
கண்ணீரும் காதலும் கசியும்
என் விழிகளின்
காந்தத்தை எங்கிருந்தும்
பருகுகிறாய்
என்
காமம் ததும்பும்
யாழிசை
உனக்காகவே
காத்திருக்க
நம் முத்தங்களின் கதகதப்பில்
யாவருடைய நாட்களையும்
சுகத்தில் மிதக்கச் செய்கிறாய்
குடும்பத்தின் ஆண்மகனாக
உன் தோளின்
வலிமையையும்
மார்பின் குளுமையையும்
நான்
பத்திரப்படுத்தியிருக்கிறேன்
என்னுடைய சின்னஞ்சிறிய அகலில்.”
இவர் பாடியதாக ஒரே பாடல் புறநானூற்றில் கிடைத்துள்ளது. பாடல் : 157
=============================================================================
=============================================================================
No comments:
Post a Comment