Thursday, 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-குமிழி ஞாழலார் நப்பசலையார் ..






ஒரு பெண் அச்சத்திலிருக்கிறாள் :
                                    
“ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே? ...”

களவு எனப்படும் காதலின் தொடக்கக்கட்டத்தில் யாருமறியாமல் ஆணைச் சந்திக்கிற பெண்ணுக்கு இரண்டு அச்சங்களிருக்கும். அலர் பேசுகிற ஊரின் பழிச் சொல்லுக்கு ஆளாகிவிடகூடாதே என்கிற அச்சம் முதலாவது. மற்றது,  காதலிப்பதாகச் சொல்லி இப்போது உருகும் இவன் வாழ்நாள் முழுவதும் தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வானா என அவன் மீது கொள்கிற அச்சம். ஆனால் அதே ஆண் ஊர் பார்க்க, மணம் முடிக்க வரும்பொழுதும் பெண்ணுக்கு ஒரு அச்சமிருக்கும். அது அவளின் கண்களில், உடலில் ஏற்படுகிற பரவசத்தின் மிகுதியை ஊர் கவனித்துவிடக் கூடாதே என்பதாக  இருக்கும். அவளுடைய அந்தரங்கமான உணர்வுகள் எதுவாயினும் அவை தன்னுடைய ஆணுக்கானவை என்று  கருதுகிறாள். அத்தகைய அவளது உணர்வுகளை  பாதுகாக்க வேண்டியது ஆணின் கடமையாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாடித்தோட்டம் போட்டு பூக்கள், காய்கறிகள் பயிரிடுகிற பழக்கம் சமீபகாலமாக நிறையப்பேருக்கு வந்துள்ளது. பலர் இதை சிறப்பாக செய்தும் வருகிறார்கள். இப்படி வீட்டுத்தோட்டம் போட்டு பராமரிக்கிற பலருக்கும் அவர்களுடைய கிராமத்து நினைவை, விவசாயக் கனவை மீட்பதாக இருக்கலாம். ஆனால் தொட்டிகளில் தாவரங்கள் வளர்ப்பதென்பது இப்போது புதியதாகத் தொடங்கிய செயல் அல்ல. சங்ககாலப்பெண்கள் தாழிகளில் பருத்திச்செடிகளை வளர்த்ததாக அகநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.  

நகர்ப்புறங்களில் வீடுகள் பெருகத் தொடங்கியவுடன் அழகுக்காக தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கத் தொடங்கினார்கள். பின்பு காய்கறிச் செடிகள் வளர்க்கிற விருப்பமாக வளர்ச்சியடைந்துள்ளது. கிராமப்புற விவசாய குடும்பங்களில் கூட தொட்டிகளில் பூச்செடிகள் வளர்கிறார்கள். ஒரு காலக்கட்டம் வரை ஆடிமாதத்தில் பலவீடுகளில் பந்தல் தாவரங்கள் வளர்க்கும் பழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மெல்ல மெல்லக் குறைந்து பெரும்பாலும் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய மாடித்தோட்டங்கள் மறுபடியும் பந்தல் தாவரங்களையும் மீட்டெடுத்திருக்கின்றன தோட்டம் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்து வீடுகளிலும் தாவரங்கள் ஒரே மாதிரியான பலனைத் தருவதில்லை. விவசாயத்தின் அடிப்படையே அதுதான். அந்தந்த மண்ணுக்குத் தகுந்த பயிரினைப் பயிரிட முன்னோர்களிடமிருந்து பாரம்பரியமாகப் பயின்று வந்திருக்கிறோம். எல்லாத் தாவரங்களும் எல்லா நிலத்திலும் வளருவதில்லை. சிலசமயம் பரிசோதனை முயற்சியாக மலைவாழ் தாவரங்களை சமவெளியிலோ, சமவெளித் தாவரங்களை மலையிலோ வளர்க்க முயலும்போது அவை முழுமையான பலனைத் தருவதில்லை.
சென்னை அல்லது மதுரை அல்லது வேறு நிலப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மல்லிகைப்பூ ஒரே மாதிரியான வாசனையையும் வண்ணத்தையும் அளவினையும் கொண்டிருப்பதில்லை. மதுரையில் பூக்கும் மல்லிகையின் வாசனையோ வண்ணமோ அல்லது அளவோ மற்ற பகுதியைச் சேர்ந்த மல்லிகைகளுக்கு இல்லை. இதனை  போலத்தான் வேறு எந்தத்தாவரத்தின் இயல்பும் எல்லாநிலத்திலும் ஒரேபோல இருப்பதில்லை. இவ்வாறு ஒரே வகையான தாவரமே கூட நிலத்திற்கு நிலம் வேறுபடுவதற்கு காரணம், அந்தத்தாவரம் வளருகிற நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை, தண்ணீர், காலநிலை மற்றும் தாய்த்தாவரத்தின் தன்மை ஆகியன அதற்குப் பொறுப்பாகின்றன. இவை தவிர ஒரு தாவரம் தகுந்த பலன் தருவதற்கு அந்தத்தாவரத்தைக் கவனிப்பதும் முக்கியமாகிறது. தாவரமோ வளர்ப்பு விலங்குகளோ அல்லது வாகனங்களோ பராமரிப்பது, பாதுகாப்பது ஆகியவற்றைப் பொறுத்தே அதனுடைய முழு பலனையும் நாம் அனுபவிக்க முடியும்.

ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு பயன்பாடு உள்ளது. அதற்குத்தக அதனதன் இடத்தில் அதனை வைக்கிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் நம்மிடம் வேறுவேறு  உரிமை இருக்கிறது. எல்லோரையும் அல்லது எல்லாப் பொருள்களையும் ஒரே இடத்தில் வைத்துவிட இயலாது. அதேபோல அனைத்துப் பொருள்களையும் அல்லது எல்லாவிதமான நினைவுகளையும் காலம் முழுக்கப் பாதுக்காக்க இயலாது.  ஆனால் பாதுகாக்கப்பட வேண்டியவையென நம்மிடையே பல பொருள்கள், சில நினைவுகள் மற்றும் சில நுட்பமான உணர்வுகள் இருக்கின்றன. காலம் முழுக்கப் பாதுகாக்கப்பட வேண்டிய இவற்றைப் பத்திரப்படுத்துவதில்தான் உயிர்ப்புடனிருக்கிறோம். சில மென்மையான தனித்த குணத்தை ஒவ்வொருவரும் தன்னளவில் பாதுக்காக்க வேண்டியதும் அவசியமாகிறது.

இயற்கையாக அமைந்த உடலியற்கூறு அவரவர்களுக்கென தனித்த நுட்பமான உணர்வுகளைத் தந்திருக்கிறது. சில அந்தரங்கமான உணர்வுகளும் அப்படியானவையே. ஒருவர் அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையின் மூலமாக மற்றவர் அதனைப் புரிந்துகொள்ள இயலுமே தவிர, அவ்வுணர்வு சார்ந்த அனுபவிப்பை மற்றவர் உணர்ந்துவிட இயலாது. ஆண், பெண் என இருவருமே சம்பந்தப்பட்டிருந்தாலும் கண்ணீரும், வலியும், காதலும், காமமும் அவரவர்களுக்கான தனித்த உணர்வே. ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த இடைவெளியே ஒருவர் மீது மற்றவரை ஈர்ப்பு கொள்ள வைக்கிறது.
காதலினால் ஏற்படுகிற மகிழ்வோ, துயரமோ அல்லது கண்ணீரோ தனித்த ஒருவர் தானே ஏற்படுத்திக் கொள்ள இயலாது. அனுபவிப்பு என்பது தனியானது என்றாலும் அது உருவாவது தனித்த ஒருவரால் அல்ல. காதல் வயப்பட்ட ஒருவரின் உலகமென்பது அவர்களால் அசைவுறுவதை விடவும், அவர்களின் மீது பிரியம் கொண்ட மற்றவரால்தான் முழுமையாக அசைவுறும். இந்த அசைவினை சம்பத்தப்பட்டவர் உணர்ந்து கொண்டால் மட்டுமே அவரவர்களுக்கான தனித்த உணர்வென்பது இருவருக்குமான பொதுவான ஒரே உணர்வாக மாறும். இதனை வெளிப்படுத்துகிற கவிஞர் ரத்திகாவின் கவிதை ஒன்று,

“நீ எதுவும் செய்யவில்லை
என் பாதங்கள் பதிந்திருந்த
பூமியை
சற்றே நகர்த்திவைத்தாய்
அவ்வளவு தான்

அந்தரத்தில்
நடப்பதென்பதும்
மிதப்பதென்பதும்
வாழ்வதென்பதும்
எவ்வளவு கடினம் தெரியுமா”

காதலில் ஒரு பெண்  நெகிழ்ந்திருப்பதற்கும், காதலாகி ஒரு ஆண்  கசிந்திருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. காதல் கொண்ட பெண்ணின் பாதங்கள் தரையில் நிற்பதில்லை. மேலும் அவள் நிகழ்காலத்திலும் இருப்பதில்லை. அவளின் நினைவில் அவனுடைய சொற்களும், செயலும் நிறைந்திருக்கும்.

காதலில் தன்னை முழுவதும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கிற பெண்ணை ஒரு ஆண் முற்றிலும் புரிந்து கொள்கிறானா என்பது கேள்விகுறி தான். மனதார நேசிப்பவனுடன் உறவு கொள்கிற ஒருத்தி ஏதோ காரணங்களினால் இணைந்து வாழ இயலாமல் போய்விட்டால் தன்னை உடலளவில் மீட்டுக்கொள்வாள். ஆனால் மனதைத்தான் மீட்க இயலாமலும் அல்லது மீட்க வழியறியாமலும் தவித்துக் கொண்டிருப்பாள். இத்தகையப் பெண்ணின் அந்தரங்கத்தைப் பாதுக்காக்கிற பொறுப்பும் கடமையும் அதற்குச் சம்பந்தப்பட்ட ஆணுக்குத்தான் முழுமையாக இருக்கிறது.   இதனைப் பற்றி சங்கப் பெண்பாற்புலவர் குமிழி ஞாழலார் நப்பசலையாரின் அகப்பாடல், 

“ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே? 
நடுங்கின்று, அளித்தென் நிறையில் நெஞ்சம் 
அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக் 
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி, 
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த
கேட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப் 
பார்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க் 
கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன் 
முள்ளுறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல 
வாவுஉடை மையின் வள்பிற் காட்டி,
ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி 
செழுநீர்த் தண்கழி நீந்தலின், ஆழி 
நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல், 
பாம்புஉயர் தலையின் சாம்புவன நிவப்ப, 
இரவந் தன்றால் திண்தேர்; கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய் 
அரவச் சீறூர் காணப் 
பகல்வந் தன்றல், பாய்பரி சிறந்தே.”

இந்தப் பாடல் சொல்வது, “உப்பங்கழியில் அடும்புக்கொடி அழியுமாறு இழுத்துச் சேர்த்த வெண்மையான மணல் மேட்டிலே, நிறைந்த சூலினை உடைய ஆமை மறைவாக ஈன்று புதைக்கிறது. யானைக் கொம்பினாலே செய்த வட்டினைப் போன்ற உருவத்துடன் புலால் நாற்றமடிக்கும் முட்டையினை குஞ்சு உயிர்த்தெழுந்து வெளிப்படுகின்ற காலம் வரையிலும் திறந்த வாயினையுடைய ஆண் ஆமை பாதுகாக்கும் நிலத்துக்கு உரியவன் நம் தலைவன்.
நம் தலைவனின் தேரில் பூட்டிய குதிரைகள், அம்பின் வேகம்போல பாய்ந்து செல்வதில் பழக்கம் கொண்ட அழகிய நடையை உடையன; தாற்று முள்ளால் குத்தினால் குதிரைகள் அதிவேகம் கொள்ளுமென அஞ்சி வளவன் கடிவாள வாரினாற் குறிப்பு காட்ட அக்குதிரைகள் தாமும் வளவனின் கருத்துணர்ந்து மெல்ல மெல்ல தாவி சென்றன; எதிர்ப்பட்ட செழித்த நீர் நிரம்பிய குளிர்ந்த  உப்பங்கழியினைக் கடக்கும் பொழுது அத்தேர்ச் சக்கரத்தின் கூர்மையான முனையால் அறுக்கப்பட்ட  குவிந்த நெய்தலின் அரும்புகள் உயர்த்தப்பட்ட பாம்பின் தலைகள் போல வாட்டமுடன்  நீரின் மேலே எழ, நம் தலைவரின் தேர் இதுவரையில் இரவு நேரத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்தது;
இப்போதோ அந்த தேர்ச்சக்கரத்தில் சிக்கிய அடும்பின் கொடிகள் சிதையுமாறு அவற்றை வலித்து இழுத்துக் கொண்டுவந்து உப்பங்கழியில் உயர்ந்த வெண்மையான மணல்மேட்டின் பக்கமாகச் சேர்த்தது.  தன்னுடைய வருகையை கொஞ்சமும் ஒளிக்காது ஆரவாரமாக சப்தமிடுகிற சிறுவர்கள் சூழ, வலிய வாயினாலே அலர் பேசிக்கொண்டிருக்கும் நம்முடைய சிற்றூர் முழுக்கக் காணுமாறு பாய்ந்து செல்லும் குதிரைகளின் வேகத்தால் சிறப்பான தலைவனின் தேர் பகல் வேளையிலேயே வந்து கொண்டிருக்கிறதே!
அதனைக் கண்டதும், நிறையில்லாத என்னுடைய நெஞ்சம் நடுங்கியது, அது இரங்குதற்கு உரியது! ஒடுங்கிய கருமையான கூந்தலையுடையவளே! உனக்கும் அப்படித்தான் இருந்ததா என்று, தோழி தலைவியிடம் கேட்கிறாள்.”
களவில் சந்தித்து மகிழ்ந்த பெண்ணை, உரிய காலம் வந்ததும் அல்லது சரியான காலத்தில் பகல் பொழுதில் பெருத்த ஆரவாரத்துடன் தலைவன் பெண்கேட்டு வருகிறான். இதைப் பார்க்கிற தோழி, இத்தனை நாட்களாக சத்தமிடாமல் இரவில் இரகசியமாக சந்தித்தவன், இன்று ஊர் பார்க்க பகலில் வருகிறான். ஊரோ, அலர் பேசுவதில் வலியது. இதனை அறிந்திருக்கும் தலைவன் ஊர் பார்க்க கொண்டாட்டமாக வருகிறான் என்றால் நல்ல விஷயமாகத்தான் இருக்கும். ஆனாலும் என் உள்ளம் அச்சப்படுகிறது, உனக்கும் அப்படியிருக்கிறதா எனத் தலைவியிடம் கேட்கிறாள். தலைவன் நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்று அறியமுடிகிறது. தலைவி வேறு நிலத்தைச் சேர்ந்தவள்.  கடற்கரையோரம் வெண்மையான மணல் மேட்டில் பெண் ஆமையானது  முட்டையிட்டு புதைத்து வைக்கிறது. அது பொறித்து உயிராக வெளிவரும் வரையில் ஆண் ஆமை தன்னுடைய திறந்த வாயுடன் காவல் செய்கிறது. இந்த திறந்த வாய் என்பது அந்த ஆண் ஆமையின் விழிப்பு நிலையைச் சொல்கிறது. இப்படியான நிலத்தைச் சேர்ந்தவன் நம் தலைவன் என்கிறாள் தோழி. ஆக, ஆணை அந்த நிலத்தோடு சேர்த்து அடையாளப்படுத்திச் சொல்வது மூலமாக அந்த நிலத்தில் வாழுகிற உயிர்களின் பண்பை அவனும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்துகிறாள்.  புதிய உயிர் வெளிவரும் வரையில் ஆண் ஆமை விழிப்புடனும், காத்திருந்தும்  காவலிருப்பதைக் கண்டு வாழுகிற ஆண், இயல்பிலேயே தலைவியைப்  பாதுக்காக்க வேண்டியதை அறிந்திருப்பான். நிலத்தின் தன்மையில் அதற்கேற்ப வளருகிற தாவரங்களைப் போலவே, அந்த நிலத்தில் வாழுகிற உயிர்களின் இயல்புகளை அங்கு வாழ்கிற மனிதர்களும் தங்களுக்குள்  ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும். எனவே அலர் பேசுகிற ஊரில் தலைவியின் காதலையும் அவளின் மனதையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான் இருக்கிறது என்பதால்தான் ஊரே பார்க்க ஆர்ப்பரித்து அவளைத் திருமணம் செய்ய வருகிறான்.

கே.பாக்யராஜின் ஆரம்பகால வெற்றிப்படங்களில் ஒன்று “தூறல் நின்னுபோச்சு”. 80களில் வெளியான  இத்திரைப்படம் பெண்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில், “ஊரே வேடிக்கை பார்க்க ஆரவாரமாக ட்ராக்டரில் கதாநாயகன் நாயகியைப் பெண்கேட்டு வருகிற காட்சி ஒன்று உள்ளது. கதாநாயகி அச்சமும் பதற்றமும் தவிர வேறொன்றும் அறியாதவளாக இருப்பாள். தன்னை அந்த மாப்பிள்ளைக்குப் பிடிக்கவேண்டுமே என்கிற பதற்றமும், பெண்ணாய் பிறந்ததே பெண் பார்க்க வருகிற முதல் மாப்பிள்ளைக்கே தன்னைப் பிடித்து, திருமணம் செய்து கொள்வதற்காகவும்தான் என்பதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும். அன்றிருந்ததைப் போல இருந்ததுபோல பார்க்கிற முதல் மாப்பிள்ளைக்கே தன்னைப் பிடிக்க வேண்டுமென எந்தப்பெண்ணும் இன்று காத்திருப்பதில்லை. தவிர, இப்போதெல்லாம் திருமணம் பேசியவுடன் பெண்ணும் பையனும் தங்களைப் பற்றிப் பேசிக்கொள்ள பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளன. ஆண், பெண் உறவு முறைகளிலும் திருமணத் தேர்விலும் பலவேறு விதமான மாற்றங்கள் வந்துவிட்டது. என்றபோதிலும், சமீபத்தில் என்னுடைய உறவினர் குடும்பத்தில் பெண்ணுக்கு “பெண் பார்க்கும்” நிகழ்வு ஒன்றிற்குப் போயிருந்தேன். பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்று, தங்கப் பதக்கம் வாங்கிய, ஆடலும் பாடலும் கற்றுத் தேர்ந்திருந்த, துணிச்சலும் அறிவும் நிரம்பிய இந்தத் தலைமுறைப்பெண் அவர். மாப்பிள்ளையுடன் மிக இயல்பாக அலைபேசியிலும் நேரிலும் பேசியிருக்கிறாள். ஆனால் மாப்பிள்ளை மோதிரம் அணிவிக்கும்போது அவளின் விரல்களில் அத்தனை நடுக்கம் இருந்தததைப் பார்த்தேன்.


களவு எனப்படும் காதலின் தொடக்கக்கட்டத்தில் யாருமறியாமல் ஆணைச் சந்திக்கிற பெண்ணுக்கு இரண்டு அச்சங்களிருக்கும். அலர் பேசுகிற ஊரின் பழிச் சொல்லுக்கு ஆளாகிவிடகூடாதே என்கிற அச்சம் முதலாவது. மற்றது,  காதலிப்பதாகச் சொல்லி இப்போது உருகும் இவன் வாழ்நாள் முழுவதும் தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வானா என அவன் மீது கொள்கிற அச்சம். ஆனால் அதே ஆண் ஊர் பார்க்க, மணம் முடிக்க வரும்பொழுதும் பெண்ணுக்கு ஒரு அச்சமிருக்கும். அது அவளின் கண்களில், உடலில் ஏற்படுகிற பரவசத்தின் மிகுதியை ஊர் கவனித்துவிடக் கூடாதே என்பதாக  இருக்கும். அவளுடைய அந்தரங்கமான உணர்வுகள் எதுவாயினும் அவை தன்னுடைய ஆணுக்கானவை என்று  கருதுகிறாள். அத்தகைய அவளது உணர்வுகளை  பாதுகாக்க வேண்டியது ஆணின் கடமையாகும்.


ஒரு பாடல் அகநானூற்றில் (பாடல்: 160) மட்டும் பாடியுள்ளார்.



No comments: