Thursday, 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :
-அஞ்சியத்தை மகள் நாகையார் ..






ஒரு பெண் நிகழ்த்துகிறாள் : 

வதுவை நாளினும் இனியனால் எமக்கே ...

ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் சந்திப்பிலேயே கணவனாகப்போகிறவனை இனியவன் என்று பெரும்பாலும் பெண் நம்பத் தொடங்கிவிடுகிறாள். அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைப்பதற்கு முன்பாகவே அவனே தன்னுடைய ஆண்என நினைக்கிறாள். மேலும் அவன்தான் இவ்வுலகின் மிகச்சிறந்த ஆண் என்றும், அவனுடைய நெஞ்சில் தன் ஒருத்திக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், தன்னால் மட்டுமே அவனை அரவணைத்துப் போகமுடியுமெனவும் நம்புகிறாள். இந்நம்பிக்கையின் அடிபடையிலேயே ஒருபெண் அவளுடைய ஆணுடன் கூடி வாழத்  தொடங்குகிறாள்.
_____________________________________________________________________________

சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் இரயில்பயணத்தில் உடன் பயணித்த முதிர்ந்த தம்பதியரைப் பார்த்தேன். மனைவி சுமார் அறுபத்தைந்தும், கணவர் எழுபதிற்கு மேலும் வயது இருக்கலாம். அந்த இரவுப்பயணத்திலும் களைத்துப் போய்விடாத தெளிந்தமுகம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் செயலும் பாவனைகளும் மட்டுமல்ல உடலசைவுகளும்  ஒன்றுபோலவே இருந்தது. நீண்டகால தாம்பத்தியம் அவர்களை அவ்விதமாக ஆக்கியிருக்கலாமெனத் தோன்றியது. மூன்றடுக்கு இருக்கையில் இரண்டு பக்கங்களிலும் மையத்தில் அவர்களுக்கு படுக்கை கிடைத்திருந்தது. தன்னுடைய மனைவிக்கு கீழ்ப்படுக்கை அமைத்துத்தருவதில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.  பயணச்சீட்டு பரிசோதகரிடம் கேட்டுப் பார்த்தார். அவரோ, “பயணிகளுக்குள் நீங்களே அனுசரித்து மாற்றிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.  காலியாக இருந்த கீழ் படுக்கைகளுக்கு  கொடைரோட்டில் ஆள் ஏறுவதாக இருந்து,  ஒரு பெண்ணும் அவருடைய வயதான தாயாரும் திண்டுக்கல்லில் ஏறினார்கள். அந்தப்பெண்ணிடம் தன் மனைவிக்கு இடத்தை விட்டுக்கொடுக்குமாறு  கேட்டார். அந்தப்பெண், உடல் நலமின்றி இருப்பதாகவும்  இடையிடையே எழந்து கழிப்பறைக்குப் போகவேண்டியிருக்கும் எனச்சொல்லி  இடமாற்றதிற்கு மறுத்துவிட்டார். மேலடுக்கில் எனக்கு படுக்கை கிடைத்திருந்ததால், இவற்றையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது. பிறகு அவர் பக்கத்துத் தடுப்பிற்குச் சென்று, “கீழ்ப்படுக்கையை யாராவது விட்டுத் தரமுடியுமா” எனக் கேட்டார். இளைஞன் ஒருவன் இடம் மாற்றிக்கொள்வதாகச் சொல்லி முன்வர,  ஓடும் இரயிலில் மனைவியின் கைப்பிடித்து அழைத்துச்சென்று படுக்க வைத்துவிட்டு, திரும்பிவந்து தன்னுடைய இடத்தில் ஏறிப் படுத்துக்கொண்டார். அப்போது இரயில் திருச்சியை நெருங்கியிருந்தது. ஓடும் இரயிலின் தள்ளட்டத்திற்கு ஒப்ப மதுரையிலிருந்து திருச்சிவரை அவர் தன்னுடைய மனைவிக்காக அல்லாடியது நினைவில் பதிந்துவிட்டது.

இதுபோன்ற காட்சியை இரயில் பயணங்களில் மட்டுமல்ல, இரவுநேர பேருந்துப்பயணங்களிலும் காணலாம். நள்ளிரவில் சிறுநீர் கழிக்க இறங்குகிற மனைவிக்குத் துணையாகச் செல்வார்கள். தண்ணீரோ, காப்பியோ வேண்டுமா எனக்கேட்டு பரிவுடன் நடந்துகொள்வார்கள்.  தவிர, முதுமையினால் தளர்ந்த நிலையிருக்கும் ஆண் தன்னுடைய மனைவியின் கைப்பிடித்து சாலையைக் கடக்கச்செய்யும் காட்சியை அன்றாடம் காணமுடிகிறது. அவர் ஒரு தடியின் துணைகொண்டே நடப்பவராககூட இருக்கலாம் என்றபோதிலும்  நீண்ட காலத் தாம்பத்தியம் அமையப்பெற்ற  இதுபோன்ற தம்பதியர்களை அவதானிக்கும்போது வாழ்வின் பொருள் என்பது வேறுவிதமாகப்  புரியத்தொடங்கும்.

நாம் ஆண்பெண் நெருக்கத்தை, காதல் என்ற அடிப்படையில் இளமையோடு தொடர்புடைய ஒன்றாகவே பார்த்துப்பழகி விட்டோம். மாறாக, வயது முதிர்ந்தோர்களிடையே காணப்படும் அன்னியோன்யத்தை விவரிக்கும் எழுத்துகளும் திரைப்படங்களும் அதிகமாக இல்லாவிட்டாலும் அரிதாகவேனும் தட்டுபடத்தான் செய்கிறது. அவ்வகையில், மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணியைக் குறிப்பிட வேண்டும். அந்தத் திரைப்படத்தில் அல்சைமர்என்கிற மறதிநோயினால் நலிவடைந்திருக்கும் வயதான மனைவியிடம் அவருடைய கணவன் காட்டுகிற பரிவும் அரவணைப்பும் நேர்த்தியானது. இதுபோன்ற முதிர்ந்த கணவர்களின் பரிவிற்குக் காரணம் திருமணமான காலகட்டத்தில் எல்லாவற்றையும் அவனுக்காக விட்டுகொடுத்த மனைவியே காரணமாக இருப்பாள்.

திருமணமான ஆரம்பகாலத்தில் கணவன் மனைவி இருவருக்குமிடையில் பல்வேறுவிதமான வேறுபாடுகள் இருக்கும். உடலின் வாசனையோ, அன்னிச்சியையான ஒரு செயலோ அல்லது வேறு எதுவுமோ அவர்களுக்குள் பிடிக்காமலிருக்கும். வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் உணவின் சுவைகூட  வேறுவேறாகதான் இருக்கும். உடுத்துவது, உறங்குவது  என அன்றாடத்தின் பழக்கவழக்கங்களில் இருவருமே மாறுபட்டிருப்பார்கள். இப்படி எத்தனையோ வேறுபாடுகள் இருந்தும் நீண்டகால தாம்பத்தியத்தின் மூலமாக நகர்ந்திருப்பார்கள்.

“என் மனைவியைப் பற்றிய ஒரு எளிய பாடல்” என்று “மிக்லோஷ் ராட்நோட்டி” என்கிற ஹங்கேரியக் கவிஞரின் கவிதை ஒன்று உண்டு. (அவ்வப்போது பறித்த அக்கரைப் பூக்கள்- எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா)

கதவு கீறீச்சிடுகிறது
அவள் உள்ளே நுழையும்போது
பூந்தொட்டிகள் சப்புக் கொட்டுகின்றன
அவளது தலைமுடியில்
சிறிய வெண்ணிறக்கோடு கனவுத் தோற்றத்துடன்
பீதியடைந்த குருவிபோலக் கீச் கீச் என்கிறது

மின்விளக்கை எரியச் செய்யும் கம்பியும் கூவுகிறது
தனது அலங்கோலமான உடல் அவள்மீது உராயும்போது
எல்லாமே சுழல்கின்றன
அதைப்பற்றி என்னால் எழுதக் கூட முடியவில்லை

நாள் முழுக்க வெளியே சென்றிருந்த அவள்
திரும்பி வந்துவிட்டாள்
அவளது கையில் பெரிய பாப்பி மலரிதழ்
அதைக் கொண்டு விரட்டியடிப்பாள் மரணத்தை

ஒரு மென்மையான மலரிதலைக் கொண்டு நெருங்கிவரும் மரணத்தை விரட்டக்கூடிய வலிமை அன்பு ஒன்றுக்குத் தான் உண்டு. அதை வயது கூடக்கூட நாம் அதிகமாகப் புரிந்துகொள்கிறோம்.

வயதான பின்பு கணவன் இறந்துவிட்டால் பெண்கள் மகன் வீடு, மகள் வீடு என அவர்களை அனுசரித்துக் கொண்டு தங்கள் வாழ்வைத் தொடரும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். ஆனால் மனைவி இறந்துவிட்டால் கணவன் மிகவும் தளர்ந்துபோய் விடுகிறான். பொதுவாக தகப்பன், சகோதரன், பிறகு கணவன் ஆகியோரைச் சார்ந்திருக்கும் மனநிலையிலேயே பெண் வளர்க்கப்படுகிறாள். எனவே  கணவன் இல்லாவிட்டாலும் மகனிடமோ மகளிடமோ இணைந்து தங்களுடைய வாழ்வைத் தொடர பெண்ணால் இயலுகிறது.

ஆனால் ஆண் என்பவன் குழந்தைப்பருவம் முதலே தனித்து வளர்க்கப்படுகிறான். அவனது உணவு, உடை, வாழுகிற சூழல், புழங்கும் வெளி ஆகியன பெண்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. குடும்பதிற்காக ஆண்தான் பொருளீட்டுகிறான், தன்னுடைய கையில் வருமானம் பார்க்கத் தொடங்கியவுடன் அவனுக்கு ஆண்என்கிற எண்ணமும், அது சார்ந்த சமூகத்தின் கற்பிதங்களும் மேலோங்குகிறது. அவனைச் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மையமாக தானே இருப்பதாக நினைக்கிறான். தண்ணீரைச் சூடாக்கிக் குடிப்பது, சமைத்த உணவை  தானே போட்டு சாப்பிடுவது, தன்னுடைய உடைகளைத் தானே துவைப்பது, தன்னுடைய பொருள்களை தானே ஒழுங்கு செய்துகொள்வது போன்ற அடிப்படையான வேலைகளைக்கூட செய்ய விரும்புவதில்லை. அவற்றையெல்லாம் மனைவி பார்த்துக்கொள்வாள் எனவும் அவனையும் அவன் குழந்தைகளையும் பராமரிப்பதற்காகவே   மனைவி என்பவள் இருக்கிறாள் எனவும் நினைக்கிறான். எனவேதான்  நீண்டகால இணையாக வாழ்ந்த  மனைவி இறந்தபின்பு கணவன் செயலிழந்து போகிறான். தனிக்குடும்பமாக ஆகிவிட்ட மகன்களையும் மகள்களையும் சார்ந்துவாழ ஆண் பெரும்பாலும் விரும்புவதில்லை. மேலும் தன்னுடைய மனைவியின் இழப்பிற்குப் பிறகு தனக்கென இந்த உலகத்தில் ஒருவருமே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான். ஆண்தான் இந்தச் சமூகத்தின் மையம் எனில், அவனுக்கு இணையான பெண்ணை இழந்தபின்பு அவன் ஏன் இவ்விதமாகத் தளர்ந்து போகவேண்டும். 

திருமணத்திற்குப் பிறகும் ஒரு ஆணின் இருப்பிடச்சூழல் மாறுவதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்ந்த இடத்தைவிட்டு வேறொரு புதிய சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவள் புகுந்தவீட்டில் சந்திக்க நேரும் குழப்பங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய மாறுதல்களையும் அவள் வீட்டிலுள்ள பெரியவர்கள் வலியுறுத்திக் கூறுவார்கள். மேலும் புதிய பழக்கவழக்கங்களுக்கும் சூழலுக்கும் அனுசரித்தும் விட்டுக்கொடுத்துப் போகும்படி சொல்லியனுப்பவதைக் காணலாம்.
களவு, கற்பு என இரண்டுவகைகளில் சங்ககால அகவாழ்வு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இவையிரண்டுமே பெண்களுக்கான பாலியல் ஒடுக்கத்தை வலியுறுத்தும் நிலவுடைமைச் சிந்தனைக்குத் துணை செய்பவை. களவில் உறவு கொள்கிற நிலையிலிருந்து திருமணத்திற்கு பின்பான பாலுறவுக்கு அங்கீகாரம் கொடுப்பதன் குடும்ப அமைப்பு  வலிமைப்படுத்தப் பட்டிருக்கிறது. பெண்களை கற்புநிலைக்கு  பழக்கப்படுத்த, களவுக்காதலில் ஈடுபடுகிற பெண் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள். தோழி, செவிலி ஆகியோர் தவிர அலர்  பேசுகிற ஊரார் என அனைவராலும் கண்காணிக்கப்பட்டிருக்கிறாள். இதன்மூலமாக தமையன், தாய் மற்றும் உறவினர்களினால் தண்டிக்கப்பட்டிருக்கலாம். களவிலிருந்து பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இவைதவிர களவில் ஈடுபடும் பெண்கள் ஆண்களினால் வஞ்சிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவேதான் விரும்பிய ஒருவனை இணைத்து வைக்க உதவுகிற தோழியின் உறவை முக்கியமானதாகத் தலைவி கருதுகிறாள். செவிலித்தாய், நற்றாய் மற்றும் சமூகத்தினரிடம் தெரிவித்து அனைவரின் ஆதரவுடன் விரும்பிய ஆணை மணம் முடிக்கிற தலைவி பெரிதும் மகிழ்ந்திருக்கிறாள்.

களவில் ஈடுபட்டிருந்த ஒரு தலைவி ஒருத்திக்கு தோழியின் துணையினால் திருமணம் முடிந்தது. இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும்  தலைவியைப் பார்ப்பதற்கு ஒருநாள் தோழி வருகிறாள். அவளது வரவில் மகிழ்ந்த தலைவியைப் பற்றிய அஞ்சியத்தை மகள் நாகையார் பாடிய பாடல்,

'முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடுமயில் முன்ன தாகக், கோடியர்

விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிருங் குன்ற நாடன்
குடிநன்கு உடையன்  கூடுநர்ப் பிரியலன்;
கெடுநா மொழியலன்  அன்பினன்  என நீ

வல்ல கூறி  வாய்வதிற் புணர்த்தோய்;
நல்லை காணில் காதலந் தோழி
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி,
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்,
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்

எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.”


அன்புத் தோழியே! நினைத்துப் பார்க்குமிடத்து நீ மிகவும் நல்லவள்,. அருவி ஒலிக்கும் பாறையின் அருகே மயில் ஆடிவரகூத்தர் விழாவெடுக்கும் முதிய ஊரில் ஆடுகின்ற விறலியின் பின்னால், மத்தளக் கருவியைத்  தழுவிக்கொண்டு வாசிப்பவன் போல,   வளைந்து நிற்கும் பலாமரத்தின் குடத்தைப் போன்ற பெரிய பழத்தை  தன்னகத்தே பொருந்தத் தழுவிக் கொண்டிருக்கும் ஆண்குரங்கு தன் இனிய துணையாகிய பெண்குரங்கினை அழைக்கும் மலைநாட்டுக்கு உரியவன் நம் தலைவன்;
அன்னவன் உயர்குடிப் பிறப்பினன்; தன்னுடன் பழகியோரைப் பிரியாதவன்; நாவால் கெடுமொழி கூறாதவன்; எல்லோரிடத்தும் அன்பு கொண்டவன் என்று அவன் சிறப்புகளை எடுத்துக்கூறி என்னுடன் அவனை இணைத்து வைத்தாய்.
விரைந்தோடும் குதிரைகள் பூண்ட நெடிய தேரினையுடைய அதியமான் அஞ்சியின் பழம்புகழ் நிறுவிய புகழமைந்த பாண்மகனானவன்,  இனிய இசைத்தமிழ் நூலின் எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டினும், அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும், எம் தலைவன் எம்மைத் திருமணம் செய்த நாளினும் இப்பொழுது பெரிதும் இனியனாக விளங்குகின்றான்.” 

சுருக்கமாகச் சொன்னால், “திருமணம் முடிந்தபின் தோழி தலைவியின் வீட்டுக்குச்  செல்கிறாள். அவ்வாறு சென்றத் தோழியிடம் தலைவி, ‘உன் உதவியால் அடையப்பெற்ற தலைவன், மலைநாடன், நல்லகுடியில் பிறந்தவன். தன்னுடன் கூடிய என்னைப் பிரியாதவன். நெடுநா மொழியை உடையவன். மிக்க அன்புடையவன் என்று கூறி எங்களைச் சேர்த்து வைத்தாய். அது அத்தனையும் உண்மை. முன்னைவிடவும் திருமணம் செய்து கொண்ட பின்பு  அவன் மிக இனியவனாக இருக்கிறான்”  என்று சொல்கிறாள்.

ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் சந்திப்பிலேயே கணவனை இனியவன் என்று பெரும்பாலும் பெண் நம்பத் தொடங்கிவிடுகிறாள். அவனிடம் தன்னை ஒப்படைக்கும் முன்பாக அவனே தன்னுடைய ஆண்என நினைக்கிறாள். மேலும் அவன்தான் இவ்வுலகின் மிகச்சிறந்த ஆண் என்றும், அவனுடைய நெஞ்சில் இவளுக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், இவளால் மட்டுமே அவனை அரவணைக்க முடியுமெனவும் நம்புகிறாள். இதனடிப்படையிலேயே நல்லன யாவற்றையும் அவன் வாழ்வில் பெண் நிகழ்த்துகிறாள்.



                   
____________________________________________________________________________
இவரது பாடல் சங்க இலக்கியத்தில் ஒன்று மட்டும் கிடைத்துள்ளது . அக நானூறு : 352

No comments: