பெண் –
உடல் , மனம் , மொழி :
-ஆதிமந்தியார் ..
ஒரு பெண் மௌனமாய் உரையாடுகிறாள் :
ரஷ்ய ஆண்டன் செகாவ் எழுதிய
துக்கம் என்றொரு கதை உண்டு. தன் மகனை பறிகொடுத்திருந்த குதிரை வண்டிக்காரன் ஒருவன்
தன் வண்டியிலேரும் பயணிகள் ஒவ்வொருவரிடமும்
துயரத்தைப் சொல்லத் தொடங்குவான். பயண அவசரத்தில் இருக்கும் பயணிகள் யாருக்கும்
அதைக் காதுகொடுத்து நேரம் இருக்காது. கடைசியாக வண்டியை நிறுத்திவிட்டு லாயத்தில்
குதிரையைக் கட்டுபவன் அதனிடம் தன் துயரத்தைச் சொல்லியழுவதாக கதை முடியும். பொதுவாக
திட சித்தமுடையவர்கள் எனக் கருதப்படும்
ஆண்களாலுமே கூட துயரத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே இருத்திவைத்துக் கொள்ள
இயலாது என்பதையே இக்கதை சுட்டுகிறது எனில் இயல்பாகவே தனது துக்கத்தை அழுது
ஆற்றிக்கொள்ளும் பெண்ணிற்கு பகிர்ந்துகொள்ள ஆள் இல்லையெனில் அவளின் நிலையோ இன்னும்
துயரமானது.
நிலத்தின்
தன்மையும் பொழுதும் மாற்றமடைந்திருப்பது மக்களின் மனதையும் பாதிக்கவே செய்கிறது.
எனவே இயற்கையும்கூட தன்னைக் கைவிட்டுவிட்டதாக சிலசமயம் பெண் நினைக்கிறாள். இவ்வாறு
நிலமும் அதன் பண்புகளும் திரிபடைந்திருக்கும் நிகழ்காலத்தில் தன்னுடைய துயரையும்
மகிழ்வையும் பெண் யாரிடம் சொல்வாள்? இன்றைய பெண்களின் கண்ணீரும், சொல்லும்
இயற்கையிடமும் சேராமல் உரியவரிடமும் சேர்ப்பிக்க இயலாமல் நான்கு சுவர்களுக்குள்
மோதி அதற்குள்ளேயே எதிரொலித்து அடங்குகிறது.
“யானுமோர் ஆடுகள மகளே...”
“நிலமும் அதன் தன்மையும் சூழலும் வெகுவாகத்
திரிபடைந்திருக்கும் இக்காலத்தில் தன்னுடைய துயரையும் மகிழ்வையும் பெண் யாரிடம்
சொல்வாள்? இன்றைய பெண்களின் கண்ணீரும், சொல்லும் இயற்கையிடமும் சேராமல்
உரியவரிடமும் சேர்ப்பிக்க இயலாமல் நான்கு சுவர்களுக்குள் மோதி அதற்குள்ளேயே
எதிரொலித்து அடங்குகிறது.”
--------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுவாக சிறுவர்களைக் கடைக்கு அனுப்பி ஏதேனும்
வாங்கிவரச் சொன்னால் எல்லோர் வீட்டிலும் தவறாமல் சொல்கிற வழக்கு ஒன்றுண்டு, “அங்கே
இங்கே வேடிக்கை பார்க்காமல் சீக்கிரமா வாங்கிட்டு வா” என்பதுதான்.
எனக்குத் தெரிந்த குடும்பத்தில் கடைக்குட்டிப்
பெண் ஒருத்தி இருந்தாள். அந்தச் சிறுமியை எவ்வளவு அவசரமென்று சொல்லிக் கடைக்கு
அனுப்பினாலும் அவள் வீடுதிரும்ப கூடுதலாகப் பத்துநிமிடம் ஆகும். “நூத்துக்கிழவிபோல
ஓயாமல் பேசுவாள் எங்க வீட்டுப்பொண்ணு“ என்பார்கள் அந்தவீட்டுப் பெரியவர்கள். “கருவேப்பிலை,
கொத்தமல்லி வாங்கிட்டு வரச்சொல்லி சின்னவளை கடைக்கு அனுப்பினா, வழியில் தென்படுகிற
மரத்தில் சிறு கிளை அசைந்தாக்கூட, அங்கேயே நின்று, ஏன் அசையுற? என மரத்திடம் கேட்டுவிட்டுத்தான்
வீடு திரும்புவாள்” என்பார் அவள் அம்மா. அந்தவீட்டிற்கு விருந்தினர் யாரேனும்
வந்தால் அவர்களின் கவனம் முழுக்க இவளிடமே இருக்கும். அந்தளவு துறுதுறுப்பானவள். அனைவரையும்
ஈர்க்கும் இத்தகைய இயல்புடைய சிறுமிகளை எந்தக்கூட்டத்திலும் தனித்து அடையாளம்
காணமுடியும்.
பால்யத்தில் ஓயாமல் பேசுகிற பெண் குழந்தை
அதனுடைய பதின்பருவத்தின் தொடக்கத்தில் யாரோடும் அதிகம் பேசாமல் அமைதியாகி
விடுவதைக் காணலாம். “குழந்தையாக இருக்கும்
பொழுது நல்லாத்தான் பேசுவா, இப்போ கொஞ்சம் கூச்ச சுபாவமாகி விட்டாள்” என்று எளிதாகச்
சொல்லிவிடுகிறோம். சிலசமயம் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாதவள் எனப் புறக்கணித்து
விடுகிறோம். ஆனால் அந்தப்பருவத்திலும் அவளுடைய பால்யத்தில் பழக்கமான பூக்களோடும்
பறவைகளோடும் மரங்களோடும் தாவரங்களோடும் பேசுவதை கைவிடாமல்தான் இருப்பாள். ஆனால்
இந்தப்பருவம் அவளுக்கு ஏகாந்தத்தின் ரசனைக்குள் அழைத்து வந்திருக்கும். அப்போது
அவள் தனக்குள் சிரித்துக் கொள்வாள். சிலசமயம் பூக்களைக் கொஞ்சவும், பூனைகளிடம்
கோபப்படவும் செய்வாள். அம்மாவிடமும் தம்பியிடமும் கூட காரணங்கள் ஏதுமற்று கோபப்படுவாள். இன்னொரு
பொழுதில் சட்டென்று அவர்களை கொஞ்சி நகர்வாள். சிலபோது மௌனம், சிலபோது கலகலப்பு
என்றுதான் எந்தப்பெண்ணும் தன்னுடைய பதின்பருவத்தைக் கடந்து வந்திருப்பாள்.
அன்றாடம் குடித்துவிட்டு
வந்து அடித்தாலும், சம்பாதியம் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத கணவனாக
இருந்தாலும் அவனுடைய மனைவி பொறுத்துக்
கொள்கிறாள். ஏதாவது சிறிய காரணத்திற்காக மனைவி முரண்படும்போது கணவன் சட்டென வீட்டைவிட்டு
வெளியே கிளம்பிவிடுவதுதான் அவன் செய்கிற முதல் காரியம். மதுச்சாலைக்கோ கடைவீதிக்கோ
அல்லது நண்பர்களிடமோ சென்று பொழுதைக் கடத்திவிட்டு, விரும்பும் பொழுது வீடு
திரும்புவது என்பது ஆணைப் பொருத்தமட்டில் அவனுக்கு மிக இயல்பான விஷயம். ஆனால் இதே
சூழலில் அந்தப்பெண், தன் வீட்டுச் செடிகளிடமோ கோழிகளிடமோ நாய்க்குட்டியிடமோ
பூனையிடமோதான் தன்னுடைய முறையீட்டை சொல்லிக்கொண்டிருப்பாள். கணவனுக்கு எதிராக
காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதோ, சட்டத்தின் உதவியை நாடுவதோ இன்றளவும்
பெண்ணைப் பொருத்தமட்டில் அரிதான செயல். மேலும் அப்படிச் செய்வதற்கு பெரும்பாலான
பெண்கள் விரும்புவதும் இல்லை.
திருமணத்திற்கு பின்பு கணவனுடன்
ஏற்படுகிற மனவேறுபாடுகளைப் பேசிச் சரிசெய்து கொள்ளவோ, அவனைப்பற்றி முறையிடவோ
இயலாத சூழல்தான் இன்றைக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு
முன்பாக, காதலிக்கும் ஆண் முரண்பட்டாலோ, கைவிட்டுச் சென்றாலோ அந்தப்பெண் பரிதாபத்திற்குரியவளாக
ஆகியிருப்பாள். இவ்விதமாக சூழலில் மனதிற்குள் தவித்து அலைவுருகிற பெண்ணைப் பற்றி
சங்கப் பெண்பாற்புலவர் ஆதிமந்தியாரின் பாடல்,
“மள்ளர் குழீஇய விழவி னானும்,
மகளிர் தழீஇய துணங்கை யானும்,
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. “
மகளிர் தழீஇய துணங்கை யானும்,
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. “
“வீரமறவர்கள் கூடி நடத்துகிற சேரிவிழாவிடத்தும்,
மகளிர் தம்முள் தழுவியாடும் துணங்கைக்கூத்தின் இடத்திலும், இவையல்லாத பிற
இடங்களிலும் தேடியும் மாட்சிமை பொருந்திய தலைவனைக் காணவில்லை. இங்ஙனம் எங்கும்
சென்று தேடியலைந்ததால் நானும் கூத்தாடும் ஆடுகளத்திற்குரிய ஆடுகளமகளே ஆகினேன். என்னுடைய கைகளில் சங்கினை அறுத்து செய்த
வளையல்கள் அணிந்திருக்கிறேன். அந்த வளையல்கள் தானே கழன்று விழும்படியான நலிவை
என்னிடத்தில் செய்த பெருமை பொருந்திய தலைவனும் என்னால் ஆடுகளந்தோரும் தேடப்படுகிற அவனும் ஆடுகளமகனே ஆயினன்.” பாடலுக்கான மேலதிக விளக்கமாக, “தலைவியை மணம் செய்துகொள்ள அயலார் முயன்ற
காலத்தில், அதுவரையில் பிறர் அறியாமல் தன் மனதில் இருந்த தலைவனைப் பற்றி தோழியிடம்
தலைவி கூறுகிறாள் எனவும் தலைவனைத் தேடி
விழாக்கள் நடைபெறுகிற இடங்களில் அலைந்ததால் ஆடுகளத்திற்குரிய ஆடுகளமகள் போல இழிநிலையை
தானும் அடைந்திருப்பதாக தலைவி சொல்கிறாள்”
என உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தலைவி, தலைவனை சந்தித்திருக்கிறாள். அவன்
வேற்றுநிலத்தைச் சேர்ந்தவன். ஏனெனில் அவள் வாழுகிற நிலத்தைச் சேர்ந்தவனை சந்திப்பதில்
அத்தனை தடை இருந்திருக்காது. மேலும் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வது
இயல்பானதாக இருந்த காலம். மருதநிலத்தில் இந்தப்பாடலின் காட்சிகள் அமைந்துள்ளன.
ஆனால், தலைவி சங்கு வளையல் அணிந்திருக்கிறாள். ஒருவேளை தலைவன் நெய்தல் நிலம் சார்ந்தவனாக
இருந்து, அவன் அந்த சங்கு வளையலைப் பரிசளித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தலைவி அவனோடு
கூடியிருக்கிறாள். அவனுடைய அன்பில் நெகிழ்ந்திருக்கிறாள்.
அப்படியான அவனைக் காணவில்லை. இது எதுவுமே தெரியாத அவள் வீட்டுப்பெரியவர்கள் அவளுக்கு
வேறு இடத்தில் திருமணம் பேச முயல, தலைவி தோழியிடம் தன்னுடைய நிலையைச் சொல்கிறாள்.
கோவில், திருவிழா நடைபெறும் இடங்கள் தவிர பெண்கள் நினைத்தாற்போல வீட்டைவிட்டு
எங்குவேண்டுமானாலும் செல்லுகிற வழக்கம் இல்லை. அவ்விதம் அவள் வெளியே போகும்
வாய்ப்புள்ள இடங்களில் தன்னுடன் உறவாடிய தலைவன்
இருக்கிறானா எனத் தேடுகிறாள். அவன் தேடிவந்து அவளைச் சந்தித்த காலம்
கடந்துபோய், இப்போது அவள் அவனைத் தேடியலைகிறாள். இவ்விதமான தன்னுடைய நிலையை தானே
இழிவானதாகக் கருதி தன்னிரக்கம் அடைந்திருக்கிறாள்.
தலைவியை தலைவன் சந்தித்தது, அவளோடு
பழகத்தொடங்கியது, கூடியிருந்தது தவிர அவளைப்பிரிந்து சென்றது வரையில் தலைவி
அவனைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஒரு பெண் தன்னுடைய அந்தரங்கத்தை ஒருபோதும்
யாரிடமும் சொல்லுவதில்லை. மேலும் அவளே விரும்பினாலும் அதற்கான சூழலும் மனிதர்களும்
அவளுக்கு வாய்ப்பதில்லை. சிலசமயம் நம்பிக்கைவைத்து அவள் பகிர்ந்துகொள்கிற
சிலவிஷயங்கள் அவளுக்கு எதிரானதாகத் திரும்பி அவளையே அவமானப்படுத்திவிடும். எனவே
தன்னைப்பற்றி யாரிடமும் பகிர்ந்துகொள்ள பெண் அச்சப்படுகிறாள்.
இன்றைக்கு ஒரு பெண்,
தன்னுடைய காதலை அதற்குத் தொடர்புடைய ஆணிடம்
வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. யார்மீது காதல் இருக்கிறதோ
அவனிடம் தன்னை வெளிப்படுத்துவது என்பது எளிதான அளவிற்கு, ஒரு பெண் தன்னுடைய காதலைப்பற்றி தோழிகளிடமோ,
உறவினர்களிடமோ சொல்லிவிட முடியாது. காதலை மட்டுமல்ல கோபம், இயலாமை, துயரம், கனவு
மற்றும் முறையீடுகள் ஆகியவற்றை சக
மனிதர்களிடம் ஒருபெண் பகிர்ந்து கொள்வதை விடவும் இயற்கையிடமே அதிகம்
பகிர்ந்துகொள்கிறாள். ஏனெனில் கோழி, ஆடு, மாடு, நாய், பூனை போன்ற உயிரினங்களை
வளர்ப்பது, தொட்டிகளில் தாவரங்களை வளர்ப்பது என தன்னை இயற்கைக்குப் பக்கமாக
வைத்துக்கொள்ளும் இயல்புடையவளாக பெண் இருக்கிறாள். காக்கைக்கு சோறு வைத்துக்கொண்டு
அதனை அழைப்பது, அணிலுடன் பேசுவது, ஆட்டுக்குத் தழை போடும்பொழுது அதனோடு பேசுவது,
மாட்டுக்குத் தண்ணீர் வைக்கும் பொழுது அதனோடு பேசுவது, பூனையிடமோ நாயிடமோ
பேசிக்கொண்டிருப்பது, நிலாவைக் காட்டி அதனோடு பேசி குழந்தைக்குச் சோறு ஊட்டுவது என
எதனோடு பேசுவதிலும் அவளுக்கு சிக்கல் இல்லை.
கொடைக்கானல்
போகும்போதெல்லாம் வழியில் மலைப்பாதையை ஒட்டித்
தென்படும் அந்த ஒற்றை கட்டடத்தை புகைப்படம் எடுப்பது என்னுடைய வழக்கம்.
கற்களால் கட்டப்பட்டு தகரத்தில் கூரைவேய்ந்த அந்தச்சிறிய கட்டடத்தில் யாரும்
வசிக்கவில்லை. மழைக்காலத்தில் நனைந்தும், அதற்கடுத்த வசந்தநாட்களில் அதில்
படர்ந்திருக்கும் காட்டுக்கொடிகளால் தழைத்தும்,
கோடையில் தீப்பற்றியதுபோல கருகியும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தோற்றம்
காட்டும். ஒருமுறை அங்கே வாசலில் ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு
அவரிடம் போய்ப் பேசினேன். தாண்டிக்குடியைச் சேர்ந்தவரென்றும், அங்கிருந்து
பக்கத்தில் ஒரு காப்பித் தோட்டத்திற்கு கணவர் வேலைக்குச் சென்றிருப்பதாகவும், அவர்
கொண்டு வருகிற காப்பிப்பழங்களை காயவைத்து பதப்படுத்துவது இவரது வேலையென்றும்
சொன்னார். யாருமே வராத அந்த இடத்தில் வானத்தையும் தாவரங்களையும் பறவைகளையும்
பார்த்தபடி பகலெல்லாம் தனித்து அமர்ந்திருக்கும் அந்தப்பெண் யாரோடு பேசுவார் என்று
கேட்டேன். பொழுதெல்லாம் பேசாமல் இருப்பது பாரமாக இருக்காதா எனக்கேட்டேன். அந்தப்
பெண்மணி கேட்டது காதில் விழாதது போல சற்றுநேரம் வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.
பிறகு ஒரு பெருமூச்சுடன் சொன்னார், “ஒனக்கு இந்த வாய் ஆகாதுன்னு ஊரே
சொல்லும்படிக்கு ஓயாம பேசுனவதான் நான், எம் ஒத்த பிள்ளை இன்னைக்கு இருந்தா முப்பது
வயசிருக்கும்.காய்கறி லோடு ஏத்த பசங்களோடு போனவன், லாரி கவுந்து அதோட போயிட்டான்,
எம்பேச்சும் அவனோடவே போயிடுச்சு, இப்போ வீட்டுக்காரர் கிட்ட கூட “வா, போ” ன்னு
ஒன்னு ரெண்டு வார்த்தையோட நின்னுபோச்சு தாயி,“ என்று கண்களைத் துடைத்துக்
கொண்டார்.
நவீன தொழில்நுட்ப தொடர்பு
சாதனங்கள் பெருகியிருந்தாலும் இன்றைக்கும் அதனுடைய அறிமுகமற்று இயற்கையோடு மட்டுமே
தன்னைப் பகிர்ந்தவண்ணம் பல பெண்கள் இருக்கிறார்கள். இந்த கட்டடம் ஒவ்வொரு
பருவத்திலும் ஒரு முகம் காட்டுவதுபோல ஒருபருவத்தில் கலகலப்பாக இருக்கும் பல
பெண்கள் வேறொரு பருவத்தில் தனிமைக்குள் தங்களைப் புதைத்துக்கொள்கிறார்கள்.
ஒரு பெண்ணின் மனம் தன்
சூழலின்றும் தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக, சூழலின் ஒருபகுதியாகவே தன்னை உணர்ந்து தன்னை
சுற்றிலும் இருக்கும் தாவரங்களுடனும் பறவைகளுடனும் விலங்குகளுடனும் உரையாடிக்
கொண்டிருப்பது பெண்களுக்கு இயல்பானதொரு வழக்கமே. கவிஞர் இளம்பிறையின் கவிதையொன்று
அப்படியான உரையாடலை முன்வைக்கிறது.
“நெஞ்சடைக்கும் துயரங்களைப்
பூவரச மொட்டுக்கள் பார்த்து
புலம்பினேன்.
பூத்து விசிறியபோது
அறிந்து நெகிழ்ந்தேன்
அதன் ஆறுதல் மொழியை.
ஆன்டனாவில் அமர்ந்திருந்த
காகத்திடம் சொன்னேன்.
கரைந்து ... பறந்தது
பகிர்தலாய்.
பூனையின் பளிங்கு கண் பார்த்து
கூறினேன்
“நானிருக்கிறேன் “ என்பதாய்
வால் உரச நெருங்கி
உட்கார்ந்து கொண்டது என்னோடு.
நதி நீரில் கலந்தேன்
சூடிச்சென்ற செம்பருத்திப்பூவை
கால்களில் மோதச்செய்து
நிறுத்தியது.
எடுத்துத் துடைத்துக்கொள் என்பதாக
நினைவுகளும் காற்றும் நிரம்பிய
அறையிடம் அழுதழுது சொன்னேன்
கவியெழுத வைத்தது
விட்டிருக்கலாம் அத்துடன்
உன்னிடம் கூறாமல்.”
இவ்விதமாக ஒருபெண்,
தன்னுடைய துயரத்திற்குக் காரணமானவரிடம் சொல்ல இயலாமல் போகும்பொழுது இயற்கையின் ஏதோ
ஒன்றிடம் சொல்லிவிடுகிறாள். மேலும் அவளைத் துயரப்படுத்துகிறவரிடமே சொல்வதால்
பயனேதும் இல்லை. அவளைப்பற்றிய முழுமையான புரிதல் அவனுக்கு இருந்திருந்தால் அங்கே
துயரத்திற்கு இடமில்லை. எனவே புரிதலற்ற ஒருவரிடம் தன்னுடைய துயரத்தைச் சொல்வதை
விடவும் மேலானது நான்கு சுவர்களுக்குள் தனித்து அழுவது என்று இன்றைய நவீனப் பெண்
உணர்ந்திருக்கிறாள். இளம்பிறையின் கவிதையில் வருகிற பெண் இயற்கையைச் சந்திக்கிற
அல்லது அச்சூழலில் வாழ இயலாத ஒருத்தி. எனவே அவளால் நான்கு சுவர்களுக்குள் புழுங்கி
அழுவது தவிர வேறு என்ன செய்ய இயலும்.
.
இவர் எழுதியதாக குறுந்தொகையில் ஒரு பாடல் மட்டுமே உள்ளது . பாடல் எண் :31
No comments:
Post a Comment