Thursday, 24 March 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 
17 -கச்சிப்பேட்டு நன்னாகையார் ..





ஒரு பெண் தனிமையிலிருக்கிறாள்:

“உலைவாங்கு மிதிதோல் போல

காதல் வயப்பட்ட நிலையில் பெண்ணொருத்தி அனுபவிக்க நேரிடும்  தனிமையென்பது, முற்றிலும் அகவயமானது. வேறு எது ஒன்றினாலும் பதிலீடு செய்யப்பட முடியாதது. தலைவனைத் தவிர வேறு எதனாலும் ஒருபோதும் ஈடு செய்ய இயலாதது. சிலநேரங்களில் தலைவன்கூட அவளின் அந்தத்தனிமையை போக்கவியலாது. ஏனெனில் அவனிடம்கூட தன்னைத் திறந்து காட்டிவிட அவளுக்குச் சொற்கள் உதவுவதில்லை. அப்பொழுதுகளில் அவள் தனதேயான ஏக்கத்துடனும்  அது சார்ந்த நினைவுகளுடனும் தனித்திருக்க விரும்புவாள். ________________________________________________________________________________

பிறந்த இடத்தை விட்டு பொருளீட்டுதலின் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்குப் பெயர்ந்து வசித்தாலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சொந்த ஊரைப் பற்றிய நினைவுகள் அழுந்தப்பதிந்திருக்கும். பூர்வீகத்தைப் பற்றி நினைத்தவுடனே ஆறு, குளத்தங்கரை, கம்மாக்கரை, கோவில் ஆலமரம், ஓடித்திரிந்த வீதிகள் என புற்றீசல் போல நினைவுகள் ஒவ்வொன்றாய் வந்துக்கொண்டே இருக்கும். அவற்றுள் ஒரு ஊரின் வாசனைக்கும் ஒரு தனித்த இடம் உண்டு. எல்லா ஊர்களும் தங்களுக்கென தனித்த வாசனையைக் கொண்டிருக்கின்றன. அம்மாவை நினைத்தவுடன் அவளுடைய வாசம் உணரமுடிவதுபோல சொந்த ஊரைப்பற்றிய சிந்தனையில் அவ்வூரின் வாசமும் பதிந்திருக்கும்.  அவை, தெருப்புழுதியின் வாசம், எண்ணெய் செக்கு ஆட்டுகிற வாசம், கரும்புப்பால் காய்ச்சுகிற வாசம், மஞ்சள் வாசம், வேர்கடலையின் பச்சை வாசம், நெல் அவிக்கிற வாசம், வீட்டுச் சுவற்றுக்குப் பூசுகிற நீலம் கலந்த சுண்ணாம்பு வாசம் என ஏதாவது ஒன்று நிச்சயம் நினைவில் இடறி, நாசியில் நுழையும். எனக்கு பால்யத்தின் வாசனையாக நினைவில் பதிந்திருப்பது, எங்கள் ஊர் காற்றில் பரவி நிற்கும் கொல்லன் பட்டறையின் அனல்நெடி.

லாடக்காரர்ராசு வைத்திருந்த பட்டறையின் செந்தழலைப் பார்த்தவர்களின்  நினைவுகளில் அந்தத்தழல் எப்பொழுதும் கனன்றுக்கொண்டே இருக்கும். அவரது பட்டறையில் இருந்த உலைத்துருத்தி குழந்தைகளின் ஆகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அந்தத்தெருவிலுள்ள குழந்தைகள் அங்கே போய் வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உலைத்துருத்தி வழியாக அழுத்தமாக செலுத்தும் காற்று, பள்ளத்தில் குவித்து வைத்திருக்கும் விறகுக்கரியைத் தனலேற்றும். வெப்பம் கனிந்திருக்கும் அந்த கனலுக்குள் புதைந்திருக்கும் அரிவாள் செய்வதற்கான இரும்பும்  கனன்று சிவந்தவுடன் உலைக்கல்லின் மீது வைத்து, கனத்த சம்மட்டியால் அடித்து வளைக்கப்படும். அந்த நெருப்புக் கனலிலிருந்து அரிவாள், கடப்பாரை, மாட்டின் கால்களுக்கு கட்டுகிற லாடம் என உருவாவதைப் பார்க்கப்பார்க்க அத்தனை ஆச்சர்யமாக இருக்கும். லாடக்காரர் பழுத்த இரும்பை சம்மட்டியால் அடிக்க அவருடைய மனைவியோ மகளோ துருத்தியை மிதித்துக்கொண்டே இருப்பார்கள். இரும்பை உருக்கி வளைத்துச் செய்யப்படுகிற இந்தக்கருவிகளைத் தயாரிக்கும் மனித உழைப்புக்குத் துணையாக இருப்பது மாட்டுத்தோலினாலான துருத்தி. காற்று எப்போது உள்ளே செல்கிறது என்றறியும் முன்பாக நெருப்புக்கு நேராக இருக்கும் ஒற்றைத்துளையின்  வழியாக அக்காற்று வெளியேறும். காற்று நுழைந்து அடிபட்டு வெளியேறும் துருத்தியின் ‘‘தட் தட்’’ ஓசை சில நேரங்களில் இதயத்துடிப்பு போலவே கேட்கும் அவ்வோசை கேட்பவர் பலருக்கும் பிடித்ததாக இருக்கும்.

எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள ஏழெட்டு கிராமங்களுக்கும் கடப்பாரை, கொழு, கூந்தாலம், கோடரி, அரிவாள், லாடம், லாடம் கட்டப் பயன்படும் ஆணி ஆகியவை இன்றுவரை எங்கள் கிராமத்தில்தான் தயாராகின்றன. மாட்டுக்குப் பயன்படுத்துகிற லாடம் குழிக்காடி, நெட்டுக்காடி என இரண்டு வகையில் செய்யப்படுகிறது. நவீனமயத்தின் பயனாக, இயந்திரங்களைப் பயன்படுத்தியும் லாடங்கள் செய்யப்படுகின்றன. நவீனவகை லாடங்கள் பொருத்திய மாடுகள், பத்து கிலோமீட்டர் கூட தொடர்ந்து நடக்க இயலாது என்கிறார்கள் எங்கள் ஊர் விவசாயிகள். ஒரு ஊருக்கான விவசாயக்கருவிகள் தயாரிக்கப் பயன்படும் கொல்லன்பட்டறையை விட பல ஊர்களுக்காக இயங்கும் பட்டறைகளில் எப்போதும் வெப்பம் கனன்றபடியே இருக்கும். வெப்பம் கனிந்த இரும்பை நீரில் அமிழ்த்தும் வாசனையும் கொல்லனின் வியர்வையும் இந்த கிராமத்திற்கான வாசனைகளில் மற்றும் ஒன்றாக இன்றுவரையிலும் இருக்கிறது. தொன்றுதொட்டு நடந்துவரும், ஜல்லிக்கட்டும், ரேக்ளா பந்தயமும் இந்த ஊரின் மரபுவழியின் தொழில் பற்றிய குறிப்புணர்த்தும்.  


முனைவர் ப.சரவணன் தன்னுடைய சங்ககாலம்என்ற நூலில், சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட உலை, துருத்தி, இரும்புக்கருவிகள்  பற்றிக் குறிப்பிட்டுள்ளார். உருக்கி வார்க்கப்பட்ட இரும்பினைத் தேவைக்கு ஏற்ப அடித்து வளைத்து கருவிகள், பொருட்கள் செய்யத் சங்கத்தமிழர்களுக்கு நான்கு கருவிகள் பயன்பட்டன. உலைக்கல், சம்மட்டி, கொறடு, பனைமடல் ஆகிய பொருட்களின் பயன்பாட்டினை சங்கப்பாடல்களில் மூலம் அறியமுடிகிறது. சங்ககாலத்தில் இரும்பை பொன்என்று கூறினர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், ஐயவித்தூலம், கதை, கவை, கல்லிடுகூடை, கணையம், கவசம், குத்துவாள், கொடுவாள், கைவாள், கழுகுப்பொறி, மழுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிப்பாலம், ஞாயில், அறிதூற்பொறி, இருப்புமுள், எரிசிறல், கழு, கழுவிலூகம், கல்லமிழ் சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் போன்ற இரும்புக்கருவிகள் சங்கக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பண்டைய போர்ச் சமுதாயத்தின் நீட்சியாகத்தான் இன்றைக்கும் கிராமத்துக்கோவில்களில் வேல், திரிசூலம், அரிவாள் போன்றவை நேர்த்திக்கடனாக படைக்கப்படுகின்றன. போருக்காகவும் விவசாயத்திற்காகவும் இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கும் சங்கக் காலத்தில், இவை அத்தனையையும் செய்யத் தெரிந்தவர் இருப்பதும் அதனைச் சிறப்பாக செய்வதும் முக்கியமானது என்பதனாலேயே வேல் வடித்துக் கொடுப்பது கொல்லருக்குக் கடனேஎன்கிறது புறநானூறு. மேலும் “கொல்லன்” என்கிற அடைமொழியுடன் சங்கப்புலவர்கள் பலர் உள்ளனர்.


ஒரு ஊரில் வாழும் மக்களுக்கு, இத்தனை வகையான கருவிகள் தேவைப்பட்டிருக்கின்றன. இவற்றை சுற்றுவட்டார ஊர் மக்களுக்கும் சேர்த்து ஒரு கொல்லன்பட்டறையில் செய்தால் அந்த ஊரும் கொல்லன்பட்டறையும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். அந்தக் கொல்லன்பட்டறையில் பயன்படுகிற துருத்தி மிதிபட்டுக்கொண்டே இருக்கும். உலையில் வெப்பம் கனன்றுகொண்டே இருக்கும். கொல்லன், சம்மட்டியால் அடித்தபடி இருக்கிற ஓசை குறிப்பிட்ட இடைவெளியில் கேட்டபடி இருக்கும். இப்படி சதாப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் உலைக்கலத்தின் துருத்திபற்றி குறிப்பிடுகிற கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று,

தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல் 
பழுமரம் படரும் பையுள் மாலை 
எமிய மாக ஈங்குத் துறந்தோர் 
தமிய ராக இனியர் கொல்லோ 
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த 
உலைவாங்கு மிதிதோல் போலத் 
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.


மாலை வந்ததன் அறிகுறியாக இரவாடிகளான வௌவால்கள் பழுத்தமரம் தேடிச் செல்லத் தொடங்குகின்றன. தனியாக இருப்பவருக்குத் துன்பம் தருகிற மாலைப்பொழுது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனுக்கு மட்டும் இன்பம் தருவதாக இருப்பது சாத்தியமா” எனத் தோழியிடம் கேட்கிறாள் தலைவி. ஒரு ஊருக்கு மட்டுமல்லாமல் ஏழு ஊர்களுக்கும் உரிய ஆயுதங்களையும் உழவுக்கருவிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் கொல்லன்பட்டறையைப் பார்த்து வளர்ந்த தலைவி அவள். அல்லது அவளே கூட கொல்லன் மகளாக துருத்தி மிதித்திருக்கலாம். அதனால்தான் ஏழு ஊருக்கும் சேர்த்து மிதிவாங்கும் துருத்தியைப்போல தன்னுடைய நெஞ்சம் தலைவரம்பு அறியாத ஆற்றாமை மிகுந்து வருந்துகிறது” என்கிறாள் தலைவி.

தோல்துருத்தி ஓயாமல் ஏழூர் மக்களின் பார்வையில்பட்டு, மிதி வாங்கிக் கொண்டே இருப்பதைப்போல தலைவனின் பிரிவால் ஏற்படும் பசலையினால்  மட்டுமன்றி, வீட்டிலிருப்பவர்களின் சந்தேகப் பார்வைகள், ஊராரின் வம்புப்பேச்சுக்கள், ஒருவேளை தலைவன் திரும்பாமலே இருந்துவிட்டால் தன்னுடைய நிலை என்னவாகுமோ என்ற தன் நெஞ்சின் தவிப்பு ஆகிய பல்வேறுபட்ட  துயரத்தினால் தான் அனுபவித்து வரும் அலைக்கழிவுகளை மறைமுகமாக உணர்த்துகிறாள் தலைவி.

பறவைகளைப் போலன்றித் தாவித்தாவி உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் இயல்பு கொண்டவை வௌவால்கள். சன்னமான துணியால் நெய்யப்பட்டது போன்ற இறகுகளைக் கொண்டு மென்மையாக பறந்து செல்பவை. பகலெல்லாம் தலைக்கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்கள் கூட பழுத்த மரங்களைத் தேடிச் சென்றுவிட்டன என்று தலைவி குறிப்பிடுவது மெலிதான சோகத்தைக் கிளர்த்துகிறது. இரவாடியான வௌவால் தனக்கான உணவென கனிமரத்தை நாடுவது போல தலைவனும் தன்னை நாடிவரவேண்டாமா என நினைக்கிறாள். அதனால்தான் தலைவனைப் பிரிந்திருப்பதால் அவள் வருந்துவதாக சொல்லவில்லை, தன்னைப் பிரிந்திருப்பதால் தனித்திருக்கும் தலைவன் வருத்துவான்என்று நினைத்து அவள் வருந்துவதாகச் சொல்கிறாள்.


காதல் வயப்பட்ட நிலையில் பெண்ணொருத்தி அனுபவிக்க நேரிடும்  தனிமையென்பது, முற்றிலும் அகவயமானது. வேறு எது ஒன்றினாலும் பதிலீடு செய்யப்பட முடியாதது. தலைவனைத் தவிர வேறு எதனாலும் ஒருபோதும் ஈடு செய்ய இயலாதது. சிலநேரங்களில் தலைவன்கூட அவளின் அந்தத்தனிமையை போக்கவியலாது. ஏனெனில் அவனிடம்கூட தன்னைத் திறந்து காட்டிவிட அவளுக்குச் சொற்கள் உதவுவதில்லை. அப்பொழுதுகளில் அவள் தனதேயான ஏக்கத்துடனும்  அது சார்ந்த நினைவுகளுடனும் தனித்திருக்க விரும்புவாள். ஏழு ஊர்களுக்கு தளவாடங்களைச் செய்கிற பட்டறையின் பரபரப்பு அவள் மனதில் பதிய மறுக்கிறது.  மாறாக மிதிபடுதலில் துவலுகிற உலைத்துருத்தியின் தவிப்பை, காதல் கொண்ட அவள் மனத்துக்கு இணையாக்குகிறாள்.

ஜப்பானினில் ஹையன் காலகட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண்கவிஞர் “இசுமி ஷிகிபு”( கி.பி.976) பிரிவேக்கத்தைத் துல்லியமாகச் சுட்டும் அவருடைய சிறிய கவிதை ஒன்று, 

“நம் சந்திப்பினூடே
கோயில் மணிச்சத்தத்தை
நான் கவனிக்கிறேன்.
இரண்டு மணிச் சத்தத்திற்கு
இடைப்பட்ட நேரத்தில்கூட
உன்னைநான் மறக்கமாட்டேன்.“

இக்கவிதையைப் படிக்கும்போது  இனம், மொழி, கலாச்சாரம் இவற்றைக் கடந்தும் பெண்கள் பிரிவை ஒன்றுபோலவே உணர்கிறார்கள் என்று தோன்றுகிறது.

மேலும், காதலில் தன்னை இழக்கிற மனமென்பது காலத்தின் எந்தவிதமான  வரையறைக்கும் உட்பட்டதல்ல. அகவயமான உணர்வுகளில் மரபுவழியில் இப்போதும் வாழ்கிற பெண்ணின் மனதை கவிஞர் மதுமிதாவின் ‘நினைவுக் கடத்தல்’ என்று தலைப்பிட்ட கவிதையில் குறிப்பிடுகிறார்.

சந்திரன் முகம் காட்ட விரும்பும்
சந்தியா வேளை
பூங்காவின் மரங்கள் முழுக்க
தொங்கிக் கிடந்தும் பறந்தும்
கூட்டம் கூட்டமாய் வௌவால்கள்
கனி நிறைந்திருக்கும் மரம் நாடி
கழுகுகளைப் போலப் பறக்கின்றன
நீ இருக்கும் திசை நோக்கியே
என் நினைவுகளையும் கடத்திக்கொண்டு

காற்று மென்மையாக வருட
காற்றை ஊடுருவி மேலேபார்க்கிறேன்
நிலவில் ஒளிர்ந்து ஏதோ சேதி தருகிறாய்
வலசை செல்லும் பறவைகளைக் கண்டு
நீயும் அங்கே தவிக்கிறாயோ என் நினைவில்

பாலையின் வெக்கையுடன்
என் நினைவின் வெம்மை மட்டும்
உன்னைத் தீண்டிவிடக்கூடாது

உன் நினைவாலேயே உன் நினைவினை
அணைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வேன் எனினும்
உன் நினைவில் எழும் பெருமூச்சு
கொல்லனின் உலை துருத்தி போல்
தீயை வளர்த்து சுட்டெனைச் சாய்க்கிறது

காதலின் தனிமைத்துயர் என்பது ஏதோ சங்ககால விஷயம் மட்டுமல்ல. எத்தனை விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் உருவானபின்பும் இன்றைய நவீனப்பெண்ணும் வேதனையை உணர்கிறவளாக இருக்கிறாள்.  மேலும் காதல்வயப்பட்ட மனம் எப்பொழுதும் தனிமையை விரும்புகிறது. காதலில் தவித்திருக்கும் பெண்ணின் தனிமைக்கு அவளுடைய காதல் நினைவுகள் மட்டுமே துணையாக இருக்கமுடியும்

இவரின் பாடல்கள் ஆறு குறுந்தொகையில் உள்ளன. ( 30,172,180,192,197,287 )


பெண் – 
உடல் , மனம் , மொழி :
காமக்கணி பசலையார்:







துணை நிற்கிறாள் பெண்:

பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின்...

பொருள்தேடிப் பிரிந்து செல்பவனின் அலைதல்களுக்கும் அவனுக்காகக் காத்திருப்பவளின் தனிமைக்கும் இடையில்தான், காதலின் தவிப்பானது வாழ்வின் அர்த்தமாக திடம் பெறுகிறது. பெண் ஒருபோதும் பிரிவை விரும்புவதில்லை என்றாலும் தனது ஆணுக்கான கடமைகளை முன்னின்று நிறைவேற்றுவதன் வாயிலாக, அவன் இல்லாத தனிமையைச் சமன் செய்துகொள்கிறாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

நவீன தொழில்நுட்ப சாதனங்களையும் அவற்றின் காரணமாக சாத்தியமாகியிருக்கும் பரவலான இணைய பயன்பாட்டையும் குறித்து நல்லதும் அல்லாதவைவையுமான பல விமர்சனங்கள் காணக் கிடக்கின்றன. நல்லவை எனக் கணக்கிட்டால், பள்ளிப்பிராயத்திற்குப் பிறகு தொடர்பு விட்டுப்போன நட்புகள்  பலவும் இணைந்திருக்கின்றன. குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் பணிநிமித்தம் இருப்பவர்களும்  இதன்மூலம் உறவினர்களோடு நெருங்கியிருக்க முடிகிறது. முகநூல், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலமாக தங்களது தனிமையை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமாக அவற்றின் கனத்தைக் குறைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அந்தந்த நாளில் நடக்கிற சமூக, அரசியல் செயல்பாடுகளையும் விழாக்களையும், சந்திப்புகளையும், பயணங்களையும்  நிலைத்தகவல்களின் மூலமாக தொடர்புடையவர்களுடன் அவ்வப்போதே பகிர்ந்து கொள்ளமுடிகிறது.

“பொங்கல்” ரொம்ப நல்லா வந்திருக்கு, இது சவூதிப் பொங்கல். தனியா சாப்பிடணும், யாராவது சாப்பிட வருகிறீர்களா?” என்று பொங்கலன்று எனது முகநூல் நண்பர் அ.வெற்றிவேல் தன் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  அந்தப்பதிவில் வேறு ஒரு நண்பர், “இனிமேல்தான் பொங்கல் செய்யணும், புழுங்கல் அரிசியில் பொங்கல் நல்லா இருக்குமா” எனக் கேட்டுப் பின்னூட்டமிட்டிருந்தார். பொங்கல் தினத்தன்று பெரும்பாலான பெண்கள், “எங்க வீட்டுப் பொங்கல்” எனப் புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்கள். பெண்கள் பகிர்ந்திருந்த புகைப்படங்களை விடவும் குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அயல்தேசங்களுக்கு பொருள்தேடிப் பிரிந்து சென்றிருந்த ஆண்களின் பொங்கல் பற்றிய பகிர்தல்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. “ஈர்ப்பதாக” என்று சொல்வதைவிடவும் மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. பொங்கல் விழா என்பது மற்ற எந்த கொண்டாட்டங்களைப்போல அல்ல, மாறாக இது மண்ணோடும் மரபோடும் இணைந்த விழா.

“பொங்கல்” என்பது திருவிழா அல்ல, இது நன்றியறிவிப்புக்கான உணர்வைத் தூண்டுகிற தினம். இந்நாளில் நாம் யாரையெல்லாம் நினைத்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது இவ்விழாவின் நிறைவு. நேரில் சென்று ஒருவரையொருவர் சந்திக்க இயலாவிட்டாலும், காணும் பொங்கல்தினத்தில் மனதில் நினைத்து நன்றி சொல்ல நம் ஒவ்வொருவருக்குமே பலர் இருப்பார்கள். யாராவது ஒருவர் நன்றியறிதலுடன் நம்மை நினைத்துக்கொள்வதை எல்லோருமே விரும்புவோம்.

உண்ணுகிற உணவை விளைவிக்கிற சூரியனில் தொடங்கி ஆடு, மாடு வரையில் நன்றி சொல்கிற இந்தநாளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் மனித உழைப்புக்குத்தான் மரியாதை செலுத்தப்படுகிறது. சூரியன் ஒளிர்ந்து பயிர்களைச் செழிக்கச் செய்வது போலவும், கால்நடைகள் உழைத்து நிலத்தைப் பண்படுத்துவது போலவும் மனிதன் முனைப்பான தனது செயல்பாடுகளால் வாழ்வை மேம்படுத்திக்கொள்கிறான். இவற்றை நினைவுகூர்கிற தினமாக  பொங்கலைக் கொண்டாடுகிறோம். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ உழைப்பும் பொருள்தேடலும்தான் இயக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த அடிப்படையான வாழ்வியல் செயலை இயக்குவது குடும்பம் என்கிற அமைப்புதான். மேலும் எந்த உயிரினமும் தனக்காக மட்டுமே வாழ்ந்து நிறைவதில்லை என்பதே உயிரியல் நியதி.

எல்லை, மொழி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் கடந்து, எங்கோ அயல் தேசத்திலிருக்கும் ஒரு ஆணுடைய பொங்கல் தினம் என்பது முக்கியமானது. தனித்துத் தனக்காக மட்டும் பொங்கல் வைத்தாலும், புழுங்கல் அரிசியில் பொங்கல் செய்தாலும் அதன் சுவை என்பது இனிப்பு மட்டுமல்ல. அங்கிருப்பவர் பொங்கல் வைத்து, அத்தேசத்தின் நண்பர்களுக்குப் பகிர்ந்து அளிக்கையில், தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தான் கொண்டிருக்கும் பிரியத்தையும் வெளிப்படுத்துவார். ஆனால் அதே தினத்தில் அவனுடைய மனைவி இங்கே அவனைச் சார்ந்த மனிதர்கள் அனைவருக்குமான பொங்கலைச் சமைத்துக் கொண்டிருப்பாள். ஒரே பொங்கல்தான், இங்கேயும் அங்கேயும். அரிசியும், சர்க்கரையும் இன்னபிறவும் மனைவியின் மீதான அன்பின் சிறு நெருப்பில் பொங்கி அவனை மகிழ்விக்க, இங்கே அவன் நினைவையே சுவையாக ஆக்கியிருப்பாள்.

அவளுக்குத் தெரியும் அவனுடைய தனிமை; அவனுக்கும் தெரியும் அவளுடைய தேடல். பொருள்தேடிச் சென்றவனின் தனிமைக்கும் அவனுக்காகக் காத்துக்கொண்டு தனித்திருப்பவளின் தேடலுக்கும் இடையேதான் வாழ்வின் சுவாரஸ்யம் இழையாடிக் கொண்டிருக்கிறது.
எந்தக்காலமும் பிரிந்துவிடாமல் ஆணும்பெண்ணும் இணைந்தே இருப்பதற்குத்தான் மணவாழ்க்கை என இருவருக்கும் சொல்லப்படுகிறது. ஆனால் எல்லோருக்குமாக பொருள் தேடுவது ஆணுக்குக் கடமையாக இருக்க, அவனுடைய சுற்றத்தைக் காப்பதும் அவன் சார்பான செயல்களை அவள் செய்வதும் ஒரு குடும்பத்தின் அறமாக இருக்கிறது.

பெண்ணின் வளர்ப்பில் பெண்மையின் இலக்கணங்கள் பலவும் அவளுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, ஆணுக்கும் பால்யத்திலிருந்து அவனது கடமைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. ஒரு ஆண்குழந்தை வளர்ந்து சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு நிலையை அடைய, அவனுடைய பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் நண்பர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். பொருளாதார விடுதலையை அடைந்த ஆண்,  அவன் உயர்வதற்கு உதவிய அத்தனைப் பேருக்கும் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகள் உள்ளன. அந்நிலையிலிருக்கும் ஆணுடைய அத்தனை செயல்பாடுகளையும் முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவனுடைய மனைவியே துணையாக நிற்கிறாள். இந்நிலையில் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பௌதீகமாக இருவரும் பிரிந்து வாழவேண்டிய சூழலில் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் மனதளவில் ஒருவரையொருவர் மிகவும் நெருங்கியிருப்பார்கள். மேலும் வாழ்வின் மிகப்போராட்டமான சந்தர்ப்பங்களில் பெண்ணின் உடனிருப்பில்தான் ஆண் தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறான்.

“பெண்களைக் காப்பது ஆண்களின் அறம் எனவும் அதற்காகப் பொருள்தேடிப் பிரிந்து செல்வது அவர்களின் இயல்பு” எனத் தோழி கூறுகிறாள். தலைவி, தோழிக்கு பதில் சொல்வதுபோல அமைந்திருக்கும் காமக்கணி பசலையாரின் பாடல்,

தேம்படு சிலம்பில் தெள்ளறல் தழீஇய 
துறுகல் அயல தூமணல் அடைகரை 
அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப்
பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில்
கவறுபெயர்த் தன்ன நில்லா வாழக்கையிட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக்
கையறத் துறப்போர்க் கழறுவ போல 
மெய்யுற இருந்து மேவர நுவல
இன்னா தாகிய காலைப் பொருள்வயின்
பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின்
அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே. 

பாடலின் பொருள், ”தேன் உண்டாக்குகிற பக்கமலை; அதனருகே தெளிந்த நீர் சூழ்ந்திருக்கும் வட்டக்கற்பாறை; அந்தப் பாறைக்குப் பக்கத்திலே தூயமணல் பரந்து கிடக்கும் அடைகரை; அங்கே அசைந்தாடும் கிளைகள் தளிர்த்துள்ள நல்ல மாமரங்கள் நிறைந்த சோலை; மாமரங்களில் செழித்த மாவடுக்கள் உள்ளன; இந்த மாஞ்சோலையில் செறிந்த இலைகளின் இடையே அழகிய கண்களையுடைய கருங்குயில்கள் தங்கியிருக்கும். அவை, “இந்த வாழ்க்கை என்பது சூதாட்டக்காய்களைப் போல நிலையில்லாமல் உருண்டு போவதுதான்; இந்த நிலையில்லாத வாழ்வை முன்னிட்டு பொருளாசையினால் உங்கள் துணையைப் பிரியாதிருங்கள்; அப்படி துணையைப் பிரியாமல் இருப்பவரே அறிவுடையவர்“ எனக் கூவுகின்றன. ஆணும்பெண்ணுமாக உடலோடு உடல் சேர்ந்து அமர்ந்தபடி அந்தக்குயில்கள் கூவுகின்ற இந்த இளவேனிற்காலம் பிரிதலுக்கு உகந்த காலம் அல்ல. இவ்விதமாக இணைந்திருக்கும் குயில்கள் கூவுவதைக் கேட்டபடியே நம்மைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். இந்தக் பருவத்தில் இவ்விதமாக நம்மைப்  பிரிந்து செல்வதுதான் ஆண்களுக்கு இயல்பென்று சொன்னால், உன்னை விட்டு நீங்கமாட்டேன்என்று சொன்ன அறத்தை விடவும் பொருள் ஈட்டுதல் என்பது பெரிதும் அரியதுபோல.”  எனத்தலைவி சொல்கிறாள்.

பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், இளவேனிற்காலம் தொடங்கியும் திரும்பியிருக்கவில்லை. தலைவன் சென்றிருக்கும் வழியில் எவ்விதமான காட்சிகளைக் காண்பான் என்பதை தலைவிஅறிந்திருக்கிறாள். தேன் உண்டாக்குகிற பக்கமலை, தெளிந்த நீர் சூழ்ந்த கற்பாறை,  சுனையைச் சார்ந்த அடைகரை, மழைநீர் ஓடிவருவதால் பரந்திருக்கும் தூய மணற்பரப்பு, செழித்த மாவடுக்கள் நிறைந்த மாஞ்சோலை” போன்றவை தன்னை அவனுக்கு நினைவூட்டும் எனத் தலைவி சொல்கிறாள். வசந்தகாலத்தின் தொடக்கமாக குயில்கள் கூவத் தொடங்கியிருக்கும் இப்பருவத்தில் இருவரும் இணைந்திருக்க வேண்டுமென்பதை குறிப்புணர்த்த இணைக்குயில்கள் உடலோடு உடல் சேர்ந்து இலைகளின் செறிவுகளுக்குள் மறைந்து அழகிய கண்களை மட்டும் காட்டியபடி இருக்கும் என்கிறாள். பொதுவாக பெண்களின் சொற்களும் சிந்தனையும் அவள் வாழ்கிற சூழலைக் கொண்டே உருவாகிறது. ஆனால் இந்தப் பாடலில் ஆண் செல்கிற பாதையைப் பற்றி இவள் சொல்கிறாள்.  எனவே அவளது நினைவில் விரிகிற காட்சியானது அவனுடைய கண்களால் பார்த்தது. இவ்வுலகைக் காண்பதற்கு அவளை வழிநடத்துவது ஆணாக இருக்கிறான்.

பெண்ணின் புழங்குவெளி என்பது வீடும் அது சார்ந்த இடமுமாக இருக்க ஆணின் புழங்குவெளி விரிந்ததாக இருக்கிறது. அவன் பயணிக்கிற பாதையின் காட்சிகளை அவளிடம் பகிர்ந்துகொள்கிறான். அவன் பார்க்கிற காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அவளை நினைவூட்டியதாகச் சொல்கிறான். இப்போது அவனின் பாதையை அவளும் பார்க்கிறவள் ஆகிறாள். அதன்பின்பு ஒவ்வொரு பருவத்தின் பிரிதலின் பொழுதும் அவனுடைய பாதையை இவள் தன்னுடைய கற்பனையில் வரைந்துகொள்கிறாள். தற்சமயம் பிரிந்து சென்றிருப்பவனின் பாதை எவ்விதமாக இருப்பினும் முன்பு அவன் அறிமுகப்படுத்திய வகையில் அவனது பயணவரைவின் சித்திரத்தைத் தீட்டிக்கொள்கிறாள். இதனைக் காட்சிப்படுத்தும் கவிஞர் அ.ரோஸ்லின் கவிதை,

“மூங்கில்களுக்கிடையே
வெளிச்சப்புள்ளியென நீ கடந்து சென்றதை
கண்களில் நிறைத்து
முகிழ்த்துத் திரும்புகிறது என் திசைவழி

வயல்வெளியின் பசுமையொத்து
நிர்பந்தித்தலுடன் கிடக்கிறது என் மௌனம்

பிரிவின் ரேகை படிந்த வார்த்தைகளை
நம் சேய்களோடு முணுமுணுத்தபடி
கடந்துசெல்கிறது களிப்பற்ற பொழுது

நீயற்ற நம் நிலத்தினை
நீயற்ற நம் நதியினை
நீயற்ற நம் இரவினை
அழித்தொழிக்காமல் பிணைத்திருக்கிறது
எமக்கு உணவாகும் உன் பிரயாசத்தின் குருதி

நீ கடந்து சென்ற ஸ்தலமெங்கும்
முளைத்தெழும்பி படர்கிறது
உன் விளைவித்தல்

ஒரு நீரோட்டத்தினைப்போல
நிகழ்ந்திருக்கும் உன் நகருதலில்
கானல்வரிப்பாடலொன்றை இசைக்கும்
தன் மீட்பின் அனுமானங்களுடன்
இடும்பை விழையாப் பறவை. “


பல சங்கப்பாடல்களில் “துறுகல்” என்கிற காட்சிப்படிமம் வருகிறது. மதுரை மருதன் இளநாகனாரின் குறுந்தொகைப் பாடலில், “மழை கழுவ மறந்த பெரிய கற்பாறை ஒன்று புழுதிபடிந்த யானையின் தோற்றத்தில் இருப்பதாகக்” கூறுகிறார். இது, பெண் உடலானது ஆணின் அரவணைப்பிற்குள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்போதுதான் பெண்ணுடல் ஆற்றின் ஈரத்துடன் இருக்குமெனக் குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே வானம் கனிந்து பொழியும் மழையில் நனைந்திருப்பதை விடவும் எப்பொழுதும் நனைந்துகொண்டு ஆற்றின் அருகே ஈரமணல் சூழக்கிடக்கும் கற்பாறையைப் பற்றி காமக்கணி பசலையார் சொல்கிறார். எப்பொழுதும் பெண் விரும்புகிற ஈரமென்பது உடல் சார்ந்ததாக இல்லாமல் மனதின் வெளிப்பாடாக இருக்கிறது.

சங்கத்தில் ஆண்பாற் புலவர்கள் பாடிய பாடலில் பெண் இருப்பு, வெறும் உடலாகவும் பெண்பாற் புலவர்களின் பாடலில் பெண் இருப்பு என்பது  மனமாகவும் தொடர்ந்து வெளிப்படுகிறது. சங்ககாலம் மட்டுமல்ல இந்த நவீன உலகத்திலும் பெண் மனமாகவே தொடர்ந்திருக்கிறாள். பெண்ணின் அடிப்படை இயல்பே இவ்விதமாகதான்  இருக்கிறது. இவ்வியல்பைப் பற்றி கவிஞர் லாவண்யா சுந்தரராஜனின் ஒரு கவிதை,

நதியோர மணல்
மழை நனைக்கவியலாதபடி
நனைந்தே இருக்கிறது எப்போதுமே”

பெண்ணுக்கு ஆணின் அரவணைப்பு என்பது எப்பொழுதும் இயங்கும் மனமாகவே வேண்டியிருக்கிறது.  எப்பொழுதாவது வானிலிருந்து பொழியும் மழையைவிட கரையோரம் சின்னஞ்சிறு அலையசைத்து கணந்தோறும் நனைத்துக்கொண்டே இருக்கும் ஆற்றின் ஈரம்போல எப்பொழுதும் உலராமல் இருப்பதற்கு பெண் விரும்புகிறாள். இந்த ஈரம் உடல் நிகழ்த்துவது அல்ல.

காமக்கணி பசலையாரின் சங்கப்பாடலின் காட்சியில் தலைவியின் கைகளைப் பற்றும் பொழுது “உன்னைவிட்டு பிரியவே மாட்டேன்” என்று சொன்னது தலைவனின் அறம். அந்த அறத்தைக் கைவிட்டு, பிரியக்கூடாத இளவேனிற்காலத்தில் பொருள் தேடிச் சென்றது என்பது அந்தப் பெண்ணிற்குத் துயர் தருகிறது. அவளின் துயரினை இணையோடு சேர்ந்து கூவுகிற குயிலின் குரல் வழியே பதிவு செய்கிறாள். குயிலின் இயல்பான கூவுதலுக்கு, “பொருளுக்காகப் பிரிந்து செல்லாதீர்கள்; நிலையில்லாத வாழ்வில் பொருள் என்பது அற்பமானது” என அர்த்தப்படுத்துகிறாள். என்றாலும் தன்னுடைய தலைவனைக் குறை சொல்வதற்கு இணங்காத
பெண்ணின் மனம், பொருள் தேடித் பிரிந்து செல்வது என்பது ஆணின் இயல்பு என ஆண்களின் பொதுவான குணமாக ஏற்றுக்கொள்கிறது.

பொருள்தேடிப் பிரிந்து செல்பவனின் அலைதல்களுக்கும் அவனுக்காகக் காத்திருப்பவளின் தனிமைக்கும் இடையில்தான், காதலின் தவிப்பானது வாழ்வின் அர்த்தமாக திடம் பெறுகிறது. பெண் ஒருபோதும் பிரிவை விரும்புவதில்லை என்றாலும் தனது ஆணுக்கான கடமைகளை முன்னின்று நிறைவேற்றுவதன் வாயிலாக, அவன் இல்லாத தனிமையைச் சமன் செய்துகொள்கிறாள். இவ்விதமாக, காலங்காலமாக ஆணுடைய சுகதுக்கங்களில் பங்கெடுத்து அவனுடைய காரியங்கள் யாவும் வெற்றியடைய ஒரு பெண் துணை நிற்கிறாள்.


இவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது .நற்றிணை :243