Thursday, 15 September 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

 25.காமம்சேர் குளத்தார்:







ஒருபெண் மனம் திறக்கிறாள்:

“இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி...”

பெண்ணின் கண்ணீரென்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் கருவி அல்லது எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம்போல தோன்றலாம். ஆனால் பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீரென்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. சொற்களற்றுப் போகும் தருணங்களில் அவள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவளறிந்த ஒரே வழி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொழுதுபோக்கு, கேளிக்கை என்பதைத் தாண்டி நம்முடைய தமிழ்ச்சமூகத்தின் மனோபாவத்தை, அதன் ரசனையைக் கனவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமைந்திருப்பவை திரைப்படங்களே ஆகும். அரசியல், பண்பாட்டுத்தளங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்களாக விளங்குபவர்கள் பலரும் ஏதோ ஒருவிதத்தில் திரையுலகோடு சம்மந்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். திரைப்படக் காட்சிகளும் வசனங்களும் பாடல்களும் நம்முடைய அன்றாட வாழ்வின் நிகழ்வுகளோடும் மனநிலையோடும் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி, கல்லானாலும் கணவன், கைவிட்டுப் போனவனுக்காக காலமெல்லாம் காத்திருத்தல், தாய்ப்பாசம், தாலி குறித்த பணிதம் போன்ற காலச்சார விழுமியங்களைக் கட்டமைத்து காப்பாற்றி விடுவதில் நம் திரைப்படங்களின் பங்கு அளப்பரியது.


திரைப்படப் பாடல்களில் காதலனுக்காக கண்ணீர் வழியவழியப் பாடுகிற பெண்களைக் காட்சிப்படுத்திய காலத்தில் திரையரங்குகளில் தேம்பியழுத பெண்களும், அருகிலிருபவருக்குத் தெரியாமல் முந்தானையில் கண்களைத் துடைத்துக்கொண்ட பெண்களும் அநேகம்பேர். இதுபோல் முழுக்க முழுக்க மிகையுணர்வுக் காட்சிகளுடன் வந்துகொண்டிருந்த திரைப்படங்களுக்கு நடுவே படித்த மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மனிதர்களின் வாழ்க்கைப் பார்வையை முன்வைப்பனவாக சில படங்களை கே. பாலச்சந்தர், ஸ்ரீதர், மகேந்திரன் போன்ற புதிய இயக்குனர்கள் முயன்றார்கள். அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். கே. பாலச்சந்தரின் “அவர்கள்” அதுபோன்றதொரு திரைப்படம். அப்படத்தில், நாயகி தன் முன்பாக கதறிக்கதறி அழவேண்டும் என்பதுதான் அவளுடைய முன்னாள் கணவனின்  வாழ்நாள் லட்சியம்” என்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். “அந்த விஷயத்தில் உங்களுக்குத் தோல்விதான்” எனச் சொல்லி அவனைவிட்டு விலகிச் செல்கிற நாயகியை பெண்கள் பலரும் விரும்பத் தொடங்கினார்கள். துயரப்படுத்துகிற ஆணுக்கு முன்பாக திடமாக இருக்கும் பெண்களைப்பற்றி அதற்கு பின்பு திரைப்படங்களில், கதைகளில் பலரும் கவனம் கொள்ளத் தொடங்கினர்.

என்றபோதிலும், “அன்பனைக் காணாத நிலவஞ்சியின் கண்களில் எப்பொழுதும் சிரபுஞ்சி. “ என்பது போல எழுதப்படும் கவிதைகள் பலவற்றை வாழ்த்து அட்டைகளில் பார்க்கிறோம். ஆனால் இப்போதும் காதலில், பிரிவில் அல்லது ஏதோவொரு துயரில் கண்ணீர் வழியும் பெண்களின் கண்களைப் ஆயிரமாயிரம் விதங்களில் காட்சிபடுத்தப்பட்ட புகைப்படங்களை  இணையவெளியில் காணலாம். “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி..” என திருஞானசம்பந்தர் பாடி உருகுவதெல்லாம் இறைவனின் புகழ்பாட மட்டும் போல, கண்ணீர் வழிகிற ஆண்களின் கண்களை புகைப்பட வெளியில் காண்பது அரிது.

“கண்ணீர் பெண்களுக்கு ஆயுதம்” என பரவலாக பேச்சுண்டு. இந்த ஆயுதம் எந்த எதிரியை வீழ்த்தியிருக்கிறது அல்லது எந்த நட்பை எதிரியாக்கியிருக்கிறது; எந்தப்பகையை வீழ்த்த இயலாமல் தோற்றிருக்கிறது அல்லது எந்த அன்பிடம் மண்டியிட்டு சரணடைந்திருக்கிறது; எங்கே சாணை பிடிக்கப்பட்டு பளபளப்பை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறது அல்லது எங்கே முனை மழுங்கி துருபிடித்துக் கிடக்கிறது என ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் ஓராயிரம் கதை சொல்ல இயலும்.

ஆனால், பெண்கள் அப்படியெல்லாம் எல்லோரிடமும் அழுவதில்லை என்பதுதான் பெண்ணின் கண்ணீருக்குப் பின்பிருக்கும் அடிப்படையான உண்மை. ஒரு பெண் தன்னுடைய கண்ணீரின் மூலமாக அவளை  வெளிப்படுத்திக் கொள்வது அல்லது அவளுடைய ஏதோவொரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வது என்பது காரியார்த்தமான செயல் அல்ல. அவளுடைய கண்ணீரை எதிர்கொள்பவர் யார் என்பது அவளுக்கு மிக முக்கியமானது. இந்த ஆணிடம் அல்லது இந்தப் பெண்ணிற்கு எதிரில் “அழவே கூடாது” என ஒரு பெண் தன்னை திடப்படுத்திக் கொண்டாலெனில் அதன்பின்பு அவள் நெகிழ்வது அத்தனை சாத்தியமில்லை. தன்னுடைய கண்ணீருக்கு எத்தனை வலிமை இருக்கிறது எனவும், அது எத்தனை உண்மையானது எனவும் ஒரு பெண்ணே நன்கறிவாள்.

இளமைக்காலத்தில் எடுத்ததற்கெல்லாம் அழுகிற பெண்கள் உண்டு.   வேண்டும் என்றாலும் அழுகை; வேண்டாம் என்றாலும் அழுவார்கள். சிலருக்கு சிரிச்சாலே கண்ணீர் பொங்கி வரும். இவ்வாறு தொட்டதற்கெல்லாம் கண்ணீர் பெருக்குபவர்கள் பின்பொரு சமயம் அழுவதேயில்லை. உண்மையில் நீர் வற்றிய கண்களுடன் ஒரு பெண்ணைக் கற்பனை செய்வது போலொரு துயரம் ஏதுமில்லை.


தான் நேசிக்கப்படுபவர்களால் ஒரு பெண் அவமதிக்கப்படும் பொழுது அவளது  கண்ணீர் வற்றிப்போகும். அதன் பிறகு அவள் தன்னை மூடிக்கொள்ளத்தொடங்குவாள். சிலசமயம் அவளின் கண்ணீர் மற்றவர்களிடம் மறைக்கப்படுகிறது. அந்த மற்றவர்கள் யாராக இருப்பார்கள் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு காரணங்களால் அமைந்திருக்கும். ஒரு விஷயத்திற்கு ஒரு பெண் அழுதிருந்தால் அதுபோன்ற சூழலை வேறொரு பெண் மிக எளிதாகக் கடந்திருப்பாள். பலசமயங்களில் பெண்ணின் கண்ணீருக்கு அர்த்தம் ஏதுமில்லை என்று ஒதுக்கப்படுவதுண்டு. ஆனால் எந்தப் பெண்ணும் காரணங்கள் ஏதுமற்று அழுவதில்லை. ஒரு பெண்ணின் கண்ணீருக்கு வெளிப்படையாகத் தெரிகிற காரணங்கள் எதுவும் இல்லாமலிருக்கலாம். அவள் நேசிக்கிற ஆண் அல்லது உறவுகள்  சார்ந்த அவளின்  உள்ளுணர்வு உணர்த்துகிற உண்மையின் அழுத்தத்தைத் தாங்கவியலாத நிலையிலும், அவனிடம் கேள்விகள் கேட்டு தன்னை வெளிப்படுத்த இயலாத நிலையிலும் கண்ணீரைத் தவிர அவளுக்கு அடைக்கலம் ஏதுமில்லை. இந்தச்சூழலின் கண்ணீரை சம்மந்தப்பட்டவர் உணர்ந்துகொள்ளாமல் அவளை அவமதிக்கும்போது அவள் தன்னுடைய கண்ணீரை மறைத்துக் கொள்வாள்.  

வீட்டின் மூலையில் பெண்களின் கண்ணீரும் ஆத்திரமும் அடங்கியிருக்கும் உணர்வுப்பூர்வமான வாழ்வு இருப்பதை கவிஞர் லதாவின் “மூலை” என்கிற தலைப்பில் உள்ள கவிதையொன்று குறிப்பிடுகிறது. 

“இதோ
இந்த மூலையில்தான்
உலகம் தொடங்குகிறது” 

எனத் துவங்கும் கவிதை, அந்த மூலை என்னவெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.
 
“அழுகையும் ஆத்திரமும்
காதலும் கனிவும்
குழைத்துக் குழைத்துச்
சமைந்திருக்கும் இந்தச் சின்னமூலை.” 

என்று இந்தக் கவிதையை முடித்திருப்பார். ஒரு பெண் தன்னுடைய கண்ணீருக்குக் காரணமானவர்களிடம் மறைத்து வீட்டின் ஒரு சிறிய மூலையில் அடைக்கலாமாவதைப் பேசுகிறது.

தமிழ் இலக்கிய மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை  வெகுளி, நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் உவகை ஆகியவை. இந்த எட்டு வகையான வெளிப்பாடுகளிலும் அவள் துளியேனும் கண்ணீராகத் துளிர்த்துவிடுவாள். பெண்ணுக்கு அவளுடைய எந்த உணர்வாக இருந்தாலும் அதன் அடிப்படையான உண்மையைக்  கண்ணீராகவே வெளிப்படுத்தத் தெரிகிறது.

தோழர் பாலபாரதியின் “பொட்டு” என்கிற தலைப்பிலான கவிதையொன்று புறவாழ்வில் பல்வேறு சூழலில் பெண் தன்னுடைய உடலைப் பிணையம் வைத்து கண்ணீராகத் துளிர்த்திருப்பதைப் பேசுகிறது.

“நீலநிறச் சுடிதாரில் வேலை
தேடிவந்த இளம்பெண்

பணி மாறுதல் கேட்டு
பரிந்துரைக்காக வந்த
பெண்

கட்சித் தொண்டனின்
காதலி
வறுமையின் காரணமாக
வந்து செல்பவள்

யாருடைய கண்ணீர்த்துளி
அந்த நெற்றிப்பொட்டு
அரசு விருந்தினர் மாளிகை
குளியலறையில்?

பெண்ணின் கண்ணீரென்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் கருவி அல்லது எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம்போலத் தோன்றலாம். ஆனால் பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீரென்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. சொற்களற்றுப் போகும் தருணங்களில் அவள் மனதின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவளறிந்த ஒரே வழி.

ஒரு பெண் நெகிழ்ந்து கண்ணீர் பேருக்கும் தருணங்கள் பல. அதில் காதலால் நிறைந்தவளைப் பற்றி கவிஞர் கவிதா முரளிதரனின் கவிதை,

“உலகத்தைவிடப் பெரிதும்
உயிரைவிட விசித்திரமானதும்
கண்ணீரைவிட உண்மையானதுமான
பேரன்பை
இரு கைகளில் ஏந்திக்கொண்டிருக்கிறேன்

காய்ந்த பெருநிலத்தின்
மீதொரு மழைத்துளியாய்...

இருண்ட வனங்கள் மீது கவியும்
பெயரற்ற பறவையொன்றின்
மாய இசைகுரலாய்

ஒருமுறை
வரமாட்டாயா?“ 

மரங்கள் அடர்ந்து ஒளிபுக வாய்ப்பில்லாத இருண்ட வனத்தை உயிர்ப்புள்ளதாக ஆக்குவது பெயர் தெரியாத மாயப்பறவையின் குரல். பெயர் தெரியவில்லை என்பதால் மட்டுமல்ல மானசீகமாக உள்ளிருந்து இசைக்கிற குரலுக்கு, பெயர் எதுவும் தேவையில்லை என்பதாலும் அது பெயரற்றதாக ஆகிறது. மனதுக்குள் மாயம் நிகழ்த்துகிற இசைக்குரலுக்கு தன்னைத் திறக்கிறவளாக பெண் இருக்கிறாள். அவ்விதமாக அவள் தன்னைத் திறக்கும்பொழுது பெருநிலமாக ஆகிறாள். விரிநிலமென ஆகுமவள் வானம் திரண்டு பொழிகிற மழையை ஏந்திக்கொள்ளக் காத்திருக்கிறாள். மழைவாங்கி நெகிழ விரும்புகிறாள். இவ்விதமாக ஒருபெண்ணைக் காத்திருக்க வைக்கிற அவனிடத்தில், அவள் கொண்டிருக்கும் அன்பு இந்த உலகத்தைவிடப் பெரியதாகவும், உயிரை விடவும் விசித்திரமாக இருக்கிறது. இந்த உலகத்தைவிட, அவளின் உயிரையும்விட உயர்ந்ததாக அவளின் கண்ணீர் இருக்கிறது. அதைவிடவும் உண்மையான உணர்வுடன் அவனிடத்தில் காதல் மிகுந்திருக்கும் அவள் இருக்கிறாள்.      

லிசா ஜெனோவா எழுதி ரிச்சர்ட் கிளாட்ஸர், வாஷ்வெஸ்ட்வார்ட்லேன்ட் இயக்கத்தில் வெளியானது “Still Alice” என்கிற ஆங்கிலத் திரைப்படம். இப்படத்தில், Alzheimer என்கிற நினைவாற்றல்  இழப்பு நோயின் காரணமாக மறதிக்குள் வீழ்கிற மொழியியல் பேராசிரியரான ஒரு பெண்ணின் தடுமாற்றங்களை விவரிக்கிறது. தன்னுடைய கணவரை நள்ளிரவில் எழுப்பி, தனக்கு வந்திருக்கும் இந்த நோயைப் பற்றிச்சொல்லும் பொழுது கோபமும் துயரமுமாக கதறி அழுவார். இன்னொரு காட்சியில் கழிவறையை மறந்துவிட்டு பதறித் தேடி அலைந்து அறையின் நடுவிலேயே நின்றபடி சிறுநீர் கழித்து, உடை நனைந்து  கணவனிடம் கதறி அழுவார். மனைவியின் நோய்மையை மிக இயல்பாக தாங்கிக்கொள்கிற கணவனிடம் அந்தப்பெண் அழுவது அவளுடைய உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பதோடு அவளுடைய கண்ணீரையும் அர்த்தப்படுத்துகிறது.

அவலச்சுவை என்கிற இலக்கிய வகைமைக்காக மட்டுமல்ல கண்ணீர் என்பதை ஆண்கள் அறியார். கூடலின் நிறைவில் பெண் தன்னை மறந்த நிலையில் கண்ணீராகத் தன்னையேத் திறப்பதுண்டு.  காமம்சேர் குளத்தார் என்கிற சங்கப்பெண்பாற் புலவர் பாடிய பாடல்,

நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவுஇலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.”


*என் நெஞ்சம் வருந்துகிறது; என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது; .
கண் இமைகளை தீய்ப்பது போன்ற வெம்மையான கண்ணீரைத் தாங்கி, உரையாடி,கலந்து, பொருந்தியிருப்பதற்கு உரிய நம்காதலர் அவ்விதமாக அமைவில்லாதவராக ஆனதால் என்னுடைய நெஞ்சம் மிகவும் வருந்துகிறது.“
ஒரு பெண் தன்னுடைய காதலைக் கூட சொல்லி விடுவாள் ஆனால் உடல் சார்ந்த இச்சையை அவளுடைய தலைவனிடம் கூட வெளிப்படுத்துவதில் தயக்கம் இருக்கும். அவளுடைய விருப்பத்தைச் சொல்வது தவறில்லை என்ற இடத்திற்கு அவள் வருவதற்கு முன்பாக அந்த ஆண் அவளை ஏற்கத் தகுதியுடையவனாக இருக்க வேண்டும் என நினைப்பாள். அவளுடைய அந்தரங்கமான உணர்வை சரியாக புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் வாய்த்தவனிடம்தான் அவள் தன்னை வெளிப்படுத்துவாள்.

தலைவன் பிரிந்து சென்றதால் என்னுடைய நெஞ்சம் வருந்துகிறது என்று சொல்கிற இப்பாடலின் உட்கருத்து மிக முக்கியமானது. “கண் இமைகளை தீய்ப்பது போன்ற வெம்மையான கண்ணீரைத் தாங்கி, உரையாடி,கலந்து, பொருந்தியிருப்பதற்குரிய  நம்காதலர்” என்று சொல்வதன் மூலம் கண்களின் நீராகவும் ஒரு பெண் பெருகியிருப்பதைக் கூறுகிறது. அந்தரங்கத்தில் நெகிழும் அவளுடைய கண்களில் பொங்குகிற கண்ணீரின் இமை தீய்க்கும் வெம்மையை தாங்குகிற வலிமை அந்த தலைவனுக்கு இருந்திருக்கிறது. அக்கணத்தில் அவளோடு அவன் உரையாடியிருக்கிறான். காதல்மொழியால் நிரம்பிய அத்தருணத்தில் அவள் மேலும் நெகிழ, மீண்டும் கலந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு பெண் மனமுவந்து தன்னை ஒருவனிடம் ஒப்புக்கொடுக்க  வேண்டுமெனில் அவள் தன்னளவில் அவனை முழுமையாக
ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அவளது சொற்களற்ற உணர்வுகளின் மொழியான கண்ணீரின் பொருள் உணர்ந்து நடப்பவனோடுதான் அவளால் இயல்பாக இணங்கிப் போகமுடிகிறது. இது வெறும் உடல் சார்ந்த விழைவு மட்டுமல்ல. இருவரின் மனம் சார்ந்த அணுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.


“அதற்கெல்லாம் ஒரு அமைப்பு வேண்டும்” என்றோ “தானாகவே அமையவேண்டும்” என்றோ சொல்லக் கேட்டிருக்கிறோம். பனிரெண்டு பொருத்தங்கள் பார்த்து செய்வது அல்ல திருமணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் மனப்பொருத்தம் அமையவேண்டும் என்று சொல்வார்கள். மனப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே அவர்களுக்கிடையேயான உடல்பொருத்தம் சரியாக அமைந்திருக்கும். அப்படி அமைதலுற்ற ஒரு தலைவன் அவளைவிட்டுப் பிரிந்து சென்றதால், நான்குவரிகளில் அமைந்த இந்தப் பாடலில் “என் நெஞ்சம் வருந்துகிறது; என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது; அமைவில்லாதவராக இருப்பதால் என்னுடைய நெஞ்சம் மிகவும் வருந்துகிறது” என மூன்று முறை வருகிறது. திரும்பத் திரும்ப ஒரு சொல்லைச் சொல்லுகிற அளவுக்கு அவளுடைய அவன்மீதான பித்துநிலை முற்றியிருக்கிறது.

இந்தப் பாடலில், அந்தப் பெண்ணிடம் மிகுந்திருப்பது காதலின் பித்துநிலையே. அவள் தன்னுடைய அந்தரங்கக் கணங்களின் கண்ணீரின் வெம்மையை உணர்ந்தவளாக இருக்கிறாள். அந்தக் கண்ணீர் நிகழ்த்தப்பட்டதல்ல. தானாகே நிகழ்ந்தது. நிகழ்ந்தது என்றால் அமைந்தது. இவ்விதமாக அமைந்த உறவுக்காவே அவள் தன்னை பெருநிலமென விரித்திருக்கிறாள். வான் திரண்டு பொழியும் மழையில் பெண்மனம் திறந்து வெளிப்படுகிறாள் துளி நீராக.

இவர் பாடியதாக குறுந்தொகையில் ஒரே ஒரு பாடல் உள்ளது. ( 4 )




No comments: