பெண் –
உடல் , மனம் , மொழி :
சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..
22.
வெண்மணிப்பூதி:
ஒரு பெண் மறப்பதேயில்லை:
“புணர்குறி வாய்த்த ஞான்றை...”
இந்தக்கவிதையில்
பெண்ணுடலே குறியிடமாகவும் ஆகியிருக்கிறது. கானக ஓடை பெருகி, நீர்ப்பெருக்கெடுக்க
வானம் திறந்து பொழியவேண்டும் என்பதால் அவனுடைய முத்தங்களை மழைபோல வேண்டுகிறாள்
பெண். அவன் தொடுகை நிகழுகையில் வேங்கைமலர்கள் பூத்திருந்ததையும், காட்டு ஓடையென
ஆகியிருந்ததை பெண் மறக்கவில்லை. கானகஓடை பெருகும் உடலின் காக்கைப்பொன்னின் சாயலை
அவள் மறப்பதேயில்லை. அந்த நீர்மையின்
கணத்திற்கு மீண்டும் காத்திருக்கிறாள்.
“தன்னுடைய முதல் சந்திப்பு நிகழ்ந்த இடத்தை நண்பர்களோ, உறவினர்களோ
எப்போதேனும் நினைவுபடுத்திப் பேசுவதுண்டு. ஆனால் காதலர்களுக்கோ அவர்கள் சந்தித்த
அந்த இடம், ஒரு கோயில் பிரகாரத்தைப் போன்று நாளும் வணங்குதற்குரியது. முன்பின்
தெரியாதவர்களான இருவர் ஒருவருக்கொருவர் அறிந்தவர்களாகி பிரிவதற்கு இயலாமல் திருமண
பந்தத்திற்கு ஆட்பட அவர்கள் முதன்முதாக சந்தித்துக்கண்ட அந்த இடமும் காலமுமே
அடிப்படைக் காரணமாகிறது. ஒரு உறவு
தொடங்கி வாழ்ந்த இடமும், அந்த உறவு தன்னை நிறைவு செய்து கொண்ட இடமும் மிக
முக்கியமாகிப் போவது என்பது வாழ்ந்து மறைந்த மனிதரோடு, உயிரோடு இருப்பவர்கள் கொண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு வழியாகவே
சாத்தியமாகிறது.” ________________________________________________________________________________
ஒரு பெண்ணுக்கு பிறந்தவீட்டின் நினைவென்பது உயிர்
பிரியும் காலம் மட்டும் அவளிடமிருந்து அகலுவதில்லை. மேலும், பிறந்த வீட்டின்
நினைவு பெண்களுக்கு இருப்பதுபோல அவ்வளவு ஆண்களிடம் பதிந்திருப்பதில்லை. ஆணின் இடப்பெயர்வு என்பது அவனுடைய கல்வி, தொழில்
ஆகியவற்றை முன்னிட்டு இருக்கும். பெண்ணின் இடப்பெயர்வோ உறவுகள் சார்ந்தது. “அம்மா வீடென்பது
வீடு மட்டுமே இல்லை” என்று அனைத்துப் பெண்களுமே சொல்வதற்குக் காரணம், திருமணமான
அந்த முதல் நாளிலேயே அம்மா வீட்டைவிட்டு சட்டெனத் தன்னை விலக்கிக்கொள்கிறாள். அதுவரையில்
உரிமையோடு வாழ்ந்த அவ்வீட்டிலிருந்து முற்றிலுமாக விலக்கிக்கொள்வது என்பது பெண்களுக்கே
சாத்தியமும் ஆகிறது. உடலளவிலும் வீட்டின் உரிமை என்கிற அளவிலும் தன்னை அந்த
வீட்டிலிருந்து பிரித்துக்கொள்கிற பெண், மனதளவில் அந்த வீட்டுடன் மிக நெருங்கியவளாகவே
எப்போதும் இருக்கிறாள். அதன்பின்பு அவள் வாழ்கிற எந்த வீட்டிலும் அம்மாவின் வீட்டையே ஒப்பீடு செய்து பார்க்கிறாள். அம்மா
வீட்டின் நினைவுகளாலேயே அவள் வாழ்கிற வீட்டின் வெற்றிடத்தினை நிரப்புகிறாள்.
ஒரு பெண் தன்னுடைய வேர்பரப்பி வளர்ந்திருக்கும் தாய்
வீட்டிலிருந்து விலகி, ஒரு தொட்டியில் வளரும் கொடித் தாவரத்தினைப்போல சார்புத்தன்மையுடன்
புகுந்தவீட்டில் வாழத் தொடங்குகிறாள். எத்தனை முட்டி மோதினாலும் அந்தத்தொட்டிக்குள்
மட்டுமே அவளுடைய வேர்களை பரப்பிக் கொள்கிறாள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஈழத்திலிருந்து
புலம்பெயர்ந்து நார்வேயில் வசிக்கும் கவிஞர் கவிதாவின் “தொட்டி பூ” என்கிற தலைப்பிலான
கவிதை ஒன்று,
“ஏதோ ஒரு தோட்டத்திலிருந்து
பெயர்க்கப்பட்டதுதான்
படர்க்கொடி என்பதால்
தொட்டியிடுவதில் சிரமமில்லை
இறுகிய தொட்டியிலிருந்து
வேர்கள் மீளத்துடிக்கும்
எத்தனை விந்தியும் உடையவில்லை
தொட்டியின் அடித்தளம்”.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்களின் வீடு போன்றவற்றை நினைவுச்சின்னமாக
மாற்றுவது வழியாக அவர்களை ஆவணமாக பத்திரப்படுத்த நினைக்கிறோம். பலசமயங்களில் இப்படியான நினைவிடங்களை அவற்றின் சிறப்புகளோடு
சேர்த்து முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் சிலசமயம் இந்த நினைவு இல்லங்களைப்
பராமரிப்பதற்காகச் செயல்படுகிற சாதிச்சங்கங்கள், அரசியல் கட்சிகளினால் அதனுடைய வரலாறு
மங்கலாகி விடுகிறது.
ஒரு இடம் அல்லது வீடு போன்ற உயிரற்ற பொருள்கள் பலதும் அழியாத உணர்வுகளாக நிலைபெற்றிருப்பது
என்பது அவற்றைச் சார்ந்த மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது. பாரம்பரியமான வீடு
என்கிற பெருமிதம் ஆயிரம் ஜன்னல்கள் வைத்துக் கட்டப்பட்ட ஆடம்பரமான மாளிகைகளுக்கு
மட்டுமே சொந்தமானதில்லை. பாரம்பரியம் என்பதில் அப்பா, அம்மா, தாத்தா,
ஆச்சி என இப்படி எத்தனையோ முந்தைய தலைமுறையினரின் நினைவுகள், சொற்களாகப்
பரவிக்கிடக்கும் சின்னஞ்சிறிய வீட்டிற்கும் கூட பொருந்தும். நினைவு என்பது
செல்வத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதில்லை.
உறவுகளுக்கிடையே இருந்த
நெருக்கம், நெருக்கமின்மை சார்ந்த ஒன்றாக எப்போதும் இருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் கவிஞர் கனிமொழி கருணாநிதியின் “என்
வீடு” என்ற தலைப்பிலுள்ள கவிதை பின்வருமாறு,
“நினைவு தெரிந்த நாளாய்
என்வீடு மாறவில்லை
ஆங்காங்கே அழுக்குச் சுவர்களும்
வாசலில் வெற்றிலைச் சுண்ணாம்பு
தடவிய தூண்களும்,
பாசி படர்ந்த கிணற்றடியும்,
சிவப்புப் பூ பூக்கும் அரளியும்,
'அப்பனே முருகா'என
வாழ்க்கையை அவனுக்குத்
தாரை வார்த்துக் கொடுத்துவிட்ட அம்மாவும்
மண்ணில் இருந்து இரண்டடி மேலே
கனவுகளோடு வாழ்ந்த அப்பாவும்
யாருமே மாறவில்லை.
வேலை கிடைத்து மாற்றல் வந்து
வேற்று மாநிலத்தில் சோற்றுக்குத் திண்டாடி,
கல்யாணமாகி, குழந்தை பிறந்து,
வீட்டிற்கு சிமெண்டு பூசி, வெள்ளையடித்து
குரோட்டன்ஸ் வைத்து பார்த்தபோது
அதே காரைபோன சுவரும் தூண்களும்
என் மூதாதையரின் தாம்பூலப் பதிவுகளும்
அழியாமலே இருந்தன.
ஊரோடு உறவுகள் நீர்த்துப்போய்,
என் ஊர் வாசனையே தெரியாத
ஒரு தூரதேசத்தின் ,
தீப்பெட்டிச் சொர்க்கத்தில்
சொருகிக்கொண்டபோதும்,
தன் இளம் இருட்டுச்சுவர்களுக்குள்
என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,
அம்மாவின் பழைய சேலையைப் போல
மெத்தென்று மனதைத் தழுவும்.”
“நினைவு தெரிந்த நாளாய்
என்வீடு மாறவில்லை
ஆங்காங்கே அழுக்குச் சுவர்களும்
வாசலில் வெற்றிலைச் சுண்ணாம்பு
தடவிய தூண்களும்,
பாசி படர்ந்த கிணற்றடியும்,
சிவப்புப் பூ பூக்கும் அரளியும்,
'அப்பனே முருகா'என
வாழ்க்கையை அவனுக்குத்
தாரை வார்த்துக் கொடுத்துவிட்ட அம்மாவும்
மண்ணில் இருந்து இரண்டடி மேலே
கனவுகளோடு வாழ்ந்த அப்பாவும்
யாருமே மாறவில்லை.
வேலை கிடைத்து மாற்றல் வந்து
வேற்று மாநிலத்தில் சோற்றுக்குத் திண்டாடி,
கல்யாணமாகி, குழந்தை பிறந்து,
வீட்டிற்கு சிமெண்டு பூசி, வெள்ளையடித்து
குரோட்டன்ஸ் வைத்து பார்த்தபோது
அதே காரைபோன சுவரும் தூண்களும்
என் மூதாதையரின் தாம்பூலப் பதிவுகளும்
அழியாமலே இருந்தன.
ஊரோடு உறவுகள் நீர்த்துப்போய்,
என் ஊர் வாசனையே தெரியாத
ஒரு தூரதேசத்தின் ,
தீப்பெட்டிச் சொர்க்கத்தில்
சொருகிக்கொண்டபோதும்,
தன் இளம் இருட்டுச்சுவர்களுக்குள்
என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,
அம்மாவின் பழைய சேலையைப் போல
மெத்தென்று மனதைத் தழுவும்.”
ஒரு உறவு தொடங்கி வாழ்ந்த இடமும், அந்த உறவு தன்னை
நிறைவு செய்து கொண்ட இடமும் மிக முக்கியமாகிப் போவது என்பது வாழ்ந்து மறைந்த
மனிதரோடு, உயிரோடு இருப்பவர்கள் கொண்டிருக்கும்
உணர்வுப்பூர்வமான பிணைப்பு வழியாகவே சாத்தியமாகிறது.
முதல் சந்திப்பு நிகழும் இடமென்பது நட்புகளிலும் உறவுகளிலும் கூட முக்கியமானது
எனினும் காதலில் மட்டும் அவ்விடம் அழியாத ஒரு நினைவாகவும் பூஜிக்கப்படக் கூடிய
தலமாகவும் மாறிவிடுகிறது. காதலின் வளர்ச்சியில் சந்திப்பு நிகழ்கிற சூழலுக்கும்
இடத்திற்கும் முக்கியப்பங்கு உண்டு. முதல் சந்திப்பு நிகழ்ந்த பொழுதினையும்
இடத்தையும் சொல்லிச் சொல்லி மகிழ்வடைபவர்களாகவே காதலர்கள் இருப்பார்கள். மனமொன்றிய
காதலர்க்கு தொடக்கக்கால நினைவென்பது தூண்டுதல் அடையச்செய்கிற ஒன்றாகவே இறுதிக்காலத்திலும்
இருக்கும். காதலர்களின் முதல் சந்திப்பின் இடமென்பது ஆண்களை விடவும் பெண்களுக்கே
மிக ஆழமாகப் பதிந்திருக்கும். அப்போது அவளும் அவனும் அணிந்திருந்த உடை, அந்த உடையில்
பதிந்திருந்த சிறிய சுருக்கம், அவள் சூடியிருந்த பூ, அருகிலிருந்த மரம்,
அதிலிருந்து அசைந்து கொண்டிருந்த காற்று, காற்றில் கலந்திருந்த வாசனை என எதையுமே
பெண் மறப்பதேயில்லை. தலைவனுடன் முதல் சந்திப்பு என்பது அவளுக்கு அம்மா வீடு போல
எப்போதும் வெதுவெதுப்பாக அவளுடைய நினைவிலிருந்து அகற்ற இயலாததாக இருக்கும். பெற்றோர்
நிச்சயிக்கும் திருமணத்திலும் கூட பெண்பார்க்க வந்தபொழுது அவன் அணிந்திருந்த உடை, அவள்
அணிந்திருந்த புடவை, நகை, பொட்டு உட்பட எல்லாமும் அம்மாவின் பழஞ்சேலையின்
மெதுமெதுப்பாய் பெண்ணின் மனதைத் தழுவிக்கொண்டிருக்கும்.
வெண்மணிப் பூதியாரின் குறுந்தொகைப்பாடல், களவு வாழ்வில்
மகிழ்ந்திருக்கும் தலைவன் விரைவில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற
விருப்பத்தினை தோழியிடம் தலைவி சொல்வதாக
அமைந்துள்ளது.
“இதுமற் றெவனோ தோழி!
முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்இமிழ் கானல்.
இணர் வீழ் புன்னை யெக்கர் நீழல்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன் என் கண்ணே; அவன்சொல்
கேட்டனமன் எம் செவியே மற்று- அவன்
மணப்பின் மாண்நலம் எய்தித்
தணப்பின் ஞெகிழ்ப்ப, எம் தடமென் தோளே?”
புணரி திளைக்கும் புள்இமிழ் கானல்.
இணர் வீழ் புன்னை யெக்கர் நீழல்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன் என் கண்ணே; அவன்சொல்
கேட்டனமன் எம் செவியே மற்று- அவன்
மணப்பின் மாண்நலம் எய்தித்
தணப்பின் ஞெகிழ்ப்ப, எம் தடமென் தோளே?”
“அன்புத் தோழியே, பழமையான நீரையுடைய கடலின் அலைகள் மோதித்
திளைத்திருக்கும் கடற்கரைச் சோலையில் பறவைகள் ஒலிக்கும். அப்படியான கடற்கரைச் சோலையில் கொத்துக்களாய் பூத்துள்ள
புன்னையின் மலர்கள் வீழ்ந்திருக்கும் மணல்மேட்டின் நிழலில் தலைவனைச் சந்திப்பதற்கு
புணர்க்குறி வாய்க்கப்பெற்றேன். அந்தப்பொழுதில் என்னுடைய கண்கள் தலைவனைப்
பார்த்தன. என் செவிகள் அவன் பேசிய சொற்களைக் கேட்டன. என்னுடைய பரந்த, மெல்லிய தோள்கள் அவன்
என்னை மணந்ததால் மாட்சிமையுடைய நன்மையைப் பெற்றன. அவன் என்னைப் பிரிந்ததால்
மெலிந்து சோர்வடைந்தன. எது என்ன வியப்பு.” எனத் தலைவி சொல்கிறாள்.
இந்தப் பாடலின் வழியே அறிகிற செய்திகளாக, “புன்னை மரத்தின் நிழல்
விழுந்திருக்கும் மணல்மேடு என்பதால் தலைவனும் தலைவியும் பகற்பொழுதில்
சந்தித்துக்கொண்டனர். பறவைகள் ஒலிக்கும் கானல் என்பதால் மனிதர் யாரும் அந்த
இடத்தில் இல்லை. ஆனால் பறவைகளின் ஒலி, பின்னாளில் அவர்களின் உறவு ஊராருக்கு
“அலராக” ஆவது பற்றிய குறியீடாகவும் குறிப்பிடலாம். அவனைக் கண்டது கண்கள், அவன்
சொல் கேட்டது செவி. அவை அமைதியாக இருக்க, தோள்கள் மெலிவதாக இருப்பது வியப்பு எனத்
தலைவி குறிப்பிடுவதின் மறைபொருள் என்னவாக இருக்கும் என்பதே இந்தப் பாடலின் மையமாக
இருக்கிறது. யாருமற்றத் தனிமையில் தலைவனைச் சந்தித்துக் கூடியிருக்கிறாள்,
கண்டலும் கேட்டலும் கடந்து தோள்கள் நெகிழ்ந்து இன்புறும் வகையிலான கூடல் அங்கே
நிகழ்ந்திருக்கிறது. மணத்தல் என்பது கூடலின் வாசனை என்பதால், மணத்தலின் பேறு
தோள்களுக்கே முழுமையாக வாய்க்கும். விலகுதலின் இழப்பும் தோள்களே முற்றிலுமாக உணரும்
என்பதைத் தலைவி குறிப்பாகச் சொல்கிறாள்.
தலைவன், தலைவி இருவரது மனநெருக்கம் என்பது உடல் இணைவினை நிகழ்த்தி அவர்களை
திருமணவாழ்வுக்கு விரைவுபடுத்துவதற்கு அந்த இடமும் சூழலுமே காரணமாகிறது. கால ஓட்டத்தில்
வாழ்க்கை முறையில் எத்தனை விதமான
மாற்றங்கள் நிகழ்ந்தாலும் காதல் வயப்பட்ட பெண்ணின் உணர்ச்சிகள் மாறுவதேயில்லை.
புன்னையின் மலர் உதிர்ந்த மணற்மேட்டினை குறியிடமாக சங்கஇலக்கியம் காட்டினால், கானக
ஓடை பெருகுகிற நிலையில் பெண்ணுடல் உயிர்த்திருந்ததாக கூடலைக் குறித்து கவிஞர்
சந்திராவின் கவிதை,
“மலைதுயிலும்
விதானத்தில்
கானக
ஓடைகள் பெருகும்
என் உடல்
காக்கைப்பொன்னின்
சாயலில்
உயிர்த்திருந்தது
சில்லிடும்
பனியில்
காட்டுவேங்கைப்
பூக்கள்
மலரும்
தருணத்தில்
அரூபமற்ற
உன் அன்பிற்காக
சந்திரவெளியில்
பறவையின்
அமைதியில்
காத்திருக்கிறேன்
மழையென
உதிரும்
உன்
முத்தங்களைப் பெற.”
இவர் பாடியதாக ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. (குறுந்- 299)
No comments:
Post a Comment