Thursday, 29 September 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..

28. பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்.. 






ஒரு பெண் இயக்குகிறாள்:



“ஊர்மதி வலவ! தேரே சீர்மிகுபு...”

பொருளீட்டுதலின் நிமித்தமோ போரின் பொருட்டோ வினைமேற் செல்ல வேண்டியது ஒரு ஆணின் கடமையாகவும், அச்சமயத்தில் அவனைப் பிரிந்து இல்லத்தில் ஆற்றியிருப்பது பெண்ணின் அறமாகவும் சங்ககாலத்தில் வரையறுக்கப் பட்டிருந்தது. தலைவியைப் பிரிந்து அவ்வாறான செயலை முன்னின்று முடித்தவன் வெகுதொலைவிலிருக்கும் தனது வசிப்பிடத்தை வேகமாகச் சென்றடைய எண்ணுகிறான். அவனைச் சுமந்து விரைகிற வாகனம் மிக மெதுவாக ஊர்வதாக சலிப்புறும் அவன் மனமோ ஒலியைக் காட்டிலும் வேகமாக முன்னகர்ந்து கொண்டிருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக வரலாற்றை மாற்றியமைக்கக் கண்டுபிடித்த பலவற்றுள் ‘சக்கரத்திற்கு’ முதன்மையான இடமுண்டு. ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறையை அவர்களின் காலகதியை அசாதாரணமான முறையில் அது மாற்றியமைத்துவிட்டது. இன்று  ஒரு வெளியின் பொருட்டு நாம் வெகுதூரமும், மிக விரைவாகவும் பயணிப்பதை சக்கரம் பொருத்திய வாகனங்கள் ஏதுவாக்கிவிடுகின்றன. ஒரு வாகனத்தை ஓட்டும்போதோ அல்லது அதில் பயணிக்கும் போதோ அதனையொட்டியே மனமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் நடந்து செல்கையில் கிடைக்கிற அனுபவம் அலாதியானது. நடைப்பொழுதில் மனதின் பயணம் என்பது  பலமடங்கு வேகமாகவும் அதேசமயம் நிதானமாகவும் இருக்கும். எங்கிருந்து எங்கு செல்கிறது என்று கணிக்கமுடியாதபடி தொடர்ச்சியாக  நிகழ்ந்துக்கொண்டிருக்கும்.
வயதை முன்னிட்டு காலை, மாலைப் பொழுதுகளில் நடையினைப் பயிற்சியாக மேற்கொள்பவர்களுக்கும், பணியின் காரணமாக நடந்து செல்ல நேர்பவர்களுக்கும், இரவுநேரக் காவலில் ஈடுபட்டிருப்போர் நடந்து கொண்டேயிருப்பதற்கும் இடையிலான வாழ்வியல் வேறுபாட்டினையொட்டி மனதின் பயணமும் வேறுபடுகிறது. காலமும் சூழலும் மனதின் வேகத்தை முடிவு செய்கிறது.

கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலில் ஒரு இடத்தில், ‘வந்தியதேவனும், இளைய பிராட்டியும் பேசியதை ஒட்டுக்கேட்ட ஆழ்வார்க்கடியான் பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயுவேக மனோ வேகமாகத் தென்திசை நோக்கிச் சென்றான்’ என்று வரும். இதுபோல ஓரிடத்தில் அல்ல அக்கதை முழுக்கவே, “வாயுவேக மனோவேகம்என்கிற சொற்றொடரை பல்வேறு இடங்களில் காணமுடியும். இதுமட்டுமல்ல, அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல்வேறு சரித்திரக்கதைகளில், குதிரையை வேகமாகச் செலுத்துகிற காட்சிகளில் பெரும்பாலும் “வாயுவேக மனோவேகம்” பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். குதிரைகள் என்றாலே அதனுடைய வேகம்தான் நினைவுக்குவரும்.  அவை கவாயுவேகத்தில் சென்றன, காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றன என்றெல்லாம் எழுதுவதன் வழியாக வாசிப்பவர் மனதில் குதிரைகளின் வேகத்தை பலமடங்கு அதிகமாக்கிவிட முடிந்திருக்கிறது.

“காற்றை மனதோடு எதற்காக ஒப்பிடவேண்டும், காற்று ஓரிடத்தில் நிற்காமல் அலைவதால்” என மிக எளிமையாக ஒரு விளக்கம் சொல்லிவிடலாம். பகவத்கீதையில்  அர்ஜுனன், “காற்று மாதிரி இந்த மனசு கிடந்து பறக்கிறதே, காற்றைப் பிடித்து அடக்க இயலாதது போலவே மனசையும் அடக்கமுடியவில்லை” என்கிறான். காற்றைப்போல மனம் அலைந்து கொண்டிருப்பதுதான் மனதின் இயல்பாக இருக்கமுடியும். கீதையில்  குறிப்பிடுகிற தீபம்  போல ஒளிர்கிற யோகியின் மனம்கூட காற்றின் மெல்லிய அலைவுக்குள் அசைந்து கொண்டுதானிருக்கிறது.
கம்பராமாயணத்தில், இராமனின் வேகம்இலக்குமனின் வேகம், அனுமனின் வேகம் பற்றி குறிப்பிடுகிற பல பாடல்களில் வாயுவேகம்பயன்படுத்தப்பட்டுள்ளது. “சொல் ஒக்கும் கடிய சுடுசரம்என்று பாலகாண்டத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. இராமபாணம் காட்டிலிருந்த தடாகையின் மார்பை ஊடுருவிப் பாய்ந்ததைப் பற்றி கம்பர் இவ்விதமாகச் சொல்லுகிறார். நல்லோர்களின் சொல், மூடர்களிடம் தங்காது வெளியேறிச் செல்வது போல தடாகையை அழிக்க எய்த இராமனுடைய பாணம் அவளைத் துளைத்து, அவளுள் தங்காது மிகவேகமாக  வெளியேறியதாக கம்பர் குறிப்பிடுகிறார். முனிவர்களின் சாபம் பலிப்பதாகச் சொல்லப்படுகிற புராணக்கதைகளில் ஒரு சொல் வினைபுரியும் வேகத்தினை அறிந்து கொள்ள முடிகிறது. “சொல்என்பது அத்தனை வேகமா என்றால் அது  மனதின் வேகமென்றே சொல்லலாம். சீரான சிந்தனையுடன் சொல்லப்படுகிற சொல், மனதின் ஆழத்தையும், அதன் வேகத்தையும் உணர்த்திவிடும்.
சீர்மையுடன் செயல்படுகிறவனுக்கு இலக்கு இருக்கிறது. அதனை நோக்கி இயங்குபவன், அப்பொழுது வேறு எதனையும் நினைப்பதில்லை. பொதுவாக விளையாட்டு வீரர்கள் நூற்றுக்கணக்கில்  கேமராக்கள் இருப்பதைப் பற்றியோ, விளையாட்டுத்திடலைச் சுற்றிலும் ஆயிரகணக்கானவர்கள் கைதட்டி ஆரவாரிப்பதைப் பற்றியோ, தொலைக்காட்சிகளின் வழியாக லட்சக்கணக்கானவர்கள் தங்களுடைய விளையாட்டைப் பார்க்கிறார்கள் என்பதையோ நினைவில் கொள்வதில்லைஓட்டப்பந்தையமோ, துப்பாக்கி சுடுவதோ, நீச்சல் போட்டியோ கலந்துகொள்பவரின் மனோவேகம் என்பது அப்போதைய அவர்களது இலக்கை நோக்கியே இருக்கும்.
ரியோ ஒலிம்பிக்ஸில் மைகேல் பெல்ப்ஸ்’  கலந்துகொண்ட நீச்சல் போட்டியைப் பார்க்கும் பொழுது  புரளுகிற நீரின் நீலமும் பச்சையுமான வண்ணங்களில் தெறிக்கிற நீர்த்துளிகளின் வேகத்தில் உடலின் அசாத்தியமான இயக்கத்தை உணரமுடிந்தது. கால்களில் அலைவும், சுழன்று திரும்பும் வேகமும் ஒரு அதிவேக இயந்திரத்தை நினைவூட்டியது. தண்ணீரும் தானும் தவிர அங்கே வேறொன்றும் இல்லை என்பதுபோல நீந்திக் கொண்டிருக்கும் நீச்சல் வீரர்களைப் பார்க்கிறவர்களும் தங்கள் மனதிற்குள் சுழன்று திரும்பி, நீரைக் கிழித்து அதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
இவ்விதமாக, முனைப்புடன் ஈடுபட்ட ஒரு செயலில் வெற்றியடைந்த ஒருவன் அதை முதலில் யாரிடம்  பகிர்ந்துகொள்ள நினைப்பான்? யாரைத் தேடி அவன் ஓடிவருவான்? அந்த யார்என்பது பெரும்பாலும் மனைவி, சிலபோது அம்மா, சிலபோது காதலி அல்லது தோழியாக இருக்கும். மிகச் சிறிய பொழுதே அப்பாவோ நண்பனோ இருப்பார்கள். ரியோ ஒலிம்பிக்ஸில் 18வது முறையாக தங்கம் வென்றவுடன் மைகேல் பெல்ப்ஸ்அணைத்து முத்தமிட்டது மனைவியையும் குழந்தையையும்தான். ‘மைகேல் பெல்ப்ஸ்தன்னுடைய மனைவியிடம் வெற்றியினைப் பகிர்ந்து கொண்டது போலவே விளையாட்டு வீரர்கள் பலரும் ஒவ்வொரு விளையாட்டின் இறுதியிலும் செயல்படுவதைக் காணமுடிகிறது. தன்னுடைய வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் கூட தனக்கு விருப்பமான பெண்ணிடமே பகிர்ந்து கொள்வதற்கு பெரும்பாலும் ஆண் விரும்புகிறான்.
வினை என்பது ஆடவரின் செயலாக ஆண்கள் நெறிப்படுத்தப்பட்டிருக்க அவனை இயக்குபவளாகப் பெண் இருக்கிறாள். வினை ஒன்றினை முடிக்கச் சென்றவன் சிறப்பாக முடிக்கிறான். முடித்தவுடன் மனைவியிடம் அல்லது தனக்கு விருப்பமான பெண்ணிடம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் விளையாட்டு வீரர்களின் மனைவிமார்களைப்போல விளையாட்டுத் திடலில் இல்லாமல் வீட்டில் இருக்கிறாள். அவளிடம் தன்னுடைய வெற்றியைப் பகிர்ந்துகொள்ள உடனடியாக அவளிருக்கும் இடம் நோக்கி விரைந்து செல்வான்.
வெகுதூரத்திலிருந்து அவளுடைய இருப்பிடம் நோக்கித் திரும்புகிறவனுக்கு அவன் வருகிற வாகனத்தின்  வேகம் மிகமிகக் குறைவாக இருக்கிறதென்றே தோன்றும். காற்றைவிட வேகமாக வாகனத்தை விரட்டிச் செல்ல நினைப்பான். அப்போது அவனுடைய மனமானது ஒலியை விடவும், ஒளியை விடவும் பலமடங்கான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். பிரிந்திருந்தவர்கள் இணைகையில் காலம் அவர்களுக்கு முன்பாக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்
வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் எழுதிய அகநானூற்றுப் பாடல்,

படுமழை பொழிந்த பயம்மிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்க,
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப,

வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழ,
திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி;

ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.”



முல்லை நிலகாட்சியில் விரிகிறது இந்தப்பாடல். மழைக்காலம் தொடங்கும் பொழுது வினைமுடித்துத் திரும்புவேன் எனக்கூறி தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். வினையும் நிறைவாக முடிந்தது. மழைக்காலமும் தொடங்கியது. தலைவியைக் காண்கிற வேட்கை தலைவனிடம் மிகுந்திருக்கிறது. தேர்ப்பாகனிடம் “தேரினை விரைந்து செலுத்துக” என்று கூறுகிறான்

தேர்ப் பாகனே, ஒலியுடன் கூடிய பலத்த மழை பொழிகிறது. பயனுள்ள முல்லைநிலத்தின் ஆழமான பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அவற்றில் தங்கியிருக்கும் வாய்ப் பிளந்த தேரைகள் சத்தமிடுகிற  ஒலியானது  பல வாத்தியங்கள் கலந்த இசையைப்போல வழிநெடுகிலும் கேட்கிறது.
சிறிய புதர்களில் இருந்து உதிர்கின்ற நீண்ட காம்புகளைக் கொண்ட பிடவப்பூக்கள் செம்மண் நிலமெங்கும் உதிர்ந்து அந்த நிலத்தை அழகு செய்கின்றன. மிகுந்த சினமுடைய பாம்பின் படம் மேல்நோக்கியிருப்பது  போன்று, குளிர்ந்த காந்தள் பூவின் மொட்டுக்கள் மணங்கமழுமாறு கட்டவிழ்ந்து மலர்கின்றன.
முறுக்கிய கொம்பைக் கொண்ட ஆண்மான், தெளிவான நீரைக் குடிக்கிறது. பின்னர் தன் மனத்துக்குப் பிடித்த துணை மானுடன் சென்று தங்குகிறது. இப்படியாக, மழை இந்தக்காடு முழுவதையும் அழகு செய்திருக்கிறது.
காட்டின் நடுவேயுள்ள பெரிய பாதையில் வேகமாகக் குதிரைகளை ஓட்டிச் செல்கிறாய் நீ. உன்னுடைய குதிரைகளின் பிடரி மயிர் அளவாகக் கத்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றின் கழுத்தில் உள்ள மாலைகள் கால்வரை தழைந்து தொங்குகின்றன, அந்த மாலைகளில் உள்ள மணி கம்பீரமாகச் சத்தமிடுகிறது.
பாகனே, தேரை இன்னும் வேகமாக ஓட்டு. அழகிய மாந்தளிர் நிறம் கொண்டவள் என்னுடைய தலைவி,  என்மீது ஆசை வைத்திருக்கும் அந்தப் பெண்ணை  விரைவாக நெருங்குவோம்.”
காதலியிடம் திரும்பவேண்டிய கார்காலம் வந்துவிட்டது. காட்டில் பெய்யும் மழையும், குளிரும், தண்ணீரில் கத்துகின்ற தவளைகளும், செம்மண்ணும், அதில் கிடக்கும் பூக்களும், பாம்பின் படம் போன்று நிமிர்ந்த பிடவம் பூக்களிலிருந்து காற்றில் மிதக்கும் வாசனையும், இணை சேர்ந்திருக்கும் மான்கள் என யாவையும் அவனுக்கு அவளை நினைவுபடுத்துகின்றன. மழைக்கால முல்லைநிலக் காட்சியானது அவனுக்கு அவளுடைய உடலையும் அவளுடன் கூடியிருந்த காலத்தையும் நினைவூட்டுகிறது. எனவே அவன், “தன்மீது மிகுந்த விருப்பமுடன் அவளும் அங்கே காத்திருப்பாள், அவளை உடனடியாக நெருங்கி இருக்கவேண்டும்.” எனச் சொல்கிறான்.

தலைவன் கூற்றாக, பெண்பாற்புலவர் ஒருவர் எழுதியுள்ள இந்தப்பாடல்  தலைவியின் விருப்பத்தையே முன்வைக்கிறது. தலைவன் மீதுள்ள காதலினால், அவனுடைய விருப்பமும் செயலுமே தன்னுடையதெனக் கருதி அவளே இல்லையென்றாகியிருப்பாள். வினையாற்றும் பொழுது அவனுடைய  கவனம் சிதறாமல் இருப்பதற்கு தலைவிதான் தூண்டுதல் செய்கிறாள். அவனுடைய வெற்றியை அவளிடமே முதன்முதலாகப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென காத்திருக்கிறாள். அவனுடைய செயலில் வெற்றி கண்டவுடன் உடனடியாகத் தன்னைத்தான் தேடி வரவேண்டும் என்பதை மட்டுமே அவள் விரும்புகிறாள். எனவேதான் சென்ற காரியத்தை விரைந்து முடித்துவிட்டு வருகிற தலைவனின் பாதையில் எதிர்ப்படுகிற அனைத்தும் தன்னை நினைவூட்ட வேண்டுமென குறிப்பால் உணர்த்துகிறாள். தலைவன்மீது அன்பு கொண்டுள்ள தலைவியினுடைய விருப்பமே இங்கே  மனோவேகமாகிறது. அதுவே தலைவனை இயக்கி, தேர்ப்பாகனை விரைந்து செலுத்தச் சொல்கிற பாடலாக மாறியுள்ளது.  

நிலமும், பொழுதும், காலமும் மாறியுள்ளன. எனவே மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளும் மாறுபட்டுள்ளன. இப்பொழுதும் மழைக்காலம் தொடங்குகிறது. இப்பொழுதும் தலைவன் பிரிந்திருக்கிறான். எந்தக் கணத்திலும் கதவைத் தட்டிவிட மாட்டானா என்கிற தவிப்புடைய பெண்ணின் மனதினை வெளிப்படுத்துகிற மு.சத்யாவின் கவிதை,

கார்மேகம் இறங்கி வந்துவிட்டது
மழை பொழியும் தருணம் இது
பருவங்கள் சந்திக்கும் நாளின் அந்திப்பொழுது
தொட்டால் போதும் அந்த ரோஜாவை
எல்லா இதழ்களையும் உதிர்த்துவிடும்
வானவில்லைப் பிடித்து வைத்திருக்கிறது
தெள்ளியநீர்
ஒருகல் போதுமானது கலைத்துவிட
உன் காலடியோசை வந்து கதவு தட்டும்
கனவுகளையும் கற்பனைகளையும் கலைத்தபடி
உன்னைப் பிரிந்து பலநாளாகிவிட்டது
எந்த நொடியும் நீ வந்துவிடக்கூடும்
கூடை நிறையக் கவிதைகளைச் சுமந்தபடி.”

சங்கத் தலைவியைப் போலவே நவீனப்பெண்ணும் திரும்புகிறவன் கவிதைகளோடு வரக்கூடும் என எதிர்பார்க்கிறாள். காத்திருக்கிறாள். வான்திறந்து பெய்த மழையில் தெள்ளிய நீர் வானவில்லைப் பிடித்துவைத்திருப்பது போன்ற காத்திருப்பில் இருக்குமவள் தனக்குள்  கனவுகளையும்  கற்பனைகளையும் நிரப்பிக் கொள்கிறாள். நவீன வாழ்வின் தலைவன், “ஒரு கல் கொண்டு அவளுடைய கனவுகளைக் கலைக்கிறானா அல்லது  கவிதைகள் கொண்டு அவளை நிரப்புகிறானா”  என்கிற பதற்றம் இன்றைய பெண்ணிடம் இருக்கிறது. அவன் எப்படியிருப்பினும் பெண் காத்திருப்பவளாக இருக்கிறாள். ஆனால், அவன் பிரிந்து சென்றிருக்கும் காலங்களிலும் இவள் விருப்பத்தில்தான் அவன் இயங்கிக் கொண்டிருப்பதாக நினைக்கிறாள். அவன் மீது தான் கொண்டிருக்கும் பிரியத்தை உணர்ந்து கொண்டிருப்பான் என்பதாக நம்புகிறாள்

இவர் எழுதியதாக அகநாநூறில் ஒரே ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. (அகம்: 154)



No comments: