Thursday, 15 September 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

23.நெய்தற் கார்க்கியார்:







ஒரு பெண் வழங்குபவளாக இருக்கிறாள் :

“காண வந்து, நாணப் பெயரும்

பெண்ணுடைய நாணமென்பது எவ்வளவிற்குப் பரவசம் தருவதாக இருக்கிறதோ அவ்வளவிற்கு பிரிவின்போது துயரம் தருவதாகவும் இருக்கிறது. மாறாக ஒரு பெண் ஏற்றுகொள்ளாததால் ஆண் அடைகிற நாணமென்பது அவனிடத்தே அவமானமாகவும் பிறகு வன்மமாகவும் உருக்கொள்கிறது. மேலும் மறுக்கப்பட்ட காதலினால் அவமானம் அடையும் ஆண் அப்பெண்ணின் மதிப்பைச்  சீர்குலைப்பவனாக மாறிவிடுகிறான். காதலை ஏற்றுகொள்ளாத பெண்ணுக்குக் கட்டாயத்தாலி கட்டுவது என்பதில் தொடங்கி அவளுடைய முகத்தில் திராவகம் ஊற்றிச் சிதைப்பது வரையிலான வன்செயல்கள் மூலம் தனது ஆண்மையைப் போலியாகவேணும் நிருபித்துக்கொள்ள வேண்டிய உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான்.  
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணுக்கு நாணமென்பது அவளுடைய இயல்பு சார்ந்து, வாழும் சூழல் சார்ந்து இருக்கக்கூடிய பண்பு. அவளுக்கு அது இயல்பாக அமைந்திருக்கவேண்டும். மேலும் நாணம் என்பது பண்பாட்டு ரீதியாக பெண்மீது திணிக்கப்பட்டிருக்கும் சுமை என்று தோன்றினாலும் காதலில் வெளிப்படுகிற பண்பும் அதுதான். தலைவனை ஏற்றுகொள்வதற்கு முன்பு இயல்பாக இருக்குமது அவனோடு கூடித் திளைத்திருந்தபின்பு மேலும் பொலிவு பெறுமென்பது காதலின் அடிப்படை. இருவருக்குமிடையே பிரியத்தை கனியச் செய்யும்படியாக இருக்கிற நாணம்,  அதன்பின்பு நினைத்துப் பார்க்கையில் மகிழ்வான உணர்வை மட்டுமே கொடுப்பதாக இருக்கவேண்டும். மாறாக அவனோடு கூடியிருந்ததற்காக வருந்தி ஒரு பெண் நாணப்படுவாளேயானால், அதைப்போல துயரானது வேறு எதுவுமில்லை. இவ்வாறு பெண்ணின் நாணமானது இருவேறு பொருள்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் தன்னுடைய காதல் ஒரு பெண்ணால் ஏற்றுக்கொள்ளப் படவில்லையென ஆண் நாணப்படுவதும் உண்டு.  

சங்கப்பெண்பாற் புலவர் நெய்தற்கார்க்கியாரின் குறுந்தொகைப் பாடலொன்று   ஆணுடைய நாணத்தைப் பற்றிப் பேசுகிறது.

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் 
தெண்கடல் அடைகரைத் தெளிர்மணி ஒலிப்பக் 
காண வந்து, நாணப் பெயரும் 
அளிதோ தானே, காமம் 
விளிவதுமன்ற நோகோ யானே.

கடல் அலை ஆர்ப்பரிக்கும் துறைப்பகுதியின் தலைவன் அவன். தான் வாழ்கிற நிலத்தைப்போல ஓயாது அலையடிக்கிற காதலை தலைவியின் மீது கொண்டிருக்கிறான். தலைவியோ தெளிந்த நீரினை உடைய நதியானது கடலை அடையும் கரைப்பகுதியைச் சேர்ந்தவள். நதியின் தெளிந்த நீரினைப்போல சலனமற்றவளாக இருக்கிறாள். வேற்றுநிலத்தைச் சேர்ந்த அவன், அலையின் இயல்போடு தலைவியைத் தேடிவருகிறான்.

தாமரைமுகை வடிவில் செய்த தேர்முகப்பை கையால் பற்றி, அவனுடைய வரவை அறிவிக்க, ஓசையெழுப்பியபடி, தோழியும் தலைவியும் இருக்கிற பகுதிக்குத் தேடிவருகிறான். தலைவியின் பார்வை அவன்மீது படவேண்டும் என்கிற ஆர்வத்துடன் வந்திருக்கிறான்.

சங்கமரபின்படி தலைவி இப்பொழுது என்ன செய்யவேண்டுமென்றால், நாணத்தைக் கைவிட்டு, காமம் பெருக அவனை அணைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தலைவன் வந்தவுடன் பெண் அதுவரையில் அணிந்திருந்த நாணம் என்கிற அடிப்படையான பண்பை, அவள் அவனுக்காக கைவிடவேண்டும் என்பது அகவாழ்வுக்கான மரபு, ஆனால் அவளோ களவு வாழ்வில் கைவிட வேண்டிய நாணத்தைக் கைவிட மறுத்து அவனை ஏற்காமல் விலகியிருக்கிறாள். தலைவனைக் காண தலைவி மறுத்ததால் தலைவன் வருந்தமடைவதை தோழி காணுகிறாள். மேலும் அலையெனப் பொங்கி ஆரவாரிக்கும் தன்னுடைய காமத்தையும் தடுக்கவியலாமல், அதற்காக நாணப்பட்டுத் திரும்புகிற தலைவனின் நிலைக்காகத் தோழி இரக்கப்படுகிறாள். தலைவனை அலைக்கழிக்கும் காமத்தினைக் கைவிட இயலாத அவனுடைய இந்நிலை நீடித்தால் அவன் இறந்துவிடுவான் என்பதால் அவனை நினைத்து வருந்துவதாக தோழி, தலைவிக்குச் சொல்வதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

நம்மிடம் நயந்து எதையேனும் வேண்டுகிறவர்களின் குறையை நிவர்த்தி செய்யவேண்டும். அப்படி அவர்களுக்கு உதவி செய்யாமல் அவர்களின் உயிர் பிரியும் அளவுக்கானத் துன்பத்தைத் தரக்கூடாது. அதனால் நாணத்தைக் கைவிட்டு தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவியை மறைமுகமாக வழிப்படுத்துகிறாள் தோழி. தலைவியின் மீதான காமத்தை விட்டுவிட இயலாமல் தேடிவந்த தலைவனுக்காக அவள் கைவிடவேண்டிய நாணத்தை தலைவி துறக்கவில்லை. அதனால் தலைவி தன்னை ஏற்றுக்கொள்ளாத தன்னுடைய நிலையையெண்ணி நாணப்படுகிறான்.

ஒரு ஆண் அவனுடைய உயிர்போகும் அளவுக்கு நாணுவதென்பது வருத்தம் தரக்கூடிய செயல். அவன் விரும்பிய காரணத்தினாலேயே பெண் அந்தக்காதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது நியதியாகிறது. எனவே தலைவி அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்படுகிறாள். தலைவனும் தலைவி வசிக்கிற தெருவில் மடலேறி காதலைத் தெரிவிப்பான். மடலேறுதல் என்றால் தலைவன் தன்னுடைய மார்பில் எலும்பு மாலையும், தலையில் எருக்கம் மாலையும் அணிந்து, ஆவிரம்பூச் சூட்டிய பனங்கருக்கால் செய்த குதிரையில் ஏறுதல். இதைக்காணுகிற அவ்வூர் மக்கள் அவன் காமுற்றிருக்கும் பெண் யாராக இருக்கக் கூடுமென்பதை உணர்ந்து “அலர்” பேசத் தொடங்குவார்கள். இத்தனைபேர் முன்பாகத் தனக்காக அவமானப்படுகிறானே என நினைக்கிற தலைவி காதலை ஏற்றுக்கொள்வாள்.

ஆணின் மீதுள்ள காதலை வெளிப்படுத்துவதற்காக மடலேறும் பழக்கம்  பெண்களுக்கு இல்லை. இதுவேகூட  பெண்ணின் விருப்பத்தை விட ஆணை முன்னிலைப் படுத்துகிற செயல்தான். என்றபோதிலும் திருமணத்திற்கு முன்பாக நிகழுகிற இயற்கைப்புணர்ச்சியை முடிவு செய்வது பெரும்பாலும் பெண்ணாகவே இருந்திருக்கிறாள். இடமும் காலமும் அவள் தேர்வு செய்வதுதான் என்பதால் பெண் விருப்பமின்றி இருந்தாலோ மறுத்தாலோ தோழியைத் தூது அனுப்பி தலைவியைச் சம்மதிக்கச் செய்தார்கள் அந்தக்கால காதலர்கள். இன்றும்கூட தோழி அல்லது நண்பர்களின் ஆதரவுடனேயே பெரும்பாலானவர்களின் காதல் வளருகிறது.

தலைவியைக் காதலை நோக்கியும், குடும்பவாழ்வை நோக்கியும் வழிப்படுத்துவது தோழியின் முதன்மையான கடமையாக இருந்திருக்கிறது. தலைவியின் காதல் தொடங்க உடனிருப்பதும், அது தழைத்து வளர நீர்வார்ப்பதும், வளர்ந்த காதலில் தலைமக்கள் தீ விரிப்பதும் தோழியின் வழிப்படுத்துதலிலேயே நிகழ்ந்திருக்கிறது. மனம் ஒன்றுபட்ட நிலையிலிருக்கும் இருவருக்குமிடையே எந்தவிதமான பிரிவினைகளும் இருப்பதில்லை. அவன் எப்போது வருவான் எனக் காத்திருக்கும் தலைவி அவனோடு கூடி மகிழ்ந்தபின் அவனைக் காணவியலாமல் தவிப்பதில் இருக்கிற நாணம் அவர்களின் உறவினை மேலும் இறுகச்செய்கிறது.

காதல் வயப்பட்ட தலைவனும் தலைவியும் மலையடிவாரத்தில், பாறைகளின் மறைவில், தாவரங்களின் அடர்வில், மரங்களுக்கு இடையே, ஆற்றங்கரையோரம், வீட்டின் பின்புறத்தில் என தலைவியின் புழங்குவெளியிலேயே சந்தித்துக் கொள்வார்கள். பெரும்பாலும் களவு வாழ்வில் இடையூறு ஏற்படாமல் இருக்க தோழி துணையிருப்பாள். இவர்களின் இணைவிற்கான இடங்களைத் தேர்வது தோழியின் செயலாக இருக்கிறது. அப்படிக் கூடியிருந்தவன் ஒருநாள் வராமல் போய்விடுகிறான். அது இரண்டு நாட்களாகி, மூன்றாகி காலம் நீள்கிறது. தலைவி வருந்தத்தொடங்கிவிடுகிறாள். அவன் வருவானோ மாட்டோனோ என அச்சப்படத் தொடங்குகிற நிலை உருவாகிறது. இப்போதும் தோழியே துணைக்கு வருகிறாள். தலைவன் வசிக்கிற இடம் நோக்கிச் செல்கிறாள். தலைவன் காதுகளில் விழும்படியாக தோழி கூறுவதாகச் சொல்கிற நெய்தற்கார்க்கியாரின் மற்றுமொரு குறுந்தொகைப் பாடல்,

"மாக்கழி மணிப்பூக் கூம்ப, தூத்திரைப் 
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில்நாட்டு அம்ம இச்சிறுநல் ஊரே

“பெரிய உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நிறத்தையுடைய நெய்தல் மலர்கள் கூம்பத் தொடங்கிவிட்டன. தூய அலைகள் உடைந்து சிதறும் நீர்த்திவலைகளோடு மேகங்கள் வீசத்தொடங்கிவிட்டன. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியைச் செயலற்றுப் போகச்செய்யும்படியான வாடைக்காற்று அவளின் உடலைத் தழுவத் தொடங்கிவிட்டது. நெய்தல் மலர்களின் மலர்வைக் கூம்பி அழியச் செய்கிற வாடைக்காற்று தலைவனற்ற பெண்ணுடலைத் தழுவி அவளுடைய உள்ளத்தை அழியச்செய்கிறது. இவ்விதமாக உள்ளத்திற்கு இன்னாமையைத் தருகின்ற இச்சிறிய நல்ல ஊரில் தலைவன் உரிய காலத்திற்குள் வந்து தலைவியை மணம் செய்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவளுடைய உடல் உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை சில நாட்களே இருக்கக்கூடும்.”

அவனோடு கூடியிருக்க வாய்ப்புத் தந்தது அந்த ஊர். அதனால் அந்த சிறிய ஊர் நல்ல ஊராக ஆயிற்று. திரும்பவும் அவனோடு இணைந்து வாழ இயலாமல் போனால் அந்த ஊரில் அவள் உயிரோடு இருப்பதாகவே பொருள் ஆகாது. நெய்தல் மலர் அதன் பயனற்று கூம்பிக் கிடப்பதுபோல அவளுடைய உடலும் பயனற்று போய்விடும். காதல் மிகுந்திருக்கும் பெண்ணின் உயிரைப் பறிப்பதற்கு வில்லும் அம்பும் வாளும் வேலும் தேவையில்லை. காற்றின் சிறு அசைவே கூட தனித்திருப்பவளின் உயிரைப் பறிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது. தலைவன் அற்றுத் தனித்திருப்பவள் அத்தனை பலவீனமாக ஆகிவிடுகிறாள்.

ஜியோட்சனா மிலன் என்கிற இந்தி மொழி பெண் கவிஞரின் “அவளுக்குப் பின்னால்” என்கிற தலைப்பிலுள்ள கவிதையொன்றை எழுத்தாளர் புதிய மாதவி மொழிபெயர்த்துள்ளார்.  

“பாதிதூரம் வந்த பின்
அவள் திரும்பிப் பார்த்தாள்
காணவில்லை
அவள் கடந்து வந்த பாதையை.
வயல்களில்லை
வீடுகளில்லை
மனிதர்கள் இல்லை
எதுவுமில்லை
எங்கிருந்து அவள் புறப்பட்டாள்
என்பதற்கான
எந்தத் தடயங்களும் இல்லை
யாரோ
அவளுக்குப் பின்னால்
கவனமாக
அவள் வாழ்வின் அடையாளங்களைத்
துடைத்துச் சென்றிருக்கக் கூடும்”.

தன்னுடைய வாழ்வை விருப்பமானவனிடம் ஒப்படைக்கும் பெண்ணொருத்தி, அவளுக்கென பிரத்யேக வாழ்வு என்று ஒன்றிருப்பதை மறந்துவிடுகிறாள். மேலும் தன்முன்னே இருக்கிற உலகைக் காண மறுக்கிறாள். அவனைத் தொடர்ந்து சென்றபின்பு அவளது முந்திய வாழ்வும் அடையாளமற்றுப் போய்விடுகிறது. இப்போது அவள் எங்கே தொடங்கினோம், எவ்விடத்தில் நின்றிருக்கிறோம் என்பதையே அறியாமல் ஆகிவிடுகிறாள்.

தலைவன் தன்னை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டான். எங்கே சென்றாலும் தன்னிடம் எப்படியும் வந்துவிடுவான் என்கிற அவளுடைய நம்பிக்கைகளைத் தகர்க்கிற விதமான தலைவன் நடந்துகொள்ளத் தொடங்குகிற நிலை தன்னுடைய வாழ்வில் நிகழுமென எதிர்பார்ப்பதில்லை. அம்மா, அவளுடைய அம்மா மற்றும் அவள் அறிந்த பெண்கள் பலரின் மூலமாக கேட்டு வளர்ந்த கதைகள் பல இருந்தாலும் தனக்கு அவ்விதம் நிகழாதென ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள். அவள் அறிந்திருந்த அத்தனைக் கதைகளின் ஆண்களையும் விட தன் அன்புக்குரியவன் மேன்மையானவன் எனக் கருதுகிறாள். அவ்வடிப்படையில் ஏற்படுகிற நம்பிக்கையினால் மட்டுமே அவனிடம் தன்னை வழங்குகிறாள். அதன்பிறகு தனக்கென ஒன்றையும் மிச்சம் வைத்துக்கொள்வதில்லை. அவன் திரும்ப வருவானா, தன்னைவிட்டு நீங்காமலிருப்பானா என்கிற கேள்விகள் எதுவுமற்று தன்னை அவனிடம் ஒப்படைக்கும் பெண்கள் பலர் இன்றும் உள்ளனர்.

ஆணின் உடல் வழியாக தன்னுடலை அறிந்த பெண்ணிடம் உடலிலும் மனத்திலும் அவளுக்குத் தொடர்புடைய ஆணின் சொல்லும் செயலும் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கும். பெண்ணுக்கு ஆணுடைய இடையீடு என்பது பெரும்பாலும் துயரமும் சிலசமயம் பரவசமுமாக இருக்கிறது. தொடக்ககாலப் பரவசத்தை அவள் அப்படியே வைத்திருப்பதால் துயரான நிலைக்கு நகர்கிறாள். தோழியைத் தூதனுப்பி, அவள் வசிக்கும் தெருவில் மடலேறி காதலை அடைகிறவன், அவள் தன்னை மனமுவந்து வழங்கிய சிறிது காலத்தில் அவனுடைய இயல்புக்கு வந்துவிடுகிறான். இவளோ பரவசத்தின் அடர்வு குறையாமல் அவனுக்குத் தன்னை வழங்கக் காத்திருக்கிறாள். இப்படியான பெண்களின் நிலையைப் பற்றி கவிஞர் தமிழரசியின் கவிதையொன்று பேசுகிறது.

காற்றலையில் ஈரமில்லை 
காரணம் புரியவில்லை. 
ஆற்றங்கரையோரம் 
அனிச்சையாய் திரும்பும் கால்கள் 
இழைத்த பிழையென்ன. 
புணர்ந்த பொழுதுக்கு காவலாய் நின்ற 
புல் பூண்டும் நோக்கவியலாமல் 
தலை குனிந்து தவிப்பதென்ன. 
அணைத்த கரங்களின் 
நிழல் விழுந்த தடங்களை 
மணல்வெளியெங்கும்
கைகள் அளைந்து களைவதென்ன.
உன்மத்தமென்று ஊரார் ஏச 
உண்மையேயிது என்ற பொய்க்கு 
எத்தனை நாள் உரமிட.
சிலிர்க்கும் மேனிக்கு 
எவ்வணைப்பை ஈடு செய்ய .
தகிக்கும் காமத்தை 
எத்தனை நாள் தணிக்கை செய்ய. 
மெய்க்காணல் குற்றமென்றால் 
அறமென்று ஆற்றுபடைக்க 
எவ்விலக்கணம் பயில 
உணர்த்திட 
ஒரு கணம் வந்து போ 
அன்றேல் 
பொய்யென்று உனை உணர்த்தி 
என் உயிரையேனும் கொண்டு போ.

இன்றைய சூழலில் காமத்தைப் பற்றி பேசுகிற பெண் கவிதைகளை அதிகளவில் காணமுடிகிறது. காமம் என்றால் ஆண்,பெண் உறவு நிலையில் இருவருக்கிடையே காதல் என்பது மிக இயல்பாகத் தொடங்கி வளர்ந்து முதிர்வடைந்த பின்பாக இயற்கைப்புணர்ச்சி நிகழ்வதையும் அவ்வாறு நிகழ்ந்த பின்பு பெண்ணுடலில் ஏற்படுகிற வேறுபாடுகளைச் சொல்பவையாக இருக்கின்றன. அவ்வாறு மனமொன்றி இருந்தவர்களின் பிரிவு ஏக்கமாக இருப்பதில் சிக்கலில்லை. அந்த உறவினை நினைத்து ஒரு பெண் வெட்கப்படுவது காதலை மதிப்பிழக்கச் செய்யும்.

ஆண் ஒருவனின் காதலை பெண் ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது அவனுக்கு இழுக்கானதாகவும் அவனது ஆண்மைக்கு நிகழ்ந்த அவமானமாகவும் கருதப்படுகிறது. காதலை ஏற்றுகொள்ளாத பெண்ணுக்குக் கட்டாயத் தாலி கட்டுவது என்பதில் தொடங்கி அவளுடைய முகத்தில் திராவகம் ஊற்றிச் சிதைப்பது என்பது வரையில் ஆண் தன்னுடைய ஆண்மையை நிருபித்துக்கொண்டிருக்கிற செயலென இன்றைய சமூகச்சூழலிலும் காண முடிகிறது. தன்னுடைய காதலை ஏற்றுகொள்ளாத ஆணின் முகத்தில் எந்தப் பெண்ணும் சுடுதண்ணீர் கூட ஊற்ற முனைவதில்லை. தன்னுடைய காதலை வெளிப்படுத்தி ஏற்றுகொள்ளாத ஆணையும்கூட ஒரு பெண் தன்னிடத்தே  யாருமறியாத இரகசியமாகவே வைத்திருப்பாள். பெண்ணுடைய நாணமென்பது பரவசம் தருவதாகவோ, துயரமாகவோ இருக்கிறது. ஆணுடைய நாணம்  அவமானமாகவும் வன்மம் நிறைந்ததாகவும் மாறுகிறது. மேலும் மறுக்கப்பட்ட காதலுக்காக ஒரு ஆண் நாணப்படும்போது அந்தப் பெண்ணைப் பற்றிய மதிப்பினை இழக்கச் செய்துகிறான்.


 (குறுந்: 55. 212)

No comments: