பெண் –
உடல் , மனம் , மொழி :
வெறிபாடிய காமக்கணியார்:
சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 27
ஒரு பெண் அறிந்திருக்கிறாள்:
“நோய்தணி காதலர் வர, ஈண்டு...”
“மகளுடைய அறியாமையை முழுமையாக அறிந்திருப்பவள்
அம்மாதான். மகள் தனது நோய்மைக்கான காரணத்தை வெளிபடுத்த இயலாமல் தவிக்கும்போது, அதை உணர்ந்தவளாக தான் அறிந்த வழிகளில் அம்மா
ஆற்றுப்படுத்த முயலுகிறாள். அம்மா அறிந்த ரகசியத்தை மகள் உணர்ந்து கொள்ளும் தருணம்
வரும்போது, அம்மாவை அவள் வெளியே தேடுவதில்லை. தானே
அம்மாவாகிவிடுகிறாள்.”
____________________________________________________________________________
அது கல்லூரி ஆசிரியர்களுக்கான மொழியியல் பயிற்சி
வகுப்பு. பங்குபெற்றவர்கள் அனைவரும் பெண்கள். திட்டமிட்டபடி
நேர
நிர்ணயத்துடனும் தொழில்முறை
சார்ந்த
நிபுணர்களால் பாடங்கள்
நடத்தப்பட்டன. வழக்கமான
பயிற்சி வகுப்புக்களைப்
போலவே விடுமுறை
நாளொன்றில் மலைப்பிரதேசத்திற்கு
அவர்கள் அனைவரும்
சுற்றுலா சென்றனர்.
அதிகாலையிலேயே தொடங்கிய
பயணத்தில், முதல்
அரைமணிநேரம் யாரும்
யாருடனும் பேசிக்
கொள்ளவில்லை. ஒரு
பெண் எழுந்து,
"என்னப்பா, எல்லோரும்
இவ்வளோ அமைதியா
வருகிறீர்கள்? ஒரு
பாட்டு, ஒரு
ஆட்டம் என
ஒன்றுமில்லாமல் என்ன
ஒரு சுற்றுலா"
என்று கேட்டார்.
அப்போது வேறு
ஒரு பெண், எல்லோரும்
அவங்கவங்க வீட்டுக்கு
'அட்டன்டன்ஸ்' போட்டுட்டு
இருக்கிறோம்' என்றார்.
அலுவல் மொழியான 'அட்டன்டன்ஸ்'
குடும்ப வழக்காக இடம் பெயர்ந்திருந்தது.
செய்கிற பணியிலிருந்து
வீட்டிற்கும், வாழும்
சூழலிலிருந்து பணியிடத்திற்கும் சொற்களைப்
பரிமாற்றிக் கொள்வதுதானே
இயல்பு. அனைவரும்
அவரவர் வீடுகளுக்குப்
பேசி முடித்தவுடன்
'பாட்டுக்குப் பாட்டு'
தொடங்கியது. எழுபது,
எண்பதாவது ஆண்டுகளில் வெளியான பாடல்களைப் பாடியபோது இளையராஜாவே முதல் இடத்தில் இருந்தார்.
தற்கால பாடல்களில்
தனுஷ், விஜய்,
அஜித், சிவகார்த்திகேயன்
என நடிகர்களின்
பெயர்களால் அப்பாடல்கள்
அடையாளப்படுத்தப்பட்டன.
இளையராஜாவின், "நிலா
அது வானத்து
மேலே... ' பாடலுக்கு
எழுந்து பலரும்
ஆடத் தொடங்கினார்கள்.
அதன் பின்பு
கைவசமிருந்த 'பென்டிரைவ்'
ஒன்றிலிருந்த புதிய
பாடல்களை ஒலிபரப்பி,
ஆடல் களைகட்டியது.
ஆட்டத்தில் கலந்து
கொள்ளாதவர்கள் கைகளைத்
தட்டி ஆரவாரம்
செய்தவாறு இருக்க கொண்டாட்டத்துடன்
பயணம் தொடர்ந்தது.
இறுதியாக அவர்கள்
சென்ற இடம்,
கண்களுக்கெட்டிய தூரம்
வரையில் மலையின்
பசுமை, பச்சை
நிறத்தின் மீது
அசைந்தாடும் பஞ்சு
மேகங்கள், எப்போதும் தூறிக்கொண்டிருக்கிற
பூஞ்சாரல் என
நிரம்பியிருந்த
தலைக்காவிரியின் மடியில் இறங்கினார்கள்.
அங்கு வந்திருந்த
பெண்கள் ஒவ்வொருவரும்
குளிர், சாரல் மற்றும் அவ்விடத்தின்
பசுமையென ஒவ்வொன்றையும் உள்வாங்கி உணர்ந்து பரவசமடைந்தனர். உடலின்மேல்
வந்து தவழுகிற
மஞ்சு மேகத்தில்
சிலிர்த்த ஒரு
பெண், “அச்சச்சோ,
நான் பெரிய
தப்புப் பண்ணிட்டேன், இங்க என்
அத்தானோடு
வந்திருக்கணும்." என சத்தமாகக் கூறினார். அவர்
அப்படி வாய்விட்டு
சொன்னவுடன் மற்ற
பெண்களும்
தங்கள் கணவர்களைப்
பற்றி பேசத் தொடங்கினர்.
ஒருவர் , "அடடா, நான்
மட்டும் என்
வீட்டுக்காரரோடு வந்திருந்தால்,
இந்நேரம் அவர்
கைகளுக்குள் என்னுடைய
கையைக் கோர்த்து
கொண்டு மலை
முழுக்கச் சுற்றி
வந்திருப்பேன்" என்று
கூற, அடுத்தவர்,
திருமணம் ஆனவுடன்
கணவரைப் பிரிந்து,
தன்னுடைய முனைவர்
பட்ட ஆய்வுக்காகப்
படிக்கச் சென்று
விட்டதாகவும், கணவரும்
வெளிநாட்டில் பணிபுரியச்
சென்று விட்டதாகவும்,
ஏழு ஆண்டுகள்
கழித்து இப்போதுதான்
இருவரும் ஒன்றாக
வாழ வாய்ப்புக்
கிடைத்திருப்பதாகவும், தற்சமயம்
ஏற்பட்டுள்ள சிறிய
பிரிவைக்கூட தாங்க
முடியவில்லை என்று
கூறினார். பயணத்தின்போது ஆட்டம்,
பாட்டு, கொண்டாட்டம்
என்றிருந்தவர்கள், அதன்
பின்பு அவரவர்களுக்கான
அந்தரங்க நினைவுகளுக்குள்
பயணிக்கத் தொடங்கியிருந்தனர்
.
இவ்விதமாக இப்போது இவர்களது
நினைவுகளை
ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்
கணவன்மார்களுடன் ஒன்றாக
பயணிக்கும் பல்வேறு
தருணங்கள் இனிமையானதாக
மட்டுமே இருந்திருக்கவும்
வாய்ப்பில்லை. ஒருவரோடு
ஒருவர் முகம்திருப்பிக்கொண்டதும்,
சண்டையிட்டுக் கொண்டதுமான
முன்நிகழ்வுகளும் இருந்திருக்கலாம்.
கணவனும் மனைவியும் மட்டுமே
செல்கிற சுற்றுலாக்கள்
ஒரு குறிப்பிட்ட
வயதிற்குப்பிறகு மிகக்குறைவு.
நடுத்தர வயதிலோ, முதிர்காலத்திலோ
அமைகிற பயணங்கள்
குழந்தைகள், உறவினர்களால்
சூழப்பட்டிருக்கும். அப்போதும்கூட
ஒருவரிடம் மற்றவர்
முகம் திருப்பிக்கொள்வதாகவும்,
சற்றுநேரத்தில் சமாதானம்
செய்துகொள்வதாகவும் அவை அமைந்திருக்கும்.
அந்தப் பயணத்தில்,
யாருமறியாத
மிகச்சிறிய உரசலில்
ஒருவரின் உடலிருக்கும்
வெதுவெதுப்பை மற்றவருக்கு
இடம்மாற்றியிருப்பர். கணவனும்
மனைவியும் இணையாகப்
பயணிக்கையில் அவர்களை
வந்தடைகிற பறவைகளின்
குரலில், குரங்குகளின்
தொந்தரவில், பூக்களின்
வாசனையில் தங்களைக்
கரைத்துக் கொள்வார்கள்.
நாடோடியாகத் திரிகிற
துணையற்ற மனிதர்களைக்
கண்டு ஆச்சர்யப்படுவார்கள்.
இளம்காதலர்களுக்குள் தங்களை
அடையாளம் காணுகையில்
இரகசியமாக தங்களது
பார்வையைப் பரிமாறிக் கொள்வார்கள்.
வயோதிகம் அடைந்த
பின்பும் இணையாக
கைப்பற்றி நடக்கிற
தம்பதியர் எவரையேனும்
பார்த்தால் தங்களுடைய
முதுமைக்காலம் இவ்விதமாக
இருக்கவேண்டுமெனச் சொல்வார்கள்.
பல்வேறு இனத்தவரும், பல
வயதினரும் வந்து
செல்கிற சுற்றுலாத்
தளமென்பது நடுவயதில்
இருக்கும் கணவன்,
மனைவிக்கிடையே இளமைக்கும்
முதுமைக்கும் பின்னலிட்டு
அவ்விருவருக்குமிடையே
அந்நியோன்யத்தைக் கொண்டுவந்து
சேர்த்திருக்கும்.
திருமணம் ஆனபின்பு
கணவனைப் பிரிந்து
அம்மா வீட்டிற்குச்
செல்வதற்குக் கூட
பல சமயங்களில் பெண்கள்
பிரியப்படுவதில்லை. நம்முடைய
வழக்கத்தில் பெண்கள் தனித்துச்
செல்கிற சுற்றுலாப்பயணங்கள்
அரிது. அனேகமாக இல்லையென்றே
சொல்லிவிடலாம். தற்காலத்தில் பெண்களின்
பணி சார்ந்த
பயற்சிகளுக்குச் செல்ல
வேண்டிய அவசியமிருப்பதால் மட்டுமே
இதுபோன்ற பயணங்கள்
சாத்தியமாகின்றன. தங்களுடைய
அம்மா, அப்பாவையோ
அல்லது குழந்தைகளையோ
அழைத்து வரவில்லையென
அங்கு வந்திருந்த
பெண்களில் யாரும்
வருந்தவில்லை. கணவனோடு வாராதது பற்றியே பேசிக்
கொண்டிருந்தார்கள்.
நிலமும் காலமும்
சூழலும் எப்பொழுதுமே
மனதிற்குள் மாயம்
நிகழ்த்தியபடியே இருக்கும்.
வீட்டிலிருக்கும் பொழுது
தினந்தோறும் பார்க்கிற
கணவன்தான், அவன்மீது
ஓயாத குறைபடுதல்
மனைவிக்கு எப்போதும்
உண்டு. என்றபோதிலும்
இயற்கையின் செழுமை
கலையாதிருக்கும் நிலவெளிக்குத்
தனித்துப் பயணிக்கும் பெண்கள் தங்கள்
மனதையும் உடலையும்
கணவன் வழியாகவே உணர்ந்து
கொண்டிருப்பார்கள் என்பதை கவிஞர் அனாரின்
கவிதையொன்று பேசுகிறது.
"காலைப்பனியில்
ஈரமணலில்
வெள்ளை மல்லிகைகள்
சொரிந்து கிடக்கின்றன
ஆயத்தி மலையின்
விற்பதற்காகக்
கூவிச் செல்கிறாள்
நெற்றியில் விபூதியும்
வாயில் வெற்றிலையும்
இட்ட கிராமப்பெண்
தேனும் மாட்டுச்சாணமுமாய்
கிறவல் ஒழுங்கையின்
மொச்சை வீச்சம்
மரச்சுள்ளி மிலாறுகளை
தூக்கக்கலக்கத்துடன்
பொறுக்கிக் கட்டுகிறாள்
வயிறுபிதுங்கிய பரட்டைத்
தலைச்சிறுமி
ஓட்டைவிழுந்த கறுப்புக்குடையை
ஒரு கை
விரித்தவண்ணம்
ஆசாக் மறு
கை ஊன்றியபடி
மிடுக்காகப் பார்த்து
நிற்கிறார்
கண்ணாடி போட்ட
வயோதிபர்
ஆட்டுப்பட்டியை இடையன்
பக்குவமாக
மேய்த்துச் செல்கிறான்
அவை ஒரே
நேரத்தில் 'மே'
என்று கத்துகின்றன
'காவுத்
தடியைத்' தூக்கி
முதுகு வளைய
நடந்து
மீன்களின் பெயரைக்
கூவுகிறான் மீன்
வியாபாரி
ஓலைகளால் வேய்ந்த
களிமண் குடில்களின்
முன்
முக்காடு போட்ட
பெண்கள்
காற்றுக்குள்ளிருந்து எதையோ
அள்ளுவதும்
விரல்களுக்கு வெளியே
ஊற்றுவதுமான லாவகங்களோடு
நிறச்சாயமூட்டிய பாய்கள்
பின்னுகிறார்கள்
ஒருவன் சிறிய
மீன்வலையைப் புல்வெளியில்
உலர்த்த
நாலைந்து வெட்டுக்கிளிகள்
சிக்கிக்கொள்கின்றன
பிடிபட்டு வளையில்
திமிரும் உடும்பை
கம்பினில் கட்டி
.. தீயிலிட்டு ....
அதன் வெந்த
இறைச்சியை மலைத்
தேனில் தொட்டு
கணவன்மார்களுக்குப் பரிமாறுகிறாள்
குறத்தி
தும்பிச்சிறகடிக்கும் கண்கள்
விரித்து
இரவுச்சுரங்கத்தின் கறுப்புத்
தங்கமென எழும்
தலைவியை மரியாதை
செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு
இருப்பவளைப்
புணர்ச்சிக்கு அழைத்தவன்
கூறுகின்றான்
'போர்
தேவதையின் கண்களாக
உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலையையே
அச்சுறுத்துகின்றாய்'
அவளது குரல்..
மலைகளில் சிதறி
ஒலிக்கின்றது
'பெண்
உடல் பூண்ட
முழு இயற்கை
நான்'
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச்
செய்பவன்
இன்றென்னைத் தீண்டலாம்."
வானம் திறந்து
பொழிகிற மழையிலும்,
நிலம்
திரண்டு உயர்ந்திருக்கும்
மலைகளிலும், ஒளிபுகத்
தவித்துத் தோற்கும்
காடுகளிலும், துளிர்த்துப்
பொங்கிப் பெருகிச்
சரிகிற அருவிகளிலும்,
விரிந்து பரவுகிற
நதிகளிலும், ஈரம்
கசிய பூத்திருக்கும்
நிலத்திலும், பரந்து
விரிந்திருக்கிற கடலிலும்,
எழும்பித் திமிறுகிற
அலைகளிலும், உப்புப்படிந்திருக்கும்
காற்றிலும், காட்டில்
உறைந்திருக்கும் சிறுநெருப்பிலும்
பெண் தன்னை
உணர்வதென்பது எல்லோருக்கும்
நிகழ்வது அல்ல.
கடலின் நீலமும்,
வானின் நீலமும்
அவளுக்குள் நீலப்பூ
ஒன்றின் எண்ணிலி
இதழ்களை விரித்து
வாசம் நிகழ்த்தும்.
பஞ்சபூதங்களாகத் தன்னை
உணர்ந்து கொள்கிறவளே 'பெண்
உடல் பூண்ட
முழு இயற்கை
நான்' என்று சொல்வார்.
இவ்விதமாக ஒருத்தி பூத்திருப்பதை உணர்கிறவனாலேயே
அவளைத் தீண்டவும்
முடியும்.
ஒரு பெண்ணின்
மனதை சுலபமாக கைக்கொள்வதென்பது எல்லா ஆண்களாலும்
இயலாது. கணவனே
என்றாலும்கூட எல்லாப்
பொழுதிலும் அவளை நெகிழச் செய்ய
முடியாது. தான்
மலரும் தருணத்தை
அவளே தேர்கிறாள்.
காதலில் பூத்து, அவனுக்கென காத்திருக்கையில் அவனுடைய அண்மை
நிகழாதபோது நோய்மை
அடைகிறாள். அந்தப்
பிணியை அவன் வந்தால்
மட்டுமே தீர்க்க
முடியும்.
கி.மு.
ஏழாம் நூற்றாண்டைச்
சேர்ந்த கிரேக்கப்
பெண்கவிஞர் சாப்போ,
'வட்டார மொழியில்தன்னுணர்ச்சிப்பாடல்களைப்
பாடிய பெண்
கவிஞராக ஹோமருக்கு
இணையாகக் கொண்டாடப்
பட்டவர்.
"கப்பல்களும்,
போர்க்குதிரைகளும், போர்
வீரர்களும் கவர்ச்சியுடையன
என சிலர்
கூறுவார்கள்; ஆனால்
எனக்கோ எல்லாமே
காதல் தான்"
என்று சொல்லும்
சாப்போவின் புகழ்பெற்ற
வரிகள், "காற்றால்
அமைந்த சொற்களைக்
கொண்டு நான்
தொடங்குகிறேன். ஆனால்
அவை செவிக்கு
இனியன"
காதல் என்பது
மூர்க்கமும், பால்வேறுபாடு
அற்றதும் என்பதற்கு
இலக்கியத்தில் முதல்
சொல் எடுத்தவள்
சாப்போ. தன்னுடைய
இடரிலும் தளர்விலும்
அவள் நாடுகிற
காதல் தேவதை
'அப்ரோதிதே'. சாப்போவின்
காதல் மறுதலிக்கப்பட்ட
ஒரு பொழுதில்
,'அப்ரோதிதேவிற்கு( To Aprodite)'என்கிற
கவிதையை அவள் எழுதியிருக்கிறாள்.
"வண்ணங்கள்
பலவும் மிளிரும்
பீடத்தில் எழுந்தருளிய
தேவியே,
“அப்ரோதிதே,ஜூஸின்
குழந்தையே,
குறும்புக்காரியே,
உன்னிடம் நான்
வேண்டுவது இதுதான்,
தலைவியே,
என் உள்ளத்தைக்
கொடுந்துயரினாலும் சித்திரவதையாலும்
உடைத்துவிடாதே."
தன்னுடைய வேண்டுதலை
வெளியிட்டுத் தொடங்கும்
நீண்ட கவிதையின் ஒரு
பகுதி இது.
இதற்கு முன்பாக
எவ்வாறெல்லாம் இவளுடைய
வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன
என காதல்
தேவதையைப் புகழ்ந்து,
நன்றி தெரிவித்து,
தற்சமயம் தனக்கு
ஏற்பட்டுள்ள நலிவை
நீக்கும்படி சாப்போ
வேண்டுகிறாள்.
இறைவனை நோக்கிய
சடங்குகள் மனதின்
ஆழத்திற்குள் மாயாவித்தை
நிகழ்த்துகிறது . கடவுள்
எழுந்து வருவதாகவும்,
தன்னுடைய குரலைக்
கேட்பதாகவும், தன்னுடன்
பேசுவதாகவும் நம்புகிற
அகத்தெழுச்சி நிலையை
பிராத்தனைகள் அடையச்
செய்கின்றன. மாயத்தை
நிகழ்த்துகிற இறைச்சடங்குகள்கூட காதல்
மிகுந்திருக்கும் பெண்ணை
ஆற்றுபடுத்த முடியாமல்
தோல்வியடைகின்றன.
சங்க இலக்கியத்திற்கும்
கிரேக்க இலக்கியத்திற்கும்
நிறைய ஒற்றுமை இருக்கிறது.
நீரோடைகள், ஊற்றுக்கள்,
மரங்கள், பூக்கள்
போன்றவற்றின் மூலம்
மனதின் நுட்பத்தைக்
காட்சிப்படுத்த நம்மைப்
போலவே கிரேக்கர்களுக்கும்
இயன்றிருக்கிறது. மதம் சார்ந்த
கோட்பாடுகள் தீவிரமடையாதிருந்த
காலம் அது.
அக்கால கட்டத்தில்,
கடவுளானவர்கள் காதலர்களை
இணைத்து வைப்பவர்களாகவும்,
இயற்கையின் அங்கமாகவும்
இருந்திருக்கிறார்கள். கடவுளிடத்தே
நம்பிக்கை கொண்டு
நடத்தப்படுகிற
வழிபாட்டு முறைகளால் காதலால் ஏற்படுகிற துயரத்தை ஆற்றுபடுத்த
கிரேக்க இலக்கியமும்
தமிழும் முயலுகின்றன.
“காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ!”
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ!”
என்பது முத்தொள்ளாயிரத்தின் வரிகள்.
ஆடுவெட்டி பலி செய்து மகளுக்காக வேண்டுதல் வைப்பதென்பது
சங்ககாலத்தின் முக்கியமான செயலாகும். சங்கப் பாடல்களில்
"வெறியாட்டு" என்றொரு
துறையே இதற்காக அமைந்திருக்கிறது.
தான் விரும்புகிறவரின்
நெஞ்சத்தில் காதலைத்
தூண்ட 'அப்ரோதிதே'வை
வேண்டுவது போல
'வெறியாட்டு' நிகழ்த்தி
தன் மகளின்
நெஞ்சத்தில் பதிந்திருக்கும்
காதலை வெளியே
கொண்டுவர அம்மா
முயலுகிறாள். அம்மாவும்
அந்தப் பருவம்
கடந்து வந்தவள்தான்.
மகளின் உடல்
மாறுபாட்டிற்கும், உள்ளத்தின்
நலிவிற்கும்
எது காரணமாக
இருக்கக்கூடும் என்பதை
உணர்ந்தே இருப்பாள்.
ஆனாலும் அம்மா
அறியாமையில் இருக்கிறவளாகவே
மகள்களால் உணரப்படுகிறாள். இச்சூழலைச் சொல்கிற கவிஞர்
பாலைவன லாந்தரின் சிறிய கவிதையொன்று உள்ளது.
“மகளே..
உனக்கென சொல்வதற்கு
நிறைய இருக்கிறது
சொல்லாமலே
புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கை
தீரும் அந்நாளிற்காக.”
உனக்கென சொல்வதற்கு
நிறைய இருக்கிறது
சொல்லாமலே
புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கை
தீரும் அந்நாளிற்காக.”
தான் கடந்துவந்த
பாதையை மகளும் கடந்துகொண்டிருக்கிறாள் என தாய் உணர்ந்திருக்கிறாள். ஆனால் வாழ்வை
தானே புரிந்துகொள்ளட்டுமென நினைத்து மகளிடம் பகிர்ந்து கொள்ளமாட்டாள். மகள்களுக்கு
தாயைப் பற்றிய புரிதல் எப்பொழுதுமே அவர்கள் அம்மாவாக ஆகும்பொழுதே ஏற்படும். இதனால்
அம்மா என்றால்
அறியாமை என்றும்
அடுத்த தலைமுறைக்
குழந்தைகள் நினைத்துக்
கொள்கிறார்கள். 'உனக்கெல்லாம்
புரியாதும்மா', 'கொஞ்சம்
நீ அமைதியா
இருக்கியாம்மா', 'உனக்கு
ஏம்மா இதெல்லாம்',
'நாங்க வேற
ஜெனரேசன்' போன்ற
சொற்களின் மூலமாக அம்மாக்களைக்
கடந்து செல்கிற
இள மகள்கள் எப்போதுமே
இருக்கிறார்கள். இவற்றை
எல்லாம் எளிதாக
எடுத்துக்கொண்டு, மறுபடியும்
மகளின் நலனுக்கான
பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும்
அம்மாக்கள் செய்து
கொண்டிருப்பார்கள்.
அம்மாவின் இம்மாதிரியான
வேண்டுதல்களை நகுதலோடு
கடந்து செல்கிற
மகள் பற்றி
வெறிபாடிய காமக்கணியாரின்
அகநானூற்றுப் பாடல்,
“அணங்குடை நெடுவரை
உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக்
கான்கெழு நாடன்
இது என
அறியா மறுவரற்
பொழுதில்,
'படியோர்த்
தேய்த்த பல்
புகழ்த் தடக்கை
நெடுவேட பேணத்
தணிகுவாள் இவள்'என,
முதுவாய்ப் பெண்டிர்
அதுவாய் கூற,
களம் நன்கு
இழைத்து, கண்ணி
சூட்டி,
வளநகர் சிலம்பப்பாடி,
பலிகொடுத்து,
உருவச் செந்தினைக்
குருதியோடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த
உருக்கெழு நடுநாள்,
ஆரம் நாற,
அருவிடர்த் ததைந்த
சாரற் பல்
பூ வண்டு
படச் சூடி,
களிற்று இரை
தெரீஇய பார்வல்
ஒதுக்கின்
ஒளித்து இயங்கும்
மரபின் வயப்
புலி போல,
நல் மனை
நெடுநகர்க் காவலர்
அறியாமைத்
தன்நசை உள்ளத்து
நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய
முயங்குதொறும் மெய்ம்
மலிந்து,
நக்கனென் அல்லெனோ
யானே எய்த்த
நோய்தணி காதலர்
வர, ஈண்டு
ஏதில் வேலற்கு
உலந்தமை கண்டே
?"
தோழியிடம் தலைவி
சொல்வதாக அமைந்துள்ள பாடல்
இது. விரைவில்
வந்து திருமணம்
செய்து கொள்வதாகச்
சொல்லி, களவில்
கலந்திருந்த தலைவன்
பிரிந்து சென்றிருக்கிறான்.
எனவே அவனைத்
தழுவி மகிழ்ந்திருந்த
தலைவி தனித்திருக்கிறாள்.
களவு உறவின் காரணமாக உடல்
வேறுபட்டு பசலையடைகிறது. மகளின்
நிலையினைக் கண்ட
தாய் வருத்தமடைந்து,
சூரபதுமனை வென்ற
முருகனை வணங்கினால்
மகளின் துன்பம்
தீருமென நினைக்கிறாள்.
வெறியாட்டு நிகழ்த்துகிற
முதுபெண்டிரிடம் கூறுகிறாள்.
நிகழ்வுக்கான களம்
அமைக்கப்பட்டது. வேலினை
ஊன்றினர். கடம்ப
மாலையைச் சூடினர். வேலனின்
புகழ் பாடினர்.
பலிக்கொடையும் வழங்கினர்.
பலிக்குருதியை செந்தினையில்
கலந்து தூவினர்.
முருகன் வெறியாட்டு
நிகழ்ந்து முடிகிறது.
நிகழ்வின் முடிவில்
தலைவி சொல்கிறாள்,
'யானையை வேட்டையாடத்
திட்டமிடும் புலி
பதுங்கிச் செல்வது
போல இரவுப்
பொழுதின் காவலர்கள்
அறியாதவாறு நம்முடைய
வீட்டிற்கு பதுங்கி
வந்த தலைவன்
என்னைத் தழுவிகொண்டான்.
அவனை விரும்புகிற
என்னுடைய விருப்பம்
நிறைவுற என்
இன்னுயிர் குழைய
என்னைத் தழுவி
முயங்கியவன் அவன்.
அவனை நினைத்து
நோயுற்றிருக்கும் என்னுடைய
நிலையை உணராத
அம்மா, முருகனுக்கு
வெறியாட்டு எடுத்த
அவளின் அறியாமையை
எண்ணி நகைக்கிறேன்"
என்று கூறுகிறாள்
.
“அறியப்படாத சுவை”
என்கிற தலைப்பிலுள்ள என்னுடைய
கவிதை ஒன்று, தாய்க்கும்
பருவத்தின் மலர்ச்சியிலுள்ள மகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசுகிறது.
"அம்மாவிற்கு
நன்றாக சமைக்கத்
தெரியும்
பரிமாறவும் தெரியும்
அம்மாவிற்கு அன்புகாட்டத்
தெரியும்
அவளுக்கு தெரியாததெல்லாம்
வெறுப்பு
அவள் சமைத்துப்
போட்டுக் கொண்டேயிருப்பாள்
அவள் விரல்களில்
எதைத்தான் வைத்திருப்பாள்
எவருக்கும் தெரியாது
ரசம் வைப்பாள்
வித விதமாய்
சாம்பார் வாசனையால்
தெரு மணக்கும்
உணவு வகைகளை
சலிக்காமல் செய்வாள்
உப்புப் போட
அவள் மறந்ததேயில்லை
ஒருவேளை
அது சற்று
கூடியிருந்தாலும் ருசியாகத்தானிருக்கும்
இந்த அம்மாவுக்குத்
தெரியாததெல்லாம் ஒன்றுதான்
அம்மாவின் சமையல்
சுவையாய்
அவனைப் பிடித்திருந்தது
அவனைப் பிடிக்கும்
என்பது நான்
அறியாத சுவை
என்பது அம்மா
அறியாதது
அவள் அறிந்ததும்
நான் அறியாததுதான்."
மகளுடைய அறியாமையை முழுமையாக அறிந்திருப்பவள் அம்மாதான். மகள்
தனது நோய்மைக்கான காரணத்தை வெளிபடுத்த இயலாமல் தவிக்கும்போது,
அதை உணர்ந்தவளாக தான் அறிந்த வழிகளில் அம்மா ஆற்றுப்படுத்த
முயலுகிறாள். அம்மா அறிந்த ரகசியத்தை மகள் உணர்ந்து கொள்ளும் தருணம் வரும்போது,
அம்மாவை அவள் வெளியே தேடுவதில்லை. தானே அம்மாவாகிவிடுகிறாள்.”
அகநானூறு: 22,98, நற்றிணை : 268, புறநானூறு: 271 = மொத்தம் 5.
No comments:
Post a Comment