Thursday, 15 September 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

21.பொன்மணியார் : 





நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்:

கையற வந்த பையுள் மாலை…”

தன் நேசத்திற்குரிய ஆண் கூறுகிற வார்த்தைகளின் மீதான பெண்ணின் நம்பிக்கை எக்காலத்திலும் மாறுவதேயில்லை. சில சமயம் அவனுடைய சொற்கள் பொய்யானவை எனத் தெரிந்தாலும் அவ்வாறு சுட்டுகிற அவனுடைய அறிவை நிராகரிக்கவே அவள் விரும்புகிறாள். இதுபோன்ற தன்னுடைய சொற்களை ஐயமின்றி நம்புகிற ஒரு பெண்ணுடைய நினைவைக் கொண்டே ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வைக் கடக்கிறான். அந்தப்பெண் தாய், மனைவி, காதலி அல்லது தோழி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். _______________________________________________________________________

பிரபல இயக்குநரான ‘ஆர்சன் வெல்ஸ்’ இயக்கத்தில் 1941 இல் வெளியான “சிட்டிசன் கேன்” திரைப்படம் உலகளவிலான செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிகப் பிரமாண்டமான மாளிகையில் செவிலியின் துணையுடன் தனித்து வசிக்கும் செல்வந்தரான “சார்லஸ் ஃபோஸ்ட்டர் கேன்” தனது மரணத் தருவாயில் “ரோஸ் பட்” என்கிற சொல்லை உச்சரித்துவிட்டு இறந்து போகிறார். இந்தச்சொல்லிற்கும் அவருடைய புதிரான தனிமை வாழ்வுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அவரது நண்பர்கள், தொழில் எதிரிகள், காதலி ஆகியோரின் பார்வையில் ஆராய முயல்வதாக இப்படத்தின் திரைக்கதை நகர்கிறது.

ஒரு தடுப்புவேலியில் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகை தொங்குகிறது. அந்த உத்தரவை மீறி, உள்நுழைந்து செல்கிற காட்சியுடன் அப்படம் தொடங்குகிறது. பல்வேறு தடைகளைக் கடந்து பத்திரிகைத்துறையில் வெற்றிபெற்று செல்வந்தனாகி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அதனுடைய அடையாளச் சின்னங்களாகத் திகழும் தொன்மையான பொருட்கள், அறிய சிற்பங்கள் சேகரிக்கப்பட்ட ஆடம்பரமான மாளிகையில் தனித்து மரணிக்கிறார். சாகும் தருவாயில் இருக்கிற ஒருவனின் கடைசிச்சொல் திறக்கக்கூடிய கதவுகள் எண்ணற்றவை.

“ரோஸ் பட்” என்கிற அந்தச்சொல்லின் மறைபொருளைத் தேடிப் பயணிக்கும் பத்திரிக்கையாளர், அதற்கு ஒருவேளை எந்த அர்த்தமும் இல்லையோ எனத் தோல்வியுற்று திரும்ப, தேவையற்றதாகக் கருதப்படுகிற சார்லஸ் கேனின் எரிக்கப்படுகிற பொருள்களில், அடர்ந்து எரிகிற தீயின்மேல் திரைப்படக்காட்சி நகர்ந்து நிலைக்கிறது. சார்லஸ் கேன் சிறுவனாக இருந்தபொழுது அவனுடைய அம்மா அவனுக்குப் பரிசளித்த பனிச்சறுக்கு விளையாட்டுக்கருவியும் எரியும் நெருப்பில்  தூக்கியெறியப்படுகிறது. தீயில் எரிந்து கருகும் அப்பலகையில் “ரோஸ் பட்” என்று எழுதப்பட்டிருக்க, மீண்டும் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையுடன் திரைப்படம் முடிவடைகிறது.

திரைப்படத்தில் தொடக்கக்காட்சி ஒன்றில், அம்மாவிடமிருந்து ஒன்பது வயதில் கேன் பலவந்தமாகப் பிரிக்கப்படும்பொழுது சார்லஸ் கேன் விளையாடிக்கொண்டிருந்த பனிச்சறுக்குப் பலகை தனித்து விடப்பட்டுப் பொழியும் பனியால் மூடப்படுகிறது. சார்லஸ் கேனின் மரணத்திற்குப் பிறகு, வேறு யாரும் முக்கியம் என்று கருதாத பழைய பொருள்களுடன் அந்தப்பலகையும் எரிந்து சாம்பலாகிறது. உண்மையில் மற்றவர்களின் கண்களுக்கு அவ்வளவாக முக்கியமென்று படாத பொருள் ஒன்றில்தான் சம்மந்தப்பட்டவரின் உணர்வுப்பூர்வமான நேசம் தங்கியிருக்கும். அப்பொருள் அவருடைய வாழ்வுக்கு அளித்துவந்த அர்த்தத்தை பிரிதொருவரால் உணரமுடியுமா என்பது ஐயமே.
அதிகாரம், செல்வாக்கு, புகழ் என எல்லாமும் அடைந்து, இறுதியாக அரசியலிலும் கால்பதித்து பின்பு அதில் தோல்வியுற்று, இரண்டாவது மனைவியையும் பிரிந்து, வயோதிகத்தில் தனித்திருக்கும் ஒருவனின் மனதில், அவன் இழந்த குழந்தைமையும் அம்மாவின் நினைவுமே ஆழப்பதிந்திருக்கிறது. அதனைச் சுட்டும் ஒரு குறியீடாகவே “ரோஸ் பட்” என்கிற சொல் இப்படத்தில் வருகிறது. அந்தச்சொல்லின் பொருளை மற்றவர்கள் அறியவியலாமல் திரைப்படம் நிறைவடைகிறது. 

மரணத்தருவாயில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும்  ஒரு சொல் அவர்களுடைய வாழ்வை நிறைவு செய்யும். அச்சொல்லில் பொதிந்திருக்கும்  முழுமையான பொருளை இன்னொருவர் அறியவே இயலாது. அனேகமாக மரணிக்கிற அத்தனை ஆண்களுடைய  நினைவுகளின் சொல்லாக ஒரு பெண் இருக்கிறாள். அந்த நினைவுக்குள் அயலார் யாருமே அத்துமீறி நுழையமுடியாது என்பதாக இந்தத் திரைப்படத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.  

ஒருவரின் நினைவு என்பது அவருடைய சொல்லாகத்தான் இருக்கிறது. சொற்களின் வழியாகவே மனிதர்களை புரிந்து கொள்கிறோம். ஒருவர், தான் பேசுகிற சொற்களின் மூலமாக அடையாளம் காணப்படுகிறார். அதனால்தான் சொல்லில் தெளிவும் நேர்மையும் வேண்டும் என்பதும் கொடுத்த வாக்கை எப்படியாவது காக்கவேண்டும் எனவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. பிரியமானவரிடமிருந்து ஒற்றைச் சொல்லுக்காகக் காத்திருப்பதும், விருப்பமான சொற்களுக்குள் அடைக்கலமாவதும், அதன்பின்பு அந்தச் சொற்களுக்குள் சிக்கிக்கொள்வதும் நிகழ்கிறது. எனவேதான் ஒருவர் சொற்கள் பிறழ்ந்து நடந்துகொள்கிற நிலையில் அதனை எதிர்கொள்கிறவர் தீராவேதனை அடைகிறார்.

“ஆதியிலே சொல் இருந்தது” என “சொல்லை” தெய்வீகமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். “இறைவாக்குச்சொல்” என்பது குறிப்பிட்ட சிலருக்கே கேட்கமுடியும் என்பதாகவும் அதனைக் கேட்பவர்களை இறைத்தூதர்கள் என்றும் அவர்கள் பேசுவது இறைவனின் வாக்கு எனவும் “சொல்” மீதான நம்பிக்கைத் தொடர்ந்திருந்தது. சொற்களின் மீதான அவ்விதமான தெய்வீகத்தன்மை தற்காலத்தில் தகர்க்கப்பட்டிருந்தாலும், சகமனிதருக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காகவே சிரத்தை எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. மேலும் ஒருவரின் வாக்கை மூன்றாம் மனிதர் யாரேனும் செயல்படுத்த இயலுமா எனக்கருதி சொற்கள் பிறழாமல் வாழ்கிறவர்களையும் காணமுடிகிறது. தன்னுடைய சொற்களிலிருந்து வழுவாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கினைக் காக்கத் தவறுகிறவர்கள் இழிவாக நினைக்கப்படுகின்றனர். இவ்வாறாக ஏற்றும் மறுத்தும், சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த மனிதர்களின் வாழ்வும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

“வாக்கு” என்பது ஒரு வடமொழி வார்த்தை. வாக்கு என்றால் பேச்சு, சொல் அல்லது அது உருவாக்கிய மனம். வேதகாலத்தில் வாக்கு என்பது பெண் தெய்வமாகத் தொழுகை செய்யப்பட்டது. பிற்காலத்தில் வாக்கின் தெய்வம் “சரஸ்வதி” என வழங்கப்பட்டது. எனவே, ஒரு சொல்லைக் காப்பதென்பது பெண்ணைப் காப்பது, ஒரு சொல்லை மதிப்பது என்பது பெண்ணை மதிப்பதாகும். எனில் ஒரு ஆணின் சொல் என்பதே பெண்ணாக இருக்க, அதனை மறந்துவிடுகிற பல்வேறு சூழல் அவனுக்கு உருவாகிவிடுகிறது. வாழ்கிற காலம்மட்டும் காதலின் சொல்பற்றியே பெண் வாழ்கிறாள். ஒரு  ஆணுக்கு தான் கூறிய சொல்லையும் அது சார்ந்த நினைவையும்விட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களும் சூழலும் அமைந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கு, அவள் வாழ்கிற காலம் முழுக்க நேசித்தவனின் சொற்களே துணையாக இருக்கிறது.

தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார். திலகவதியாரை கலிப்பகையாருக்கு திருமணம் பேசி முடிவு செய்கிறார்கள்.  அப்பொழுது நாட்டில் போர்ச்சூழல் ஏற்பட, சோழமன்னனின் படையில் இணைந்து போர் செய்வதற்காக கலிப்பகையார் செல்கிறார். போர்க்களம் சென்றிருந்த காலத்தில் திலகவதியாரின் தாய் மாதினியார், தகப்பன் புகழனார் இருவரும் இறந்துவிடுகிறார்கள்.   வெற்றியுடன் திரும்பிவருவேன் என்று சொல்லிச் செல்கிற கலிப்பகையாரும் போர்க்களத்தில் இறந்துவிடுகிறார். கலிப்பகையார் இறந்த செய்தியைக் கேட்டவுடன் அவருடனேயே இறந்துவிட திலகவதியார் முயலுகிறார். தாய் தகப்பன் இறந்தவுடன் அவர்களுடனே இறந்துவிடலாமென எந்தப்பெண்ணும் நினைப்பதில்லை. தன்னுடைய வாழ்வே அவன்தான் என்று நம்பியவன் இல்லையென்றனான பின்பு தனக்கென தனித்த வாழ்வு ஏதுமில்லையென பெண் நினைக்கிறாள். திலகவதியாரின் இம்முடிவினை தம்பி தடுத்து நிறுத்தி, தனக்காக உயிர்வாழும்படிக் கெஞ்சுகிறார்.  அதன்பிறகு, மிகச்சிறியவனான தம்பி அப்பர் எனப்பட்ட மருள்நீக்கியாரைப் பார்த்துகொள்ளும் பொறுப்பு இருப்பதாக எண்ணி தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறார். அப்போது “கலிப்பகையாரின் சொற்களின் நினைவுடன் நான் என் வாழ்நாளைக் கடத்திவிடுவேன்” என்று தன் தம்பிடம் சொல்கிறார். தன்னை நேசித்தவன் சொல்லிச் சென்ற “வந்துவிடுவேன்” என்ற ஒற்றைச்சொல்லின் கரம்பற்றி பெண் தன்னுடைய மீதி வாழ்வையும் வாழ்ந்து நிறைகிறாள்.

அவ்விதமான காதலின் சொற்களை மனதில் ஏந்தியிருக்கும் பெண் தன்னுடைய காலங்களைக் கடந்துவிடுகிறாள் என்று சொல்வதைவிடவும் அவளுக்குக் காலங்களே இல்லை என்று சொல்லலாம். சங்கப் பெண்பாற்புலவர் பொன்மணியாரின் குறுந்தொகைப்பாடல்,

“உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில்
கடிதுஇடி உருமின் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும் பேதையவே.”

“அது ஒரு முல்லைநிலம். ஆயர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துத் திரியும் பரந்த சமவெளி. தலைவன் வெகுதூரம் பொருள்தேடிச் சென்றிருக்கிறான். மழைக்காலத்திற்குள்  வந்துவிடுவதாக தலைவியிடம் கூறியிருக்கிறான். உவரி என்னும் உப்புமண்ணை உடைய கரம்புநிலம் எருது பூட்டி உழப்படாமல் வெடித்துக் கிடக்கிறது.  மழையற்று வறண்ட அந்நிலத்தில், எருதுகள், உழுதல் செயலை செய்யாமல் கொட்டிலில் சோம்பிக்கிடந்தன. மழை பெய்தலை நீங்கிய காட்டில் புள்ளிமான்கள் வெம்மையால் புழுங்கின. இப்பொழுது  கரிய மேகங்கள் அடர்ந்து வானம் இடிக்கத் தொடங்குகிறது. இடியோசையின் முழக்கத்தில் அந்த ஓசை தாளாது பாம்புகள் தங்கள் படம் ஒடுங்கிக்கிடந்தன. அவ்வாறு மழை பொழிவதற்காகத் தாழ்ந்த மேகங்களைப் பின்தொடர்ந்து  தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிகள் செயலற்றுப் போகும்படியான மாலைப்பொழுதும் வந்தது. மழை எல்லோருக்கும் இனிமை தந்தது. மேகங்களுக்காகவும் மழைக்காகவும் ஏங்கிக்கிடக்கும் பெண்மயில்கள் பூத்திருக்கும் கிளையிலிருந்து நீரில் தாவி தங்களுடைய துணையான ஆண்மயில்களை அழைத்துக் கூவுகின்றன. ஆனால் இந்த மயில்கள் பேதமையுடைவை” என தோழியிடம் தலைவி சொல்கிறாள்.

பாடலில் அவள் உணர்த்துவது, “உண்மையில் மழை பொழியவேயில்லை, இடி இடிக்கவேயில்லை, பாம்புகள் தங்கள் படத்தினை ஒடுக்கிக்கொள்ளவே இல்லை, மொத்தத்தில் கார்காலம் இன்னும் தொடங்கவேயில்லை. இந்தப் பெண்மையில்கள் சென்ற மழையின் நினைவில் தானாக கூவுகின்றன. கார்காலம் தொடங்கியிருந்தால் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பி வந்திருப்பான். அவன் சொன்ன சொல் தவறாதவன், அதனால் எருதுகளும், புள்ளிமான்களும், பாம்பின் படமும், இடியோசையும், மயிலின் அழைப்பும் தவறுதலாக இருக்ககூடும்.  தலைவன் சொல் எப்பொழுதும் மிகச்சரியாக இருக்கும் என்பதால் கார்காலமே இன்னும் வரவில்லை என்பதை அறியாத பெண்மயில்கள் பேதமையில் இருப்பதாக தலைவி சொல்கிறாள்.” தலைவனின் சொற்களுக்கு முன்பாக காலமும் பருவமும் சூழலும் அதனுடைய மாற்றமும் அவள் நம்புவதற்கு அற்றதாக இருக்கின்றன.  

தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமலும், எதன்மீதும் பிடிப்பற்று வாழவும், குடும்ப உறுப்பினர்களுக்கான கடமைகளைச் செய்யவும் பயிற்றுவிக்கப்பட்ட பெண் அவளுக்கு விருப்பமான ஆணைக் கண்டடைந்தவுடன் நெகிழ்நிலமாகிறாள். பெண்ணின் வாழ்வில் அவள் நேசிக்கிற ஆணின் வரவுக்கு முன்பான அவளின் நிலையை முழுமையுடையதாக அவள் நம்புவதில்லை. தி.பரமேஸ்வரியின் கவிதை,

“பாலை மட்டுமே
பழகிய கண்களுக்குக் காட்டினாய்
குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தலையும்
உணர்த்தினாய் உணர்ந்தேன்
கரைத்தாய் கரைந்தேன்
மீண்டும் பாலைக்குள் நுழையும்படி
நேர்ந்த தருணத்தில்
எங்கோ பெய்யும் மழையின் வாசம்,
நினைவூட்டுகிறது என்னை.”

சூழலின் காரணமாக பிரிந்து செல்கிற நேசிப்புகுரியவர்களின் மனதில் சொற்களின் வாசமாக ஒருவர் மற்றவரை நிரப்பியபடியே இருப்பார்கள். எங்கோ பொழிகிற மழையின் வாசம் இவளை நிரப்ப, மழையின் துளிர்ப்பை வெகுதூரத்திலிருக்கும் அவனும் அந்தக்கணம் உணரக்கூடும். ஒருவேளை அவன் அந்த தருணத்தில் உணரவில்லை எனினும் இவளது நேசிப்பின் அடர்வு அவனது மரணப்படுக்கையின் நிறைவுச்சொல்லாக அவளையே அவன்முன் நிறுத்தியிருக்கும்.

தன் நேசத்திற்குரிய ஆண் கூறுகிற வார்த்தைகளின் மீதான பெண்ணின் நம்பிக்கை எக்காலத்திலும் மாறுவதேயில்லை. சில சமயம் அவனுடைய சொற்கள் பொய்யானவை எனத் தெரிந்தாலும் அவ்வாறு சுட்டுகிற அவனுடைய அறிவை நிராகரிக்கவே அவள் விரும்புகிறாள். இதுபோன்ற தன்னுடைய சொற்களை ஐயமின்றி நம்புகிற ஒரு பெண்ணுடைய நினைவைக் கொண்டே ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வைக் கடக்கிறான். அந்தப்பெண் தாய், மனைவி, காதலி அல்லது தோழி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.



இவர் எழுதிய பாடலாக குறுந்தொகை -391 மட்டும் கிடைத்துள்ளது.

No comments: