Thursday, 15 September 2016

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

26.போந்தைப் பசலையார்





ஒரு பெண் மனசாட்சியுமாகிறாள் :

அன்னை அறியினும் அறிக...”

சங்ககால தலைவியைவிட தோழி புத்திக்கூர்மை உள்ளவளாக இருந்திருக்கிறாள். களவுகாலத்தில் தலைவியின் அனைத்து செயல்பாடுகளையும் தூண்டுகிறவளாக, முன்னின்று நடத்துகிறவளாக அவளே இருக்கிறாள். “தோழி” என்பவள் தலைவியின் செயலில் வினையூக்கியாக இருக்கிறாள். சிலசமயம் செயலை துரிதப்படுத்தி, சிலசமயம் மட்டுப்படுத்தி, சிலசமயம் ஒழுங்குபடுத்தி, சிலசமயம் ஆற்றுப்படுத்தி எல்லாவற்றிற்கும் சாட்சியாகிறாள். ஆனால்  செவிலித்தாய், தோழி என அடுத்தடுத்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நற்றாய், தலைவிக்காக தங்களுடைய வாழ்க்கையைத் துறந்திருக்க முடியாது எனக் கருத இடமுண்டு. ஒருவேளை, தோழி என்பவள்  தலைவியின் மனசாட்சியாகக்கூட இருக்கலாம். எப்படியிருப்பினும் தலைவியின் செயல்பாடுகளுக்கான ஒரு வினையூக்கியாக தோழியே உடனிருக்கிறாள்.”   
_____________________________________________________________________________________

சில மாதங்களுக்கு முன் ஒரு சேர்க்கைக்காக வேண்டி சென்னையிலுள்ள சில கல்லூரிகள் சிலவற்றிற்குப் போகவேண்டியிருந்தது. கல்லூரி வாசல்களில் காத்திருப்பதும், அருகிலுள்ள கடைகளில் காப்பி குடிப்பதும் கல்லூரிக்குள் வருபவர்களையும், வெளியே போகிறவர்களையும், என்னைப்போலக் காத்திருப்பவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் என்பதாக பொழுது கழிந்து கொண்டிருந்தது.

நகரத்தில் இருக்கக்கூடிய டீக்கடைகளில் காப்பி, டீ குடித்துப் பழகிய பல இளைஞர்களிடம் ஒரு பழக்கம் ஒட்டிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அதாவது ஒவ்வொரு உறிஞ்சலுக்கும் இடையே கண்ணாடி டம்ளரை சுழற்றிக் குடிப்பது. இது எதற்காக என்றால் கடைக்காரருக்கு அவசரமாக நிறைய காப்பி அல்லது டீ போடவேண்டியிருப்பதால் சர்க்கரை கரையாமல் இருக்கும். சுழற்றிச் சுழற்றிக் குடிப்பதன் மூலம் ஓரளவு கரையும். இல்லாவிட்டால் முதல் உறிஞ்சலில் சுவை குறைவாக, கடைசி மிடறு குடிக்கும்பொழுது இனிப்பு மட்டும்தான் இருக்கும். டம்ளரை சுழற்றுதல் என்கிற சிறிய செயல் சர்க்கரையை சீராகக் கரைய வைக்க உதவும். 
.
சர்க்கரையை  குறித்ததல்ல, சர்க்கரையைக் கரைக்கும் ஸ்பூன் குறித்ததும்  அல்லது அந்த கண்ணாடி டம்ளரை சுழற்றி சர்க்கரையைக் கரைப்பது பற்றியதுமென என்னுடைய கவனம் திசைதிரும்பியது. கரைக்கிற ஸ்பூன் காப்பியின் சுவையை ஏற்றுக்கொள்வதில்லை, மாற்றுவதுமில்லை. அது காப்பியும் சர்க்கரையும் இணைவதற்கான ஒரு செயலைத் துரிதப்படுத்துகிறது. ஸ்பூனின் செயல் அவ்வளவே. இதைத்தான், “சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோஎன சிவவாக்கிய சித்தர் கூறினார்.

ஒரு புதிய செயல்பாடு, அந்தந்த காலகட்டத்தின் நாகரீகமாக ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுவது பற்றி யோசிக்கத் தொடங்கினேன். சில சமயம் trend உருவாக்குகிறவர் அதில் பங்குபெறவே மாட்டார். துணி துவைப்பது, சமையல் எண்ணெய், மசாலாப் பொருள்கள் மற்றும்  டாய்லெட் கழுவுவது போன்ற பல விளம்பரப்படங்களில் நடிக்கிற நடிகர், நடிகையர் தாங்கள் விளம்பரப்படுத்திய பொருட்களில் பலவற்றை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் வாங்குகிறவர்களின் விருப்பத்தைத் தூண்டுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.


எனக்குத்தெரிந்து பல பெற்றோர்கள் தொலைக்காட்சி விளம்பரங்களை தங்கள் வீட்டுக்குழந்தைகள் பார்ப்பதை அனுமதிப்பதில்லை. விதவிதமான விளம்பரங்களின் வழியாகத் தூண்டப்படுகிற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் பெற்றோர் சிலர் குழந்தைகள் மீது கோபப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் ஒரு பொருளை வாங்குவதை விடுத்து, காண்பதையெல்லாம் வாங்க விரும்புகிற  நுகர்வோர் கலாச்சாரம் பெருகியிருப்பதற்கு இதுபோன்ற விளம்பரங்களே காரணமாகின்றன. முன்பெல்லாம் பக்கத்துவீட்டில் இருப்பவர்கள், பள்ளிக்கூடத்தில் உடன்படிப்பவர்கள் வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து பெற்றோரிடம் தனக்கும் அதுபோல வேண்டும் என்று கேட்ட குழந்தைகளின் தேவையை இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறுவிதமாகத் மாற்றியுள்ளன.

சாதாரண நிலையில் நிகழாத ஒரு செயலை, இன்னொரு செயல் மூலமாக அல்லது பொருள் மூலமாக நிகழ்த்த முடியும். அந்தச்செயல் அல்லது அந்தப்பொருள் எந்தவிதமான மாற்றத்திற்கும் உட்படாமல் அது பங்குபெறுகிற பொருளின் செயலை கூட்டவோ குறைக்கவோ முடியும் என்று வேதியல் நமக்குப் போதித்திருக்கிறது.  

நிலவியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளை இயற்பியலுடன் இணைக்கும் துறையாக வேதியியல் என்கிற இரசாயனவியல் இருக்கிறது. வேதியலின் அடிப்படையே, இரு பொருள்களுக்கிடையே நிகழ்கிற இரசாயன மாற்றத்தைப்பற்றி அறிவது தான். வேதிவினை என்று சொல்லிவிட்டாலே, அந்த வேதியலில் முக்கியமாக இடம்பெறகூடிய ஒரு பொருள் வினையூக்கி  அல்லது வினைவேகமாற்றி என்று பெயர். இதனை ஊக்கி என்றும் சொல்வார்கள். வினையூக்கியாய் பயன்படும் பொருளானது, வேதியியல் வினையில் புணரும் பொருளாகவோவிளையும் பொருளாகவோ பங்கு கொள்வதில்லை. அதாவது வேதியியல் வினையில் வினையுறும் ஒன்று அல்லஎனினும் இது உடன் இருப்பதால் வேதியியல் வினையின் விரைவைக் கூட்டுகின்றது. சில சமயம் குறைக்கவும் செய்யும். வேதிவினை முடிந்தவுடன் எந்த மாறுதலும் அடையாமல் வினையூக்கி தனித்து  அதனுடைய தொடக்க நிலையிலேயே  இருக்கும். அதன் வேதிப்பண்புகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் இயற்பியல் பண்புகளில் மாற்றங்கள் நிகழலாம்.


ஆங்கிலத்தில் வினையூக்கியை கேட்டலிஸ்ட் (Catalyst)  என்பர். இது கிரேக்க மொழிச் சொல்லாகிய கட்டாலிசிஸ் என்னும் பெயர்ச்சொல்லின் அடியாகிய அவிழ்த்து விடுகட்டு விலக்கு  என்னும் பொருள்படும்  வினைச்சொல்லிலிருந்து  பெறப்பட்டது. ஆக, வினையூக்கியானது ஒன்றின் கட்டினை விலக்குகிறது அல்லது  அவிழ்த்துவிடுகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

காப்பியையும் சர்க்கரையும் இணைப்பதற்குப் பயன்படுகிற ஸ்பூன் இந்த இரண்டின் தனித் தன்மைகளின் கட்டினை விலக்கி, இரண்டையும் இணைத்து, தான் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வினைவேக மாற்றியாக மட்டுமே செயல்படுகிறது.

வினைவேக மாற்றி அல்லது வினையூக்கி பற்றி பனிரெண்டாம் வகுப்பில் எனக்கு வேதியல் பாடம் நடத்திய அசோக் தயாளன் சாரிடம் இப்போது இதனைப்பற்றிக் கேட்டால் என்ன சொல்வார் என்று தோன்றியது. அவரை நான் சந்தித்தே பல ஆண்டுகள் இருக்கும். என்றாலும் அவரிடம் பேசத் தோன்றிவிட்டது. மனதுக்குப் பிடித்த ஒருவரிடம் அதுவும் ஆசிரியரிடம் பேசவேண்டும் என நினைத்த பின்பு தொடர்பு எண் கிடைப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அழைத்தேன், “சார் நான் ஜோதி”,என்று சொன்னவுடன் அரைநிமிடத்தில் அடையாளம் உணரும்படியாகவே இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் நான் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி தந்தது. “சொல்லுப்பா, நல்லாயிருக்கியா, உன்னைப்பற்றி அப்பப்போ கேள்விப்படுகிறேன், ரொம்ப சந்தோஷம் நீ பேசியதுஎன்று சொன்னார். தான் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக இருப்பதாகவும் சொன்னார். நலம் விசாரிப்பு உரையாடலுக்குப் பின்பு,  சார், ‘வினையூக்கிபற்றி இப்போது நீங்கள் எப்படி பாடம் நடத்துவீர்கள்என்று கேட்டேன், “அது, நான் எந்த வகுப்புக்கு பாடம் நடத்துகிறேன் என்பதை வைத்து முடிவு செய்வேன்என்றார். “சரி, பனிரெண்டாம் வகுப்பு ஜோதிக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள்என்றேன்.  உடனே அவர், “ஒரு ஊரில், ஒருவர் மிகவும் சோர்ந்தவராக  சும்மாவே இருக்கிறார், ஆனால் அவர், திறமையானவராக ஒரு காலத்தில் இருந்தவர், ஏதோ காரணத்தினால் தன்னுடைய செயல்திறனை இழந்தவராக இருக்கிறார். தற்செயலாக அவர் காதில் விழுகிற, ஒரு பாடலின் வரிகள் அல்லது சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வசனம் அல்லது யாரோ ஒருவர் எழுதிய கவிதை வரிகள் என எது வேண்டுமானாலும் அவரைப் பாதித்து அவர்  மீண்டும் செயல்படுகிறவராக மாறலாம். அப்படியான அந்த வார்த்தைகள் கூட வினையூக்கிதான்என்று சொன்னார்.

பத்திரிக்கைப் பேட்டி ஒன்றில் நடிகர் பார்த்தீபன் தெரிவித்திருந்த ஒரு தகவலை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகிறது. திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவர் மிகவும் சோர்ந்திருந்த நேரத்தில்  ஒருமுறை கடற்கரையில் தனித்து அமர்ந்திருந்தாராம். அப்போது காற்றில் பறந்துவந்த காகிதத்திலிருந்த ஒரு கவிதை,

இருந்து என்ன
ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலைக்கலாம்

என்பதை வாசித்து, சோர்வு நீங்கி ஊக்கம் பெற்று மீண்டு வந்ததாக அவரே சொல்லியிருக்கிறார். அதன்பின்பு வெற்றிபெற்ற பல திரைப்படங்களைத் தந்திருக்கிறார். கல்யாண்ஜியின் இந்தக் கவிதைவரிகள், நடிகர் பார்த்தீபனுக்கு ஒரு வினையூக்கியாக செயல்பட்டிருக்கிறது.


மார்டின் ஸ்கோர்செஸி இயக்கத்தில் பென் கிங்க்ஸ்லி (Ben Kingsley) நடித்து உருவானதுHugo ஆங்கிலத்திரைப்படம்.  கதையில், Hugo Cabret (Asa Butterfield) என்கிற சிறுவன் உடைந்த இயந்திரங்களைப் பொருத்தி சரி செய்கிற இயல்புடையவனாக இருக்கிறான். Georges என்கிற கதாபாத்திரத்தில் பென் கிங்க்ஸ்லி, லண்டன் ரயில் நிலையத்தில் பழைய பொருள்களை விற்பனை செய்யும் கடையில் ஒரு சோர்வடைந்த மனிதராக வாழ்ந்துவருகிறார். ஆனால், அவர் ஒருகாலத்தில், அசையும் திரைப்படங்களை உருவாக்கியவர். வண்ணத் திரைப்படங்களை உருவாக்கியும்,  மாயவித்தைகளை திரைப்படங்களில் அறிமுகம் செய்தவர்.  நூற்றுகணக்கான திரைப்படங்களைத் தயாரித்து இயக்கி நடித்த  "Georges Mélièsதான் தன்னுடைய அடையாளத்தை மறைத்து Georges என்ற பெயரில் வாழ்கிறார் என்பதை Hugo என்கிற சிறுவன் கண்டுபிடிக்கிறான். இந்தச் சிறுவனின் முன்னெடுப்பினால், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட "Georges Mélièsமீண்டும் உலகத்தின் முன்னிலையில் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்தத் திரைப்படத்தில், மிகப்பெரிய இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமாகிய ஒருவர் உலகத்தின் பார்வையில் மட்டுமல்ல தனக்குள்ளும் மீண்டெழுவதில், அந்தச்சிறுவன் வினையூக்கியாகச் செயல்பட்டிருப்பான்.

வினையூக்கிஎன்கிற ஒரு சொல்லுக்கு இத்தனை நீண்ட விளக்கம் எதற்காக என்றால், சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள்ளன. இவற்றில் 40 பாடல்களே இயற்கைப் புணர்ச்சிபற்றி குறிப்பிடுகின்றன. மீதம் உள்ள 842 பாடல்களில் தோழியரின் துணையுடன் நடைபெறுகின்ற தலைவன் தலைவி உறவைப் பற்றிக் குறிப்பிடும் தோழியிற் புணர்ச்சிவகையைச் சேர்ந்தவை. தலைவன், தலைவியைச் சந்திப்பது மிகத் தற்செயலான ஒரு நிகழ்வு. அந்த தற்செயல் நிகழ்வினை முக்கியத்துவம் பெறச் செய்வதில் தோழியின் பங்கு மிகமிக முக்கியமானது. சங்கத் தலைவிகளின் காதலைத் தூண்டுவதும், வழிப்படுத்துவதும், ஆற்றுபடுத்துவதும் என எல்லாவற்றிலும் தோழிக்கு முக்கியப் பங்கிருக்கிறது. ஒருவேளை தோழி என்கிற ஒரு பாத்திரம் இல்லாவிட்டால் தலைவியின் காதல் உணர்வு தோன்றிய கணத்திலேயே கூட வளர வாய்ப்பின்றி முடிவடைந்திருக்கக்கூடும். ஆனால் அவன் உன்னைப் பார்க்கிறான், உன்னைப் பார்த்தவுடன் தடுமாறுகிறான், உனக்காகத்தான் அவன் இந்த வழியில் நிற்கிறான், உனக்காகவே நெடுந்தூரம் பயணித்து வந்திருக்கிறான்என்பது போன்ற தொடக்ககால காதலுக்கு தோழியே சொல்லெடுத்துக் கொடுக்கிறாள். இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் கூட இவ்விதமான காட்சியைக் காணமுடிகிறது.

ஒரு பெண்ணின் வளரிளம்பருவ காலத்தில் தோழி என்கிற துணை மிக முக்கியத்துவம் பெற்றதாகவே இருக்கிறது. அந்தப் பெண்ணின் நல்லது, அல்லதுஎல்லாவற்றிற்கும் தோழியே சாட்சியாக நிற்கிறாள். சுக, துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறாள். தலைவியின் செயல்பாடுகளில் உறுதுணையாக இருக்கிற தோழி உடல்ரீதியாக எவ்விதமான மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. தலைவன், தலைவி உறவை துரிதப்படுத்துவது அல்லது மட்டுப்படுத்துவது என நிகழும் செயலுக்கு ஒரு பங்குதாரராக, வினையூக்கியாகச் செயல்படுகிறாள்.  

செவிலித்தாய்க்கு தோழி சொல்வதாக அமைந்த போந்தைப் பசலையாரின் பாடல்,

அன்னை அறியினும் அறிகஅலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிது ஒன்று இன்மை அறியக்கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன்நினக்கேகானல்
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும்சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தன மாக, எய்த வந்து,
'
தடமென் பணைத்தோள் மடநல் லீரே!
எல்லும் எல்லின்றுஅசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டுயானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்புபொருந்தி,
'இவைநுமக்கு உரிய அல்லஇழிந்த
கொழுமீன் வல்சிஎன்றனம்இழுமென,
'
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் ருள்ளும்
என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்கஎன்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
நின்றோன் போலும் இன்றும்என் மகட்கே!”

இந்தப்பாடல் தோழி செவிலித்தாயிடம் கூறுவதாக அமைந்துள்ளது.
களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவனின் பிரிவினால் தலைவியின் உடலில் பசலை தோன்றுகிறது. அதனைக் காணுகிற செவிலித்தாய் தோழியிடம் அதற்கான காரணத்தைக் கேட்கிறாள். ஒருநாள் கடற்கரைச் சோலையில் நடந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறி, தலைவனிடம் தலைவி கொண்ட காதலை தோழி குறிப்பாக உணர்த்துகிறாள்.

அந்த நிகழ்ச்சி,  மாலையைப் போல ஒருவரை ஒருவர் தொடர்ந்து தோழியர் கூட்டத்தோடு ஒன்று சேர்ந்து கடலில் ஆடினோம்; கடற்கரைச் சோலையில் சிறுவீடு செய்தோம்; சிறுசோறு ஆக்கிக் குவித்து விளையாடினோம்; இவ்வாறு  ஆடியதால் உண்டாகிய வருத்தம் தீருமாறு சிறிது இளைப்பாறி இருந்தோம். அப்போது ஒரு தலைவன் எங்கள் அருகே வந்தான்; வந்தவன், “பெரிய மென்மையான மூங்கில் போன்ற தோளினையும் மடப்பத்தினையும் உடைய நல்லவரேஎன்றழைத்து, “பகல் பொழுதும் ஒளியிழந்தது; நானும் மிகவும் தளர்ச்சி அடைந்திருக்கிறேன்; இம்மெல்லிய இலைப்பரப்பில் நீங்கள் ஆக்கிய சிறுசோற்றை விருந்துண்டு, ஆரவாரம் உடைய இந்த சிறிய குடிலில் நான் தங்கினால் உங்களுக்கு ஏதேனும் இடையூறு உண்டோ? “என்று கேட்டான்.

அவனைக்கண்டு முகம் கவிழ்ந்து நின்றோம்; மறைவான இடத்தில் நின்று மெல்லிய குரலிலே இழிந்த கொளுமீனாகிய இவ்வுணவு, உமக்கு ஏற்றன அல்லஎன்று கூறினோம். பின்பு, எங்களுடனிருந்த மற்றதோழியர், ”நெடிய கொடிகள் அசைந்தாடும்  தோணிகள்  தோன்றுகின்றன; அவற்றைச் சென்று காண்போமாஎனக் கூறிக்கொண்டு, எங்களுடைய சிறுவீடு,  சிற்றுணவு முதலானவற்றைக் காலால் சிதைத்துவிட்டு, அவ்விடத்திலிருந்து அகன்று போயினர்; அத்தனைபேரில்  என்னையே குறித்து பார்க்கும் பார்வையோடு நல்ல நெற்றியை உடையவளே! ‘நான் செல்லட்டுமா’? என்று என் நெஞ்சம் வருந்துமாறு கேட்டான்; நானும் செல்கஎன்றேன்; ஆனால் அவன், அவ்விடத்தைவிட்டு அகன்று செல்லாமல் என்னருகே இருந்த தலைவியையே பார்த்தவனாக, நீண்ட தேரின் கொடிஞ்சியினைப் பற்றிக் கொண்டு நின்றான். அந்தக்காட்சி, இன்றும் என் கண்முன் நிற்கிறது. தலைவியின் இந்நிலைக்கு அதுதான் காரணம் போல.
இந்நிகழ்ச்சியை நற்றாய் அறிந்துகொள்ளட்டும். மற்றும் இந்த சேரியில் வாழ்கிற பெண்கள் அலர் பேசினாலும் பேசட்டும். இதனைத் தவிர வேறொன்றும் நிகழவில்லை என்பதை நீ அறிந்து தெளியும் வண்ணம்,  வளைந்த சுழிகள் பொருந்திய புகாரிலுள்ள தெய்வத்தை நோக்கி அதன்முன் உனக்குக் கடிய சத்தியமும் நான் செய்து தருவேன்எனத் தோழி செவிலித்தாயிடம் சொல்கிறாள்.

சங்கஇலக்கியத்தில் தோழி, செவிலித்தாய் என்கிற இரு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், தலைவி, நற்றாய்  என்பவர்களுடன் எப்போதும் உடன் வருகிறார்கள். நற்றாய், தலைவியாக இருந்த காலத்தில் செவிலி, தோழியாக இருந்திருப்பாள். தலைவி, பெண்குழந்தை ஒன்றை பெற்று வளர்க்கும் பொழுது, அவளுக்காகவே செவிலியும் பெண்குழந்தை ஒன்றை பெற்று தோழியாக வளர்த்தாளா, செவிலித்தாய் என்பவளுக்கு கணவனாக இருந்தவன் யார், அவர்களுக்கெனத் தனியான குடும்பம், வாழ்வு எதுவும் கிடையாதா, நற்றாய், தலைவி என்பவர்களின் நலன் மட்டுமே அவர்களின் வாழ்வாகிப் போவதன் பின்னணி என்ன, மையச்சமூகத்தில் இயங்குபவர்களாக நற்றாயும் தலைவியும் இருந்தார்களா, செவிலியும் தோழியும் விளிம்பு நிலையில் இருந்தார்களா என பல்வேறு கேள்விகளை இந்த இரண்டு தலைமுறை சங்கப்பெண்கள் திறந்து வைக்கிறார்கள்.

அதேசமயம், காதலில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு நேருகிற உடல்மாற்றம், மனமாற்றம் போன்றவற்றை அவளுடன் எப்போதுமிருக்கும் தோழியே நன்கறிவாள். தோழியை விளிம்புநிலைப் பெண் என்றும் கருத முடியாது. ஏனெனில் தலைவியைக் கண்டிப்பவளாகவும், தலைவனை திருமணவாழ்வுக்குத் துரிதப்படுத்துபளாகவும் இருக்கிறாள். தலைவன், தலைவி சார்ந்த பல்வேறு முடிவுகளை எடுக்கக் கூடிய தெளிவும் அவளுக்கு இருக்கிறது. எனவே காதலில் ஈடுபட்டிருப்பவர் தலைவியாகவும், அவர்களை வழிபடுத்த உடனிருப்பவர் தோழியாகவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தோழி என்பவள் காதலியாகும் பொழுது அவள் தலைவியாகக் அழைக்கப் பட்டிருக்கலாம். இங்கே காதல் என்கிற உணர்வுதான் மையமாக இருந்து இவர்களை இயக்கியிருக்கக் கூடும் என்று கருதவும் இடமிருக்கிறது.

தன்னுடைய தவிப்பைச் சொல்வதற்காக தோழியைத் தூதாக அனுப்புகிற பெண்ணைப்பற்றி கவிஞர் கல்பனா ரத்தன் கவிதை ஒன்று உள்ளது.

வதைக்கும் அவன் பார்வைகளை
உறிஞ்சிய என் கண்கள்
கருநாவல் பழங்களாய்
நீலம் பாரித்துக் கிடக்கின்றன

என்னுடைய உறக்கமற்ற விழிகள்  
அவன் நினைவில்  
பசலையேறிக் கிடக்கின்றன

காதலா
காமமா
மெய்மயக்கமா
யாதொன்றும் அறிகிலேன்

உயிரற்றுக் கிடக்கும் மெய்யை
கணந்தோறும் உயிர்ப்பித்தவனைப்
இப்போது பிரிந்திருக்கிறேன்

அம்மை அறியா
என் அந்தரங்கம் அறிந்தவளே
என் இனிய தோழியே
என் பித்தத்தை நீக்கி
சித்தத்தை ஆற்றுப்படுத்த
அவன் செய்தி
ஏதேனும் சொல்ல மாட்டாயா.”

சங்ககால தலைவியைவிட தோழி புத்திக்கூர்மை உள்ளவளாக இருந்திருக்கிறாள். களவுகாலத்தில் தலைவியின் அனைத்து செயல்பாடுகளையும் தூண்டுகிறவளாக, முன்னின்று நடத்துகிறவளாக அவளே இருக்கிறாள். “தோழி” என்பவள் தலைவியின் செயலில் வினையூக்கியாக இருக்கிறாள். சிலசமயம் செயலை துரிதப்படுத்தி, சிலசமயம் மட்டுப்படுத்தி, சிலசமயம் ஒழுங்குபடுத்தி, சிலசமயம் ஆற்றுப்படுத்தி எல்லாவற்றிற்கும் சாட்சியாகிறாள். ஆனால்  செவிலித்தாய், தோழி என அடுத்தடுத்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நற்றாய், தலைவிக்காக தங்களுடைய வாழ்க்கையைத் துறந்திருக்க முடியாது எனக் கருத இடமுண்டு. ஒருவேளை, தோழி என்பவள்  தலைவியின் மனசாட்சியாகக்கூட இருக்கலாம். எப்படியிருப்பினும் தலைவியின் செயல்பாடுகளுக்கான ஒரு வினையூக்கியாக தோழியே உடனிருக்கிறாள்.   


இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாடல் கண்டறியப்பட்டுள்ளது. அகநானூறு: 110   


No comments: