பூங்கொத்துகளை
ஏந்தி வருகிறாய்
இருகரங்களில்
விரல்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன
வெண்மலர்கள் சூடிய மங்கை
பின் தொடர
மெல்ல நடக்கின்றாய்
தேவாலய மணியோசை
நினைவடுக்குகளில் அந்தரங்களை
எழுப்பிக் கொண்டிருக்கிறது
நீ
ஏற்றிவைத்த விளக்கின் சுடர்
அணைந்துவிடாதிருக்கும் படியான
எனது மன்றாட்டுக்களை
கடந்து செல்கிறாய்
உன்
அருகிலிருக்கும்
பெண்ணின் விருப்பத்தை
நீ அறிய ஆவல் கொண்டிருப்பது போல
விருப்பம் என்ற சொல்லை
நீ
சொல்வதற்குத் தயங்கியவனாயிருப்பதை
ஆவலுடன் பார்க்கிறேன்
யாரோ
புறாக்களை ௬டுதிறந்து பறக்க விடுகின்றனர்
மணியோசையையும்
நீ
முதன்முதலாய் தந்த பூங்கொத்தின்
நறுமணத்தையும்
சிறகுகளின் அசைப்பில்
நகர்த்திச் செல்கின்றன
கோபுரப் பறவைகள் .
No comments:
Post a Comment