Thursday, 30 May 2013

அடையாளம் :



யாராலும் கவனிக்கப்படாத
சரித்திரத்தின்
இலைகளும்
மரங்களும்
காற்றும்
அசைந்து கொண்டிருக்கிறது
அதனதன் அடையாளங்களாய்

சிதிலமான கோட்டையின்
இரத்தச்சிகப்புச் சுவர்களில்

அடிமையின் நிழல்
அதிகாரத்தின் நிழல்
பரவிக் கிடக்கிறது

பார்வையிட வந்த பார்வையாளர்களில் ஒருத்தி
தன் அடையாளங்களை
யாவர்க்கும் அறியும்படி திறந்து காண்பிக்கிறாள்

அடையாளங்களோடு மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றொருத்தி
தன்னை மறைத்தபடி
பார்வையிடுகிறாள் சரித்திரத்தை

ஆயிரம் வாசல்களில்
ஏதேனும் ஒன்றிற்குள் சென்றால்
அடையாளங்களைத் துறந்து விடலாமென
அறிவிப்பு ஏதுமில்லை அவ்விடத்தில்

அவர்களது அடையாளங்களுக்காகவே
ஆயிரம் வாசல்களும் திறந்திருக்கின்றன
அவர்களது அடையாளங்களுக்காகவே
ஆயிரம் வாசல்களும் அடக்கப்போகின்றன

பார்வையாளர்களின்
நேரம் முடிந்து விட்டது
சரித்திரத்திலிருந்து வெளியேறுகிறார்கள்

சரித்திரம் மேலும் ஓர்அடையாளத்தை
அவர்கள் மேல் வீசிவிட்டு
நகர்ந்து கொண்டிருக்கிறது
கடந்து செல்லும் காற்றைப் போல.

No comments: