ஒரு முறை நான் கடல் பயணத்தை மேற்கொண்டபோது
அந்தக் கப்பல்
மிதக்கும் நட்சத்திர விடுதியாய்
நகர்ந்தது
பின்பு
உறக்கம் விழித்து
கப்பலின் மேல்தளத்திற்கு சென்றேன்
எங்கும் நீர்
எங்கும் ஆகாயம்
எவ்வாறு ஆகாயமும்
கடலும் ஒரே மாதிரி இருக்கிறதென்ற வியப்பு
கடல் காற்றாய் முகத்தில் மோதியது
அன்பின் காதலையும்
காதலின் காமத்தையும்
காமத்தின் வன்மத்தையும்
ஒன்றாக தரிசித்ததுபோல
அந்தக் கப்பல்
நீலக் கடல் மேல்
நீல வானத்திற்குக் கீழ்
மிதந்துகொண்டிருந்தது
நான்
மீண்டும் நிலம் சேரலாம்
அல்லது கடலில் மூழ்கலாம்
நீல வானை மிதந்து கடக்கலாம்
எதனையும் அறியாமல்
அவன் பெயரை உச்சரித்தபடி
மன அறை புகுந்து துயிலத் துவங்குகிறேன்
கப்பல் மிதக்கத் துவங்குகிறது
காமம் வடிந்த உடலென.
No comments:
Post a Comment