Thursday, 30 May 2013


நனைவது . . .


நனைந்து கொண்டேயிருப்பது பிடித்திருக்கிறது

அல்லி பூத்துக் குலுங்கும்
குளத்தில் காணாமல் போக நினைத்தேன்

தாமரையெனப் பூத்திருந்த
ஒரு தினத்தில்
தண்ணீர் பட்டுத் தெறித்தது

என்மீது அமர்ந்து நீரருந்திச் செல்ல
கொக்குகளும் நாரைகளும்
தவித்துப் பறந்தன

ஆலங்கட்டிகள்
என்மீது மோதிச் சிதறிய பெருமழையில்
மீன்களின் ஊடாக நகர்ந்து
மீனென ஆனேன்

நனைந்து தீரவில்லை

நதிநீரில்
நீந்திக் கடல் சேர்ந்தேன்

கடலில்
நீந்தினேன்
நீந்திக் கொண்டே இருந்தேன்

ஆழம் வரையில் நீந்தினேன்
அது பெரும் ரகசியம்

கண்டேன்
காணவும் இல்லை

கால்கள் ஓய்ந்தன
கண்கள் செருகின
களைத்துப் போகையில்
என்மீது பரவிய வெப்பத்தில்
நாவரண்டது

தெப்பமாக நான் . 

No comments: