Tuesday, 19 August 2025

 


படக்கதை

அவ்வப்போது எடுத்துக்கொள்கிற

புகைப்படங்கள் எல்லாவற்றையும்

ஒரு தொகுப்பாக

சேமித்து வைத்துக்கொள்கிற வழக்கம்

என்னிடமில்லை

மேலும்

ஒரு புகைப்படத்திற்காக  

அணியும் உடையின்மீதும்

அத்தனை

கவனம் கொள்வதில்லை 

 

அன்றன்று அணிபவையே 

அன்றன்றைய வண்ணம் 

அன்றன்றைய எண்ணமும்கூட

 

புகைப்படங்களுக்கென

பிரத்தேயகமாக உடைகளைத்

தெரிவு செய்து

உடுத்திக்கொண்ட நாட்களும்

எனக்கிருந்தன

என்பதை

தற்செயலாகக் கண்ணில்பட்ட

பழுப்புநிறப் புகைப்படமொன்று

நினைவுபடுத்தியது

 

எதற்குப்பதிலாக

நாம்

எவற்றையெல்லாம்

இழந்திருக்கிறோம்

அடைந்திருப்பவையெல்லாம்

ஆசைப்பட்டவைதாமாவென

அரிதாகத்தென்பட்ட 

அந்தப்புகைப்படம்

யோசிக்கவைக்கிறது

 

மனதின் ஆழத்தில்

உறைந்திருக்கும்

ஒரு தருணத்தை

அல்லது

முகச்சாயலில்

படிந்திருக்கும் ஒரு மனநிலையை

மீண்டும்

மேலெழச் செய்துவிடுகிறது

ஒரு

பழையப் புகைப்படம்

மிக எளிதாக.

 ***

No comments: