Friday 25 October 2013

திசை வழிப் பரவும் நிர்வாணம் :



அதனினும்
குறுகிய வாழ்வில்
மிகக் குறுகிய கால சிநேகிதங்களில்
 

இயலும் வழியிலெல்லாம் அன்பை இறைஞ்சுகிறோம்
இயலும் போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துகிறோம்
இயலும் யாவரிடமும் அன்பில் இணங்குகிறோம்
உச்சத்தில் விகாரமாக காயப்படுத்துகிறோம்

மூச்சடக்கி சுமக்கும்
கல்வாரியின் செந்நிற பாடுகள்
இழைத்து மெருகேற்றப் படாத சிலுவையின்
திசைவழி பரவும்
அன்பின் நிர்வாணம்

அங்கிருந்து
மரணத்தை எதிர்நோக்க
குறுவாள்
விஷம் தோய்ந்த அம்பு
எதுவும் வேண்டாம்
ஒரு முத்தம் போதும்
அல்லது
ஒரு சொல்
*
Courtesy : Painting -Stella Stella Im Hultberg

Wednesday 23 October 2013

மாயமொழி . . .



ஆயிரம் ஆயிரம் சொற்களை வாசித்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் சொற்களை எழுத ஆசை

ஆயிரம் ஆயிரம் துரோகங்களைச் சந்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் துரோகங்களைச் செய்ய ஆசை

ஆயிரம் ஆயிரம் பொறாமைகளைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரமாய் பொறாமைப்பட ஆசை

ஆயிரம் ஆயிரம் மரணங்களைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரமாய் சாக ஆசை

ஆயிரம் ஆயிரம் நல்லவர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் நல்லவளாய் மாற ஆசை

ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் பெற்றவர்களைப் பார்க்கவேயில்லை
ஆயிரம் ஆயிரமாய் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை
அந்தக் குழந்தைகள்
அன்பின் மொழியால்
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் எழுதுவார்கள்.

அடிவானத்தில் கசியும் அன்பு :


அருகில்
மிக அருகில்
சுவாசத்தினும் நெருக்கமாக
மூச்சுக் காற்றின் கதகதப்பு

ஒத்திசைவில்
கிளர்ந்தெழும் நெருப்பு
கண்களில்
வானத்தின் தாரகைகள் ஒளிர்கின்றன

மகுடியசைவில் இயைந்திருக்கும்
நாகமென மயங்கியிருக்க
மிளிரும் பனித்துளி
வனப்பு மிகு அதிகாலையின் வரவை
முன்னறிவித்தது

மிதந்து செல்லும் மேகங்கள்
பச்சை மலைத் தொடரில்
நீலமாய் குவிய

அடி வானத்திற்கு அப்பால் கசியும் அன்பில்
பள்ளத்தாக்கில் பூக்கும் பூக்கள்
தன் ஒளியை வாரியிறைக்கும்
*
Courtesy : Paintings - Andrei Belichenko

நிலைத்திருத்தல் . . .



பெண்களின் இயக்கம் எப்போதுமே ஆண்கள் சார்ந்தது
தன்னை இயக்கியாக ஒப்புக்கொடுத்து விடுகிறாள்

அடுக்களையில் நுழையும் மந்திரம் அறிந்து கொள்கிறாள்
வெளியே வரத் தெரியாது
தன்னுள்ளே ஏந்திய பிள்ளையைப்
பெற்று வளர்க்கத் தெரிந்து கொள்கிறாள்
விட்டு விலகத் தெரியாது

தன்னை அலங்கரிக்கத் தெரிந்து கொள்கிறாள்
தனக்கெனத் தெரியாது
உடுத்தி நிற்கத் தேர்ந்து கொள்கிறாள்
கலையத் தெரியாது
நிலம் சாயத் தெரியும்
எழுந்து நிற்க அவளுக்கு வாய்க்கவே வாய்க்காது

ஒரு பெண் தன்னை முழுமை செய்தல் எதுவெனில்
தனக்கென இயங்குதலும்
தான் மறந்து அசையாது நிலைப்பதுவும்

உண்மையில்
இயங்குதலின் உச்சம் நிலைத்திருத்தலே .

நன்றி - காலச்சுவடு




காலச்சுவடு -அக்டோபர் இதழில் என்னுடைய கவிதைகள் வெளியாயுள்ளன .

நன்றி - காலச்சுவடு Kalachuvadu Pathippagam நன்றி- ஓவியம் Rohini Mani

இணை :



சிவந்த விரல் கொண்டு பாதி முகம் மூடுகிறேன்
நாணிக் கண் புதைக்கிறேன்
நிமிர்ந்த முலையினுக்கு செங்குழம்பிட்டு நிற்கிறேன்
அவன் வரும் வேளையில்

அதிகாலைத் துயில் எழுகிறான்
அடர்ந்த கானகம் செல்ல ஆயத்தம் ஆகிறான்

விடைபெறுகிறான் வேட்டைக்கென

ஒருகண் என்மீதும்
இன்னொருகண் புரவியின் மீதும்

காதலைத் தவிர்த்து
காதலுக்காக என்னை விட்டு அகலுகிறான்

அவன் வரும் வரையில்
நான் பூச்சூடவில்லை
நீராடவும் இல்லை
உணவும் மறந்து நிற்கிறேன்
காலை மாலை நள்ளிரவெனக்
காத்து நிற்கிறேன்
சொல்லிச் சென்ற நாளுக்காக

திரும்புகிறான்

நான் வெண்ணிற உடை உடுத்தி வரவேற்கிறேன்
அவனைப் பொறுத்துக் கொள்கிறேன்
முன்பொருநாள்
நான் சிவப்புநிற உடையில் இருந்தபோது

என்னைவிட்டு அகன்றதையும் சேர்த்தே .

மலர்தல்:



அதிகாலையில்
சூரியன் பட்ட முதல் பூ
எதுவாக இருக்கும்

வெயில் பொதுவான ஒன்றுதான்
என நினைத்திருந்தேன்

இளஞ்சூடு பாவும் காலை
சுட்டெரிக்கும் உச்சி
மாலை வெம்மை இதமென
மாறிக் கொண்டேயிருக்கும் வெயிலை
முத்தமிட வரவேற்கிறேன்

மின்மினிப்பூச்சிகளை சூடி
இரவு
ஒரு பறவையென பறக்கக் காத்திருக்கிறது
எனக்குத் தெரியாமல்

சூரியகாந்திகள் தோட்டத்திலிருந்து
நூறு பறவைகளாய்
வானத்தில் பறக்கத் துவங்க
இரவில் மலரும் பூக்கள்
இதழ் விரிக்கத் துவங்குகின்றன

பகலும் இல்லாத
இரவும் இல்லாத
காலத்தில் மலரும்
முதல் பூவென மலர்கின்றன
அவள் நிலத்தில் அது.

கண்களுக்குள் ஒளிரும் வானம்:





கண்கள் மூடிக் கிடக்கிறாள்
 

உடல் முழுதும் கண்கள் விழித்து
இமைகளின் விளிம்பு
நீர்க்கோர்த்து
கசியத் துவங்கி
நீண்ட நேரமாகி விட்டது

திறப்புகளை அறிந்தவரே
நீர்க்கால்களின் தடம் அறிந்து
அருந்த வல்லவர்

தனிமையில் உச்சம் அடைந்திருக்கிற இந்த சுருதி
ஒரு சிறு மௌனம்
ஒரு பெரும் காலத்தின் துவக்கம்

இவ்வாறு இருக்கையில்
குழந்தைமையை
மீட்டெடுக்கிறது அழைப்பு

இப்பொழுது
அவளின்
மூடிய இமைகளுக்குள் ஒளிர்கிறது நீலவானம்.

Courtesy : Painting -Anuraag Fulay

வேறு ஒரு உண்மைக்கு நகரும் மழை :




வானிலை அறிக்கை சொல்வது பொதுவாகப் பொய்க்காது
இன்று மழை வரும் என்று எதிர்பார்த்தேன்

மழை பொழிந்தது
வேறு நிலத்தில்

அதிகாலையின் வானிலை சற்று மாறிப் போய் விட்டதாக
பின்னால் அறிந்தேன்

உண்மையில் இருந்து வேறு ஒரு உண்மைக்கு நகர்வது
அத்தனை எளிதல்ல
மேலும் ஒரு தனித்து நீளும் இரவு

கனவுகள் விதைக்கும் நிலம் :




பெயர் அற்றுப் போனவள் நான்

நிலமென என்னைச்  சொல்கிறேன்
என் நிலத்தில் புல் பூண்டுகள் முளைக்கின்றன
செடி கொடிகள் தழைக்கின்றன
மரங்கள் வளர்ந்து வான் தொடுகின்றன

அவற்றுக்காக
நான் செய்வது ஒன்றுமே இல்லை
காய்த்து
வெடிப்புற்றுக் கசிந்த விதைகளை
என்னுள் ஏந்திக் கொள்கிறேன்
என்பதைத் தவிரவும்
என் சொற்கள் நிலமாய் அமைதி காக்கின்றன
பொறுத்திருக்கின்றன 


ஆழ் பிளவில்
புதையுண்ட விதைகளும்
காயங்களும்
குருதியில் நனைந்தூறி உப்பலாகின்றன
பின்பு
முளைவிடுகிற 
தளிர் பசுமையில் புதைவுறுகின்றன
வடுக்கள்

பின்னும்
வான் தாண்டும் கனவுகளைக்
கிளை பரப்புகிறேன் .




மனதில் வளரும் தாவரம் :



பசுமை மினுங்குகிற சந்தன மரக்கன்று
இன்று அதிகாலை
கண்ணில் பட்ட முதல் தாவரம்
அருகே சற்று ஆழ்ந்த கரும்சிவப்பு செஞ்சந்தனம்
இலையசைந்து தன் இருப்பைக் காட்டியது

பாதுகாப்பாக நடுவதற்கு நிலமின்றி
இரண்டு ஆண்டுகளாக
தொட்டியில் வளர்ந்து கொண்டிருக்கின்ற
இரண்டு தாவரங்களையும்
இந்த மழைக்காலத்திலேனும்
உரிய நிலத்தில் சேர்த்து விட நினைக்கிறேன்

தன் போக்கில் வளரும் தாவரங்களை
பத்திரப்படுத்த நினைத்து
மனதில் வளர்த்தபடி இருக்கிறேன் .

பறவைகளுக்காக விதைப்பவன் :




அவன் தானியங்களை உற்பத்தி செய்பவன்
சேகரிப்பவன்
விதைக்கவும் அறுவடை செய்யவும்
நிலத்தைத் தேர்ந்திருந்தான்

தானியங்களை பலநூறு மடங்காகாய் பெருகப் பண்ண
அந்த நிலத்தோடு உடன்படிக்கை செய்துகொண்டான்
மழையென பொழியுமவன்
வருவோர் போவோருக்கெல்லாம்
முதிர்தானியத்தின் உணவையே பரிமாறினான்
மேலும்
அவன் விதைப்பது
பெயர் தெரியாத சின்னஞ்சிறு பறவைகளுக்காகவும் தான் .

Sunday 22 September 2013

அன்பின் நிலம் :



ஒரு பெண்
தன் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறாள்
ஒன்றை உணர்த்த

பெண் ஒருமை
பன்மையும் ஆகிறாள்
திசையெங்கும் பரவுகிறாள்
சூரியனுக்குக் கீழே உழைக்கிறாள்
நிலவுக்குக் கீழேயும்

வெட்கத்தை அர்ப்பணிக்கிறாள்
வசீகரிக்கும் சொற்களில் வசப்படுகிறாள்
தயை மிகுந்த அணைப்பில் மயங்கி கிடக்கிறாள்
ஆயிரம் கரங்கள் விரித்து
உலகு புரந்தூட்டும் மாகாளி எனவும்
ஆவேச கணத்தின் கீறலில் கசிகிற ரத்தம் கண்டு
விண்ணோர் உணவு எனவும் களிகூர்கிறாள்

சூதுமிகு சூழலில் வெகுளி
விசைமிகு ஊற்றுப் பெருக்கில் நிலம்

சிலசமயம் காதலி
சிலசமயம் மனைவி
இன்னும் ஒரு சமயம் அம்மா
பிறகு கைதொழும் அம்மனும்
எப்பொழுதும் பலியாள்
அன்பைக் கொடுப்பதில் ஏற்பதில்
மிச்சம் ஒன்றும் இல்லை.
நன்றி : செம்மலர் - செப் -2013

காற்றின் அந்தரங்க மீட்டல் :



பருவம் மாறிக்கொண்டேயிருக்கிறது
காற்று தன் போக்கில்
உச்சம் பெற்றும்
தாழ்வுற்றும்
கட்டற்ற நேசம் கொண்ட விரல்களால்
என்னைத் தழுவுகிறது

அந்தரங்கங்களை
முடிவற்று நீளச்செய்யும் மீட்டல்
நிகழ்த்தி விடுகிறது
இசைவான சூழலின்
ஒப்புக்கொடுத்தலை

காற்றிலிருந்து காற்று
பிரிந்தும் இணைந்தும்
பெளதீகமாக
தன்னை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது .

Saturday 14 September 2013

நரம்பிழையில் கசியும் மௌனம் ...



கசிந்திருக்கும் மௌனத்திற்கு மேல் ஒன்றுமில்லை

எந்த ஒரு கணம்
எந்த ஒரு நிலை
எந்த ஒரு சொல் எதுவும் தெரியாது.

மழைகாலத்தில் கனன்று எரிகிற விறகடுப்பைப் பார்த்தபடி
எங்கோ மரப்பொந்தில் மெலிதாய் அசைந்து
தீர்க்கமாய் அசைவுறும் பறவையொலிக் கேட்டிருப்பது
போலொரு மோனநிலை

சொற்களின் நரம்பிழைகள் மடல்பிரிந்து
ஒத்ததிர்ந்த ரகசியச் சொல்லில்
தன்னியக்கமாகச் சுரந்து கசிவது ஆனந்தம்.

மௌனத்தை
பரிசென உணர்கையில்
நிரம்பி விடுகிறேன் .

காற்றின் இசை வழி ...



இசைவழியின்
திசையறிந்த காற்று
புல்லாங்குழல் ஊடுருவ
அறிகையில்
அடர்ந்த மூங்கில் புதரிலிருந்து
நீலப் பறவையொன்று
சிறகு விரித்து
தன்
மிதத்தல் உணரும்

அகக்காரணி :



காற்று வெயில் மழை
ஒற்றைச் செயல் என்கிறாய்

பகலின் திறவுகோலை பறவைகளிடமிருந்தும்
பெற்றுக்கொள் என்கிறாய்
கனவுகளை கண்ணுற
அடர்காட்டின் வற்றாச்சுனையில் நீருந்து என்கிறாய்
நானோ
குளிர்தடாக மொக்கில் அடர்ந்திருக்கும் பனித்துளி சுவைத்து
பரிச்சயமற்ற நதியில் பயணித்தேன்

காற்று மழை வெயில்
புறக்காரணிகள் என்று தெரியும்
என்னிடத்தில்
ஒரு பறவையின் சிறகுகளை அணிவிக்கவும்
ஒரு கடலின் அலைகளை உடுத்திக் கொள்ளவும்
கூடுமெனில்
என் கலக்கமுற்ற இரவுகளில்
என்னுள் நீரூற்றெனச் சுரந்து
இந்தச் சின்னஞ்சிறு இதயத்தைச்
சீரமைத்து விடமாட்டீரா என்ன.

courtesy : Paintings -Diana Riukas

யாரோ பின் வரும் பாதை . . .



ஆற்றங்கரையோரம்
புளியம் பூக்களின் இளஞ்சூடு பாதங்களில் படர
நீ நடந்து வருகிறாய்
திசை பார்க்கிறேன்

வேறு யாரோ
ஆற்றில்
பெருமீன்கள்
தன் கண்களின் வழியே
குட்டி மீன்களை வளர்த்தெடுக்கின்றன
மீன்களின் பாதையை வரையத் துவங்குகிறேன்

அந்தி முடிகிற தருணத்தில்
காகங்கள் கரைகின்றன
காத்திருப்பின் பொருட்டு
என் சேமிப்பில் கை நிறைய இருந்தன
காலடி ஆற்று மீன்களின் வரைபடம்

நீரின் மேல்
புகையென படிந்து நகர்கிற
பனியில்
நீ நடந்து வருகிறாய்
திசை பார்க்கிறேன்

வேறு யாரோ

தப்பிய ஆடுகளைத் தொடர்ந்து
இடையர்களின் பேச்சரவம் கேட்கிறது

விளக்கேற்றப்பட்ட மலைக்கோவிலின்
திசையில் நகர்கிறது ஆட்டு மந்தை

ஆடுகளைத் தொடர்கிறேன்
மீன்களை அழித்து விட்டு

ஆற்றின் மறுகரையில்
தூண்டிலிடுகிறார்கள்
என் மீன்களைப் பிடித்துவிட

வேறு யாரோ .

நன்றி -ஓவியம் Pr Rajan

இசை வழியும் கதவு ...



வீட்டுப் பறவையின் கூச்சல் கேட்டு விழித்தெழுகிறேன்
மனம் பதறி கூடுகளைப் பார்வையிடுகிறேன்

தண்ணீர் வைக்கிறேன்
அவற்றைத் தேறுதல் படுத்தும் விதமாக

ஏதேனும் துயரம்
அணுகி விடாமல் காக்க நினைக்கிறேன்
சந்தூர் இசை வழியும்
அந்த அறையின் கதவு இன்னும் திறக்கப் படாமலிருக்கும்
தண்காற்று சுழன்றெழும்
கனவின் ரகசியத்தை இரையெனத் தூவுகிறேன்
சமச்சீரான வெட்டாந்தரையில் .

அந்த இரவுக்குள் மிதந்து சென்றாள்




உவந்து அவள்
தன்னை
ஒப்புக்கொடுத்த மற்றும் ஒருதினம்

அறியப்படாமல் கடல்மத்தியில்
தனித்திருக்கும் தீவில்
தகித்திருக்கும் சூரியவாசம் உணர்ந்தாள்

நிலத்தையும் வானத்தையும் பாடியபடி
பகலின் ஒளிர்வினை நினைத்து
மரக்கிளைகளுக்குள்
தனித்துறங்கும் பறவையைப் போல
அவள் மிதந்து செல்கிறாள் அந்த இரவுக்குள் .

courtesy : painting -Anna Bocek

நீட்சி . . .



பனியில்
இரவு முழுக்க
நனைந்த மலர்போல்

குவிந்து கிடக்கின்ற
அன்பு
என்மேல் முத்தங்களாய்
பொழிகிறது

அதன் மூச்சுக்காற்று
இதமாய் என்னை வருட
மலராய் இதழ்கள் விரிக்கிறேன்

ஒருபுறம்
என் மகளுக்காகவும்

மறுபுறம்
மகளாகவும் .

Wednesday 28 August 2013

அறிதல் . . .



மஞ்சள் ஒளி படர்ந்த
என்
நிலத்தில்

விதைத்த உனதன்பு
வேர்களால்
என்னைச் சுற்றுகிறது

என்
ப்ரியங்களில் இருந்து
துளிர்க்கும் உன் கிளைகளில்
அடையும் பறவைகள்

சுதந்திரத்தின்
இசையை இசைக்கும் போது
அறிவதில்லை

தியாகத்தின் மொழியை .

மழைக்கால கோலம் . . .


ஒரு அதிகாலைப்பொழுதில்
பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அது
அடர்மழைபொழியும் காலமாகவும் இருந்தது

முன்பொரு அதிகாலை
அவள்
அப்போதுதான் கோலமிட்டு திரும்பியிருக்க
மழைபொழிந்து கலைத்துக் கொண்டிருந்தது

இருள் விலகியிராத அந்தப் பொழுதில்
வேலையாய்ச் சென்றவன்
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை

வரைந்த கோலங்களைக் கலைப்பதும்
கலைந்து கிடக்கும் புள்ளிகளை இணைப்பதுமான
விளையாட்டில்

அவனுடனிருந்த அதிகாலை
ரகசியங்கள்
அவள் மனத்திலிருந்து வெளியேறி
வண்ணப்பொடியில் சேகரமாகிறது

பெரும்மழை கலைத்திடாத
வண்ணங்களை
சுமந்து கொண்டிருக்கிறது கோலம்.
Courtesy: Luana Sacchetti

Sunday 25 August 2013

செடியில் பூத்திருக்கும் கண்ணன் . . .



பருத்தி வெண்மையாய்
வெடிக்கும்
அது
இளமையாய் இருக்கும் பொழுது
சுவைத்து சுவைத்து உண்பார்கள்
அதைத் தாண்டி வெண்மையாய் வெடிக்கும்

அந்தப் பருத்தி
திரௌபதிக்கு எவ்வாறு சேலையாக மாறியது

கண்ணன் எங்கு செல்வான்
அவளுக்கு ஆடைகளைச் கொடுக்க

மேகம் போல் தொங்கிய பருத்தி
எவ்வாறு நூலாக மாறியது என்பதையும்
அது எவ்வாறு ஆடையாக மாறியது என்பதையும்
மேலும்
அது எவ்வாறு திரௌபதியின் மானத்தைக்
காப்பாற்றியது என்பதையும்
கண்ணனே அறிவான்

மேலும்
கண்ணனைத் தேடிக் கொண்டிருப்பது
அவள் ஒருத்தி மட்டும் அல்ல என்பதையும்.
Courtesy : Painting -Luana Sacchetti

காலம் பறித்த கசப்புச் சுவை . . .



விரிந்து கிடக்கும் கரிசல் நிலத்தில்
தனித்து நின்றிருக்கும்
அந்தப் பெண்ணைப் பார்த்தேன்

வெயிலின் அக்கினியை ருசித்துக் குடிப்பவள் அவள்
உலர்ந்த கசப்பை பசுமையாக கொண்டிருப்பவள்
கோடி நட்சத்திரங்களை தன் தலையில் சூடி
நின்றிருக்கிறாள்

கல்பகோடி ஆண்டுகளின் நிழலை
அவள் தாங்கியிருக்கிறாள் என்பதால்
அவளை நான் விரும்பிச் சேர்கிறேன்

என் பருவம்
காலங்களுடன் நகர்ந்து கொண்டிருக்க
என் பால்யப்ராயம் துவங்கி
அவள் அப்படியே இருக்கிறாள்
காலத்தையும் பருவங்களையும் கடந்தவளாக

ஒரு
கையசைவில்
உயிர்க்காற்றை எனக்குள் பரிசளித்தவள்
மழை மின்னல் காற்று மேகம் என
யாவும் அவள் சொல்லில் கட்டப்பட்டிருந்தன

யாரென்று அறியாமலேயே
எல்லோரையும் குணப்படுத்தியதால்
மஞ்சள் பூசி
அலங்காரம் செய்யப்பட்டவள்

காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் கூட அடைக்கலம் தந்து
தன்னை விருத்தி செய்து கொண்டிருந்தாள்
பின்னாளில்
யார் யாருடைய மற்றும் என்னுடைய அலட்சியத்தினால்
நிலம் நகர்த்தி எடுத்துச் செல்லப்பட்டாள்

கசப்பின் சிறு தேவதை
இன்று
தனக்கு உரிய
கரிசல் மண் பறிக்கப்பட்டு விட்ட
தன் பெருந் துயரம் சொல்லி
கையசைக்கிறாள்

மஞ்சள் முகமும்
கசப்பு சுவையும் இழந்து
காற்றிலசைய தனித்து நிற்கிறேன் நான் .

Courtesy : paintings - Shuchi Krishnan

ஓவியத்தினுள் புல்வெளி ...


பறவைகளின் குரல் கேட்கும் முன்பாகவே எழுந்து விடுகிற
அவளின் அதிகாலை சூரியன்
மகள் வரைகிற ஓவியத்தில் நெருப்புக்கோளமென
உயிர்ப்பெற்று விடுகிறது

பசித்த ஆட்டுக்குட்டியின் மிரண்ட கண்களைப் போல
மேய்ச்சலுக்கான புல்வெளி தேடி அவள் நடக்கையில்

வீட்டிலிருக்கும் மகள்
பாதையும் ஆடுகளும்
பஞ்சுப் பொதியென வரையத் துவங்கியிருப்பாள்

அயர்ந்து சலிப்புற்று அவள் அலைகையில்
சூரியன்
அஸ்தமனம் காண்பதில்லை

ஒவ்வொரு இரவும்
வீடு திரும்புகிற அவள்
மேய்ச்சல் முடிந்து வீடு திரும்புகிற ஆட்டுக் குட்டிகளை
வரைந்தபடி களைத்துறங்கும் மகளைக் காண்கிறாள் .

நன்றி : செம்மலர்

Wednesday 21 August 2013

காட்டுத் தீ. . .



காடுகளை அறிந்தது
மரங்களாக
நீரூற்றுக்களாக
விலங்குகளாக
மேடுபள்ளங்களாக
என்றாலும்
காடுகள் புதிர்களால் நிரம்பியது
 

காடுகளுக்குப் பாதைகள் இல்லை
நெருப்புக்கும்கூட

தீ
நகர்வதற்கான ஒரு பாதை
இந்த நிலத்தில்
இந்த வானத்தில் இல்லை

பாதைகள் நேராகச் செல்லும்
வளைந்து வளைந்து செல்லும்
சட்டென்று இடது புறமாகவோ
பட்டென்று வலது புறமாகவோ
அல்லது
திரும்பிச் செல்வது போலவோ

பாதைகளின் பாதை இருக்கின்றன

ஒருபோதும்
இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல
நெருப்பென்னும் தீ

அது பரவி அழிக்கிறது
கசடுகளை
ஒவ்வாதவைகளை
தீமைகளை
இன்னும் பலவற்றை
அன்பையும் காமத்தையும் தவிர.

Tuesday 20 August 2013

அன்பிலான சொல். . .




உனக்கான
சொல்லைத் தேர்ந்தெடுத்து விட்டேன்

தீர்ந்து போகவே முடியாதது அச்சொல்

பகலும்
இரவும்
இரவின் இடைவெளிகளிலும்
நிரம்பித் ததும்பும்
உன் நினைவுகளினால்
உயிர் பெறுகிறது
அந்தச் சொல்

பேசிப்பேசி
பேச மொழியற்ற தருணங்களில்
என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது போல
அந்த சொல்லை
எடுத்து வைத்துள்ளேன்
உன்முன்

பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது நம்மிடையே

அச் சொல்லை
நீ கேட்பாயெனில்
ஆதியிலே
அச்சொல்லிருந்தது

அந்தசொல்
நானாக
உயிர்பெற்றிருக்கிறேன் என
உணர்வாய்

அன்று
அது
நம்மை அழைத்துச் செல்லும்
அன்பினால்
பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .

Sunday 18 August 2013

ரகசியத்தின் சப்தம் . . .



புங்கை மரத்தினுள் ரகசியமென ஒளிந்திருக்கிறது
ஒரு பறவையின் குரல்
அதன் சப்தம் என் செவிகளுக்கு வந்தடைய
சற்று காலமெடுக்கலாம்

கண்டு பிடிக்க முடியாத ரகசியம்
காதலை
தன் குரலாகக் கொண்டிருக்கிறது

காதலை
அர்த்தப் படுத்தும்
வார்த்தைகளின் சூட்சுமம்
அவன் அறிந்ததே

காதலை
எனக்குள் வைத்துவிட்டுச் சென்றவனைத்
தேடுவதே
இந்தப் பயண ரகசியமாக இருக்கிறது

அவன் காதல்
சிப்பியின் ஓடு திறந்து ஒளிரும்
முத்துப் போன்றதாக இருக்கிறது

இருளில் ஒளிர்பவனைத் தேடியலைகையில்
ஒற்றைப்
பறவையின் கூக்குரல்
மனத்தைக் கரைக்கிறது

புங்கை மரத்தடியில்
மேகம் மறைத்த நிலவொளியில்
சிப்பியிலிருந்து எடுத்த முத்தெனத்
தனித்து நிற்கிறேன்
இருளும் ஒளியும் படர்ந்திருக்கும் நிலத்தில்

Saturday 17 August 2013

இதற்குமுன்






இதற்கு முன்
இவ்விதமாக யாரையேனும்
ஆக்கிரமித்திருந்தேனா

ஒரு  புயலைப்  போல
யாவற்றையும்  புரட்டிப்போடும்
அன்பைப்  பொழிந்திருந்தேனா

இத்தனை  பிரியங்களை  சொற்களாக்கி
உனக்குப்  பரிசாக  தருவேனா

உன் பிரிவை
வாழ்வின்  துயரமான  தருணமெனக்
கருதித்   தவிப்பேனா

நம் சந்திப்பை
காலத்தின்  மிகப்பெரிய  அதிர்ஷ்டம்
என்று  சொல்லி  மகிழ்வேனா 

உண்மையில் 
 உனது  பிரிவும்  சந்திப்பும்
என்னுள்  நிகழ்ந்திருக்கிறதா