Saturday 1 June 2013

நினைவின் சுவை. . .



வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில்
அறியப்படாத சுவையொன்று
நாவில் ஊறியபடி இருக்கிறது

இரவுக்குப் முந்திய
பகல்
நலிவைத் தருவதாதாக இருந்தது

மழை பெய்து
குளிர்ந்த தினைச்செடிகள்
செழித்திருக்க
மலைச்சரிவில்
மூங்கிலின் நிழலும்
வெயில் படிந்த அவன் முகமும்
எனக்குள் விம்மியடங்குகின்றன

நீள்மலைத் தொடர் காட்டில்
உறங்காதிருக்கும்
வண்டுகள்
இசைத்துக்கொண்டிருக்கின்றன
நலிவின் பாடலை

இரவெல்லாம்
மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை
துளையிடும்
வண்டுகள்

மழையில் நனைந்த
தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம்
நினைவூட்டினால்தான் என்ன.

கல் மீன். . .




அன்றைய நாளுக்கான
சொற்களை
அவளிடமிருந்து பெற்றுக்கொண்டான்

நதிக்கரை
நாணல்
கரும்புத் தோட்டம்
தரிசு நிலம்
ஆகியவற்றோடு பேசுகையில்
அல்லது பேசுவதற்காக
அந்தச் சொற்களை செலவிட்டான்

இறுதியில்
தன்னிடத்திலிருந்த
சொற்கள் தீர்ந்து போக
அவளுக்காய் வாசலில் காத்திருக்கிறான்

முற்றத்தில்
வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கும்
அவள்

அவனுக்கான
வார்த்தைகளை
நதியில் மறைத்து வைக்கிறாள்

அதை விழுங்கிய மீன்களின்
வயிற்றில்
கல்லாய் உறைந்து கிடக்கின்றன .

முகவரி. . .



என் முகவரியைத் தேடி
அல்லது கேட்டு அலைந்தார்கள்
எனக்கும்
அவர்களுக்கு என் முகவரியை
குறைந்தபட்சம் என் தொலைபேசி எண்களைத்
தெரிவிக்க ஆசைதான்

நான் நடந்து செல்கையில்
எத்தனையோ கண்கள்
என்னைப் பின் தொடர்வதை
உள்ளுணர்வால் அறிவேன்

பெண் என்பதால்
எங்கிருந்து நோக்கும் விழிகளையும்
உடல் அறிகிறது
மேலும் அது பரவசப் படுத்துகிறது
என் ரகசியங்களைத் தேடி அலைபவர்களிடம்
ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைதான்

நான்
ஆடைகளால் மட்டும் சூழப்பட்டவள் அல்ல

கடந்து செல்கிறேன்
ஆயிரம் ஆயிரம் கனவுகளை
என் மீது காண்பவர்கள் பற்றிய
கனவுகளோடும்
ஆச்சர்யங்களோடும்
மேலும் சிறிது புதிர்களோடும்.
courtesy : Painting -Peter Cupcik

சுமை. . .



நானாக இருப்பது இத்தனை சிரமம்
சுமை என்றால் அத்தனை சுமை
உங்களுக்குப் புரியாது சுமந்தவர்கள் அறிவார்கள்
நுனிமுதல் அடிவரை சுமை
அந்தச் சுமையை சுவை என்பார்கள்
சுமந்தே பார்க்காமல்
சுவைத்துப் பார்ப்பவர்களுக்கு சுமையின்
அருமை தெரியுமா
அத்தனை சிரமம் இத்தனை சுமையை சுமப்பது
ஆடையாக இருக்கலாம்
உறவாக இருக்கலாம்
காவலாக இருக்கலாம்
எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம்
வெகுசிரமம் இத்தனை சுமையை சுமப்பது

நான் யாரென்று கேட்கிறீர்களா
அவ்வாறு கேட்டால்

நீங்கள் ஓர் ஆண்.

கோடைகால ஆற்றங்கரையில். . .



கூழாங்கற்கள்
நிறைந்து கிடக்கும் ஆற்றுப்படுகையில்
பறவைகள் அமர்ந்திருக்கிற
மாலை வேளையில்
சந்தித்துக்கொள்கிறோம்

மீன்களுக்கென பறவைகளும்
புழுக்களுக்கென மீன்களும் காத்திருக்கையில்
கூழாங்கற்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்

பாசிகள் மிதக்கும்
நீர்ச்சுழலை விலக்கியபடி மீன்கள் நீந்துகின்றன
பறவைகள் பறக்கின்றன

நீ விலகிச் செல்கிறாய்
என் சொல்லையோ
அல்லது
என்னையோ எடுத்துக் கொண்டு

உன் நிழலை என் நிலத்தில் விட்டுவிட்டு..

உயிர்த்திருத்தல் . . .



உன்
வெப்பத்தால்
நிறைந்த கருவறை
இருளால் சூழ்ந்திருக்கிறது

உயிர்த்தெழுந்த என்னை
அது
உயிர்ப்பிக்கிறது

நெருப்பும்
நெருப்பும் அணைகையில்
அணையும்
நெருப்பில் உயிர்க்கிறேன்

உன்னை
உயிர்ப்பிக்கிறேன்

நெய்த உடையில் அவிழும் காலம். . .




இந்தக் குளிர்காலத்தை
மஞ்சள் நிறப்போர்வையை விரித்து
வரவேற்க
இப்பொழுதே ஆயத்தமாகிறேன்

தூர தேசத்திலிருக்கும்
அவன்
வரும் நாட்களுக்காக
நெய்யத் துவங்கியிருப்பான்

அதன் நிறம்
நான் அறியாதது

நெய்த உடையைப் போர்த்திக் கொண்டதும்
வயதின் தொலைவு
உடலிலிருந்து அவிழத் துவங்கிவிடும்
என்பது
நான் அறிந்ததே

குளிர்காலம் இப்படியிருக்கக் கூடும்
என
ஊற்றெடுக்கிறது
பச்சைப் புல்வெளியின் சுனை

உறைந்த தண்ணீர் எங்கிருந்து புறப்படுகிறது
என்பதை அறிகையில்
நீலமும் பச்சையும் கலந்த விளக்கொளியில்
நீரூற்றுக்களுக்கு மத்தியில்
தனித்திருக்கும் அவன்
நெய்துகொண்டிருக்கும் போர்வையின்
வண்ணம் உணர்வேன்

அப்பொழுது
தரிசு நிலத்தில்
புல் பூண்டுகளை முளைத்தெழச் செய்யும்
கல்மழையின் மேகசாலைக்குள்
பிரவேசிக்கத் துவங்கியிருப்பேன் .

மழைக்காலத்தின் முடிவில் . . .


நிலத்தின் அடியாழத்தில்
ஈரம் படரவிட்டிருந்த மழைக்காலம்
அப்பொழுதுதான்
முடிந்துவிட்டிருந்தது

பூக்களின் வாசனை பரவிக்கிடந்த
இரவு நேரத்தில்
எனது படுக்கையில் அவனைத் தேடினேன்

அருகில் காணாத அவனை
நகரத்து வீதிகளில் தேடித் பரிதவித்தேன்

இரண்டு பக்கங்களிலும்
உயர்ந்த கட்டடத்தை
அரண்களாகக் கொண்டிருந்த
அகலமான வீதியை
நடந்து கடக்கிறேன்

சாளரங்களின் வழியே கசிகின்ற
ஓசைகளில்
அவனைக் கண்டடைய முடியவில்லை

கோபுரங்களின் மறைவிடங்களில்
பதுங்கிக் கிடக்கும்
புறாக்களின் சிறகசைப்பில்
அவனைக் காணவில்லை

நீண்டு படிந்திருக்கும்
விளக்குக் கம்பத்தின் நிழலில்
அவனைத் தேடிக் களைக்கையில்
நனைந்திருந்த நிலம்
அவனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது .


இந்த மாத குங்குமம் தோழியில். . .

பிரபஞ்சம் போர்த்தியிருக்கும் ஆடை. . .


எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து
எத்தனையோ தலைமுறைகளை வாசித்து
இருக்கிறது என் வீடு

இந்த வீடு
தன்னுள் பொதிந்திருக்கும் பசுமையான நினைவுகளையும்
தன்னுள் படர்த்தியிருக்கும் வலிகளையும்
முற்றிலும் நான் அறிந்திருக்கவில்லை

என்றபோதும்
ஆதித் தாய் உடுத்தியிருந்த அந்த மேலாடையைத்
தேடியபடியிருக்கிறேன்

அந்த ஆடை நெய்யப்பட்டிருக்கவில்லை
அது அப்படியே தான் இருந்தது
அதன் ஒரு நுனியை விரித்தால்
இந்த பிரபஞ்சமே போர்த்திக் கொள்ளலாமெனச்
சொல்வார்கள்
மேலும் அதன் மேல்
தலைமுறையின் பிரசவக் குருதி படிந்திருக்கிறது எனவும்
காலந்தோறும் பிரசவத்தில் மரித்தவளின் ஈரம் படிந்திருக்கிறது
என்பதனையும் அறிந்தபடியினால்

அவள் உடுத்தியிருந்த
அந்த ஆடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
என் வீடு நிரம்பியிருக்கும்
இந்த கணத்தில்.

நிலாக்காலம் . . .


சில நாட்கள் . . .

சில நாட்கள் வருவது ஏன் என்பது
எனக்கொரு பெரிய கேள்விக்குறி
இந்தச் சில நாட்களை
என் பால்யத்தில் சந்திக்கவேயில்லை
சுற்றித் திரிந்தேன்
மரம் ஏறினேன்
பச்சைக் குதிரை விளையாடினேன்
இன்னும்
எத்தனையோ விளையாட்டுக்கள்
விளையாடிக் களித்தேன்
அப்பொழுதெல்லாம்
இந்தச் சில நாட்களைக் கடந்ததேயில்லை
ஒரு சூரிய உதயத்தில்
பள்ளி வகுப்பறையில்
அமர்ந்திருந்தபோது
நான்
ஏதோ ஒரு வலியை உணர்ந்தத் தருணத்தில்
சக மாணவன்
லைட் சிகப்பா எரியுது என்றான்

அன்றிலிருந்து சிலநாட்கள் வருகின்றன
வருகின்றன
வருகின்றன
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று
நினைக்கத் தோன்றும்
அந்தச் சில நாட்கள்.

எனக்கான ஆகாயம் …



மழைக்கால மாலைகளில்
தவறாமல்
மழை வந்துவிடுகிறது

குடைபிடித்துச் செல்வோர்
சாலைகளில் கடக்கின்றனர்
வாகனங்களின் விளக்குகள்
மங்கலாக ஒளிர்கின்றன

நிலவற்ற வானம்
எனக்கு மேலே விரிந்திருக்கிறது
மழையில் நனைந்த
அதன் சிறகுகளை உலர்த்திக்கொண்டு

காற்றில் அலையும்
என் ௬ந்தல்
ஆகாயத்தை வருடியபடி
மயங்கிக் கிடக்கிறது .

இந்த மழைக்கால
வானம்
வசந்தத்தை தரையில் இறக்கியபடி இருக்க

கிளையில் அமர்ந்திருக்கிறது
ஒரு பறவையென
என் காதல்

சூல்கொண்ட மேகம்
மெல்ல விலக
மழைக் காற்றில் நனைந்த
என்
சிறகுகள் அசையத் தொடங்குகின்றன

நான் மிதந்து கடக்கின்றேன்
எனக்கான வானத்தை..

தாலாட்டு...




என்னை
அவஸ்தைக்குள்ளாக்கும்
எத்தனையோ
காரணங்களில்
நீ
விடுபட்டதே இல்லை
.
ஒருவேளை
நாம் உணராதது
மேலும் உனக்குத் தெரியாதது
.
வானத்தைப் பார்க்கும்பொழுது
அது
நீலமாக இருக்கும் அல்லது
கருமையை அப்பிக்கொண்டிருக்கும்
ஜிகினாப் போல மின்னும் நட்சத்திரங்கள்
உன் கண்களையோ
அல்லது என் கண்களையோ
ஞாபகமூட்டும்
.
நான்
நானாகவே இருக்க விரும்புகையில்
என்னைத் துன்புறுத்துகிறாய்
.
நான்
நானாக இருக்க முடியாதென்று
வலியுறுத்துகிறாய்
.
என்னைப்
பிரிந்து செல்லும் சிலகணங்களைக்௬ட
தாங்க முடியாதவளாயிருக்கிறேன்
என்று உணர்ந்து
என்னை விலகிச் செல்கிறாய்
.
நடக்கிறாய்
உன் பாதம் புண்ணாகிவிடுமென்று
பதறுகிறேன்
.
எதையெதையோ விழுங்குகிறாய்
விக்கிக்கொள்வாய் என
கவலைப்படுகிறேன்

இதோ
இன்று ௬ட
நீ
எங்கோ உறங்கிக் கொண்டிருக்கிறாய்
நான்
விசிறிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் காற்று
உன்னைத்
தூங்க வைக்குமென.

தீ உறங்கும் காடு. . .




அந்த மந்திரக்காரன்
வனம் முழுக்கப் மரங்களைப் பூக்கச் செய்கிறான்
பூக்களுக்கு வகைவகையான நிறங்களையும்
நிறங்களுக்கு தனியொரு வாசனையையும் தந்து
மாயங்கள் நிகழ்த்துகிறான்

மேடும் பள்ளங்களும் கரும்புதர்களும்
மாயங்களை அறிந்தவனை மயக்குவதில்லை
வனத்தை உணர்ந்த அவனே
நிலத்தை நெகிழச்செய்கிறான்

காதலின் வாசனையை உணர்கையில்
அவனைத் தேடி அலைகிறேன்
மாய கானகத்தில்

வனமே அலைகையில்
அவன்
கூடுவிட்டு கூடு பாய

காடு பற்றியெரிகிறது
கானகப் பச்சை அழியத் துவங்குகிறது
பறவைகள் தடுமாறிப் பறக்கின்றன
காலச்சர்ப்பம் ஊர்ந்து வெளியேறுகிறது

ஆடைகளை களைகிறேன் சர்ப்பம்போல
மனமிருகங்கள் வெளிக்கிளம்பின ஒவ்வொன்றாக
வனம் பற்றிய பெரும்நெருப்பு
சுட்டெரிக்கும் முன்பு
நம்புகிறேன்

வனநிலம் அறிந்த ஊற்று
வற்றாமல் பெருகி
நெருப்பை அணைக்குமென

பொங்குகிறது குழிநெருப்பு
அசைகிறது காடு.

நன்றி : உயிர் எழுத்து

சீனப் பெருஞ்சுவர் …





இத்தனை அகலமாக இருக்குமென்பது
எனக்குத் தெரியாது
நான்
அப்படிப்பட்ட தேசத்திலிருந்து வந்தவளல்ல
இத்தனை பெரிய சுவர் தேவையா
என்பதும் எனக்கு தெரியாது
எத்தனை எத்தனை கற்கள்
எத்தனை எத்தனை உயரம்
எத்தனை எத்தனை உழைப்பு
இத்தனைக்கும் மேல் நடக்கிறார்கள்
ஓடுகிறார்கள்
வாகனங்களை ஓட்டுகிறார்கள்
ஆகாயத்தின் மீதிருந்து படமெடுக்கிறார்கள்
எதிலும் பதிவாகவில்லை
அத்தனை அத்தனை மரணங்கள்
ஒரு முறை
ஒரு கல் நகர்ந்தது
ஒன்பது பேர் இறந்தார்கள்
எத்தனையோ கற்கள் நகர்ந்திருக்கின்றன
நான்
என் மெல்லிய பாதங்கள்
அதன்மீது பட்டு நோகாத வண்ணம் நடக்கின்றேன்
ஓர் அஞ்சலி போல
ஆன்மாக்கள் வானத்தில் மிதக்கின்றன
அதைப் பார்த்தவாறே
அடுத்த என் மென்னடியை
எடுத்து வைக்கின்றேன் .

வெட்கம்…



இந்த
வானத்திலிருந்து

பூவெனச்
சாரல் பொழிகிறது

பெரும் காற்றோடு
முத்து முத்தாய் நீரைச் சொட்டுகிறது

பனிக்கட்டியாய்கூட
பொழிந்து
தலையில் குட்டுகிறது

எப்படியும் வந்து
நிலத்தை ஈரமாக்கும்
இந்த மழை

எப்போது வரும் என்பது
அறியவியலாப் புதிர்

உன்னை நினைத்தாலே
இந்த நிலத்தை
ஈரமாக்கும்
உனக்கு முன்பு

இந்த
வானமும்
அது
சொரியும் மழையும்
வெட்கப்படாமல் வேறு என்ன செய்யும்

காதலின் நீட்சி…




நெடுநாட்களாக அவனைத்
எனக்கு தெரியும்
நெடுங்காலமாக அவனைத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்
என்பதை அறியாமலிருந்தேன்

பின்பொரு நாளில் நிகழ்ந்த சந்திப்பில்
அறிந்த போது
அவனிடம் சொல்வதற்கென
அவகாசம் இருந்த போதிலும்
அவனது வார்த்தைகளுக்கு
பதிலாக
என்னிடம்
சொற்களோ
சொற்றொடர்களோ இல்லை

பள்ளிகூடத்தில்
பாடநேரத்தில் விளையாட அனுமதிக்கப்பட்ட
சிறுமியின் குதூகலத்துடன்
தரப்படுகிற
கொஞ்சம் முத்தங்களும்
கூடுதல் மௌனமும்
அவனுக்கானவையென்பதை
அவன் அறிந்தேயிருக்கிறான்
மேலும்
முன்கடந்த காலத்தையும்
எதிர் நீளும் காதலையும். .

கோடை வெயில்…




இன்றைக்கு வெயில் அதிகம்
பணிகளும் அதிகம்
அதிகாலையில் விழித்தெழ வேண்டியதாயிற்று

ஏன் இந்த அதிகாலை
இத்தனை தொந்தரவாக இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டபடி தயாராகிறேன்
குழந்தைகள் உறக்கத்தில் இருந்தார்கள்

நான்
வெயிலை எதிர் கொள்ள பயணித்தேன்
பணியாளர்கள் அன்பாகத் தான் இருக்கிறார்கள்
நானும் சுவாரஸ்யம் மிகுந்தவளாகத்தான் இருக்கிறேன்

என்றாலும்
வெயிலுக்குக் கருணையே இல்லை

வெயிலில் நனைந்த படி
வெயிலை விழுங்கிய படி
வெயிலைக் கடந்து கடந்து
களைத்தும் போகிறேன்

வெயில் மேற்கில் விழுந்து கொண்டிருந்தபொழுது
வீட்டிற்கு வெகு தொலைவில் இருந்தேன்

பணியாளர்களுக்கு வெயிலைத் தெரியாது

களைத்த நான்
வீட்டின் அண்மைக்காகக் காத்திருந்தேன்
அவன் காத்திருக்க
குழந்தைகள் தூங்கியிருப்பார்கள்.

ஆடைகளற்ற தினம்…



ஒரு நாளில்
நிறைய ஆடைகளை அணிய வேண்டியதிருக்கிறது
ஒவ்வொரு ஆடைகளை அணிந்துகொள்ளும்போதும்
அத்தனை சலிப்புத் தட்டுகிறது

ஓர் ஆதிவாசியாக இருந்திருந்தால்
இத்தனை ஆடைகள் தேவைப்பட்டிருக்காது

நவீன யுகத்தில் ஆடைகள் பெருகிவிட்டன
ஆடைகள் மனிதர்களை தின்றுவிட்டன

நான்
ஆடைகள் மீது வெறுப்புற்று இருக்கிறேன்
ஒரு பெண்ணாய்
இத்தனை ஆடைகளை அணியத்தான் வேண்டுமா

ஒரு நாளின் முடிவில்
வீடு திரும்பி
ஆடைகளைக் களைத்து எறிகிறேன்

என்னைச் சுற்றியிருந்த இரும்பு வளையங்கள்
ஒவ்வொன்றாய் கழன்று விழுகின்றன
குளியலறையில் பிரவேசிக்கின்றேன்
தலைக்கு மேல் பொழியும் நீர்
என் துயரங்களைக் கழுவிச் செல்கிறது
நீரால் குளிர்ந்தபடி இருக்கின்றேன்

என்றபோதும்
இன்னும் ஓர் ஆடை
வெளியே காத்துக் கொண்டிருக்கிறது.

நினைவின் சுவை…



வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில்
அறியப்படாத சுவையொன்று
நாவில் ஊறியபடி இருக்கிறது

இரவுக்குப் முந்திய
பகல்
நலிவைத் தருவதாதாக இருந்தது

மழை பெய்து
குளிர்ந்த தினைச்செடிகள்
செழித்திருக்க
மலைச்சரிவில்
மூங்கிலின் நிழலும்
வெயில் படிந்த அவன் முகமும்
எனக்குள் விம்மியடங்குகின்றன

நீள்மலைத் தொடர் காட்டில்
உறங்காதிருக்கும்
வண்டுகள்
இசைத்துக்கொண்டிருக்கின்றன
நலிவின் பாடலை

இரவெல்லாம்
மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை
துளையிடும்
வண்டுகள்

மழையில் நனைந்த
தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம்
நினைவூட்டினால்தான் என்ன.