Sunday, 17 August 2025

 


அவளொரு ஆரண்யம் 


வான் பொய்ப்பினும்
தான் பொய்க்காத் 
தன்மை கொண்டது
அக் காடு
கோடையோ, குளிரோ
பருவம் எதுவாயினும்
பசித்த வாய்க்கு
தேனும் ஊணும்
தேடாது கொடுக்கும்

 

வெங்கோடை
ஒன்றில் 
பற்றிக்கொண்ட தீயில் 
வெந்து கிடந்த மரங்களிடம் சென்று
சிறுபறவையொன்று
தனக்காகத்
துளிர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டது

 

அந்த வனம் முழுவதும்
ஒரு பறவையால் உருவாகியது 
அந்தப் பறவைக்கூட்டம் முழுவதையும்

வளர்த்தெடுத்தவை
முதுமரங்கள்

 

காற்றின் சிறுதீண்டலுக்கு
பழுத்த இலைகளை உதிர்க்கும் 
பெருமரமும் 
எதிர் நிற்கும் 
யாவற்றையும் புரட்டித் திருப்பும் 
பெரும் சூறையி்ன் நடுவேயும்
வீழ்ந்துவிடாது பற்றிக்கொள்ளும் 
பசுங்கொடியும் 
ஒன்றில் ஒன்றென இழைந்திருக்கும் 
அதன் சூட்சுமம் அறிந்தபோது

இயற்கையின்
முடிவுறாத திருவிழாவில்
தானுமொரு ஆரண்யமென 
உணரத் தொடங்கினாள்.

***

 

1 comment:

Unknown said...

புலவர் இயற்கையின்பால் அதன் நிகழ்வுகளில் தன் குறிப்பை ஏற்றிச் சொல்வார்களாலாம்... அப்படி இருக்குமோ?.... சரி படிச்சவய்ங்க சொல்றாய்ங்க கேட்டுக்கிறுவோம்.