Wednesday 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..


32.மாற்றோக்கத்து நப்பசலையார்:

ஒரு பெண் அப்படியும் வாழ்கிறாள்:

“துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்... ”

மனைவியின் உடலுக்கு நோவு என்றாலோ, பிள்ளைப்பேறுக்காக  அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அதற்கும்  தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல கணவன் ஒதுங்கி நிற்க, அந்தப்பெண்ணின் உறவினர்களோ அல்லது பக்கத்துவீட்டுப் பெண்ணோ உடனிருப்பார்கள். கணவனின் உடலுக்கு ஏதாவது ஆகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்பொழுது  பெரும்பாலும் மனைவியே உடனிருப்பாள். அவனுடைய உயிருக்காக பிராத்தனை செய்து கொண்டு, அவனுடைய குரல் கேட்கத்தவித்து, அவனுடைய சிறு அசைவுக்காக இவள் கண் மூடாமல் காத்திருப்பாள். மரணத்தின் அண்மையிலிருக்கும் கணவனை தன்னுடைய அண்மைக்குத் திருப்புகிற முழுமுயற்சியுடன் அவளிருப்பாள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கு.ப.ரா. என்று பரவலாக அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன் தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்கவர். இவருடைய “விடியுமா?”என்கிற தலைப்பில் உள்ள கதையானது, “சிவராமையர் - டேஞ்சரஸ்”  எனத் தொடங்குகிறது. அதிலிருந்து முடிவுவரையில் நிமித்தங்கள், உரையாடல்கள், காட்சிகள்  யாவும் சிவராமையர் மனைவியின் நோக்குநிலையிலிருந்தே விவரிக்கப்பட்டுள்ளது.

தந்தியொன்றுசென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து கும்பகோணத்திலிருக்கும் சிவராமையரின் மனைவி குஞ்சம்மாவிற்கு வருகிறது.  சிவராமையருக்கு என்னாகிற்று என்பதை ஒற்றைத் தந்தியின் இரண்டு வார்த்தைகளில் அறிந்துகொள்ள இயலாமல் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கிளம்புகிறவர்களின் மனப்போராட்டத்தைச் சொல்கிறது கதை. நிமித்தங்கள் வழியாக தவறாக எதுவும் நிகழ்ந்துவிடாமல் சாதகமாக இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கைகள் மற்றும் யூகங்கள் எனக் கதை அமைந்திருக்கிறது.  மாலை ரயிலில் குஞ்சம்மாவையும் தம்பியையும் வழியனுப்பும் அம்மா மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைக்கிறாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப்பாக்கு க்ஷேமத் தண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடிநிறையக் கட்டிக்கொடுக்கிறாள். அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்க்கிறாள். திவ்யமான சகுனம். ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு! என குஞ்சம்மாவை நமஸ்காரம் செய்ய வைத்து, காவேரியிலிருந்து ஜலம் எடுத்துக்கொண்டு அடுத்தவீட்டுச் சுந்தரி எதிரே வருகிற சகுனம் நல்லதென்று சொல்லி வழியனுப்புகிறாள்.

ரயில் பயணத்திலும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுக்க இவள் மெய்சிலிர்த்துப் போகிறாள். வெகு ஆவலுடன் அந்தப்பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொள்கிறாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!என்று சொன்னதுபோல எண்ணிக்கொள்கிறாள். தவிர, “மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது! என்று அவள் சொன்னதைத் தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு விடுகிறாள் குஞ்சம்மாள். இவ்விதமாக கதையின் போக்கு முழுக்கவே சொல்லாகவும் செயலாகவும் தனக்குச் சாதகமான நிமித்தங்களை தேர்ந்துகொண்டே இருக்கிறது. இவையாவும் கணவனின் உயிர் பற்றிய பதற்றத்துடன் தொடர்புடையதாகவும் அவருக்கு ஒன்றும் நேர்ந்திருக்கக்கூடாது என்பதாகவும் இருந்தாலும் குஞ்சம்மா தம்பியிடம் தங்கள் குடும்ப வாழ்வுபற்றிப் பகிர்கிற ஒருபகுதி இந்தக் கதையில் வருகிறது. “அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்கிறாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது! என குஞ்சம்மாள் சொன்னபிறகு இருவரும் மௌனமாகவும் அதேசமயம் கலவரப்பட்ட மனதுடனும் மீதிப்பயணத்தைத் தொடர்கிறார்கள்.

ஒரு பெண் தன்னுடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நிரூபணங்களை எதிர்பார்க்கிறவளாக இருக்கிறாள். குறிப்பாக அவனுடைய அன்பை அவளிடம் நிரூபித்துக் கொண்டே இருக்க விரும்புகிறாள். அதனைப் போலவே அவனுடைய மரணத்தையும் அவள் அத்தனை எளிதில் நம்பிவிடுவதில்லை.
பிரியமானவரின் மரணத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ளவே முடியாது. மரணம் பொய்க்கிற கணம் அதுதான். சிவராமையர் இறந்துவிட்டார் என ஜெனரல் மருத்துவமனையின் குமாஸ்தா சொன்ன போதிலும் அவர் உடலைப் பார்க்கும்வரை குஞ்சம்மா நம்பவில்லை.

கதை இப்படி முடிகிறது, “கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம். அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-? விடிந்துவிட்டது.” சிவராமையரோடு குஞ்சம்மாவின் வாழ்வு அத்தனை சுகப்படவில்லை. ஆனாலும் அவர் உயிரோடு இருக்கவேண்டும் நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது அவளுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தப் பதற்றத்துடன்  சிவராமையருக்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது என்று நினைத்துக் கொள்கிறாள். உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்கிற அவஸ்தைக்கு விடிவு வந்துவிட்டதாகவும், சிவராமையரோடு வாழ்கிற துன்பகரமான வாழ்வுக்கு விடிவு வந்துவிட்டதாகவும் மாற்றுச்சிந்தனையை முன்னெடுப்பதாக இந்தக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது. தலைகொள்ளாமல் பூ வைத்துக் கொள்வது குஞ்சம்மாவுக்குப் பிரியமான செயல். ஆனால் அவள் மல்லிகையைச்  சூடிக்கொள்வதே கணவனின் அடையாளமாகச்  சொல்லப்படுகிறது. இவ்விதமாக கதையில் அமைந்துள்ள உரையாடல்கள் மற்றும் நிமித்தங்கள், அனைத்துமே பெண்ணின் மஞ்சள், குங்குமம் சார்ந்தவையாக இருக்கின்றன.

பிணக்குகள், பூசல்கள் என எந்நாளும் குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கணவன் சட்டென ஒருநாள் இறந்துவிட்டால்,  அவனுடைய மனைவிக்கு அது சிறியஅளவிலான நிம்மதியை அளிக்கும். இவ்வகையான மரபு மீறலான சிந்தனையை முன்வைக்கிறது கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் “முத்தங்கள் தீர்ந்துவிட்டன” என்கிற தலைப்பிலான கவிதை ஒன்று.  

மாலை ஊதுபத்தி
இன்ன பிறவாய்க்
கனம் சொன்னது கணம்
கைப்பிடித்து அரவணைத்து
அவளுக்குள் கடத்தினேன்
ஆறுதலை

அவளின் மூச்சில்
வெளிப்பட்டது இரகசியமாய்
சம்பிரமாயச் சோகம் தாண்டிய
நிம்மதி அதிர்வு

ஒற்றையாய்ச் சுவாசிக்கும்
பெண்ணிடமெல்லாம் வீசும்
விடுதலை வாசம்
இவளின் நாடியிலும்
அரங்கேறியபடி

அழுவதற்கு மட்டுமல்ல
அவனின் அது.”

கோவில்களில் மஞ்சள் தோய்ந்த துணியில் முடிந்து வைக்கப்படுகிற ஒற்றை நாணயத்தில் பெரும்பாலும் ஒரு ஆணின் உயிரும், உடல் நலனுமே இருக்கின்றன. கணவனாக இருப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல, மனைவியின் மாங்கல்யம், மஞ்சள், குங்குமமாக அவன்தான் இருக்கிறான் என்பதால் அவன் திடமாக இருக்கவேண்டும் என்பது ஒருபெண் குழந்தை பிறந்து வளரும்பொழுதே உணர்த்தப்படுகிறது. மாங்கல்ய பூஜையும் அதுசார்ந்த வாழ்வியல் நெறியும் அவளுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அனுசுயா, அருந்ததி, சீதை, த்ரௌபதி, தாரை, மண்டோதரி, காந்தாரி, குந்தி என நம்முடைய புராணக்கதைகள் பலதும் பெண்ணுக்கு இவ்விதமான அறிவுரை சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

நாகேஸ்வரராவ், வரலட்சுமி நடித்த “சத்தியவான் சாவித்ரி” திரைப்படத்தில் சாவித்ரி தன்னுடைய பால்யம் மாறாத பருவத்தில் அனுசுயா கதையை தெரிந்து கொள்கிறாள்.  அத்ரி முனிவரின் மனைவி அனுசுயா, சொப்பன எண்ணத்திலும், சுத்த இதயத்திலும், பதிபாதங்களைப் பூசிக்கிறவள்/ மனதாலும் நிர்மல வாக்காலும் பதிசேவை புரிய நினைக்கிறவள்/ பதியை பெருங்கடவுளாக பாவிக்கிறவள் என்றுகூறி கூழாங்கற்களை வேகவைக்கிற, மும்மூர்த்திகளையும் தன்னுடைய கற்பின் திறனால் குழந்தைகளாக்கித் தொட்டியில் போட்டுத் தாலாட்டுகிற கதையில் சாவித்திரி ஈர்க்கப்படுகிறாள்.  அனுசுயா போல தானும் பதிவிரதையாக வாழ அந்தப்பருவத்தில் முடிவு செய்கிறாள். வளர்ந்து பெரியவளாகி சத்தியவானைத் திருமணம் செய்துகொண்ட பிறகு பாம்பு தீண்டி அவனுடைய உயிர்பிரிகிறது. சத்தியவானின் உயிரை எடுத்துகொண்டு எமலோகம் செல்கிற எமனைத் தொடர்ந்து சென்று தன் கணவனுடைய உயிரை மீட்டுத் திரும்புகிறாள் சாவித்ரி. இந்தத் திரைப்படம் பார்த்து தங்களுடைய கணவன் உயிரை இவ்விதமாக மீட்டுவிடலாம் என நம்பிய தலைமுறையின் வழிவந்தவர்களாகவே இன்றும் பெண்கள் இருக்கின்றனர்.

ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் பொழுது மாங்கல்ய பலம் எப்படியிருக்கிறது எனக் கேட்டுக்கொண்ட பின்புதான் அந்தத் திருமணத்தை முடிவு செய்கின்றனர். இளம்வயதில் ஒரு பெண் தன்னுடைய கணவனை இழப்பது என்பதில் முதலாவது அவளுடைய சமூக அந்தஸ்து பறிபோய்விடுகிறது. இன்றைக்கு பெண்களுக்கு மறுமணம் போன்றவை இயல்பாகிவிட்டது. இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிற பெண்ணுக்கு அவள் ஏதோ தவறு செய்து விட்டதுபோல குற்றஉணர்ச்சி அல்லது தாழ்வு மனப்பான்மை வலிந்து உருவாக்கப்படுகிறது. மறுமணம் செய்கிற ஆணைப் பற்றி அவளுக்காக அவன் பெரிய தியாகம் செய்துவிட்டதாக நினைக்க வைத்துவிடுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க, கணவனை இழந்துவிட்ட பெண்ணுக்கு உடனடி இழப்பான அவளது சமூக அந்தஸ்துக்கு இணையான பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இவையிரண்டு காரணங்கள் தவிர அடிப்படையிலேயே பெண்ணுக்கு கணவன்தான் சகலமும் என்பதை முற்றிலும் நம்புகிறவளாக தன்னிலும் அதிகமாக அவனை நேசிக்கிறவளாக இருக்கிறாள்.

பெண்களுக்குக் கல்வியும் சிறிதளவு சமூகமாற்றமும் ஏற்பட்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் கணவனின் உயிர்பிரிந்த நிலையில், அடுத்து ஆகவேண்டியதை அவளே சற்று திடமான மனதுடன் செய்ய முனைகிற பெண்கள் இருக்கிறார்கள். அத்தகைய திடமான பெண்ணும், எதிர்பாராத விதமாக நோய்வாய் பட்ட கணவனை மருத்துவமும் கைவிரிக்கும் பொழுது . தளர்வுற்ற நிலைக்கு அவளும் ஏதோவொரு கணத்தில்  நகர்ந்திருப்பாள்.  அப்போது அவளுடைய கடைசி நம்பிக்கையாக ‘மஞ்சள் துணியில் முடிந்திருந்த ஒற்றை நாணயத்துடன் அவன் உயிர் பாதுகாக்கப்பட்டிருக்கிறதான’ நம்பிக்கையை கடவுளிடம் வைப்பாள். கணவனின் உயிரை இவளது கடைசிநேர சிறுநம்பிக்கைகளாவது காத்துவிடாதா என்று ஏங்கித் துயருருவாள். அன்பு எத்தனை திடமான பெண்ணையும் தளர்வுறச் செய்துவிடுகிறது. அத்தகைய பெண்ணைப் பற்றி கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதை பேசுகிறது.

“உதடு பிதுக்கியபின்
ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?
அருகில் கூட வரப்பயந்து
தூரத்திலிருந்தே சாரி சொல்லி
விரைகின்றனர் மருத்துவர்
வெளியில் நிற்கும் உடன்பிறப்புகள் ஓடிவர
உறைந்து நிற்கிறது மனம்
வீட்டு உரிமையாளர் எண்ணழுத்தி
உடலைக் கொண்டுவர அனுமதி கேட்கும் என்னை
விசித்திரமாகப் பார்ப்பதுகூடத்
தெரியவில்லை
அணைத்து வெளியேற்றப்படும் போது
கையில் முடித்து வைத்த
காசுடன் கூடிய மஞ்சள் துணியை தூர
எறிகிறேன்
அதுவரை அதில் முடிந்து வைக்கப்பட்டிருந்த
அவனுயிர்
என்னிலிருந்து அவிழ்ந்து விலகி உருண்டு பறக்கிறது
விசும்பினோடு ஒன்றாகிறது
என் கண்ணீர் துளி.“

மனைவியின் உடலுக்கு நோவு என்றாலோ, பிள்ளைப்பேறுக்காக  அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அதற்கும்  தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல கணவன் ஒதுங்கி நிற்க, அந்தப் பெண்ணின் உறவினர்களோ அல்லது பக்கத்துவீட்டுப் பெண்ணோ உடனிருப்பார்கள். கணவனின் உடலுக்கு ஏதாவது ஆகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்பொழுது  பெரும்பாலும் மனைவியே உடனிருப்பாள். அவனுடைய உயிருக்காக பிராத்தனை செய்து கொண்டிருப்பாள். அவனுடைய அண்மைக்காக அல்லது ஒரு குரலுக்காக ஏங்கித் தவித்து நினைவற்றுக் கிடக்கும் கணவனுக்கருகில் அவனுடைய சிறு அசைவுக்காக இவள் கண் மூடாமல் காத்திருப்பாள்.  மரணத்தின் அண்மையிலிருக்கும் கணவனை தன்னுடைய அண்மைக்குத் திருப்புகிற முழுமுயற்சியுடன் அந்தப்பெண் இருப்பாள். அவனை இழந்துவிட்டால் அதன்பின்பு அவள் உயிர்வாழ விரும்புவதில்லை.

மாற்றோக்கத்து நப்பசலையாரின் புறநானூற்றுப் பாடலில் போர்க்களத்தில் விழுப்புண் அடைந்தவனை காப்பாற்ற இயலாத அவனுடைய மனைவி அவன் இறப்புக்குப் பின்பு தானும் இறந்துவிடுவதாக பாணனிடமும் விறலியிடமும் கூறுவதாக அமைந்திருக்கும்.

“என்னை மார்பிற் புண்ணும் வெய்ய;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்;
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண ! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும்
மண்ணுறு மழித்தலைத் , தெண்நீர் வாரத்,
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!”

“என்னுடைய தலைவனுடைய மார்பில் உண்டான புண் மிகக்கடுமையாக உள்ளது. நடுப்பகலில் வண்டுகள் மொய்க்கின்றன. வீட்டில் வைத்த விளக்கும் தொடர்ந்து  நின்றெரியாமல் அடிக்கடி அணைகிறது. பலநாள் அவனருகே இருந்து விழித்த என் கண்கள் தாமாகவே மூடுகின்றன. உறக்கத்தை விரும்புகின்றன. கூகையும் அச்சம்தரும் வகையில் கூவுகின்றது. நெற்கதிர்களையும் நீரையும் பெய்து இவன் உயிர் பிழைத்துக் கொள்வான் என்று சொன்ன முதுபெண்டிரின் சொல்லும் பயன்பெறவில்லை. துடி கொட்டுபவனே, பாணனே, பாடுகின்ற விறலியே, இனி நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கவர் ஆனீர். இனியும் நீங்கள் இங்கே இருந்து வாழ்தல் என்பது அரிது.  நானும், இவ்வுலகில் தலைமயிரைக் களைந்து, முடியிழந்த நிலையில் தண்ணீர் புறத்தேத் தெறிக்க அல்லி அரிசியை உண்டு, அணிகலன்களை இழந்து, கைம்மை நோன்பு கொண்டு வாழ்தல் என்பது அரிது. என் தலைவன் இறப்புக்குப் பின் நானும் உயிர்விடுவேன். நீவிர் வேறு இடம் சென்று வாழ்வீராக. “

தலைவன் இருக்கும் வரையிலேயே அவனோடு கூடலும் ஊடலும் இருக்கும். தலைவனும் தலைவியும் கூடியிருப்பதில் மகிழ்கிற பாணனும் விறலியரும் அவர்கள் ஊடல் கொள்ளும்பொழுது சமாதானம் செய்து இருவரையும் இணைத்து வைப்பார்கள். தலைவன் இறந்துவிட்டால் தானும் இறந்து விடுவதாகவும் அதன்பிறகு பாணனுக்கும் விறலியருக்கும் அங்கே வேலையிருக்காது என்பதால் வேறிடம் செல்லச் சொல்கிறாள்.

தனக்கு நேர்கிற அவமானங்களை, இழப்புக்களை, துயரங்களைத் தாங்கிக் கொண்டு  ஏதோ காரணங்களால் உயிர்வாழ்கிறவர்களைப் பார்க்கும்போது தனக்கு அப்படியொரு ஒரு நிலை வந்தால் வாழவே கூடாது என நினைப்போம். அப்படித்தான் இந்தத் தலைவியும் அல்லியரிசி உண்டு,  தலைமழித்து உயிர்வாழ அனைவரின் பார்வையிலும் மதிப்புக் குறைவுற்றவளாக வாழ விரும்பவில்லை. ஒருவேளை, அவள் சொன்னதுபோல தலைவனோடு சேர்ந்து இறந்துபோகாவிடினும், குழந்தைகளுக்காக தொடர்ந்து வாழநேரிடினும் அதில் அவளுக்குத் தனிப்பட்ட சுவையேதும் இருக்கப்போவதில்லை. கணவனை இழந்தபின்பு அவளுக்குச் செய்யப்படுகிற சடங்குகளும் நடைமுறையும் இன்றளவும் அவளுக்குக் காயங்களை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன. இச்சூழலைப் பேசுகிற ராஜசுந்தரராஜன் கவிதையொன்று உள்ளது.  

“அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்

வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்.

நம்மோடு நாம் காண
இத்தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.”

இக்கவிதையில் சொல்கிற தென்னையில்கூட துயரின் அடையாளம்  கண்களுக்குத் தெரியும். ஆனால் கணவன் இறந்த பின்பான பெண்ணின் தனித்த வாழ்வென்பது யாரொருவர் கண்களுக்குப் புலனாகாத வடுக்களுடன் இருக்கும்.


இவர் எழுதிய பாடல்களாக கிடைத்திருப்பவை மொத்தம்: 8. நற்றிணை: 304 புறநானூறு:37,39,126,174,226,280,383

No comments: