Wednesday 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..



31. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்: 






ஒரு பெண் துணிவுடன் இருக்கிறாள்:

“யாரையோ என்று இகந்து நின்றதுவே...

கணவனாகவும் மனைவியாக திருமண உறவிற்குள் வருவதற்கு முன்பாக இருவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை இருந்திருக்கும். அந்த வாழ்க்கையின்  அகச் செயல்பாடுகள் ஒரு ஆணிடம் ஓரளவு வெளிப்படையாகவும் பெண்ணிடம் இரகசியமாகவும் மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் ஆண் பிறரிடம் பகிர்ந்துகொள்கிற ஓர் அந்தரங்கம், அதில் அவனோடு பங்கெடுத்த பெண்ணின் வாழ்வில் எப்போதும் இரகசியமாக இருக்கிறது.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணமான புதிதிலேயே, ஆண் தனது முந்தையக் காதல் பற்றியும் தன்னுடைய பெண் சினேகிதிகள் பற்றியும்  மனைவியிடம்  பகிர்ந்து கொள்கிறான். அவனது வளரிளம் பருவத்தின் குறும்புத்தனங்கள் பற்றியும்  மனைவியிடம் சொல்லிக்கொள்கிறான். இவையெல்லாம் ஆணுக்கு ஒருவகையில் பெருமிதமாக இருக்கிறது. ஆனால் பெண்ணுக்கு பால்யம் உண்டு என்பதையும் அவளுக்கும் வளரிளம் பருவத்தில்  இரகசியங்கள் உண்டு என்பதையும் அவன் உணர்வதேயில்லை. பெண் எப்பொழுதும் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சில விஷயங்களுடன் வாழ்ந்து மடிகிறாள். ஒரு பெண் தன் வாழ்நாள் முழுக்க இரகசியங்களைச் சுமந்து கொண்டிருப்பதற்குத்தான் அதிகமான மனஉறுதி தேவைப்படுகிறது.

ஒருவேளை அவளின் இரகசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நேர்கையில் ஆணின் மனம் என்னவாக இருக்கும். அறிந்துகொண்ட  தகவல்களின் பின்னே அலைகிறவனாகவும் அதனால் சலனமடைகிறவனாகவும் ஆகிவிடுகிறான். ஆணுடைய இரகசியத்தை அறிந்துகொண்ட பெண் அத்தனை சலனமடைவதில்லை. ஆனால் ஆணிடம் ஏதோ இரகசியமிருக்கிறது என நினைக்கிற பெண் பதற்றமுடையவளாகவே இருக்கிறாள். உண்மையில் இருவருக்குமே தனித்தனியாக அந்தரங்கமான சில விஷயங்கள் இருக்கத்தான் செய்யுமென்பதை இருவருமே ஏற்றுக்கொள்வது உறவுக்கு அவசியமானது.

மிகவும் நெருக்கமான கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கு மத்தியில்கூட சிறிய இடைவெளி இருக்கும். இதுதான் அவர்களுக்கிடையே மனநெருக்கத்தை உருவாக்குவதாகவும் அமைந்திருக்கும். இடைவெளியென்பது ஒளிவுமறைவான வாழ்க்கை என்பதல்ல. இது அவரவர்க்கான அந்தரங்கம். ஒருவரின்  அந்தரங்கம் இன்னொருவரின் மனதைப் பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்வதே இங்கே முக்கியமானதாகிறது. அந்தரங்கம் என்பதுதான்  இரகசியமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இச்சூழலைப்பற்றி கவிஞர் லாவண்யா சுந்தரராஜனின் கவிதையொன்று பேசுகிறது.

"நீ
என்னிடம் அறிந்திருக்கும் ரகசியங்களினும்
அறியாத ரகசியங்கள்
அருவருக்கத் தக்கவையாக இருக்கக்கூடும்
உன்னிடமும் அப்படி சில இருக்கலாம்

அதீத பிரியத்தின் பொருட்டோ
அளவற்ற வெறுப்பின் பொருட்டோ
என் ரகசியவெளிக்குள்
எல்லைமீறி நுழைய வேண்டாமென்று
கேட்டுக்கொள்கிறேன்

இருளின் இவ்வுறவு
சிதறும் ஒளிவெள்ளத்தில்
உனக்கும் எனக்கும்
ஆனந்ததைவிட
அதிர்ச்சியைத் தரக்கூடும்."

கணவனாகவும் மனைவியாக திருமண உறவிற்குள் வருவதற்கு முன்பாக இருவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை இருந்திருக்கும். அந்த வாழ்க்கையின்  அகச் செயல்பாடுகள் ஒரு ஆணிடம் ஓரளவு வெளிப்படையாகவும் பெண்ணிடம் இரகசியமாகவும் மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் ஆண் பிறரிடம் பகிர்ந்துகொள்கிற ஓர் அந்தரங்கம், அதில் அவனோடு பங்கெடுத்த பெண்ணின் வாழ்வில் எப்போதும் இரகசியமாக இருக்கிறது.

ஆண் தன்னுடைய அந்தரங்கத்தை பெருமையாகப் பகிர்ந்துகொள்கிற
சூழலில் மனைவியின் நிலையைப்பற்றிப் பேசுகிற கவிஞர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் கவிதையொன்று உள்ளது.

“காதலியின் பெயரை
சரடுபோல் இணைத்து
தெய்வீகக் காதலென
செருக்கோடு சலம்பிக் கொண்டிருந்தான்
அவன் கணவன் ஆனதே
காதலன் பொருட்டு என்பதை
வந்தவள் பிதற்றப்போவதில்லை
பெயர் உணர்த்தும் தெய்வீகம்.”

ஒரு பெண் தனக்கு மட்டுமே சொந்தம் என ஆணும், அந்த ஆண் இதற்கு முன்பு எப்படியிருந்தாலும் பரவாயில்லைஇனிமேல்  தனக்கு மட்டுமே சொந்தம் என பெண்ணும் நினைப்பதால் ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர். அன்புமிகுதியில் இருவருக்குமிடையே இருக்கிற கண்களுக்குப் புலப்படாத மெல்லிய கோட்டினை அழிக்க முயலுகின்றனர். இதன் விளைவாக ஒருவரின்  இரகசியத்தைத் திறந்து பார்க்கும் ஆர்வம் இயல்பாக வெளிப்படத் தொடங்கிவிடுகிறது. இப்படித்தேடிக் கண்டடைகிற இரகசியங்கள் எப்போதுமே இனிமையானதாக இருப்பதில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர்  அதிர்ச்சியூட்டும் நினைவுகளுக்குள் கொண்டு செல்வதாகவே முடிவடையும்.

குடும்பநல நீதிமன்றங்களில் தீர்வுக்குக் காத்திருக்கும் பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளில் மனைவியைச் சந்தேகிக்கும் கணவனும்கணவனை சந்தேகிக்கும் மனைவியும்  என்கிற வழக்குகள்தான் அதிகம்.  ஆனால் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுகிற  சந்தேகம் சட்டங்களினாலும் தீர்ப்புகளினாலும் ஒருபோதும் தீர்க்க இயலாததாகவே  இருக்கிறது.

நிலக்கோட்டை நீதிமன்றத்திலுள்ள மக்கள் சமரசத் தீர்வு மையத்தில்  சிலவருடங்கள் கௌரவ ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தேன். ஒரு விவாகரத்துப் பிரச்சனை, அந்தப் பெண்ணுக்கு  நடத்தை சரியில்லை, வேறு ஒருவரோடு தொடர்பிருக்கிறது எனக் குற்றம் சொல்லிய கணவனும், அதனை மறுத்த பெண்ணும் என்பதுதான் வழக்கு. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்வது என்கிற முடிவுக்கு வந்தனர். ஆனால் மூன்று வயதேயான  ஆண் குழந்தைக்காக இருவருமே போராடினார்கள். ஒருகட்டத்தில் அந்தப்பெண், “இந்தக்குழந்தை இந்தாளுக்குப் பிறக்கவேயில்லையெனச் உரக்கச் சொன்னாள். அங்கிருந்த அனைவரும் ஒருகணம் அதிர்ந்து போயினர்.  “இந்தாளுக்குப் பொறந்திருந்தாத்தானே இவனிடம் புள்ளையக் கொடுக்கணும், இது இவனுக்குப் பிறக்கவேயில்லை என மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

அதன்பிறகு அந்தப்பெண்ணைத்  தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினேன். அப்போது அவர், தன்னுடைய  கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனாலேயே தன்னை  சந்தேகித்து அடிப்பதாகவும் கூறி அழுதபடி, நான் எதிர்பார்க்காத ஒருகணத்தில் தன்னுடைய ஆடைகளைக் கலைந்து அந்தரங்க உறுப்புகளின் காயங்களைக் காட்டத் தொடங்கிவிட்டார். ஒருகணம் நான் உடல்பதறிவிட்டேன். அந்தப் பெண்ணின் ஆடைக்குள்ளே உடல்முழுக்க  சூடுவைத்த காயங்களும் தழும்புகளும் மட்டுமே இருந்தன. “தப்பு செய்றது அவன், ஆனா என்னைத்தான் அவன் குற்றம் சொல்கிறான், அவனை எப்படி சும்மா விடறது அதான், ஆனது ஆச்சு புள்ளையே அவனுக்குப் பொறக்கலன்னு பொய் சொன்னேன், இந்தப் பொய்னால வழக்கு அவனுக்கு சாதகமா திரும்பிருனும் தெரியும். ஆனா பத்து பேர் முன்னாடி புள்ள அவனதில்லன்னு சொல்றது அவனுக்கு நான் கொடுக்கிற தண்டணைஎனச் சொல்லி அந்தப்பெண் கதறியழ ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆணுக்கு அவனுடைய குழந்தையை அவனுக்குப் பிறக்கவில்லை என அவனுடைய மனைவியே சொல்வதுபோல அவமானமானது வேறு ஒன்றும் இல்லை.  

பெண்களுக்குச் சாதகமாக  பல சட்டங்கள் இருந்தபோதிலும் நீதிமன்றத்திற்கு வருவதற்கு பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கான  காரணங்கள்  மிக எளிமையானவை, ஒன்று, பொருளாதார ரீதியாக அந்தப்பெண் ஆணைச் சார்ந்தவளாக இருக்கிறாள். இரண்டாவது, ஆணை எதிர்த்துக்கொண்டு இந்த சமூகத்தில் ஒரு பெண் வாழவே முடியாது என பெண் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள்இவ்விதமான  சமூகச்சூழலைப் புரிந்துகொண்டிருக்கும் நிலையிலும் ஒருபெண் நீதிமன்றம் வருகிறாள் என்றால் அவள் அத்தனை மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்மேலும் நீதிமன்றங்களில் நடைமுறைகளும் அவளை அலைக்கழிப்பதாகவே இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து  மணவிலக்குப் பெற்ற பிறகான பெண்ணின் வாழ்வு பெரும்பாலும் நிறைவுறாமலேயே அமைந்துவிடுகிறது. இதற்குப் பயந்துதான் பெண் தனக்கான குரலற்றுப் போகிறாள்.

அடிப்படையில் பெண் தனக்காக பேச இயலாது போனாலும் தன்னுணர்ச்சிமிக்க குரலெடுக்கும் இதுபோன்ற பெண்களையும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப்பெண்ணின் உடல் காயங்களையும் விடவும்  இந்தக் குழந்தை இந்தாளுக்குப் பிறக்கவில்லைஎன்று நீதிமன்றமே திகைக்கும் அளவுக்குக் கத்தியதுதான் அவரைப்போன்ற குரலற்றுப்போன பல பெண்களுக்கானதாகப் பார்க்கிறேன்.
எல்லோரும் திகைக்கும்படியாக பேசிய அந்தப் பெண்ணின் குரல் அவளுடையது  மட்டுமில்லை. சங்கப்பெண்பாற் புலவர் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் குரலாகவும் பார்க்கிறேன். பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்த தலைவனை என்னை நெருங்கி அணைத்துக்கொள்ள நீ யார்?” எனக்கேட்கும் ஒரு தலைவியை நற்றிணைப் பாடலில் அடையாளம் காட்டியுள்ளார்.
நகுகம் வாராய் பாண! பகுவாய் 
தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன்
 
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
 
காமர் நெஞ்சம் துரப்ப யாம்தன்
 
முயங்கல் விருப்பொடு குறுகினேமாகப்
 
பிறை வனப்பு உற்ற மாசுஅறு திருநுதல்
 
நாறுஇருங் கதுப்பின்எம் காதலி வேறுஉணர்ந்து
 
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
 

யாரையோ என்று இகந்து நின்றதுவே!”

இந்தப்பாடல், “பாணனே, நகையாடிக் களிக்கலாம் வருவாயாக” எனத் தலைவன் பாணனை அழைத்து, நாடகப்போக்கில் துவங்கி எழுதப்பட்டுள்ளது. பரத்தையர் உறவிலே மகிழ்ந்திருக்கும் தலைவன் தற்செயலாக தலைவி வசிக்கிற தெருவழியே வர நேர்கிறது. தலைவனின் மகன் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தன்னுடைய மகனைக் கண்ட மகிழ்வில் அவனை அணைத்துக்கொள்கிறான். அதனால் தலைவியின் நினைவு மேலெழ, மகனைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைகிறான். அதன்பின் தலைவியைக் கூடுகிற நோக்கத்தில் நெருங்குகிறான். தலைவியோ என்னை நெருங்குவதற்கு “நீ யார்” எனக் கேட்டு அவனை விலக்குகிறாள். தனக்கு உரிமையான பொருள்தானே தலைவி, தான் விரும்பும் பொழுது அவள் எப்படி தன்னை மறுக்கமுடியும் என்கிற எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். அவளிடம் முயங்க இயலாத தவிப்பிலும் தன்னை எப்படி தலைவி மறுக்கமுடியும் என்கிற ஆச்சர்யத்திலும் தலைவியின் சொல்லை நம்பமுடியாமல் பாணனிடம் நகைச்சுவை போலச்  சொல்கிறான்.

தலைவன் கூற்றாக எழுதப்பட்ட பெண்பாற்புலவரின் இந்தப்பாடலை  நுட்பமாக வாசிக்க, பல செய்திகள் மறைமுகமாக உள்ளடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. “பரல்கள் இடப்பட்டு பிளந்த வாயுடைய கிண்கிணி ஆரவாரிக்க தெருவில் சிறுதேர் உருட்டி தலைவனின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்அப்போதுதான் பேசத் தொடங்கிய குழந்தையென்பதால்  அதன் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கிறது. குழந்தையின் உடலில் சந்தனம் பூசப்பட்டுள்ளது. குழந்தை விளையாடித் திரியும் தெருவழியே தலைவன் வரநேர்கிறது. பரல்கள் இடப்பட்ட குழந்தையின் கிண்கிணி ஆரவாரிக்கும் சிறுதேர் அவனுடைய கவனத்தைத் திருப்புகிறது. அதுவரையில் அவனுடைய தெருவென்பதையும் மறந்திருக்கிறான். செவ்வாம்பலை நினைவூட்டும் வாயில் எச்சில் ஒழுக, மழலை மொழி பேசுகிற குழந்தையிடம் தன்னை மீட்கிறான். குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொள்கிறான். தகப்பனைக் கண்டவுடன் குழறிப் பேசியதால் வழிந்து பெருகிய குழந்தையின் எச்சிலில் சந்தனம் கரைகிறது. அது தலைவனின் உடலிலும் அப்பிக்கொள்கிறது.” இதுவரையில் இருப்பவை தெருவில் நடக்கும் காட்சியாக இருக்கிறது. காட்சியில் தலைவி இல்லை. தலைவியை மறந்தே அவன் பரத்தையரிடம் இருக்கிறான். அவனுக்கு தலைவியை விடவும் பரத்தையரிடமே ஈர்ப்பு இருக்கிறதுகுழந்தையின் துருதுருப்பே அவனுக்கு தலைவியை நினைவூட்டுகிறது.

இந்த நிகழ்வுப்பற்றி  தலைவன், பாணனிடம் சொல்கிற கருத்து மட்டுமே இந்தப்பாடலில் உள்ளது. அதாவது குழந்தையின் உடலிலிருந்த சந்தனம் தன்மேலும் அப்பிக்கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளாமல் "வேறெனநினைத்துக்கொண்டு தன்னை விலக்கி தலைவி  நகர்ந்தாள் என்கிறான். பரத்தையருடன் கூடியிருந்த தடயமாக அந்த "வேறென" என்று சொல்கிறான். அது குழந்தையின் உடலிலிருந்த சந்தனம் என்பதை உணர்ந்திருந்தால் தன்னையவள் விலக்கியிருக்க மாட்டாள் எனத் தலைவன் நினைக்கிறான். அதனாலேயே தங்கள் உறவின் அடையாளமான குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த போதிலும், "என்னை நெருங்கிவர நீ யார்" எனத் தலைவி கேட்டதை அவனால் நம்பமுடியவில்லை. குழந்தை  என்பது அவனது ஆண்மையின் அடையாளமாக நினைக்கிறான்பரத்தையரிடம் சென்றது பற்றிய எந்தக் குற்றவுணர்வும் அவனுக்கு இல்லை. யாரென கேட்கும் தலைவியின் செயலே கூட அவனுக்கு நகைப்பாக இருக்கிறது. அதிலிருக்கும் அவளுடைய வருத்தமும் கோபமும் அவனுக்குப் புரியவில்லை.

தலைவியின் இடத்திலிருந்து இந்தப்பாடலை நோக்க, தன்னுடைய நினைவு இருந்திருந்தால் பரத்தையரின் வீட்டிற்கே தலைவன் சென்றிருக்க மாட்டான். தன்னுடைய தலைவன் வேறு ஒரு பெண்ணிடம் ஈர்ப்புடன் இருக்கிறான் என்பதை அறிகிற ஒரு பெண்ணின் நிலையினை உணராமல், அங்கு சென்றவன் தலைவியின் நினைவு வராமலேயே காலத்தைக் கடத்தியிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் தனிமை பற்றியோ, அதன் துயரத்தைப் பற்றியோ அவனுக்குப் புரிந்திருக்கவில்லை. குழந்தையைப் பார்த்ததால் மட்டுமே தலைவியின் நினைவு தூண்டப்பட்டிருக்கிறான். தலைவன் என்பதால் அவனை விலக்கிவிடுகிற அவளுடைய கோபமும் அவனுக்குப் புரியவில்லை.
சங்ககாலத் தலைவிகள், பரத்தையர் வீடுசென்று திரும்பும் தலைவனிடம் சிறிய அளவிலான ஊடல் கொண்டுவிட்டு பிறகு சமாதானம் ஆகிவிடுவார்கள். அல்லது அவளை சமாதானப் படுத்துவதற்காக விறலியரோ பாணனோ தூதாக அனுப்பிவைக்கப்படுவார்கள். தோழியிடம் அவர்கள் முதலில் சமாதானம் பேசுவார்கள். தோழியும் முதலில் வாயில் மறுத்துப் பேசிவிட்டு தலைவன், தலைவியரை இணைத்து வைத்துவிடுவாள்.

“தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுண ராகுதல் அறிந்தும்
அறியா ரம்ம துடலு மோரே.” 

ஓரம்போகியார் என்கிற ஆண்பாற் புலவரின் அகநானூற்றுப்பாடலில், “பரத்தையரை நாடிச் சென்றிருக்கும் தலைவனை ஏற்றுகொள்ளாத தலைவியை, அவனுடைய செயலைப் பொறுத்துக் கொள்ளவில்லையெனில் உண்ண உணவும் குழந்தைக்கு பாலும் இன்றி  துன்பத்தையே மேற்கொள்வாய்” என்று தோழி கண்டிக்கிறார். பரத்தையர் பிரிவு என்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பல பாடல்களில் தலைவியை அடங்கிப்போகச் சொல்லும் இதுபோன்ற காட்சிகள் உள்ளன.

“பரத்தையருடன் அவர்களின் கலையறிவு பற்றியும் தமிழ்ச்சமூகத்தில் இசை, ஆடல், நாடகம் முதலான கலை வளர்ச்சியில் ஈடுபட்ட கலைவிறலிகளையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். இல்லத்துப் பெண்கள் கலைத்துறையில் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் பரத்தையர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். பரத்தையர்களின் ஜீவனோபாயம் பற்றிய பதிவு சங்கஇலக்கியத்தில் இல்லை. கைமாறும் பணம் அல்லது நெல் அளவுகள் பேசப்படவில்லை. அதெல்லாம் இல்லாமல் இத்தொழில் நடைபெறும் சாத்தியமில்லை. எனினும் அந்த விலைகள் பேசப்படாத ஒரு நாகரீகம் நிலவியிருக்கிறது. இதில் ஆறுதல் அடையக்கூடிய ஒரு அம்சம் பரத்தையர், பத்தினிகளுக்கு கிடைத்த சுதந்திரத்தைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்துடன் வாழ்ந்து இருந்ததன் சுவடுகள் தென்படுகின்றன.” என “தாழப்பறக்காத பரத்தையர் கொடி” என்கிற நூலில் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.


கற்புடை மகளிர் எனப்படுகிற சங்கத்தலைவிகள் தங்களுக்காகப் பேசவே மாட்டார்கள். ஆனால் இந்தப்பாடலில் வருகிற தலைவி தலைவனை எதிர்த்துக் கேட்கிறாள். இத்தகைய துணிவான குரலை பெண்பாற்புலவர் என்பதாலேயே எழுத முடிந்திருக்கிறது. தலைவனுக்கு எதிரான குரலென்பது பரத்தையரின் குரல் அல்ல, அது பரத்தமையின் இயல்பு. தேவைப்படுகிற இடத்தில் தன்னுடைய குரலை பதிவு செய்கிறவளாக கற்புடை மகளிர் இருந்தால் அவர்களும் பரத்தமையின் இயல்பைக் கைக்கொண்டிருக்கின்றனர் எனலாம். சங்க இலக்கியத்தில் “தோழி” என்கிற கதாப்பாத்திரம் போல “பரத்தையர்” என்பது ஒரு குறியீடு. பரத்தமை என்பது அறிவு, துணிச்சல் மற்றும் சுதந்திரம் என்பதாகவும் புரிந்துகொள்ளலாம்.


இவர் பாடியதாக இரண்டு பாடல்கள் கிடைத்துள்ளன. நற்றிணை: 250, 369

No comments: