பெண் –
உடல் , மனம் , மொழி :
சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..
34.
ஒரு பெண் தன்னை நிரூபிக்கிறாள்:
“கூந்தல்
கொய்து, குறுந்தொடி நீக்கி,...”
“ஒருபருவத்தில் பூக்கவும்,
மறு பருவத்தில் காய்த்துக் கனியவும்,
வேறொரு பருவத்தில் இலையுதிரவும் அதன்பின்பு வருகிற வசந்தத்தில் மீண்டும்
துளிர்ப்பதும் தாவரங்களின் நியதியாகும். பெண்ணும் தன்னையொரு தாவரமாகவே வரித்துக்கொள்கிறாள். ஆனால் பெண்ணுடைய பூப்பும்,
கனிவும் ஒரே ஒரு ஆணுக்காக மாத்திரமே நிகழவேண்டுமென அவளிடம் ஆழப்
பதியவைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எந்த வயதிலும் தான் கற்புநெறி தவறாமல் இருப்பதை
நிரூபணம் செய்துகொண்டே இருக்கிறாள். சிலசமயம் கணவனை இழந்த ஒரு பெண் அவளைச்
சுற்றியிருப்பவர்களுக்கு மட்டுமன்றி அவளுக்கே கூட அவளை நிரூபித்துக்
கொள்ளவேண்டியிருக்கிறது.”
________________________________________________________________________________
“செங்கோட்டை ஸ்ரீ
ஆவுடை அக்காள்” என்கிற பெயரை முதன்முதலாக நாஞ்சில் நாடன் உச்சரித்து நான்
கேட்டேன். ஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க வகையில் ஆவுடை அக்காளின்
பாடல்கள் இருப்பதாகவும், மகாகவி சுப்ரமணிய பாரதியாரிடம் ஆவுடை அக்காள் பாடல்களின்
தாக்கம் இருப்பதாகவும் நாஞ்சில்நாடன் கூறினார்.
“செங்கோட்டை ஸ்ரீ
ஆவுடை அக்காள்” பாடல் திரட்டு புத்தகத்தை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எனக்கு
அனுப்பியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் நாஞ்சில் நாடனின் “பனுவல் போற்றுதும்”
(தமிழினிப் பதிப்பகம்) என்கிற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருந்தது. அந்தக்
கட்டுரைத் தொகுப்பில் பாரதியையும் ஸ்ரீ அக்காளையும் ஒப்பீடு செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
பாடல் திரட்டு புத்தகமும் நாஞ்சில் நாடனின் கட்டுரையும் ஆவுடை அக்காள் குறித்த
தேடலை எனக்குள் ஏற்படுத்தியது.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாளின்
சகோதரி மகள் கோமதி இராஜாங்கம் எழுதியுள்ள குறிப்பு வழியாக மட்டுமே ஆவுடை அக்காளைப்
பற்றி ஒரளவு தெரிந்துகொள்ள முடிகிறது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு
செங்கோட்டையில் வசதியான அந்தணக் குடும்பத்தில் பிறந்தவரான ஆவுடை அக்காள்
பூப்பெய்தும் முன்பாகவே விதவையானவர். கைம்மை நோற்பவள் கல்வி கற்பது, பாடல்
எழுதுவது என்பது கடும்தண்டனைக்குரிய விஷயம்
என்பதால் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறாள். திருவிசை நல்லூர் அய்யர்வாள்”
எனப் பெயர்பெற்ற “ஸ்ரீதர ஸ்ரீ வெங்கடேசர்” என்கிற மகான் மீது ஆவுடை அக்காள் பக்திகொண்டு
உன்மத்தையாக இருந்திருக்கிறாள். அவரின் ஆசியால் அத்வைத பாடல்களைப்
பாடியிருக்கிறாள். தீர்த்த யாத்திரை போயிருக்கிறாள். பல ஆண்டுகள் கடந்து சொந்த
ஊரில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறாள். இறுதியில் குற்றால மலையில் தவம் செய்து
வருவதாகக் கூறிச் சென்றவள் என்னவானாள் என்பது தெரியாமலேயே போய்விட்டது. இப்போது ஆவுடை
அக்காளின் பக்தி, யோக, ஞான, வேதாந்த பாடல்களின் திரட்டு மட்டும் இருக்கிறது. ஆயிரம்
பாடல்களுக்கு மேல் பாடிய பாடல்களில் தொகுக்கக்கிடைத்தவை கொஞ்சம்தான்.
அதிலிருந்து,
கும்மிப்பாடலில்,
“தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத்தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே” என்றும்,
பராபரக்கண்ணியில்,
“தீட்டுத் திரண்டுஉருண்டு சிலைபோல பெண்ணாகி
வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப்போச்சோ- பராபரமே, என்றும்
உக்கத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ
உன்னுடைய வெட்கத்தை யாரோடு சொல்வேன் பராபரமே”
என்றும்
பாடியிருக்கிறார்.
ஞான ரஸ
கீர்த்தனைகளில் வருகிற “புதுப்பானை ஈப்போலே போகமெனகில்லாமல்” என்கிற பிரயோகம்
நாஞ்சில் நாடனைப் பிரம்மிக்க வைக்கிறதாக சொல்கிறார். இந்த வரி என்னை
இளம்விதவைகளின் நிலைப் பற்றிய சிந்தனைக்குள் நகர்த்தியது. ஆவுடை அக்காள்
காலத்திற்குப் பின்பு இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்கள் தாரக மந்திரம். இவரின்
பாடல்களை பாடி தங்களுக்கே தாங்கள் ஆறுதல் அடைந்து கொள்கிற வழக்கம் தென்தமிழகத்தில்
இருந்திருக்கிறது.
ஒரு ஆணுக்கென
வளர்க்கப்படுகிற பெண், அவனுடைய மரணத்தின் பொழுது அவனுடனேயே உயிர்துறக்க வேண்டும்
அல்லது அவன் சிதையில் உடன்கட்டை ஏறி இறக்கவேண்டும். இந்த இரண்டு வகையான
முடிவுக்கும் உட்படாத பெண், கைம்மை நோன்பு ஏற்பது மட்டும்தான் அவள் தேர்ந்தெடுக்க அவளுக்கு
முன்பாக இருந்த ஒரே ஒரு வாழ்க்கை முறை. விதவையாகும் பெண்ணுக்கு உயிர் வாழ்வதற்கான
உரிமை மட்டுமே இருந்திருக்கிறது. கருவுற்றிருப்பவர்கள், குழந்தைகளை வளர்க்கவேண்டிய
பொறுப்பிலிருக்கக் கூடிய பெண்கள் உடன்கட்டை ஏறுவது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலிருக்கும்
பெண்களும் உயிர்வாழ அடிப்படையாக என்ன தேவையோ அவ்வளவே அவர்களுக்கு
அனுமதிக்கப்பட்டிருந்தது.
பெண்ணுக்கு
அளிக்கப்பட்டுள்ள அழகு பற்றிய கற்பிதங்கள் பெரும்பாலும் அவளை வலிமையிழக்கச்
செய்வதற்காகவே பயன்படுகிறது. கூந்தலை நீளமாக வளர்த்தல், கூந்தலில் வாசமிகு
மலர்களைச் சூடுதல், மஞ்சள் பூசுதல், கையில் வளை, காதணி, ஓசையெழுப்பும் காற்சிலம்பு
என உடல் முழுக்க ஆபரணங்களை அணிவித்தல் போன்றவை அழகு சார்ந்த உளவியல்
தூண்டுதலின் அடிப்படையில் பெண்ணுக்கு
கட்டாயமாக்கப்பட்டன. பூக்களைச் சூடுவதும் ஆபரணங்களை அணிவதும் ஆணுக்கும் உரியதாக
இருந்த காலத்திலிருந்தே ஒருபெண் தன்னை
பூக்களாலும், ஆபரணங்களினாலும் அலங்காரம் செய்துகொள்வது என்பது அவளுக்கானது அல்ல என
போதிக்கப்பட்டிருந்தது. இந்த அழகும் அலங்காரமும் ஒரு ஆணுக்காகவே என்பது பெண்ணுக்கு
மட்டுமே வகுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அவன் இறந்தவுடன் அவளின் உடல்
இன்னொருவருக்குத் தூண்டுதலாக இருக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கூந்தலை மழித்து,
வெள்ளைப்புடவை அணிவித்து, ஆபரணங்களை நீக்கி விடுகின்றனர். கூந்தல் மழிக்கப்படுவதால்
பூக்களும் அவளிடமிருந்து நீங்கிவிடுகிறது.
வலங்கை ஆண்டாளின் “மக்கள்
பாட்டு” என்கிற ஒப்பாரிப்பாடல் தொகுப்பிலிருந்து ஒருபாடல்,
“மல்லிகை முல்லையரும்பு
நான் மலரும் பனியரும்பு
என்ன மலரவச்சிப் பாக்காம
மங்கவச்சுப் போறீங்களே
என்னோட மனக்கவலை தீரலையே
செண்பக பூ அரும்பு
நான் சிரிக்கும் பனியரும்பு
என்னைச் சிரிக்கவச்சுப் பாக்காம
சிந்தவச்சுப் போறீங்களே
என்னோட சிந்தை கலந்குதையா
சீனியும் சக்கரையும்
சேர்ந்துவரும் கப்பலிலே
உங்க கண் மறைஞ்ச நாளையிலே
சீனி குறையலாச்சு
எனக்குச் சீரழிவு ரொம்ப ஆச்சு
வால்மிளகும் சீரகமும்
வந்து இறங்கும் கப்பலிலே
உங்க கண் மறைஞ்ச நாளையிலே
வால் மிளகு மட்டமாச்சு
என் வவுதெரிச்ச ரொம்ப ஆச்சு.“
இந்தப்பாடலில் கணவன் இறந்தவுடன் ஒருபெண்
எதையெல்லாம் இழக்கிறார் என்பதில் உணவுப் பொருட்களுக்கும் முக்கிய இடம் உள்ளது
தெரிகிறது. அழியாமல் மிச்சமிருக்கும் முந்தைய வாழ்வின் எச்சங்களை குழந்தைபேறு
முதல் மரணம் வரையில் நிகழ்த்தப்படுகிற சுப, துக்க சடங்கு முறைகளின் மூலமாக
அறியமுடிகிறது. நாட்டுப்புறப்பாடல்கள் வகைப்பட்டவை எந்த பாசாங்கும் இன்றி தமிழ்நிலத்தின்
வாழ்வியலை வெளிப்படுத்திவிடுகின்றன.
சாஸ்திரங்கள், நம்பிக்கைகள், வாழ்வியல் நடைமுறைகள் மற்றும்
பண்பாட்டு ரீதியாகப் பெண்ணுடல் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். “கணவனை
இழந்தபின் ஓராண்டிற்கு பெண் கைம்மை நோன்பு நோற்கவேண்டும். தேன், மது, புலால்,
உப்பு ஆகியவற்றை உணவாக உட்கொள்ளகூடாது. வெறுந்தரையில் படுக்கவேண்டும்” என
கி.மு.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதயனார் என்கிற ஞானி விதிமுறை வகுத்துள்ளார்.
அதன்பின் அந்தப்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம் என்றும் இருந்திருக்கிறது.
இவருக்குப் பின் வந்த மௌத்கல்யர் ஆறுமாதகாலம் என கைம்மை நோன்புக்கான காலத்தைக்
குறைத்தார். அதன்பின்பு எதன் காரணத்தினாலோ விதவை என்பவள் கண்களாலும் காணத்தக்கவள் இல்லையென
மெல்லமெல்ல வெறுத்து ஒதுக்கப்பட்டாள். கணவன் இறந்தவுடனே அவனோடு அவளை நெருப்பில்
போட்டு எரித்தால் நேரடியாக சூரிய மண்டலம் போய்விடுவாள் என்ற தவறான நம்பிக்கை
வேரூன்றியது. கணவனோடு அவளும் இறந்தால்தான் குடும்பத்திற்கு நல்லது என உடன்கட்டை
செயல்பாடு கட்டாயமாக்கப்ப்பட்டது. அப்படி இறந்து போகாத பெண்ணை கடுமையான முறைகளில்
கைம்மை நோன்பு நோற்க வைப்பதன் மூலம்
தானாகவே உடன்கட்டைக்கு உடன்படுகிற நிலைக்கு தள்ளப்பட்டாள். இவ்விதமாக பெண்ணுடல்
மீதான கட்டுப்பாடுகள் வளர்ந்தன. மேலும் அழகு, அடக்கம் என்கிற காரணங்களைச்
சொல்லி பத்தியமுறைகளினாலேயே பெண் வளர்க்கப்படுகிறாள்.
கணவனை இழந்த பெண்ணொருத்திக்கு மறுக்கப்படுவது அவளுடைய தோற்ற அழகு மட்டும் இல்லை.
அவளுக்கு உயிர்வாழ அனுமதிக்கப்பட்ட சிறிதளவு உணவு வகைகளும் மிகவும்
கட்டுப்பாடுடையவையாக இருந்திருக்கிறது. பாலுணர்வு கட்டுப்பாட்டிற்காக உணவுக்கட்டுப்பாடு
என்பதாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறாள்.
உத்தரபிரதேசத்தில்
யமுனையாற்றங்கரையில் உள்ள விருந்தாவன் விதவைகளின் நகரமாக இருக்கிறது. இந்த
நகரத்தில் நடக்கும் கதையாக தீபாமேத்தா இயக்கி வெளியான
“வாட்டர்” திரைப்படம் இன்றைக்கும் மிச்சமிருக்கும் கைம்பெண்களின் நிலையினை
அடையாளம் காட்ட முயன்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் குழந்தையிலேயே விதவையாகி
மடத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு முதியவள் தன்னுடைய ஏழுவயதில் திருமணம் நடந்தபொழுது
சாப்பிட்ட இனிப்பு வகைகளின் நினைவிலேயே இறந்துபோகிறாள். தவிர, 2008 ஆம் ஆண்டு தீபாமேத்தா எழுதி திலீப்மேத்தா இயக்கியுள்ள
“The
Forgotten Woman” என்கிற ஆவணப்படம் இந்த
நகரில் கைவிடப்பட்ட விதவைகளின் இன்றைய நிலையினைக் காட்டுகிறது.
விருந்தாவனில் உயிரை மட்டுமே கையில் பிடித்துக்
கொண்டு வாழ்கிற பெண்களைப் பற்றி கவிஞர் பழநிபாரதியின் கவிதையொன்று உள்ளது.
“தனிமையில்
எரியும்
இரவின்
சாம்பல் நுரைத்து ஓடுகிறது
யமுனையில்
பிருந்தாவனத்தில்
அலையும்
கைம்பெண்ணின்
பெருமூச்சுக்களை
வாங்கி
குழலூதுகிறான்
பச்சை
மாமலையன்
நிறமற்ற
நீரில்
நிர்வாணம்
வண்ணப்பூவாய்
சுழலுகிறது
ஒருகாடு
வெந்து
தணிகிறது
அவளது
வெள்ளுடைகள்
மேகங்களாக
மிதந்து
கொண்டிருக்கின்றன
இதழ்
தொட்ட கண்ணீரை
நாவால்
வருடிச் சுவைகிறாள்
ஒரு
துளிதான் என்றாலும்
போதும்
என்பதுபோல”
விருந்தாவனில்
உள்ள விதவைப்பெண் தன்னுடைய கண்ணீரை நாவால் வருடிச் சுவைக்கிறாள். அந்தச்சுவை
மீச்சிறு எனினும் அவளுக்கு அது தேவையாக இருக்கிறது. உணவில் உப்பு மறுக்கப்பட்ட
விதவைப்பெண்ணின் உடலில் சுவை மொக்குகள் நீர்த்துப் போகவில்லை என்பதைச் சொல்கிறது இக்கவிதை.
கைம்பெண்ணுக்கு புறத்தோற்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றத்தினால் அவளுடைய
மனதின் விழைவுகளைத் தடுத்துவிட இயலாது என்பதையும் உணர்த்துகிறது. மேலும் அவளது
தனிமையில் எரியும் இரவு எதனாலும் ஈடு செய்யவியலாத தவிப்பினை உடையதாக இருக்கிறது.
ஒப்பீட்டளவில் வட
இந்தியாவை விட விதவைப் பெண்களுக்கான மரியாதை என்பது தமிழ்நாட்டில் அத்தனை துயர்
தரக்கூடியதாக இல்லை. வெள்ளைப்புடவை அணிகிற
செயல் மெல்ல மெல்ல விடைபெற்றுவிட்டதை அடுத்தடுத்த தலைமுறையிடம் காணமுடிகிறது. விதவைப்பெண்
மறுமணம் செய்து கொள்வது நடைமுறையில் சாத்தியப்பட்டிருக்கும் இன்றைக்கும்கூட பல
பகுதிகளில் கணவன் இறந்தவுடனே மனைவிக்கு பட்டுப்புடவை அணிவித்து, தலைநிறைய பூவைத்து,
புழக்கத்தில் குறைந்துவிட்ட காலத்திலும் கண்ணாடி வளையலைத் தேடிப்பிடித்து அணிவித்து, ஸ்டிக்கர் பொட்டு
வைக்கிற பெண்ணாக இருந்தாலும் குங்குமம் இட்டு இறந்துபோன கணவன் முன்பாக
அமரவைத்திருப்பார்கள். கணவனின் உடலை மயானத்திற்குத் தூக்கிச்சென்றவுடன் ஏற்கனவே
விதவையாக இருக்கும் பெண்கள் கூடி, அந்தப்பெண்ணின் ஒருகை மீது மறு கையால்தட்டி
இரத்தம் கசியக்கசிய கைவளையல்களை உடைத்து,
கூந்தலில் சூடியிருக்கும் மல்லிகையை அதன் சரம் உதிரஉதிர உருவி, நெற்றிப்பொட்டினை
அழித்து வெள்ளைப்புடவையை அணிவித்து சிலமணி நேரமாவது அமரவைத்திருக்கிற சடங்கு
நிகழ்த்தப்படுகிறது.
இக்காலத்தில் கைம்பெண்ணாக இருக்கும் தாய், தாலி
எடுத்துக் கொடுக்க திருமணம் செய்து கொள்கிற வரையில் இந்தத் தலைமுறையிடம் மாற்றம்
நிகழ்ந்திருக்கிறது. என்றாலும் “தன்னையொரு அமங்கலமான பெண்ணென்று கருதி, தான் முன்னின்று
தொடங்கும் காரியம் சிறப்பாக இருக்க வேண்டுமே” என்கிற பதற்றம் அவளுக்குள் மறைந்திருப்பதையும்
உணரமுடிகிறது. பெரும்பாலான பெண்களிடம் பதிந்திருக்கும் இவ்வகையான மனத்தடை
இன்றும்கூட உள்ளது. வழிவழியாக நடைமுறைப் படுத்தப்பட்டு எல்லோருடைய மனதிலும்
பதியவைக்கப்பட்டுள்ள கைம்பெண்ணின் நிலை சங்கப்புறப்பாடல்களில் பரவலாக
காணமுடிகிறது.
தலைவனை
இழந்த மனையையும், மனைவியையும் பற்றி இரங்கிப்பாடுகிற
தாயங்கண்ணியார் எழுதிய புறநானூற்றுப் பாடல்,
“குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியடு, இனியே
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. “
“குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியடு, இனியே
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. “
“செல்வம்
மிக்க அழகிய நகரே, இனிய பாலை வேண்டிய புதல்வர், இப்போது தனித்துக் காணும்
புறங்காட்டை அடைந்தனர். தாளிப்பு கொண்ட சுவைமிகுந்த உணவும், இரவலரைப் புறம்
போகவிடாது தடுத்த வாயிலும் தன்னால் பாதுகாக்கப்படுவோரின் கண்ணீரை மாற்றிய நறுமணம்
கமழும் பந்தலும் உடைய மனையிடத்தே
கூந்தலைக் களைந்து, வளையலை நீக்கி அல்லியரிசியாகிய உணவையுடைய தலைவியுடனே இப்போது
பொலிவிழந்தனை.“
தாளிப்புச்சுவையுடைய
உணவை எந்தநேரமும் விருந்தாகத் தருகிற ஒரு வீட்டில் தலைவன் இறந்துவிட்டதால்
உணவுக்கட்டுப்பாடு வந்துவிடுகிறது. தாளிப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை
உணரமுடிகிறது. கூந்தல் இழந்து, வளையல் நீக்கி, பத்திய உணவு வகைகளான அல்லியரிசி
சமைத்துண்ணும் பெண்ணிருக்கும் வீட்டில் விருந்தும் மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்விதமான
பெண்ணைத் தேடி இரவலர் வரப்போவதில்லை. அவளுடைய வாழ்வு தலைவன் இல்லாமல் இருண்டு
போவதால் அவளுடைய மனையும் பொலிவிழந்து போகிறது. தலைவனை இழந்துவிட்ட பெண்ணுக்கு
அதற்குப் பிறகு வாழ்வே இல்லை என்பதாகத்தான் சங்கப்பாடல்கள் வழியாக
அறியமுடிகிறது.
ஒருபருவத்தில்
பூக்கவும், மறு பருவத்தில் காய்த்துக்
கனியவும், வேறொரு பருவத்தில் இலையுதிரவும் அதன்பின்பு வருகிற வசந்தத்தில் மீண்டும்
துளிர்ப்பதுமே தாவரங்களின் செயல்பாடாகும். பெண்ணும் கூட தன்னை தாவரமாக
வரித்துக்கொள்கிறாள். ஆனால் பெண்ணுடைய பூப்பும், கனிவும் ஒரே ஒரு ஆணுக்காக
நிகழவேண்டுமென அவளிடம் ஆழப் பதியவைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எந்த வயதிலும் தான்
கற்புநெறி தவறாமல் இருப்பதை நிரூபணம் செய்துகொண்டே இருக்கிறாள்.
கணவனை
இழந்துவிட்ட பெண் அவனுடைய நினைவில் மட்டுமே வாழவேண்டும். தவிர கோயில், குளம் என
பக்திமார்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தின் மாதவி
தொடங்கி ஸ்ரீ ஆவுடையக்காள் வரையில் மட்டுமல்ல அதற்குப்பிறகும் நம்முடைய
அன்றாடத்தில் பார்க்கிற பல ஆயிரக்கணக்கான பெண்களும் பக்திமார்க்கத்தில்
ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலசமயம் கணவனை இழந்த ஒரு பெண் அவளைச்
சுற்றியிருப்பவர்களுக்கு மட்டுமன்றி அவளுக்கே கூட அவளை நிரூபித்துக்
கொண்டிருக்கிறாள்.
தாபதநிலை பாடும் தாயங்கண்ணியாரின் பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. புறநானூறு 250
No comments:
Post a Comment