மலைப் பாதையில் ஒரு
வளைவில்
தனியாக நின்றிருக்கிறேன்
என்னிடம் வர சற்றுத் தாமதமாகியது
மாலைக்காற்று
வழக்கமாக கடந்து
செல்லும்
மஞ்சள் விளக்கிட்ட
வாகனங்கள் வரவில்லை
காட்டெருமைகள் வரக்கூடுமென
வேகமெடுக்கும் பள்ளி
மாணவர்கள் வரவில்லை
எப்போதாவது
மான்கள் கடந்து
செல்லும் பாதையில்
தனியாக நின்றிருக்கிறேன்
என்னுடன் உறவாடும்
மாலைக் காற்றை
பரிசளிப்பவனும்
இன்னும் வரவில்லை
அன்பை
காற்றின் குரலாக
மாற்றி அழைத்து
வருபவன்
நேற்றைய காற்றைப்
பருகி
இன்று ஜீவித்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
செல்ல நாய்க் குட்டியென
அவன் வருவது
தொலைவில் தெரிய
காற்றில் கிளை
அசைகிறது
2 comments:
மனமும் அசைகிறது :)
மலைப் பாதையில் ,மான்கள் பாதையில் ஒரு வளைவில்---வாழ்வு ஒரு பசும் மலையாக, மான்கள் துள்ளி ஓடும் சிந்தனைகள் என, அவன் வரும் காலம், வாழ்வின் ஒரு வளைவு என , ஒரு அழகான பூங்காற்று நம்மை காதோரம் கிசிகிசுக்க, நாம் மெய் மறக்க, நேற்றைய அவன் காற்றின் வழியாக நாம் இன்று வாழ்ந்திருக்க , இன்றைய சுவாசத்திற்கு , நாம் என்ன செய்ய ....? இதோ, அவன் , செல்ல நாய்க் குட்டியென,,,
காற்றில் கிளை அசைகிறது…அவள் கை பறவைகளாக ,நாம் மனசு..ரெக்கை கட்டி ...
Post a Comment